நகலாக்கம்

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

வே. வெங்கடரமணன்


‘நீங்கள் அறிவாலும் உடல் திறமையாலும் அவர்களுடைய சமூகத்தைவிடத் தாழ்ந்தவர். உங்களுடைய தாழ்வு உணர்ச்சி அளவிடமுடியாதது. நீங்கள் அவர்களைப்போலப் பொன்னிற கோதுமை நிறமானவர் இல்லை. உங்கள் மேனி அவர்களைப் போலப் பளபளப்பாக இல்லை. அவர்களுடன் விளையாட்டில் நீங்கள் போட்டியிட முடியாது. அவர்கள் பணக்காரர்கள்; நீங்கள் அதிகம் உழைக்கிறீர்கள், ஆனால் அவர்களைப் போல உங்களால் பணம் ஈட்ட முடிவதில்லை. அவர்களுக்கு மருத்துவச் செலவே கிடையாது; நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மருத்துவத்தில் செலவழிக்கிறீர்கள். அவர்கள் அதிக நாட்கள் வாழப்போகின்றவர்கள்; உங்களது அற்பாயுசு. எந்தவகையிலும் அவர்களைவிட உங்களால் சிறப்பாக இருக்க முடிவதில்லை. காரணம் அந்த இனத்தின் பிறப்பு. நீங்கள் அவர்களைவிடப் பிறப்பால் தாழ்ந்தவர்.

என்ன செய்யலாம் ? ‘ஒருவரை வெல்லமுடியவில்லை என்றால் அவர்களுடன் இணைந்துவிடு ‘ இது காலம் கற்றுக்கொடுத்த பாடம். ஒரே வழி அவர்கள் இனத்திலிருந்து ஒரு பெண்ணை நீங்கள் மணப்பதுதான். அதிர்ஷ்டவசமாக உங்கள் காதலி அவர்களைச் சேர்ந்தவள். அவள் உங்களுக்குக் கிடைத்து ஒரு வரம் என்றுதான் கூறவேண்டும். உங்கள் இனத்தின்மீது பிறப்பைக் காரணம்காட்டி ஆதிக்கம் செலுத்தும் அவர்களிலும் இன்னும் மனிதத் தன்மை எஞ்சியிருக்கிறது என்பதற்கு அவள்தான் அடையாளம். ஆனால் உங்களால் இந்தத் திருமணம் சாத்தியம் என்று கருதமுடிகிறதா ? இது நடக்கப்போவதில்லை; நீங்கள் இருவரும் மரணமேடை ஏறித்தான் ஆகவேண்டும். அந்தக் கொடியவர்களால் கல்லால் அடிக்கப்படுவீர்கள். சமநீதி என்பதெல்லாம் பழங்கதை; நிகழ்காலத்தை நீஙகள் உணர்வது நல்லது. உங்கள் இனத்தில் ஒருத்தியை மணந்துகொன்டு அவர்களுக்கு அடிமைகளாகக் காலந்தள்ள வேண்டியது உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ‘

மேலுள்ள வாக்கியங்களைப் படிக்கையில் உங்களால் நம்பமுடியவில்லையா ? பிறப்பால் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்பவை எல்லாம் ஒழிக்கப்பட்டு பலவருடங்களாகியும் இப்படிச் சொல்பவர்கள் இருக்கிறார்களா ? இதெல்லாம் பழங்கதை என்று சிரிக்கிறீர்களா ? – இல்லை இவையெல்லாம் பழங்கதைகள் அல்ல; இவை வருங்காலத்தை வார்த்தைகளில் வருணிக்கும் உண்மை. பிறப்பால் எல்லாரும் சமம் என்பது இந்த நூற்றாண்டுடன் முடிகின்றது. பிறப்பு ஒருவனை உயர்ந்தவனா தாழ்ந்தவனா எனத் தீர்மானிக்கும் நாள் தொலைவில் இல்லை. காரணம் பிறந்த விதம் – நீங்கள் இயற்கையாகப் பிறந்தவர் ளஅவர்கள் உயிர்தொழில்நுட்பச் சாதனைகளால் நகலாக்கம் செய்து உருவாக்கப்பட்டவர்கள். இன்னொரு விதமாகச் சொல்லப்போனால் நீங்கள் கடவுளால் படைக்கப்பட்ட தாழ்ந்த இனம் -அவர்கள் உங்களைப் போன்ற மனிதர்களால் ‘உருவாக்கப்பட்ட ‘ உயர்ந்த இனம். அந்த ‘உருவாக்கத்தின் ‘ பெயர்தான் நகலாக்கம் (cloning).

தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்

1997 ஆம் வருடம், பெப்ருவரி மாதம் ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகருக்கருகில் உள்ள ஒரு ஆய்வுச்சாலையில் டாலி (Dolly) என்னும் ஆடு பிறந்தது. அது மற்ற ஆடுகளைக் காட்டிலும் வித்தியாசமானது பெுறப்பால் வித்தியாசமானது. அது வழக்கமான கிடாகெுடேரி இனச்சேர்க்கையில் கருத்தரித்துப் பிறக்கவில்லை. அது உயிர்தொழில்நுட்ப வல்லுநர்களால் (biotechnologists) ஆய்வகத்தில் நகலாக்கப்பட்டது. அதன் பிறப்பின் இரகசியம் இதுதான்; முதலில் நகலாக்கப்பட வேண்டிய ஆட்டின் பால் சுரக்கும் பையின் (udder) உட்சுவரிலிருந்து திசுக்கள் சுரண்டி எடுக்கப்பட்டன. அவற்றை ஆய்வகத்தில் ஒரு கண்ணாடிக் குழித்தட்டில் (petri dish) வளர்த்தார்கள். அதே நேரத்தில் இன்னொரு கிடேரியின் 26 நாள் சூல் கொள்ளாத கருமுட்டையினைத் (unfertilized egg) தனிப்படுத்தினார்கள்; அந்த முட்டையில் அதன் மரபுச் செய்திகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் எனும் வாழைப்பழ வடிவம் கொண்ட மூலக்கூறுகளை நீக்கினார்கள். (இது முட்டையை உற்பத்தி செய்த தாயின் மரபுக்கூறுகள் உருவாகவிருக்கும் குட்டிக்குச் செல்லாமல் தடுக்கும் செயல்). குழித்தட்டிலிருந்து நகலாக்கப்பட வேண்டிய செல்களுல் ஒன்றினை எடுத்து (அதன் மரபுச் செய்திகளைக் கொண்ட குரோமோசோம்கள் உட்பட) முட்டையினுள் ஒரு நுண்ணோக்கியின் உதவியால் உட்செலுத்தினார்கள். பின்னர் அந்த முட்டையை எடுத்து வேறொரு கிடேரியின் கருப்பையில் வளர்த்தார்கள். அதன் பிறகு ‘இயற்கையான முறையில் ‘ பிரசவம் நடந்தது. பிறந்த குட்டி அதனைச் ‘சுமந்த தாய்க்குச் ‘ சம்பந்தம் கிடையாது, முட்டையை அளித்த ‘ கருத் தாய்க்கும் ‘ சம்பந்தம் இல்லை. ஆமாம் நீங்கள் எதிர்பார்த்தது சரிதான் -அந்தக் குட்டி பால்பைச் சுவர் செல்லைத் தந்த கிடேரியின் முற்றான நகல். இயற்கை கருத்தரிப்பில் பிறக்கும் குழந்தை அம்மா-அப்பா இருவரின் மரபுக் கூறுகளிலும் சமஅளவு பங்கு பெற்றுப் புதிதான உயிரியாக வருவது. ஆனால் டாலி தோல் செல்களைத் தந்த முதல் ஆட்டின் மரபு நகல். அப்படியே ‘முதல் ஆட்டை ‘ (அது டாலிக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை) உீுத்து வைத்திருந்தது. அது முதல் ஆட்டின் மரபு ‘முற்றாகத் ‘ தழைக்க வந்த வாீுசு.

இப்படிச் சில வாக்கியங்களுக்குள் அடங்கிவிடுவதாக நகலாக்கம் அப்படிச் சாதாரணமான விஷயமில்லை. இந்த இரண்டு மூன்று படிகளைக் கடப்பதற்குள் பல முறை வழுக்கி விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உதாரணமாக, முட்டையைத் தரும் கிடேரியிடமிருந்து அதனை எந்த நேரத்திலும் எடுத்துவிட இயலாது; அதன் மரபு சுமக்கும் மூலக்கூறான டி.என்.ஏ சுயபெருக்கம் (self-replication) செய்யும் நாட்களைத் தவிர்க்க வேண்டும். பிறகு அதன் குரோமோசோம்களை நீக்கிய உடன் அதனை திரவ நைட்ரஜனில் இட்டு அதன் உயிர்வேதி நடவடிக்கைகளை உறைய வைக்கவேண்டும். அதேபோல் மரபுச் செல்களை அளிக்கும் ஆட்டின் பால்ப்பைச் சுவர் செல்களைக் கண்ணாடிக் குப்பியில் இட்டு வளர்க்கையில் அதிலிருந்து வீரியமிக்க செல்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். அத்தகைய செல்கள் மரபுப் பெருக்கம் நன்கு நடைபெற அதன் செய்தியாளர் ஆர்.என்.ஏ க்கள் (messenger RNA) இரட்டிக்கும் நேரத்தைத் துல்லியமாக அறிய வேண்டும். பின்னர், உறைந்திருக்கும் மரபு நீங்கிய முட்டையைச் சிறு மின் அதிர்வுகள் மூலம் எழுப்ப வேண்டும். இப்படிப் பலப் பல நடைமுறைச் சிக்கல்கள். உங்களுக்கு முக்கியமாகத் தெரிய வேண்டியது இரண்டு உண்மைகள்: 1) இந்த நகலாக்கம் ஒரு இலகுவான காரியமில்லை 2) ஆனால், இன்றைய மூலக்கூறு உயிரியலாளர்கள் (molecular biologists) இதனை நன்கு தேர்ந்துவிட்டார்கள்.

ஆடு – மனிதன்-அழகி

டாலி பிறப்பதற்கு முன்னால் அவள் வருகை ஒருவழியாக எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால் டாலிக்கு முன்னாலே அந்த ஆய்வகத்தில் மேகன் -மொராங் எனும் இரட்டையர் பிறந்து ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரு கிடாகிடேரியின் இயற்கைப் புணர்ச்சியில் கருத்தரிக்கப்பட்டு வந்தவர்கள் அல்லர். இவர்கள் ஒரு 90 நாள் கருவிலிருந்து பரித்தெடுக்கப்பட்டு, அதன் மரபுக்கூறுகள் உள்ளடங்கிய செல்களை ஆய்வகத்தில் சோதனைக்குழாயில் பெருக்கம் செய்யப்பட்டு, பின்னர் தனித்தனியாக இரண்டு இரவல் தாய்களின் (surrogate mothers) கருப்பைகளில் வளர்க்கப்பட்டு பிறப்பிக்கப்பட்டவர்கள். இரண்டு தாய்கள் மரபில் அச்சாக ஒன்றான இரண்டு குட்டிகளைப் பெற்றெடுத்தது அதுதான் முதல்முறை. ஆனால் அவர்களிலும் டாலி தொழில் நுட்பத்தால் மேம்பட்டவள். டாலியின் மரபுச் சமாச்சாரங்கள் ஒரு கருவிலிருந்தோ விந்திலிருதோ வந்தவை அல்ல -அவை சாதாரணமான ஒரு தோல் செல்லில் இருந்து சுரண்டி எடுக்கப்பட்டுத் திறமையாக ஒரு கருவினுள் புகுத்தி வளர்க்கப்பட்டவை.

இதில் என்ன சிறப்பு ? ஒரே வரியில் சொல்லப்போனால் இயற்கை இனப்பெருக்கத்திற்கென விதிக்கப்பட்ட விந்துச் செல்களோ, கருமுட்டையோ அளிக்காமல் சாதாரண ஒரு தோலில் மரபுக் கூறுகள் சுரண்டியெடுக்கப்பட்டதுதான். முதன்முறையாக ஒரு பாலூட்டியின் மரபு ஆய்வகத்தில் நிச்சயிக்கப்பட்டது. இன்னும் உங்களுக்கு அதிர்ச்சியில்லையென்றால் அடுத்த பத்திக்குச் செல்லவும்.

சப்பை மூக்கும், குள்ளமுமான ஒரு சீனப்பெண்ணின் கருமுட்டையைக் காலிசெய்து அதில் மரப்பட்டை போன்ற நிறத்தைக் கொண்ட, பருத்த நாசியுடைய ஒரு தமிழனின் உள்ளங்கையில் சுரண்டியெடுத்த சில அழுக்குக் கட்டிகளை நிரப்பி அதனை ஆறரையடியும் கூர்மூக்கும், வெளேர்தோலும் கொண்ட ஒரு ஜெர்மானியப் பெண்ணின் கருப்பையில் வளர்த்துப் பிறப்பிக்கப்படும் குழந்தை — ஒரு பச்சைத் தமிழனாக இருக்கமுடியும். இதுதான் நடந்து முடிந்ததன் நிச்சயமான அடுத்த கட்டம். ஒரு மருத்துவமனை வேலைக்காரனுடன் கைகுலுக்கி அதுபற்றி மறந்துபோன உலக அழகி ஐஸ்வர்யா ராயின் குழந்தை அடுத்த வருடம் ஒரு ஆப்பிரிக்கத் தாயின் வயிற்றில் அமெரிக்காவில் பிறப்பிக்கப்படல் இப்பொழுது அறிவியல்பூர்வமான சாத்தியம்.

டாலியின் குழந்தைகள்

இப்படியாக ‘முறைதவறி ‘ப் பிறந்த டாலி இன்று என்ன செய்துகொண்டிருக்கிறாள் ? டாலி விரைவாக மூப்பெய்திவிட்டாள். இயற்கையாகப் பிறந்த பிற ஆட்டுக்குட்டிகளைப் போலில்லாமல் டாலிக்கு விரைவிலேயே கிழடுதட்டிவிட்டது. இது நகலெடுத்துத் தங்களின் மரபை என்று இளமையான உடலில் காத்துவிடலாம் என்று கனவுகாண்பவர்களுக்கு ஒரு பெரிய வருத்தம். தன்னுடைய மரபுச் செல்களை அளித்த ஆட்டின் மூப்பிற்கு டாலியும் விரைவிலேயே வந்துவிட்டாள். எனவே, மூலத்தைவிட நகல் அதிக நாட்கள் வாழும் என்று எதிர்பார்க்கமுடியாது. ஆனால், இன்றைக்கு டாலி நான்கு குழந்தைகளின் தாய். இவற்றில் சில இயற்கையாக கிடாவின் சேர்க்கையுடன் கருத்தரிக்கப்பட்டவை. சில செயற்கையான முறையில் பிறந்தவை. மற்றவை எப்படியோ, இவ்வுலகில் உதிக்கும் உயிரினங்களின் அடிப்படைக் கடமையான மரபு காத்தலை வாரிசு பெறுவதன் டாலி முலம் நடத்திக்காட்டிவிட்டாள்.

குறைந்தபட்சம் குழந்தைகளைப் பெற்றேடுத்ததன் மூலம் டாலி நகலாக்கத்தின் உடனடி பயனை உறுதி செய்திருக்கிறாள். அது இறைச்சிக்காக நகலெடுப்பது. நகலாக்கப்பட்ட குட்டிகள் விரைவாக வளர்ந்து முப்படைவதால் குறைந்த நாட்களில் அதிக இறைச்சியைத் தரக்கூடிய ஆடு, மாடுகளை வளர்ப்பது வர்த்தக ரீதியாக இலாபகரமானது. இதன்மூலம் உணவுப் பற்றாக்குறை இருக்கும் நாடுகளில் பல பலன்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

கொஞ்சம் பொறுங்கள்!! அப்படிக்கிடைக்கும் இறைச்சியையும் கோழிமுட்டையையும் சாப்பிட நீங்கள் தயாரா ? பெரும்பாலானவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. சிலருக்குத் தங்கள் மதங்களின் அடிப்படையில் இயற்கை தவறி கிடைக்கும் எதிலும் உடன்பாடு இல்லை. இன்னும் சிலருக்கு விரைவில் மூப்படைந்து பெருத்த மாமிசத்தை உண்பதன் மூலம் தாமும் விரைவில் கிழவர்கள் ஆகிவிடுவோம் என்ற பயம். இவர்களின் பயத்திற்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் இவர்கள் பயம் முற்றாகத் தேவையற்றது என்றும் அறிவியல்பூர்வமாக நிருபணம் ஆக்கப்படவில்லை.

நகல் மருத்துவம்.

எத்தனை நாட்களுக்குத்தான் இறைவனின் புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து எழுதுவது ? சுயமாக எழுதிப்பார்த்தால் என்ன என்று சில அறிவியலாளர்களுக்கு ஆசை வந்துவிட்டது. மனிதனின் சிறப்புகளே இவைதானே தெனித்துவம், சிந்தித்தல் மூலம் அறிதலை முன்னகர்த்திச் செல்லுதல். அந்த ஆர்வத்தின் விளைவாக நகலெடுக்கும் முறையில் சிலமாறுதல்கள் நிகழ்திப் பார்க்கப்பட்டுள்ளன.

பழுதுபட்ட சிறுநீரகத்தை உடைய ஒருவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்துதல் இப்பொழுது சர்வசாதாரணமான நிகழ்ச்சி. நமக்கு இயற்கையில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன; இவற்றில் ஒன்று 60ள70 சதவீதம் பணியாற்றினாலே நமக்குப் போதுமானது. எனவே இரண்டு சிறுநீரகங்களும் பழுதுபட்ட ஒருவருக்கு (பெரும்பாலும் உறவினர்) நம்முடையதில் ஒன்றைத் தானமாகத் தந்து உதவமுடிகின்றது. ஆனால், இதயம் ? ? மருத்துவர்கள் இதற்கு வழிகண்டுபிடிக்கப் பெரும் முயற்சி செய்துவருகின்றார்கள். சுலபமான ஒரு வழி, மனித இதயத்தைப் போல அமைப்பிலும் செயற்பாட்டிலும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும் ஒரு விலங்கின் இதயத்தைப் பொருத்துதல். இதில் உள்ள முக்கிய நடைமுறைச் சிக்கல் தடுப்பு எதிர்வினை(immunization incompatibility). பொருத்தப்படும் விலங்கின் இதயத்தில் இருக்கும் சில புரதங்கள் (proteins) மனித உடலில் எதிர்வினையை உண்டாக்குகின்றன. மனித உடல் அதனையும் ஒரு வியாதிக் கிருமிபோல் கருதுகின்றது, அதன்மூலம் அந்தப் புரதங்களுக்குப் பாதகப்புரதங்களை (antiளproteins) உற்பத்திச் செய்து மாற்று இதயத்தைத் செயலிழக்கச் செய்துவிடுகின்றது. இது மனித உடலின் இயற்கையான தற்காப்பு நடவடிக்கை, இதை நிறுத்துவது இன்றைய மருத்துவத்திற்கு உள்ள ஒரு பெரிய சவால்.

சிறுகுழந்தைகளுக்குக் கக்குவான் இருமல் மற்றும் அம்மைக்கானத் தடுப்பு ஊசி போடுவதை (immunization) அறிந்திருப்பீர்கள். இந்த முறையில் பாதிக்கவிருக்கும் வியாதிக்கிருமிகளை சிறுவயதில் ஒரு கட்டுப்பாடான அளவிற்கு ஊசிமூலம் உட்செலுத்துவார்கள். அதற்குக் குழந்தையின் உடலில் எதிர்வினை உண்டாகிப், பொதுவில் அவ்வியாதியை எதிர்க்கும் சக்தி கிடைக்கிறது. இதன்மூலம் வருங்காலத்தில் அவ்வியாதியின் மூலம் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதே முறையை உயிர்த் தொழில்நுட்ப அறிவியலாளர்கள் சோதித்துப்பார்க்கிறார்கள். நகலெடுக்கும் முறையில் கண்ணாடிக்குப்பியில் வளர்க்கப்படும் விலங்குச் செல்களுக்கு ஒரு கட்டுப்பாடன அளவு மனித உடலின் எதிர்வினை விஷத்தைச் செலுத்துகின்றார்கள். அதனுடைய வீரியத்தில் பாதிக்கப்பட்டு பல செல்கள் இறந்துவிடுகின்றன. ஆனால் பிழைக்கும் சில செல்கள் பிரித்தெடுப்புசக்தி பெற்று வளருகின்றன. அவற்றைத் தெரிந்தெடுத்து நகலாக்கத்தில் பயன்படுத்தினால் அதன்மூலம் வளரும் விலங்கும் அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இதயமும் மனித உடலில் மாற்றாக இடுவதற்குத் தயாராக வருகின்றன.

இது மாற்று உறுப்புகளைப் பொருத்துவதில் மட்டும்தான் பயன் என்று இல்லை. பலவியாதிக்களுக்கு எதிரான சோதனைகளை நடத்திப்பார்ப்பதற்கு ஆய்வக மாதிரிகளாகவும் பயன்படுத்தமுடியும். இதன்மூலம் இன்று மருந்துகள் இல்லாத பல வியாதிகளுக்குத் தீர்வுகாண முடியும் என்பதில் மருத்துவர்களிடையே இரண்டு கருத்துகள் இல்லை.

என்னைப்போல் ஒருவன்.

ஆட்டிற்குப் பிறகு வேறுபல உயிரினங்களும் இதே முறையிலும் இன்னும் சில தொழில்நுட்பம் மேம்பட்ட முறையிலும் நகல் எடுக்கப்பட்டுவிட்டன. பரிணாம அடுக்கில் மனிதனுக்குக் கீழே இருக்கும் குரங்குகள் வரை வந்துவிட்டார்கள். அடுத்த கட்டம் ஒரு மனிதன் நகலெடுக்கப்பட வேண்டியதுதான். இவ்வாறு தங்களை நகலாக்கிக் கொள்வதில் பலருக்கு ஆவல். உதாரணமாக ஆணழகன் ஒருவனின் மனைவிக்கு அவனை எப்பொழுதும் தன்னிடமே தக்கவைத்துக்கொள்ள ஒரு நகல். உலகப்பேரழகியை நகலெடுத்தால் பல வணிக நிறுவனங்கள் குறைந்த செலவில் விளம்பரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். நகலெடுக்கப்பட்ட ஹிட்லர் அவனைப்போலே ஒரு கொடுங்கோலனாக இருப்பானா ? இதற்கு இன்றைக்கு விடை தெரியாவிட்டாலும், நகல் ஹிட்லர் நல்லவன்தான் என்று எதிர்பார்க்க வழிகள் இருக்கின்றன. ஒரு மனிதனின் ஆளுமையும் அவனது குணாதிசயங்களும் முற்றிலுமாக அவனது மரபால் தீர்மானிக்கப்படுவதில்லை. அவன் வளர்க்கப்பட்ட விதமும் அவனது சமூகமுமே அவனது ஆளுமையைச் செதுக்குகின்றன. அவனது மூக்கின் நீளம் குரோமோசோம்கள் தீர்மானிக்கப்படுகின்றது. மனிதனின் புற உடலமைப்பும் நோய் எதிர்ப்பு போன்ற அகச் செயற்பாடுகளும்தான் மரபுக் கூறுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அவனுடைய ஆளுமையும் குணங்களும் பெரிதும் அவனுடைய வளர்ப்புச் சூழழால் தீர்மானிக்கப்படுகின்றது. மரபுக்கூறுகளால் ஹிட்லரின் கொடுங்கோல் குணம் நிச்சயிக்கப்பட்டிருந்தால் அவனுக்குத் தங்களில் சரிபாதி மரபை அளித்த தாயும் தந்தையும் அவனில் குறைந்தபட்சம் பாதியளவாவது கெட்டவர்களாக இருந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக, ஒரு வம்சத்தில் பிறப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ இருப்பதில்லை. அப்படியிருந்திருந்தால் நல்லவர்கள் ஒழிக்கப்பட்டு இப்பொழுது மனிதகுலத்தில் கெட்டவர்கள்தான் மிஞ்சியிருப்பார்கள். எனவே மரபுவழி நகலாக்கத்தில் குணங்களைச் சேகரிப்பதில் பயனில்லை.

கூர்மூக்கும், வெளேர்தோலும் மாத்திரம்தான் மரபினால் நிச்சயிக்கப்படுகின்றன என்றில்லை. சில வியாதிகள் மரபுவழியாக சந்ததிதோறும் தொடர்ந்துவருவன என்று இன்றைய மருத்துவம் சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்துள்ளது. நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதால் இத்தகையக் குறைபாடுகள் பெருக வாய்ப்பு அதிகம். மரபுவழிக் குறைவுடன் பிறக்கவிருக்கும் குழந்தையைக் கருத்தரிக்கும் முன் மரபுச் செல்களைத் தனித்துப் பிரித்து அவற்றினிடையே குறைபாடுகளைத் தாங்கி வளரும் செல்களை வெட்டியெடுத்து, ஆரோக்கியமான பிற மனிதர்களின் செல்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியை உள்ளிட முடியும். இதன்மூலம் மரபுவழியாகத் தொடரும் குறைகளைத் தடுத்து நிறுத்தவியலும். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், பிறக்கும் குழந்தை மாத்திரமல்லாது அதனிடமிருந்து தொடரும் சந்ததியும் குறைகளின்றி தழைக்கும். ஏனென்றால், அடிப்படையிலேயே நோய்க்கான மரபுக்கூறுகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுவிட்டன.

தண்டுச் செல்கள்

இவையெல்லாவற்றையும் விட, மரபு ரீதியான வியாதிகளைக் குணப்படுத்த நேரடியான வழிமுறை ஒன்று உள்ளது. அதன் அடிப்படை தண்டுச் செல்கள் (stem cells) எனப்படும் கருப்பெருக்கத்தின் துவக்க காலச் செல்கள். இத்தகைய செல்கள் விரைவாக பெருக்கம் செய்வன. இன்றைய உய்ர்த் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் முக்கியமான ஒன்று தண்டுச் செல்களைப் பற்றிக் கண்டறிவது. ஏனெனில் தண்டுச் செல்கள் ஒரு விலங்கின் உடலில் இருக்கும் எந்த வகையான திசுக்களாகவும், உறுப்புகளாகவும் உருமாற வல்லன. தண்டுச் செல்களைக் கொண்டு உங்கள் உடலில் பழுதுபட்ட ஒரு உறுப்பினை திரும்ப நிர்மாணித்துக் கொள்ளலாம். ஆராய்ச்சியாளர்களின் திட்டப்ப்படி ஒவ்வொரு நோயாளியின் உடலில் இருந்தும் தண்டுச் செல்களைப் பிீுத்தெடுத்து ஆய்வகத்தில் நகலாக்கத்தின் மூலம் நோயாளின் உடலுக்கும் நகலினை உருவாக்க முடியும்.

இத்தகைய ஆராய்ச்சிகளில் நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தண்டுச் செல்களை மனிதக் கருமுட்டையின் (மரபு நீக்கம் செய்யப்பட்டது) டாலி பிறந்ததைப் போன்ற முறையில் உட்செலுத்தி வளரவிடுவார்கள். பின்னர் இவற்றின் பெருக்கத்தின் துவக்க காலச் செல்களிலிருந்து வருங்காலத்தில் நோயாளியின் பழுதுபட்ட பாகமாக மாறவிருக்கும் (உதாரணமாக இதயம்) செல்களை ‘கருவிலிருந்து ‘ அடையாளம் கண்டு எடுத்து கண்ணாடிக்குப்பியில் வளர்ப்பார்கள். நன்கு வளர்ச்சியடைந்தபின் அந்தச் செல்கள் நோயாளியின் இதயத்தைப் போல் ஒத்ததாக அமையும், அதை உள்ளீடு செய்வதன் மூலம் நோயைக் குணப்படுத்த இயலும். இந்த முறையில் குணம் கிட்டத்தட்ட 95 சதவீதம் உறுதியானது. ஏனெனில் இது நோயாளியின் உடலின் ஒருபாகத்தைப் போன்றது. மனிதனின் உடலில் வீீுயமிகுந்த தண்டுச் செல்களைக் கண்டறிவதில் இப்பொழுது ஆராய்ச்சியாளர்களிடையே பலத்த போட்டி. வெகு சமீபத்திய ஆய்வுகளில் உடலின் பல பகுதிகளிலிருந்தும் தண்டுச் செல்கள் பிீுத்தறியப்பட்டு வருகின்றன. உதாரணமாக, கனடா நாட்டின் மெக்கில் பல்கலையில் சமீபத்தில் தோல்களின் அடியின் இருக்கும் அடியடுக்குச் செல்கள் தண்டுச் செல்களைத் தரவல்லன எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் நடைமுறைச் சிக்கல்கள் பெரிதும் அடையாளங் காணப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. வேறொருபக்கம், சமய மற்றும் சமூக நெறிமுறைகள் ரீதியிலான பலத்த எதிர்ப்பு இருக்கிறது. சென்ற பத்தியில் நாம் சிறப்பித்துச் சொன்ன சொல் ‘கருவிலிருந்து ‘. இதற்கு என்ன அர்த்தம் ? உங்கள் உடலுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை நீங்கள் ஒரு கருவினை அழித்து உருவாக்கிக் கொள்கிறீர்கள். இது மனிதக் கரு உருவான அந்த நொடியிலிருந்தே அதற்கு உயிர் உண்டு என்றும், ஒரு உயிீுனை அழிக்க மனிதனுக்கு ஒருக்காலும் எந்தவிதமான உரிமையும் இல்லை எனக் கருதும் சமயவாதிகளுக்கு முற்றிலும் ஒவ்வாத ஒன்று. இதற்கு பல உயிர்தொழில் நுட்பவியலார் வேறுவிதமாகப் பதிலளிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை கருவான மனிதமுட்டை ஆன்மா இல்லாத ஒரு வளரும் செல்களின் தொகுப்பே. அதற்கான ஆன்மா, கருத்தரிப்பின் பின் பல மாதங்கள் கழித்துத்தான் உண்டாகிறது. இந்த வகையில் இத்தகைய செல்களை, மனித உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவ ஆராய்ச்சியிலும், மருத்துவப் பயன்களுக்கும் கையாளுவதில் எந்தவிதமான தார்மீகக் கடமை தவறல்களும் இல்லை. இதுவே, டாலியின் சிருஷ்டி கர்த்தாவான இயான் வில்மட்டின் சித்தாந்தம். ஆனால், கட்டுப்பாடுமிக்க கத்தோலிக்கர்களும், இன்னும் சில மதப்பிரிவினரும் இதற்கு உடன்படல் என்பது முற்றிலும் நடக்காத காரியம்.

அப்படி ஆராய்ச்சியிலும் மருத்துவத்திலும் தண்டுச் செல்களையும், மனித நகல்களின் துவக்ககாலக் கருக்களையும் பயன்படுத்தலாம் என்று சொல்லும் பேராசிரியர் வில்மட் கூட மனிதனை முற்றாக நகலெடுப்பது என்பது தன்னுடைய சிந்தனைக்கு ஏற்புடையதானது அன்று என்று கூறுகின்றார். இதில் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. ஆராய்ச்சிக்காக உருவாக்கப்படும் மனித நகல் கரு, நாட்பட வளர்ந்துவிட்டால் அதனை அழிக்க வேண்டுமா அல்லது ஒரு உயிரை அழிக்கக்கூடாது எனும் சித்தாந்தப்படி ஒரு மனித நகலை உருவாக்கவிட வேண்டுமா ? இது ஒரு பெரிய தலைவலியைத் தரக்கூடிய கேள்வி. லாபத்திலும், வெறித்தனமான அறிவியல் ஆர்வத்திலும் ஊறிப்போன ஒரு உயிர்தொழில்நுட்ப விற்பன்னர் ஒரு நகலை உருவாக்கிவிடக்கூடிய சாத்தியம் அவசியம் இருக்கிறது. மனித நகல் வேண்டுமா எனும் கேள்விக்கு விடை தெரியாத நிலையில், தண்டுச் செல்களின் ஆராய்ச்சியையும், நகலாக்கச் சோதனைகளையும் சற்றுக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டியது அவசியமே!!

நகலாக்கம் – சில உண்மைகள்

* நகலாக்கம் நாம் நினைப்பதுபோல் இயற்கைக்கு முற்றிலுமாக முரணானது இல்லை; பல சிறிய உயிரினங்கள் நகலாக்கம் மூலமாகவே இனப்பெருக்கம் செய்கின்றன. உதாரணம் செுலவகை இறால்கள்.

* இரட்டையர்களும் முற்றிலுமாக ஒருவருக்கொருவர் நகல் என்று சொல்லமுடியாது. பெண்ணின் கருமுட்டை உற்பத்தியாகும் சமயத்தில் அது இரண்டாகப் பிளவுபட்டு இரு வேறு விந்தின் அணுக்களால் கருத்தரிக்கப்படுவன நகல்களாக ஒருக்காலும் இருக்கமுடியாது. ஆனால் கருத்தரித்த ஒரு முட்டை இரண்டாகப் பிளந்து வளர்ச்சியடையும் பொழுது அவை நகல்களாக அமையச் சாத்தியங்கள் உண்டு. அந்தவகையிலும் அவை முற்றாக ஒத்து இருத்தல் இல்லை.

* நகல்களைப் பண்ணை முறையில் ‘பயிரிட்டு ‘ மனித உடலுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளைக் கட்டமுடியுமா ? -ஆம், அதற்கானத் தொழில்நுட்பம் நம்மிடையே கிட்டத்தட்ட முதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளது. எனினும் மனித நகலாக்கத்தில் சில சமூக மற்றும் சமய முறையிலான நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என நம்பப்படுவதால், இன்னும் சிலகாலத்திற்குள் உங்கள் இதயம் பழுதுபட்டால் மனித உடலின் ஒவ்வாமைக்குத் தடுப்புசக்தி அளிக்கப்பட்ட பன்றியின் இதயம்தான் உங்களுக்குப் பொருத்தப்படும் என நான் நம்பலாம்.

* அத்தியாவசியமான உறுப்புகளை மாத்திரமே (முழு உடலும் இல்லாமல்) வளர்க்க முடியுமா ? – பெரும்பாலும் ஆமாம். ஆனால் இதற்கானத் தொழில்நுட்பம் இன்னும் நமக்குத் துவக்க நிலையிலேயே உள்ளது.

* நகல்களை அதி பராக்கிரம வீரர்களாகவும், தற்கொலைப் படையினராகவும் வளர்க்க முடியுமா ? – பெரும்பாலும் ஆமாம். இது மனித நகலாக்கத்தின் மீது சுமத்தப்படும் அடிப்படை நெறிமுறை ரீதியிலான குற்றச்சாட்டு. இதில் பெருமளவுக்கு உண்மை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மரபுக் கட்டுப்பாடு என்பது ஒரு குருட்டாம்போக்கு ஆராய்ச்சிதான். வீரனாக வளரும் உங்கள் நகலுடைய முழங்கால் எலும்பு நொறுங்கக்கூடியதாக இருந்துவிடக்கூடும். இதற்கான காரணம் மனிதனின் ஒவ்வொரு குணாதிசியங்களும் ஒரு தனிப்பட்ட மரபணுவினாலோ மரபணுத்தொகுப்பினாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக, உயரத்தைத் தீர்மானிக்கும் அதே அணுவரிசைத் தொகுப்பின் ஒரு பகுதி நகைச்சுவை உணர்வையும் தீர்மானிக்க வல்லதாக இருக்கக்கூடும். இது மிகவும் சிக்கலான முடிச்சு. இதை அவிழ்ப்பது என்பது உயிர்தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இன்னும் அரை நுறெிறாண்டுக்குள் கைவரக் கூடிய காரியமாகத் தெரியவில்லை.

* நகலாக்கத்தின் மூலம் முற்றாக ஒழியவிருக்கும் விலங்கினங்களைப் பிரதி எடுத்துக்கொள்ள இயலுமா ? தற்சமயம் இது ஒரு கடினமான காரியமாகத்தான் இருக்கிறது. ஒரு டாலியை வளர்க்க 276 முறை சோதனை செய்யவேண்டியிருந்தது. ஆனாலும் இது ஒரு முக்கியமான தேவைதான். இதன்மூலம் உயிர்பன்முகத்தை நிலைகொள்ளச் செய்யமுடியுமென்றால் இதனை முயன்று பார்ப்பது அவசியமாகத்தான் படுகின்றது. இதற்கு ஒழியவிருக்கும் உயிரினத்தில் அதிக அளவு பெண்கள் இருப்பது அவசியம். ஆனாலும் சில சோதனைகளில் தொடர்புள்ள பிற உயிரிகளின் பெண்கள் வெற்றிகரமாகப் பயன்பட்டிருக்கின்றன. இந்தியா, மலேசியா, இந்தோசீனா பிரதேசங்களில் அருகிவரும் கவுர் இன மாட்டை, அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஐயோவா பசுவின் துணைகொண்டு நகலெடுத்திருக்கிறார்கள். இப்படிப் பிறந்த நோவா எனும் கவுர் மாடு நல்ல முறையில் வளர்ந்தது ஒரு அதிசயம்.

* இறுதியாக, ஆண்களின் துணையின்றி பெண்களால் நகலாக்கத்தின்மூலம் இனப்பெருக்கம் செய்ய இயலுமா ? அதிர்ச்சி தரக்கூடிய இந்தக் கேளிவிக்கு விடை ளஆமாம்!!! பெண்களின் உடலிருந்து எடுக்கப்பட்ட சாதாரண செல்களின் மரபுக்கூறை இன்னொரு பெண்ணின் கருமுட்டையில் செலுத்தி அதை வேறொரு பெண்ணின் கருவறையில் வளர்த்துப் பிறப்பிப்பது சொத்தியமான செயல்தான்.

நகலாக்கம் ள நெறிமுறைகளும் அறிவியல் தர்மங்களும்.

நாம் முன்னரே இந்தக் கட்டுரையில் பலமுறை நகலாக்கத்தில் ஏற்படக்கூடிய தார்மீக முறைதவறல்களையும், சமய, சமூக ீதெியிலான தர்மம் பிழைத்தல்களையும் பார்த்தோம். இவற்றின் சில அதிர்ச்சி தரக்கூடிய தொகுப்புகளைப் பட்டியலிடுவோம்.

1. எந்த ஒரு விலங்கின் ஏதாவது ஒரு செல்லில் இருந்தும் மரபுக்கூறுகள் பிரிக்கப்பட்டு வேறொரு விலங்கில் நகலெடுக்கப்படும் சாத்தியம் உள்ளது. அதாவது நாம் சொன்னதுபோல் உலக அழகியோ, கால்பந்து வீரரோ, ஒருவருடன் கைகுலுக்கினால் அவருடைய நகல் ஆய்வகத்தில் வடிக்கப்படக்கூடும். புகழ்மிக்க ஒவ்வொருவரும் தங்களைக் காப்புரிமைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் நேரலாம்.

2. எந்த ஒரு விலங்கின் மரபுக்கூறுகளையும் வேறொரு விலங்கின் மரபுக்கூறுகளுடன் இணைத்து, நோய் எதிர்ப்பு சக்தி, அழகு போன்றவை கொண்ட ஒரு சந்ததியை வடித்தெடுக்க முடியும். உதாரணமாக, சென்ற ஆண்டு மனிதனுக்குக் காயம்பட்டால் இரத்தத்தை உறையவைக்கும் மரபுக்கூறுகளைப் பிரித்தெடுத்து ஒரு ஆட்டில் செலுத்தி, நகலெடுத்தார்கள். பாலி என்று பெயரிடப்பட்ட இந்த ஆட்டுக்குட்டி ஒருவகையில் மனிதனின் மரபுக்கூறுகளை உள்ளடக்கியது. இதன் உச்சகட்ட அபாயம், இரு வேறு உயிரினங்கள் கொண்டு பிறக்கும் ஒரு குட்டி முற்றிலுமாக வேறு விலங்காக மாறிவிடக்கூடும். இது இறைவனால் படைக்கப்பட்டதோ, பரிணாம வளர்ச்சியால் உருவானதோ அல்ல. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு உயிரினம். இது சூழலியலில் எந்தப் பங்கை ஆற்றக்கூடும் என யாருக்கும் தெரியாது.

3. மனிதனுக்குச் சேவையாற்ற வேண்டும், மனிதனின் நோய்களை எந்த வகையிலாவது குணப்படுத்த வேண்டும், எனும் தன்னலம் கருதாத மருத்துவ ஆராய்ச்சியிலும் நகல்களையும், தண்டுச் செல்களையும் பயன்படுத்துவதில் பலத்த அபாயம் உள்ளது. நோய்கள் குணமாகும் அதே வேளையில் அந்த மரபுக்கூறுகளில் ஒரு பகுதி மனிதனின் வேறு குணத்தையோ அமைப்பையோ முற்றாக மாற்றிவிடக்கூடும்.

4. அவ்வாறான ஆராய்ச்சிகளில் பயன்படும் கருக்கள் நாட்கள் கடந்து வளர்ந்துபோனால் உயிரையும், உடலையும் படைத்த ‘மனிதனை ‘ கொலை செய்ய தார்மீக ரீதியிலான தகுதி நமக்கு உண்டா ? வளர்ந்த கரு, ஒரு தனி உயிர், எந்தவிதத்திலும் அழிக்கப்படக்கூடாது எனும் சிலரின் கொள்கைப்படி ஒரு மனித நகலை உருவாக விடலாமா ?

5. என்னதான் இருந்தாலும் மரபுச்சோதனைகள் இன்னும் ‘குருட்டாம்போக்கு ‘ முயற்சிகள்தான். மரபியல் ஆராய்ச்சியின் எதிரிகளின் அடையாளச்சின்னம் ‘பெல்ஸ்ட்வில் பன்றி ‘ (Bestville Pig) என ஆய்வகத்தில் உருவானது. மனித வளர்ச்சி ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்யும் அமெரிக்க வேளாண் துறையின் ஆராய்ச்சிக்கூடத்தில் வடிக்கப்பட்டது இந்தப் பன்றி. துத்தநாகம் உள்ளடங்கிய உணவை அளித்த பின்னரே, விரைவாக வளரவேண்டும் என்று கணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தப் பன்றி எல்லோருடைய கணிப்புகளையும் மீறி அதற்கு முன்னரே இராட்சத வளர்ச்சியைப் பெறத்தொடங்கியது; விரைவில் முழிபிதுங்கி, பருத்து அசிங்கமாக மாறிவிட்ட இந்தப் பன்றிதான் எதிர்ப்பாளர்களின் அடையாளச் சின்னம்.

இத்தகைய விலங்கு ஆராய்ச்சிகளில் அவற்றை வெட்டியழிப்பது என்பது சர்வசாதாரணம், ஆனால் இதுபோல் முழிபிதுங்கி ஒரு மனித நகல் உருவானால் அதைப் ஆராய்ச்சிக்குப் பலியிடுவார்களா ?

6. நகலாக்கம் மூலம் இனப்பெருக்கத்திற்கு ஆண்களே தேவையில்லை. பெண் ஒருத்தியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களில் மரபணுக்களை வடித்தெடுத்து, இன்னொரு பெண்ணின் கருமுட்டையில் செலுத்தி, குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் ஆண்களில் ஆர்வம் இல்லாத ஒரினச்சேர்க்கை விருப்பம் கொண்ட பெண்களால் (lesbians) குழந்தை பெற்றுத் தாயக இயலும். ஆனால் ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆண்களுக்கு (gays) குழந்தை தேவையென்றால் ஏதாவது ஒரு பெண்ணின் உதவி கட்டாயம் தேவை. அவளது கருமுட்டைக்குள்தான் வாரிசை வளர்த்தெடுக்கவியலும்.

ஆனால் இந்த முறையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. கலவிமூலம் ஆண்-பெண் இணைந்து உருவாகும் குழந்தையின் மரபுக்கூறுகளும் புறவடிவும் சேர்க்கையின் கலப்பினால் தாய்தெந்தை இருவரிலிருந்தும் மாறுபட்டு ஒரு தனித்த குழந்தையாக உருவாகும். நகலாக்கம் மூலம் பெண்கள் பெறும் குழந்தை, இருவரில் ஒருவரின் மரபு நகலாகத்தான் இருக்கும்; அதற்கென்று மரபுக்கூறுகளில் தனித்தன்மை கிடையாது.

7. ஆனால் இவை எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் அபாயம் விளைவிக்கக்கூடிய ஒரு சாத்தியம் உண்டு. அது மரபு மருத்துவ முறைகளால் தங்கள் இனத்தை, நோயற்ற, ஆற்றல் மிக்க இனமாக மாற்றிக்கொண்ட ஒரு மனித இனம், உதாரணமாக, அமெரிக்கர்களில் சிலர்கள், அவர்களுக்குள்ளே அதன் பயன்களை இரகசியமாக ஆக்கி, மனிதனில் மரபு மேம்பட்ட ஒரு குழுவை உருவாக்க இயலும், இத்தகைய குழு, தங்களின் உடலமைப்பு மற்றும் பிற அமைப்பு உயர்வினால் மற்ற இனங்களை அடிமைப்படுத்திவிட இயலும். அவர்கள் பிற இனங்களுடன் புணர்ச்சியைத் தவிர்த்து, உயர்ந்த சாதியாக தங்களை நிலை நிறுத்திக்கொள்ளவியலும். நாம் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் கண்ட பிறப்பால் உயர்வு-தாழ்வு எனும் இழிநிலையை மனித குலம் அடையவியலும். அது மானுடத்தில் பல மாறுதல்களை உருவாக்கவியலும்.

இவை எல்லாவற்றுக்கும் எதிர்ப்புகள் இருக்கும். மரபு மருத்துவத்திற்கும், தண்டுச் செல் ஆராய்ச்சி மற்றும் நகலாக்கத்திற்கு இப்பொழுது இருக்கும் எதிர்ப்புகள் மெதுவாகக் குறையக்கூடும். இதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். சோதனைக்குழாய்க் குழந்தைகள் முதலில் தோன்றிய பொழுது அவற்றைப் பலர் வெறுத்தார்கள், அது இயற்கைக்கு முரணானது எனக் கூச்சலிட்டார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன ? இந்தியா போன்ற மூன்றாவது உலக நாடுகளிலும்கூட இது இப்பொழுது சர்வசாதாரணமாக ஆகிவிட்டிருக்கிறது. செயற்கைக் கருத்தரிப்பும் சோதனைக்குழாயும், மாற்றுத் தாய் சுமந்து பெற்கும் குழந்தைகளும் இருகரம் நீட்டி வரவேற்கப்படுகின்றன. இவை, இனப்பெருக்கக் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு இறைவன் தந்த வரப்பிரசாதமாகக் கருதப்படுகின்றன. இவற்றை வியாபார நோக்கோடு செய்யும் மருத்துவர்கள்கூடத் தெய்வங்களாகப் போற்றப்படுகிறார்கள். இதுதான் நடைமுறை உண்மை. எத்தகைய அறிவியல் வளர்ச்சியையும் மனிதன் காலப்போக்கில் எடுத்தாட்கொண்டு விடுகின்றான்.

அவ்வாறு நகலாக்கத்திற்கு இன்று இருக்கும் உணர்ச்சிபூர்வமான எதிர்ப்பு மெதுவான ஆதரவாக மாறக்கூடும். அப்பொழுது நாம் பட்டியலிட்ட எச்சரிக்கைகள் நடைமுறை பிரச்சனைகளாக உருமாறும், புதிய பிரச்சனைகள் தோன்றக்கூடும். இதெற்கெல்லாம் விடை – நாம் பலமுறை கேட்டு அலுத்துப்போனதுதான் – ‘காலம்தான் பதில்சொல்ல வேண்டும் ‘.

தொராண்டோ,

2. செப்டம்பர் 2001.

Series Navigation