தொலைந்து போன காட்சிகள்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

கோ. அருண்


அன்று எனது வாழ்வில் விசேஷமான நாள் !

ஞாயிறு காலை.

சீக்கிரமே எழுந்து ‘பீச் ‘சில் 20 நிமிட ‘பிரிஸ்க் வாக்கிங் ‘ முடித்து வந்தேன். மனைவியும் நேற்றிரவு சீக்கிரமே தூங்கிவிட்டதால், அவளும் விழித்து வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். மனைவியிடம் சூடாக பில்டர் காபி தரச் சொல்லிவிட்டு, செடிகளுக்கு தண்ணீர் விட, தோட்டத்தின் பக்கமாய் வந்தேன். எத்தனை நாள் ஆயிற்று என்னுடைய செடிகளிடமெல்லாம் பேசி !

பின்பு, ஈரமாய் படிந்த மண்ணை கைகளிலிருந்து துடைத்துவிட்டு, ஹாலின் பேனை சுவிட்சை தட்டி விட்டு, அலமாரியின் மேலிருந்த புத்தகக் கட்டை எடுத்து மேஜையின் மேல் வைத்தவாறு உட்கார்ந்தேன். தூசி படிந்த அந்த புத்தகங்கள்… மனதினுள்ளே செப்பனிடப்பட்டிருக்கும் இலக்கிய ஆசைகள் அவ்வப்போது தலைதூக்கும் போது, இலக்கிய நண்பர்கள் வட்டாரத்திலிருந்து வாங்கி வந்த இலக்கிய இதழ்கள். ‘படித்துறை ‘, ‘கதைச் சொல்லி ‘, ‘காலச் சுவடு ‘ … இத்யாதி … இத்யாதி இப்படி இன்னும் பல. இரு கால்களையும் பழைய ‘தமிழ்வாணனின் சங்கர்லால் கணக்காய் ‘ சொகுசாய் மேஜையின் மேல் போட்டு உட்கார்ந்தேன். எந்தவித இடையூறுமின்றி சில மணி நேரங்களில், பல நாளிருந்த இலக்கியத் தாகத்தை ஒருவிதமாய் தணித்துக் கொண்டேன்.

வயிற்றில் அப்போதெழுந்த சின்னபசிக்கு நொறுக்குத் தீனியை வார்த்து விட்டு, சின்னச் சின்ன ரசீது மற்றும் துண்டு சீட்டுகளால் பொலிவிழந்திருந்த எனது ஷெல்பை சீராக்க முனைந்தேன். அப்படியே களைவதை களைந்து, மற்றதை தூசி தட்டி வைக்க வேண்டுமானால், வேலை சுலபமாய் முடிந்துவிடும். ஆனால், மனது ஒப்பவில்லை. ஒவ்வொன்றாய் என்ன ஏதென்று பார்த்து, படித்து, லயிக்க முற்பட்டேன். கல்லூரிக் கால கவிதைகளில் தொடங்கி, கர்ப்ப காலத்தில் மனைவிக்களித்த மருந்துகளின் சீட்டு என தொடர்ந்து, மகன் மகளின் பெயர் வைப்பதற்காக நானும் எனது மனைவியும் பல பெயர்கள் எழுதி அடித்த துண்டுத் தாள் வரை எல்லாம் என் பொக்கிஷத்தில் பார்க்க நேர்ந்தது.

இதன் நடுவே, பள்ளிப்பருவத்தில் கற்றுக் கொண்ட வயலின் பாடத்தின் ஒரு தாள் கண்ணில் பட … சோம்பிக் கிடந்த இசை ஆர்வமும் புத்துயிர் பெற்றது. சுத்தம் செய்யும் சமயத்தில், காதுக்கென்ன வேலை ? அந்த புலனிற்கும் வேலை ஒதுக்கிக் கொடுத்து விடலாமென, தேடிக் கண்டுபிடித்து, மேண்டலின் சீனுவாசனின் கேசட்டை மியுசிக் சிஸ்டத்தில் போட்டு, ‘ரகுவம்ச சுதா ‘வில் மேண்டலினின் ஆர்பரிப்பை மெல்ல கசிய விட்டேன்.

மனவியும் வந்து அவள் பங்கிற்கு ஒத்தாசையாய் இருந்தாள். அறையில் ஆங்காங்கே இருக்கும் ஒட்டடைகளை நீக்கினாள். நடுவே, கிச்சனுக்குச் சென்று, வெஜிடபுள் சூப்புடன் வந்தாள். அப்போது தான் அவளை கவனித்துப் பார்த்தேன். சாக்லெட் நிற காட்டன் சேலையில் சிம்பிளாய் ‘பளிச் ‘ சென காட்சியளித்தாள். வெகு நாட்களுக்கு மனைவியை அருகில் பார்க்கவே இல்லையோ என்று தோன்றியது. சும்மா சொல்லக்கூடாது, இந்த வயதிலும் என் மனைவி அழகாகவேயிருக்கிறாள்.

சூப் பருகும் சமயத்தில் ‘லன்ச் ‘ பற்றி கேட்டபோது, ‘முள்ளங்கி சாம்பார், கீரை கூட்டு, பாவக்காய் சிப்ஸ் ‘ என எனக்குப் பிடித்த மெனுவாய் அடுக்கி, எல்லாம் ரெடி என்றாள். சட்டெனத் தோன்றியது. கிச்சனிலும் நம் நள பாகத் திறமையையும் காட்டுவுமே என்று ! என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ‘பேச்சிலர் ‘ லைப்பில் அம்மாவுடைய பிறந்த நாளுக்கு நானே செய்த ‘கசகசா பாயாசம் ‘ நினைவிற்கு வந்தது. மனைவியை கட்டாயப்படுத்தி கிச்சனுக்கு வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு, கரண்டியுடன் கிச்சனில் களமிறங்கினேன். சிறிது நேரத்தில் தயாரான பாயாசத்தை ருசி பார்த்த மனைவி ‘பரவாயில்லயே ‘ என்ற சர்டிபிக்கேட் தந்து ‘சின்னவனுக்கு ரொம்ப பிடிக்குங்க ‘ என்றாள்.

மதிய உணவிற்கு பிறகு குட்டித் தூக்கம், காலையில் மேய்ந்த செய்தித் தாள்களை விலாவரியாக படித்தல், தோட்டத்தில் சென்று பூக்கள் பறித்தல், மகனுக்கு வீட்டுப்பாடம் சொல்லி கொடுத்தல், பின்பு மனைவியுடன் கோயில் என பொழுது உற்சாகமாய் கழிந்தது.

எட்டு மணியளவில், சிறிய டிரான்ஸிஸ்டரை தேடிப்பிடித்து எடுத்து, அதை சரி செய்து, பாய் தலைகாணியுடன் மொட்டை மாடி வந்தேன். தென்றலின் ஸ்பரிஸம் என் மீது பட்டது. ‘சிலு சிலு ‘ வென வீசிய இந்த காற்றிற்க்கு ஃபேன் காற்றோ … அல்லது ஏ.ஸி.யோ ஈடாகுமோ ? டிரான்சிஸ்டரை ஆன் செய்து, வானத்தை நோக்கி படுத்தேன். ‘ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் … ‘ பி.பி.சீனிவாசும், சுசீலாவும் தங்களது வசீகர குரலில் தாலாட்டத் துவங்க … நான் உற்சாகமாய் விண்ணில் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தேன். எத்தனை நாளிருக்கும் இது போன்ற சுகமான காற்றை சுவாசித்து ? விண்ணிலிருந்த நட்சத்திரங்களை பார்த்தே நாளாகிவிட்டது !

அன்று முழுவதும் எவ்வித பதட்டமின்றி நடந்த அனுபவங்களினால், மனது உற்சாகத்தில் கரைபுரண்டது. சற்று அசைப்போட்டு பார்த்தால், நான் செய்த அன்றைய செயல்களெல்லாம் நெடு நாட்களுக்குப்பின் வெகுவாய் மனதிற்கு இதமளிக்கிற, மனதிற்கு வெகு அருகே இருக்கிற புதைந்து கிடந்த விஷயங்கள். எனக்கு மட்டுமே சுகமளிக்க கூடிய இது போன்ற என் அடையாளங்களினால், என்னை நான் மீண்டும் கண்டுக்கொண்டேன் எனலாம்.

எனக்கு ஆச்சரியமாயிருந்தது. இந்த அனுபங்களுக்காக கோடி ரூபாய்க்கான அவசியமோ, அல்லது வெளி கிரகங்களிலிருந்து ஏதேனும் வரவழைக்க வேண்டியதற்கான தேவையோ ஏதுமில்லை. ஆனால், இத்தனை நாள் ஏன் இது சாத்தியமாகவில்லை… ? ! ?

பொதுவாய் என் அறிவுக்கு எட்டிய வரை, திருமணமாகி 30 வயதிற்கு பின் எந்த செயல்களும் முழு மனதோடு யாரும் செய்வதாய் தெரியவில்லை. வேலைப் பளு, இடமாற்றம், மனைவியிடம் அனுசரணை, குழந்தைகள் பராமரிப்பு, குடும்பச் சுமை … இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படி ‘சர்வைவல் ‘ என்ற வீச்சின் கிடுக்குப்பிடியில் சிக்குண்டு, கிட்டத்தட்ட ஒரு நூல் கட்டப்பட்ட பொம்மையாகாத் தான் இயக்கப்படுகிறோம்.

எது எப்படியோ… அன்று நடந்த நிக்ழ்ச்சிகளுக்கு ஒருவருக்கு அவசியம் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர்… ? !

மனைவி ‘தொண தொண ‘ வென்று போனில் அவரை கூப்பிட்டிருந்தும், அன்று முழுவதும் வராமல், அடுத்த நாளே வந்து ‘டிவி ‘யை பழுது பார்த்துத் தந்தார் அந்த டிவி மெக்கானிக்.

***

கோ. அருண்

arungg97@rediffmail.com

Series Navigation

கோ. அருண்

கோ. அருண்