தொலைந்து போனவை

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

ஸ்ரீனி.


வேர்கள் பிணைத்து, விரல் இலைகள் இணைக்கும்
எலந்தம் செடிகளும் அரளிச் செடிகளும்,
இவை ‘சமூக நலக்காடுகள் ‘ என பெயர் சுமக்கும் பலகைகளும்,
நிசப்தத்தை கிழித்து தடதடக்கும் ரயில்களும்,
தண்டவாளம் தாண்டும் நாய்களும், நாிகளும்,
மணலில் தேய்த்தோட்டிய செங்கல் வண்டிகளும்,
சிம்மாசனங்களாய் நினைத்தமரும் கருங்கல் குவியில்களும்,
தலையாட்டும் ஓணான்களுக்காய் ஈர்குச்சித் தூக்குகளும்,
இறக்கப் போகும் குளத்து மீன்களுக்காய்
இறந்து போகும் மண்புழுக்களும்,
அடுக்கி வைத்த தீப்பெட்டிகளாய்
வாிசையில் நிற்கும் வகுப்பறைகளும்,
குத்தகை எடுக்கப்பட்ட மரங்களினின்று அடித்த புளியங்காய்களும்,
தூவிய அாிசிமணிகளை தின்று
தொடவிட மட்டும் மறுக்கும் புறாக்களும்,
வயதில் பொிய வாலிப அண்ணாக்களின்
கிட்டிப்புல் விளையாட்டில் கவனம் முழுவதுமாகி
‘நானும் வரேன் ! ‘ கூறி முடிக்கும் முன் நறுக்கென்று குட்டுப்பட்டு
அழுதபடி நின்று பெற்ற அழுமூஞ்சிப் பட்டங்களும்,
இரவின் இருட்டை என்றும் பார்த்திராத
மாலைக்கண் சகாயமோியின்
கட்டிக்கொள்ளத் தோன்றும் ஆட்டுக்குட்டிகளும்,
வீட்டிற்குத் தொியாமல்
வாயில் பால் தேக்கி, குடித்ததாகப் பொய் சொல்லி
நான் வளர்த்த நாய்குட்டிக்கு,
ஒட்டைக் கொட்டாங்குச்சியில் ஊற்றிக் கொடுத்த நாட்களுமாய்,
இன்று தெருத் தெருவாய் தேடினாலும் தென்படாத,
என்றோ கடந்து போன என் இளமைக்கால நிகழ்வுகள்.

***

Series Navigation