தைக்காமுற்றத்தின் அதிசய செடிகள்

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நடுநிசியில் முளைத்த அதிசய செடி
விசித்திர மொழியில் பேசியது.
ரஜபுமாத இரவொன்றில்
அது கேவிக் கேவி அழுத சத்தத்தையும்
யாரோ கேட்டிருக்கிறார்கள்.

கபர்ஸ்தானத்தில் போர்த்திட நேர்ந்து
பட்டில் மகாம் மூடி வாங்கிக் கொடுத்த
திருப்தியில் வந்து போகும் நீ
இன்றிரவு முழுக்க எங்கோ போனாய்..
பாட்டு ராத்திரி வெறுமனவே காய்கிறது.

நேற்று முக்காடிட்டு வந்த பீவி
தன் ஒருவயதுக் குழந்தையை
மகாம் நடையில் வெற்றுடம்போடு வைத்தாள்
முப்பது ரூபாய் எண்ணிக் கொடுத்தவாறு
திருப்பி விலைக்கு வாங்கினாள்
தன் கைகளில் ஏந்தி

காற்றில் சுழன்றடித்துச் செல்லும்
சாம்பிராணி புகைமூட்டத்தில் மிதந்து செல்கின்றன
கண்மூடிக்கிடக்கும் நாசிக் குருவிகள்.

தைக்காகிணற்றில் எடுத்த
ஒரு குடம் தண்ணீர்
பிச்சிமாலையை கழுத்தில் சூடி
இரவு முழுதும் மகாமிற்குள் தன்னந்தனியே
இன்னொரு துணையின்றி

வெள்ளியில் தகடடித்த கண்ணொன்று
முழங்காலொன்று கையொன்று முகமொன்று
மார்பிரண்டு குறியொன்று யோனியொன்று
ஆணாகவும் பெண்ணாகவும்
பெண்ணாகவும் ஆணாகவும்
வெவ்வேறு அடையாளங்களுண்டு
பேசாத கண்ணை பேச வைக்க
பார்க்காத கண்ணை பார்க்க வைக்க

உடலும் மனமும் குலுங்கித் திரள
தலைவிரி கோலத்தோடு முட்டியும் மோதியும்
நெளிந்தும் புரண்டும் கூக்குரலிட்டும்
ஓசைகளின் பீதி உயர்கிறது.
உயிரை சிதைத்து படம் விரித்தாடும் ஆட்டம்
ஆடும் போதெல்லாம் தெரிகிறது
விட்டு விடுதலையாகும் வெறி


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்