துய்ப்பேம் எனினே தப்புந பலவே – வாழ்க்கை இதுதான்!

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

தேவமைந்தன்


‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என்றாராம் பாரதி. கணக்குப் பாடத்தில் மக்கு என்ற ‘பாராட்’டை ஆசிரியரிடம் வாங்கிய மாணவர், வாழ்க்கைப் பாடத்தில் வென்று விடக்கூடும்.

ஆம். வாழ்க்கை, நாம் விதிக்கும் எந்த விதமான நிபந்தனையையும் ஏற்றுக் கொள்வதில்லை. மெய்யாகப் பார்த்தால், அது எந்த விதமான நிபந்தனையையும் நம்மேல் விதிப்பதும் இல்லை. அடிமைப் புத்தியே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும். விடுதலையான உள்ளம் எந்த நிபந்தனையை யார் விதித்தாலும் ஏற்காது. அன்பாகச் சொன்னால் மட்டுமே ஏற்கும்.

அன்புக்கு மாறானது வன்பு என்னும் ‘வம்பு.’ உலக அரசியலில், நாட்டு அரசியலில், அவையே போன்ற உலக – நாட்டு வணிகவியல்/சமூக இயல்களில், ஏன்.. வாழ்வியல் அன்றாடத்திலுங்கூட இன்றைய நாளில் முதன்மை இடம் தாங்குவது வன்பேதான். ‘எனக்கு எல்லாம் தெரியும்!’ என்ற இறுமாப்போடு அது உலகை வலம் வருகிறது. “அவர் வெறும் அரசு! நான் பெரிய பேரரசு!” என்பவருக்கு, அன்றன்று ஆட்சிப் பீடம்கூட ‘காலை வணக்கம்’ செலுத்துகிறது. ஆற்றல் மிக்க எளிமை, “வென்றவன் சொல்வதெல்லாம் வேதம்;அல்லாமல் என்ன?” என்ற கவியரசு கண்ணதாசன் வரியை முணுமுணுத்துக் கொள்கிறது.

சங்க இலக்கியத்தில் சோழன் நல்லுருத்திரன் குறிப்பிட்ட ‘மெலிவு இல்லாத உள்ளம் உடைய உரனுடையாளர்’ (புறநானூறு 190) கேண்மையை விட, “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’(திருவருட்பா) உறவே நிகழ்வில் எங்கு பார்த்தாலும், சென்றாலும், பழகினாலும் மலிவாகக் கிடைக்கிறது. இந்தப் பொருளுக்கு மட்டுமே விலைவாசிப் புள்ளி – “வரலாறு காணாத விதத்தில்” – மிகவும் குறைந்து காணப்படுகிறது. ‘கச்சா எண்ணெ’யால் இதன் விலைப்புள்ளியை மட்டும் என்றும் ஏற்றிவிட முடியாது.

ஒளவையார் பாடினாரே –

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

என்ற பாட்டு…(புறநானூறு 187)

அந்த அளவுகோலை வைத்து இன்று அளந்தால், ஐந்து கண்டங்களிலும் ஓர் ஊர் கூட எஞ்சாது. கொள்கைகள் தடம் புரண்டுவிட்ட காலம் இது. ஏழைகளுக்கும் தொழிலாளருக்கும் உதவுபவர்கள் ‘ஏ.சி.’ இல்லாமல் இருக்க முடியாத காலம் அல்லவா.. பணம் படைத்தவர்களுக்கு அவர்களுள் சிலர் உதவும் அளவுக்கு, மற்ற ‘முதலாளித்துவச் சுரண்டல்வாதி’கள் துணைபோக முடியாது.

நாடு, காடு, பள்ளம், மேடு என்ற நில வேறுபாடுகளை மட்டும் ஒளவையார் சுட்டினார். செவ்வாய்க் கோள் முதலான கோள்கள்கூட அந்தப் பட்டியலில் சேர்ந்துவிடப் போகும் காலம் வந்து கொண்டிருக்கிறது. என்ன.. “எவ்வழி நல்லவர் ஆடவர்” என்பது மட்டும் பேரளவு மாற்றம் பெற்று விடும்…

‘புரொகிராமிங்’ என்பது, கணினித் துறையில் மட்டுமே வெல்லக் கூடியது. சோதிடர்கள் இந்தச் சொல்லைக் கொச்சைப் படுத்தி விட்டார்கள். உள்ளபடி, அவர்களைப்போல் ஆற்றலுடன் ஒருவரைக் கடவுளுக்கு எதிராக எந்த நாத்திகவாதியாலும் திருப்பிவிட முடியாது. இதைப் பட்டறிந்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

ஆனால் இந்தத் திட்டமிடல்(programming) என்பதைச் ‘செயல் நம்பிக்கையாளர்கள்’ (pragmatists) அளவுக்கு மேல் நம்புகிறார்கள். இப்பொழுதெல்லாம் வெளியிடப்படும் நாட்குறிப்பேடுகள், அந்த அமெரிக்கப் பாணியில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். நம்மவர்கள் பலர் அந்த ‘பிளானிங்’(planning) பகுதியில் தான் உப்பு புளி மிளகாய்க் கணக்கை எழுதி வைப்பார்கள்.

“பத்துப் பொருள் வாங்க வேண்டுமென்று போனால், எட்டுப் பொருள் கூட வாங்கிவர அமையாது” என்று என் துணைவியார் அடிக்கடி கூறுவார்கள். திட்டமிடுவது எல்லாம் தோற்கும் என்பதல்ல; ஒவ்வொருவர் திட்டத்தையும் உடைத்தெறிய என்றே மற்றொருவர் இவ்வையகத்தில் தோன்றியிருப்பார் என்பதே உண்மை.

திருமணங்களிலும் இப்படித்தான். காதல் படங்களாய் எடுத்துத் தள்ளும் நம் திரைப்பட வல்லுநர்கள், காதலுக்குப் பிந்திய திருமண வாழ்க்கையையே பொருளாக வைத்துப் படமெடுக்குமளவு முட்டாள்கள் அல்லர். அவர்களுக்குத் தெரியும், நம் மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று. வாழ்க்கையில் தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதையே ‘சினிமா’விலும் பார்ப்பதற்கு நம் மக்கள் என்ன கலைப்படச் சுவைஞர்களா?
இதைப் புரிந்து கொண்டுதான் ‘பொதிகை’ அலைவரிசை, குறும்படங்களுக்கு ‘உரிய’ நேரம் ‘ஒதுக்குகிறது.’ பற்றாக்குறைக்கு, முன்பெல்லாம் நூல் வெளியிட்டு விழாக்கள் அடிக்கடி நடத்தப் பட்டதுபோல, இப்பொழுது ‘குறும்பட விழாக்கள்’ மலிந்து விட்டன. ஒரே நன்மை..புத்தகங்கள் வீட்டை அடைப்பதுபோல குறும்படங்கள் அடைப்பதில்லை. வட்டமான ‘டப்பா’க்கள் சில போதும்.. மூலையில் வைத்துக் கொள்ளலாம்.

“திட்டமிட்டால் போதும்!” என்பவர்களுக்கு எதிராக ஓர் உண்மையை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிவைத்தார்:

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

(புறநானூறு 189)

கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”(புறநானூறு 192) என்ற வாழ்க்கை மெய்ப்பொருள் பாடலின் பதின்மூன்று வரிகளுக்குப் பின்னால், வாழ்க்கை மெய்ம்மையை எதனுடனும் சமரசம் செய்து கொள்ளாமல் தெளிவாக வெளிப்படுத்தும் பாடல் இது.

வல்லரசுகள் பேரரசுகளை ஆள்பவர்களாயினும் சரி; நண்பகலோடு நள்ளிரவும் கண்துயிலாமல் வேட்டையாடும் வேடுவர்களாயினும் சரி; எவருக்கும் அடிப்படைத் தேவைகள் ஒன்றுபோலவேதான். மற்றவையும்(‘பிறவும் எல்லாம்’ என்ற இரண்டே சொற்கள் உணர்த்துபவை அனைத்தும் – காலங்கடந்தும் ஒன்றேபோல் இருப்பவை; ஏனெனில், அவை மனிதனின் கருவி-கரணம் சார்ந்தவை) அவ்வாறே. ஆகவே செல்வத்தை ‘உபரி’யாகச் சேர்த்தவர்கள் அந்த ‘உபரி’யை எப்பாடுபட்டேனும்(இது இக்காலப் பொருள்) எவ்வாறேனும் துப்புரவாகப் பகிர்ந்தளித்துவிட வேண்டும்.(இதைப் ‘பாத்தீடு’ என்ற கட்டுச் செட்டான சொல்லில் பழந்தமிழர் குறிப்பிட்டார்கள்.. ஆங்கிலத்தில் distribution என்பார்கள்). அவ்வாறு செய்யாமல் நாமே அச்செல்வத்தை நுகர்வோம் என்று முடிவெடுப்பவர்கள் இயற்கையான காரணங்களாலும் மன்னன் – படையெடுப்பு போன்ற செயற்கையான காரணங்களாலும்(இது அக்காலப் பொருள்) பலவகைகளில் அதைக் கைவிட்டு வருந்த நேரிடும்…

அந்தப் பாட்டின் பிற்பகுதிக்கு, இந்தக் காலத்துப் பொருள் என்ன தெரியுமா?

“…அப்படி அல்லாமல் நாமே இந்த உபரிச் செல்வத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்ற ‘பொல்லாத’ முயற்சியில் ஈடுபடுபவர்கள், ‘தினத்தந்தி’ போன்ற நாளேடுகளின் முதற் பக்கத்தில் முதல் இரு நாள்களும் – பிறகு ஐந்தாம் பக்கத்திலும் இடமும் ‘புக’ழும் பெற்று, படிப்படியாக ‘எதையும் மறக்கும்’ நம் மக்களால் அறவே மறக்கப்பட்டு, ஆண்டுகள் சில கழிந்தபின்னர் பழையபடி வாழவேண்டி வரும்!” என்பது.

****
annan_pasupathy@hotmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்