துரோபதி திருக்கலியாணம்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

புதுவை ஞானம்


—————————————

(அமரர் சத்யஜித் ரே அவர்களின் புகழ் மிகு திரைக்காவியமான ‘ஜல் ஸாகர் ‘ (MUSIC HALL )
மாளிகை உங்களுக்கு நினவுக்கு வருகிறதா ? அப்படிப்பட்ட கம்பீரமானதொரு மாளிகை
நான் பிறந்த தெருவிலேயே ‘ கடைசி வீடு ‘ என்ற பெயரால் அழைக்கப்பட்டு ஆட்சி
செய்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் யானை ஒன்று தான் இல்லை.மற்றபடி குதிரைகள்
கோச்சு வண்டி, லஸ்தர் விளக்குகள், ஒளியைப் பிரதிபலித்து அதிகப் படுத்தும் ரஸகுண்டுகள்
தஞ்சாவூர் ஒவியங்கள், வேலைப்பாடு மிகுந்த மர சாமான்கள் ஏராளமான நகை நட்டுகள் எல்லாமும்
இருந்தன. என் மனவி இறந்து போய் கால் நூற்றாண்டு கடந்து நான் அங்கு போய்ப் பார்க்கையில்
இடிந்து குட்டிச் சுவராய் அந்த மாளிகை. கண் கலங்கியது. அந்த வீட்டு சாரட்டு வண்டியில் முகம்
பார்த்து பல்லிளித்தது,பழித்துக்காட்டி,நாக்கைத்துருத்தி பயம் காட்டி மகிழ்ந்தது. எம்.ஜி.ஆர் வாழ்க
ஜிவாஜி ஒழிக என்று கோச்சு வண்டியில் படிந்திருந்த புழுதியின் மேல் எழுதி மகிழ்ந்தது எல்லாம்
நினைவுக்கு வந்தது. வீட்டுக்காரரின் சந்ததிகள் விற்றுக் காசாக்கிக் கொண்டு எங்கோ சென்று விட
மிஞ்சியிருந்த ஒரு பங்காளி குடிசையில் குடியிருந்தார்.அவரிடம் பல முறை கெஞ்சிக் கூத்தாடி
பெற்ற ஒரு புத்தகம்- பாரதம். முதல் 25-ஆம் பக்கம் வரை கிழிந்து போய் விட்டது 399 பக்கம்
தாண்டியும் கிழிந்து விட்டது. யார் எழுதியது? யார் பிரசுரித்தது ? எந்த ஆண்டு வெளி வந்தது ?
ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த மொழி நடையும் அந்தக் காலத்தில் அதனை
வாய்விட்டு ராகம் போட்டு ஒருவர் படிக்க மொத்த கிராமமும் எப்படி வாய் பிளந்து ரசித்துக்
கேட்டிருக்கும் என்பதையும் கற்பனை செய்து துயரத்தோடு உங்களுடன் சில பக்கங்களைப் பகிர்ந்து
கொள்கிறேன்.”முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை” என்ற
பழமொழியை அந்த மாளிகை நினைவூட்டுகிறது.)
———————–

“சகல ஜனங்களும் -பாண்டவர்களுக்கும் -துரோபதிக்கும் நடக்கும் கலியாணம் தங்கள் வீட்டுக்
கலியாணமாகவே நினைத்து உச்சாகத்துடன் மனக்களிப்படைந்து – லக்கினத்தை எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார்கள். இப்படிப் பட்டணமெல்லாம் அலங்கரித்தவுடனே- மறுபடியும் ராஜகிரகத்தையும்
கலியானமண்டபத்தையும் விசித்திரமான வஸ்திரங்களாலும் – கண்ணாடிகளாலும் – பூமாலைகளாலும்
அகிற்புகையினாலும் – பொற்றோரணங்களாலும் – புதுக்கினார்கள். அந்தச் சிறப்புகள் நாம் இந்தக்
கலியாணத்திற்கிடமாயினோமென்று சந்தோஷமடைந்தது போற்பிரகாசித்தன. அம்மண்டபத்தின
-டுவிலே விவாகவேதிகை செய்து பொற்கட்டினாலலங்கரித்து சுருக்கு- சுருவம் -சங்குபாத்திரம் –
தர்ப்பங்கள் பொரிகள் அக்ஷதைகள் முதலான சுப வஸ்துக்களாலே நிறைத்துப் புரோகிதர்கள்
சிறந்த வேதியர் கூட்டத்தோடு நிறைந்திருந்தார்கள்.பாண்டவரும் தமது புரோகிதரை அழைப்பிவித்து
சமாவர்த்த்னஞ்செய்துக்கொண்டு அனேக வஸ்திரங்கள் – பசுக்கள்- சுவர்ணங்கள் முதலியவைகளை
வேதியருக்கு வழங்கி மங்கள ஸ்நானஞ்செய்வித்து , நவரதினங்களிழைத்த குண்டல முதலிய
ஆபரணங்களையும் – விலையுயர்ந்த பட்டு வஸ்திரங்களையும் அணிந்து சுகந்தபரிமளமிகுந்த கந்தம்
பூசிக்கொண்டு புஷ்ப சரங்களும் புனைந்து மணவாளக்கோலத்துடனே விளங்கினார்கள். அப்போது
துரோபதிக்கும் – கோகிலாதேவி முதலானவர்கள் வேதியரைக்கொண்டு மங்களஸ்நானமும்நாந்தியும்
செய்வித்து அவர்கட்கு அன்னங்களாலும் தக்ஷனைகளாலும் திருப்தியுண்டாக்கி அவர்களுடைய
ஆசீர்வாதத்தினாற் சிறந்து விளங்கும் அப்பெண்மணிக்குப் பாதமுதல்கேசம் வரைக்கும் ரத்னாப
-ரணங்களினாலே அலங்கரித்தனர்.

அந்தக் கலியாணப்பெண் ஒரு பொற்கொடியானது ரத்தினமயமான பூங்கொத்துகளினால்
வளங்கெழுமியது போல விளங்கினாள். அன்றியும் புன்னமையின் இராத்திரியானது தீபங்களினால்
ஒளிர்வது போலுமிருந்தாள்.கனக சித்திர மினுமினுக்கிட்ட வெண்பட்டுடுத்திக் கொண்டவள்,மஹா
பரிசுத்தையாகிய இவளது தேகத்தைக் கட்டிக் கொண்டு பாதகரால் தனக்கு வந்த அசுத்தியை
நீக்கும் பொருட்டு பொற்சிறகுடைய அன்னங்கள் சூழ்ந்து விளங்கிய கங்காநதியினால்
ஆக்கிரமிக்கப் பட்டவள் போல் விளங்கினாள், பரிமள திரவியங்கள் இவளுடைய தேகவாசனைக்கு
தோற்றதனாலேயோ விற்பனைக்கரிய பற்பல சுகந்த வஸ்துக்களைச் சேர்த்ததனாலேயோ,அவைகளை
யரைத்து தேகத்திற்பூசப்பட்டு பிரகாசித்தாள்,இவளுடைய தேகத்தின் மேன்மைக்குத் தோற்றதனாலேயோ,
அல்லது பூர்வத்தினாலேயோ,உயர்ந்த மலர்களை நாரிநார்க்கட்டியிறுக்கி முடியிலும் கழுத்திலும் பூட்டிச்
சூட்டினார்கள்.

இப்படிக்கெல்லாம் சிங்காரிக்கப்பட்ட பாஞ்சால கன்னிகையைப் புரோகிதபத்தினி முதலாகிய பிராமணப்
பெண்களுடனே கொகிலா தேவி க்ஷத்திரிய சுமங்கிலிகள் கந்தபுஷ்ப தாம்பூல முதலிய மங்கள வஸ்த்துக்களுள்ள
பொற்பாத்திரங்களை ஏந்திக்கொண்டு அழகிய கலியானப்பாடல்களைப்பாடி சகலதேவஸ்த்ரீகளும் லட்சுமிதேவியைச்
சூழ்வதுபோல்சூழ்ந்து வாத்தியங்களும்சங்கீதங்களும்-முழங்க மெள்ளமெள்ள அந்தப்புரத்தினின்றும் கலியாண
மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்,அப்படி அனேகசுந்தரிகள் சூழவருந்துரோபதியைப்பார்த்த மின்னல்களானது
இவளுடைய தேககாந்திக்குத்தாங்கள் தாழ்ந்தமையாலே விசேஷசமயத்திலே இவளிடத்தில் சேவகம்பண்ணி
அனுக்கிரகம் பெறவேண்டுமென்று பூமியிலிறங்கி வந்து சஞ்சலத்தன்மையை விட்டு பின்செல்லும் பன்மையைத்தொட்டு
முன்செல்லும் விலாசத்திலகப்பட்டு இவளைச் சூழ்ந்தது போலிருந்தது.

இந்த ஸ்த்ரீகளால் மலிந்த அந்தக் கலியாண மண்டபமானது அப்சரசுகள் விளங்கிய இந்திரன் சபைக்கு நிகராய்
இருந்தது,இவ்வாறு கலியாணப்பெண்ணை விவாகச்சபைக்கு அழைத்துக்கொண்டு வந்து நிருத்தின உடனே தவுமியர்
முதலாகிய மகாமுனிகளும் கிருக்ஷ்ணன் முதலிய பந்துக்களும் மித்திரர்களும் சூழ்ந்திருக்கிற பாண்டவர்களைத்
துருபத மகாராஜன் சுற்றத்தாருடனேயும் பிராமணர்களுடனேயும் வேத நாத கீத பரத நாட்டியஸ்த்ரீகளுடனும்
அவர்களிருக்கும் இடத்திற்குப்போய்த் தகுந்த மரியாதைகள் செய்து ,பின் புறத்தில் ஸ்வஸ்திவாசனங்களும் முன்
புறத்தில் வாத்தியங்களும் கோஷிக்க வெகுசிறப்பாய் அழைத்துக்கொண்டு வந்து சபையிலமர்த்தினான்.

இப்படி இஷ்ட சனங்களாலும் பந்துசனங்களாலும் நிறைந்து தாரைகளும் கருநெய்தல்களும் இறைக்கப்பட்டு
நட்சத்திரங்களும் கிரகங்களும் பொருந்திய நிர்மலமாகிய ஆகாசம்போலே விளங்கும் அச்சபையில்,
இவர்களெல்லாம் சேர்ந்த மாத்திரத்திலே பேரி – கரகளம்- சங்கு- மிருதஙம்- முதலிய வாத்தியங்கள் ஏககாலத்தில்
முழங்கின.இந்த வாத்திய கோஷமானது- திரிபுவனமுங்கேட்காநின்ற மேகத்தொனி போலிருந்தது.”

திருக்கலியாணம் விருத்தம்
————————————–
கேள்விக்கொருவனெனுந்தெளமியன் கீத வேத
வேள்விக்கு வேண்டுவனயாவும் விதியினீட்டி
மூள்வித்த் செந்தீக்கரியாக முரசுயர்த்த
தாள்வித்தகர்க்கு வரமான சடங்கு செய்தான்.

பன்மங்களமுமுடன் வைகிய பண்பினாளை
நன்மங்கலப்பூண்டுகிலோடு நயந்துசாத்தித்
தன்மங்கலந்தமனத்தோனையத்தையலோடுந்
தென்மங்கலஞ்செஞ் சுடர்த்தீ வலஞ்செய்வித்தாரே.

—————.
தொகுத்து வழங்கியது : புதுவை ஞானம்.

Series Navigation