திறந்த ஜன்னல் வழியே

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

வெங்கட் சாமிநாதன்:


தமிழனின் வீட்டு ஜன்னல் காலம் காலமாக திறந்துதான் இருந்தது. ‘தமிழனைத் தட்டி எழுப்பியவர்கள் ‘ தான் அவன் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் மூடியிருக்கவேண்டும்.

பின்னோக்கிப் பார்த்தால் ஒரு நீண்ட பாரம்பரியம் தெரியும். இப்பரந்த இந்திய துணைக்கண்டத்தில் நிகழ்ந்துள்ள எந்தப் பெரிய இலக்கிய நிகழ்வும், கலாச்சார நிகழ்வும் தமிழனுக்கு வந்து சேர்ந்துள்ளது. தமிழ் நாட்டிலிருந்து பெருக்கெடுத்த ஒரு பெரிய அலை, பக்தி இயக்க அலை, இந்தியா முழுதின் கலாச்சார, இலக்கிய முகத்தை மாற்றியமைத்திருக்கிறது. இவ்விலக்கிய பரிமாற்றம், கலாச்சார ஒருமையாக்கம், ஒர் அளவில் சாத்தியமானது மொழிபெயர்ப்பால் அல்ல, தமிழன் கொண்டிருந்த பரந்த ரசனையால், பார்வையில் பட்டதை தனதாக்கிக் கொண்டதால் -தமிழாக்கியதால். பாரதமும், இராமாயணமும், சங்க காலத்திலிருந்தே தமிழனுக்குத் தெரியும். அன்று பேசப்பட்ட பஞ்சாபின் பைசாச மொழியின் பிருஹத் கதா, தமிழில் கொங்குவேலரின் பெருங்கதை ஆயிற்று. இவையெல்லாம் சட்டெனச் சொல்லும் உதாரணங்கள். அன்றிலிருந்து நேற்றைய சீறாப் புராணம் வரை, சீறாப்புராணத்தின் நபிகள் நாயகம் பாலைவனம் கண்டவரில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று ? நூறு வருஷங்களுக்கு முன் காசிக்குப் போகிறவர், தான் திரும்புவது நிச்சயமில்லை என்று உயில் எழுதி வைத்துவிட்டுத் தான் போவாராம். ஆனாலும் இலக்கிய, கலாச்சார பரிமாற்றம் எப்படியோ நிகழ்ந்து வந்துள்ளது. கேட்டது எம்மொழியானாலும், எழுதியது தன் மொழியில், தான் உள் வாங்கிய வடிவில். இது மொழிபெயர்ப்பா ? தழுவலா ? – இரண்டுமில்லை. வேறு என்ன அது ? இது பற்றி என் முதல் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளைப் பேச்சு சற்று விரிவாகச் சொல்லும்.

மொழிபெயர்ப்பு என்ற சமாச்சாரமே நாம் ஆங்கிலேயரிடமிருந்து பெற்றது தான். காலனியாதிக்கத்தின் பாதிப்பு. இந்த உண்மையை எப்படி எதிர்கொள்வது ? இந்த லேபிளை நாம் சிலவற்றிற்கு ஒட்டி பெரிதாகச் சத்தம் போடுவோம். மற்ற விஷயங்களில் ‘கண்டுக்காமல் ‘ மெளனம் சாதிப் போம். அது தானே நம் குணச்சிறப்பு !

என் ஞாபகத்தில் நான் படித்த முதல் மொழிபெயர்ப்புப் புத்தகம், ஆர். கே. நாராயணனின் ‘சுவாமியும் சினேகிதர்களும் ‘. அது மொழிபெயர்ப்பு என்பதை நான் பல வருடங்கள் கழித்துப் பின்னால்தான் தெரிந்து கொண்டேன். மிக சுவாரஸ்யத்தோடு, எவ்வித தடங்கலும் இன்றி படித்ததாக நினைவு. 12-13 வயதுச் சிறுவன் எவனும் வலிந்து எதையும் படிக்க மாட்டான். கற்பனையான மால்குடியேயானாலும் அது தமிழ் வாழ்க்கையாகத்தான் மனதில் பதிந்தது. எல்லோரும் சொல்வார்களே, ‘மொழிபெயர்ப்பு என்றே தோன்றாதவாறு ‘ தமிழ் நாவலைப் படிப்பது போன்ற உணர்வு தர சரளமாக எழுதப்பட்டிருந்தது. எழுதியவர் தமிழராதலால், அவருக்குத் தெரிந்த வாழ்க்கை, ஆங்கிலத்திலும் தமிழ்க் குணம் ஏற்றிருந்தது. எனவே தமிழ் மொழிபெயர்ப்பு, அசலான ஒரு தமிழ் மணத்தோடுதான் தரப்படவேண்டும். அந்நியப்படுத்த, அந்நியப்பட அதில் ஏதும் இல்லை.

சர்க்கிள் இன்ஸ்பெக்டரின் பையன், தன்னை விளையாட்டிற்கு அழைக்க வந்திருக்கும் பசங்களை, தன் அப்பா, அவரைப் பார்க்க வருபவர்களைக் காக்க வைப்பது போல, காக்க வைத்தால்த் தான், தன் தகுதிக்கு ஏற்ற காரியமாயிருக்கும் என்று வாசல் வரைக்கும் வந்தவன், கதவுக்குப் பின் ஒளிந்துகொண்டு பொறுமையின்றி நகத்தைக் கடித்துக் கொண்டே நிற்பான். விளையாடப் போகவும் வேண்டும். காக்க வைக்கவும் வேண்டும். ஆர்.கே. நாராயணன் தரும் இக்காட்சி, வார்த்தைகளாக அல்ல, காட்சியாக இன்னமும் என்னில் பதிந்திருக்கிறது.

இதை ஏதும் திறந்த ஜன்னல் வழியே வீட்டுக்கு வெளியிலிருந்து வந்த ஒன்றாகக் கொள்ள முடியாது. இதற்குப் பின்னர் நிறைய வங்க நாவல்கள் தமிழுக்கு வந்தன. வங்காளி அறிந்தவர்கள் மொழிபெயர்த்தவை. (த. நா.குமாரசுவாமி எனக்கு எழுதிய கடிதத்தில் இடையிடையே வங்காளியில் எழுதப்பட்ட வாக்கியங்கள் காணப்படும்.). வங்க பெண்கள் உலகமும், கிராமங்களும், அன்றாட வாழ்வும் நமக்கு வெகுவாக பரிச்சயமாயின. அக்காலங்களில் மொழிபெயர்க்கப்பட்டு வந்த வங்க எழுத்துக்களின் பாதிப்பை தமிழ் எழுத்துக்களில் கண்டதாக எனக்கு ஒரு எண்ணம். குணச்சித்திரத்தில், சம்பாஷணைகளில் எழுத்துத் திறன் பக்குவப்பட்டது, சரத் சந்திரரின் எழுத்துக்களுடன் ஏற்பட்ட பரிச்சயத்தால் என்று தான் என் எண்ணம். அக்கால பிராபல்ய எழுத்துக்களில் எல்லோரும் ஒரே மாதிரியாகப் பேசுவதாகத்தான் எனக்குத் தோன்றும். அதைத் தொடர்ந்து மராத்தி, ஹிந்தி எழுத்துக்களும் மொழிபெயர்க்கப் பட்டனதான்.

அந்த சமயத்தில் க.நா.சு. நிறைய அமெரிக்க, ஐரோப்பிய எழுத்துக்களை நமக்கு தம் மொழிபெயர்ப்புகள் மூலம் அறிமுகம் செய்தார். அவை நமக்குப் பல புதிய உலகங்களை, கலாச்சாரங்களை பரிச்சயப்படுத்தின. க. நா.சு. நமக்கு, தமிழுக்கு, ஐரோப்பிய இலக்கியங்களை நாம் சாராரணமாக கேட்டிராத பெயர்கள், எழுத்துக்கள் நாம் தேடிச் செல்ல வேண்டியனவாகச் செய்தது மட்டுமல்லாமல்- அவர் தேர்வு அவரது பரந்த படிப்பையும், ஆழ்ந்த ரசனையயும் சொல்வதாக இருந்தது – மொழிபெயர்ப்பு பற்றியும் தன் கருத்துக்களை முன் வைத்தார். இன்று வரை ஏதோ கீதவாக்கியம் போல், தெரிந்தவர், தெரியாதவர் எல்லோரும் உதிர்க்கும், ‘மொழிபெயர்ப்பு என்றே தோன்றாதவாறு ‘ என்ற பாராட்டுப்பத்திர கோஷத்தை நிராகரித்தவரும் அவர்தான். மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பாகத்தான் இருக்கவேண்டும் என்றார். அந்நிய நாடும், மொழியும், வாழ்க்கையும் கலாச்சாரமும், நம்முடன் எப்படியோ உறவாடுவதான பிரமையை எழுப்பவேண்டும். மொழிபெயர்ப்பினால் தமிழ் மொழி தன் சாத்திய எல்லைகளை விரிவாக்கும் வளமை பெறவேண்டும். என்றார்.

சமீபத்தில் பீஷ்ம ஸாஹ்னியின் தமஸ் நாவலை மொழிபெயர்த்தபோது, அது எனக்கு மிகுந்த சிரமத்தையும், அந்த சிரமங்களே என்க்கு மிகுந்த சந்தோஷத்தையும் தந்தது. இந்த இரண்டு வகை எதிர்மறையான அனுபவங்களை வேறு எந்த மொழிபெயர்ப்பும் எனக்குக் கொடுத்ததில்லை. நாவலின் மூலம் ஹிந்தி எனச் சொல்லப்பட்டாலும், நாவலின் நிகழ்களம், இப்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபின் மேற்குக் கோடியில் எல்லைப்புற மாகாணத்தை ஒட்டிய சிறு நகரமும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் மொழியில், ராவல்பிண்டி பக்கத்து பஞ்சாபி பேச்சு மொழி. உருது, புஷ்டு எல்லாம் கலந்த ஒன்று. பரிச்சயப்பட்டதே போன்று தோன்று, பரிச்சயப்படாத ஒர் உலகத்தை தமிழ்ப் படுத்தாது பரிச்சயப்படுத்தும் காரியம்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ஆளுமை உண்டு. அதன் ஒலி வடிவமே, அதன் கம்பீரம், மென்மை போன்ற குணங்களே, அம்மொழி பேசும் மக்களின் குணச்சித்திரத்தை, வாழ்நிலையைச் சொல்லும். 1950-ல் நான் முதன் முதலாக ஒரிஸாவின் ஹிராகுட் என்னும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, அங்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளாக பட்டாணியர்களும், பஞ்சாபிகளும், சிந்திகளும் நிறையப் பேர் வேலைக்குச் சேர்ந்திருந்தனர். இந்தியாவின் எல்லா மொழிகளையும் அனேகமாக நான் அங்கு கேட்டேன். கிழக்குப் பாகிஸ்தானிலிருந்தும், பர்மாவிலிருந்தும் வந்த வங்காளிகளும் இருந்தனர். 16 வயதுப் பிராயத்தில் இது எனக்கு மிகுந்த ஆர்வம் தரும் அனுபவம். முல்த்தானிலிருந்து வந்த பஞ்சாபியின் பேச்சையும், லாகூரிலிருந்து வந்த பஞ்சாபியின் பேச்சையும் நான் இனங்கண்டு கொள்ள முடிந்தது. கோவைத் தமிழையும், நெல்லைத் தமிழையும் அடையாளம் காண முடிவது போல. ஒரு பஞ்சாபி, பெஷாவரிலிருந்து வந்தவர் என்று நினைக்கிறேன். தன் வயதில் நிறைய இடங்களில் சுற்றி அலைந்தவர், வட இந்தியா முழுதும் அறிந்தவர் எனத்தோன்றியது. ஒரு நாள் மாலை அவர் பெஷாவரிலிருந்து ஆரம்பித்து கல்கத்தாவரை, வரிசையாக, கரடுமுரடான, மலை வாழ் பட்டாணியரின் புஷ்டு எனத் தொடங்கி, ஆஜானுபாவர்களாக, திடமான தேகமும், நல்ல உழைப்பும் கொண்ட பஞ்சாபிகள், பின்னர் ஹரியானாவின் சற்றுத் தேய்ந்த ஹரியான்வி, இப்படி நாட்டின் வளமை வாழ்நிலை, இனம் எனப் பல காரணங்களினால் மொழியின் ஒலிவடிவம் முதலில் புஷ்டுவின் பயமுறுத்தும் வீரம், கரகரப்பு: புஷ்டு பேசும்போதே ஏதோ மல் யுத்தத்திற்கு தயாராவது போல் தோள்களும் கைகளும் புடைத்து ஆவேசமான அசைவுகளோடு பேசுவார்கள்: பேச்சும் ஏதோ கட்டளையிடுவது போல்தான் -வளிப்படும். இதன் கடூரம் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாப், ஹரியானா எனக் குறைந்து, உத்தர பிரதேசத்திலும் கிழக்கு மேற்கு என வித்தியாசப்பட்டு மொழியும் ப்ரஜ்பாஷா, மைதிலி என கொஞ்சம் கொஞ்சமாக மென்மை ஏற்று, கடைசியில் வங்காளம் வந்தால் அது முழுதும் மிருதுத்தன்மையும் மென்மையும் ஏற்றுவிடும். இதை அவர் படிப்படியாகப் பேசிக்காட்டுவார். பின் காமெண்டரியும் தொடர்ந்து வரும். கடைசியாக வங்காளி பேசிக்காட்டும்போது, கேலியான பெண்மைக்குரல் வந்துவிடும் அவருக்கு. வஙாளி மென்மையும் இனிமையும் கொண்ட பாஷை. ஆனால், இந்த பெஷாவர் பஞ்சாபிக்கு அது பெண்மைக்குணம். வங்காளியின் ஒல்லியான உடல் வாகையும், நழுவி விழும் வேஷ்டிக் கச்சத்தையும் தன் கேலியில் சேர்த்துக் கொள்வார். அந்த மனிதரிடம் பட்டாணியரின் குணம் இருந்தது. அந்த மனிதருக்கு சந்தோஷம் வந்து விட்டால், முகம் மலர்ந்தால் மட்டும் திருப்தி வராது. சந்தோஷத்தில் நாம் கை குலுக்குவது போல தோளில் தட்டுவது போல, அவருக்கு தன் கை முஷ்டியினால் பக்க வாட்டில் என் வயிற்றில் குத்தினால் தான் மனம் நிறையும். அது தான் அவருக்கு நிறைந்த சந்தோஷத்தையும் அத்யந்த சினேகத்தையும் தெரிவித்ததாகும்.

நாம் மொழியை, அதன் ஒவ்வொரு வார்த்தையையும், ஒலிக்கூட்டத்தையும் தொட்டுணரவேண்டும். ஒரு சிட்டுக் குருவியை கையில் ஏந்தி பொத்தி உணர்வது போல. அதன் சிறகின் மிருது, உடலின் மென்மை, அலகின் கூர்மையை உணர்வது போல, மொழியின் ஒலி வடிவையும் உணரவேண்டும்.

சத்யஜித் ரேயின் படங்கள் வங்க மொழியிலேயே இருக்கும். அவர் அதை எந்த மொழியிலும் ‘டப் ‘ செய்வதை அனுமதிப்பதில்லை. ‘மொழிக்கு ஒரு பரிமாணம் உண்டு. அதுவும் என் படைப்பின் அங்கம் ‘என்பார். அப்போது அதை உணராதவர்கள் இப்போது ஹாலிவுட் படங்களும், ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களும் தமிழில் ‘டப் ‘ செய்து தரப்படுகின்றனவே, அவை எவ்வளவு நாராசமாக ஒலிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.

இன்னம் ஒரு உதாரணம் சொல்லலாம். கன்னடத்தில் பஸவண்ணரின் கவிதை ‘கூடல் சங்கம தேவா ‘ என்ற விளியோடு முடியும் போது, அந்த பெயரின் ஒலிவடிவத்தில் ஒரு கம்பீரமும் இனிமையும் உண்டு. அதை Thou, Lord of the Meeting of Rivers ‘ என்று ஒரு மொழியியல் அறிஞரும் கவியும் மொழிபெயர்த்திருக்கிறார்தான். ஆனால் இந்த ஆங்கிலம், வாசகனுக்கு மறுத்துள்ளது நிறைய என்றும், மொழிபெயர்ப்பில் நழுவியது மகத்தான ஒன்று என்றும், எனக்குத் தோன்றுகிறது., கூடல் சங்கம தேவா என்ற ஒலிவடிவம் வாசகனுக்குப் பரிச்சயப் படுத்தப்படவேண்டும். அதன் விளக்கம் அடிக்குறிப்பில் தான் தரப்படவேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். அந்நியமும் தொனிக்க வேண்டும். பரிச்சயமும் தரப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு இருபது/முப்பது வருட காலம் தடைப்பட்டது, திரும்பத் தொடங்கியுள்ளது. நிறைய மொழிபெயர்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. அதற்கு ஒரு மவுஸும் கிடைத்துள்ளது போலிருக்கிறது. இது அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், மந்திர யதார்த்தம் போன்று லத்தீன் அமெரிக்க ஃபாஷனோ என்று ஒரு சந்தேகம். வருவதெல்லாம் ஃபாஷனாகிவிட்டால், சிங்கப்பூர் கைலியின் சரசரப்பாகி விட்டால், அதில் எங்கே உயிர்ப்பு இருக்கும் ?. ஸ்பானிய மொழியோ, இத்தாலியனோ, போர்ச்சுகீஸோ தெரிந்துதான் மூலத்திலிருந்து நேராக தமிழுக்கு வருகின்றனவா இவை ? அல்லது ஆங்கிலம் வழியாகவா ? அப்படியென்றால், முன்னர் மொழிபற்றியும் அதன் குணங்கள் பற்றியும் பேசும் மக்கள் பற்றியும் மொழி பெயர்ப்பில் தொனிக்கவேண்டிய அந்நியமும், அதே சமயத்தில் நிகழவேண்டிய பரிச்சயமும், பற்றிப் பேசியதெல்லாம் எப்படி சாத்தியமாகும் ? பெட்ரோ மார்ட்டினேஸ் என்ற பெயர் சொல்லப்படலாம். மெக்ஸிகோ என்று சொல்லப்படலாம். ஏழை விவசாயி என்று தெரிவிக்கப்படலாம். எல்லாம் சொல்லப்படலாம். தெரிவிக்கப்படலாம் தான். உணர முடியுமோ ? மேலும் நமக்குத்தான் எல்லாம் ஃபாஷனாகி விட்டதே. மொழிபெயர்ப்பே முக்கை ஆகாயத்துக்கு உயர்த்துவற்கு என்றாகிவிட்டபோது….

தமிழ்ப்படங்களில் ஆங்கிலேய பாத்திரங்கள், துரைகள் வருவதுண்டு. அவர்கள் உடையும், அடை அடையான முகப்பூச்சும், அவர்களது தமிழ் எனக் கற்பனை செய்து கொண்ட பேச்சும் நமக்கு அருவறுப்பையே தரும். நாம் என்னவோ பெரிதாக சாதித்து விட்ட தாக நினைத்துக்கொள்ளலாம் தான். ஆனால் அவன் ஆங்கிலேய துரையும் இல்லை. அவன் பேச்சு தமிழும் இல்லை. ஒரு கோமாளியும் அவன் கோமாளித்தனமும்,.

மாறாக, தமிழ்ப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு ஒரு வெள்ளைக்காரனுக்கு கைலி உடுத்தி அவன் அதை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு பனியனோடு, கை விரல்களில் பாதி பிடித்த பீடியை இடுக்கிக்கொண்டு, ‘என்னா மச்சி ? ‘ என்பானானால் அதுவும் கோமாளித் தனத்தின் இன்னொரு அவதாரம்.

ஒரு மாதிரிக்கு;

‘நான் நின்றேன். விழித்தேன். திரு திருவென்று. எனக்கு எதுவும் புரியவில்லை. எதைப்பற்றியும் எதுவுமே. மேலும் நான் சிரிக்கத் தொடங்கினேன். ‘

{இன்னொரு சாம்பிள்)

‘மலம் ‘ இவன் சொன்னான். மூலம்: ( ‘Shit, he said}.

இதெல்லாம் போகட்டும். எதைத்தொட்டாலும் நம்மிடம் கோமாளித்தனம் வெகு சிறப்பாக வெளிப்படுகிறதே, எப்படி ?

வெங்கட் சாமினாதன்

20,.4.05

(சமீபத்தில் வெளியான புத்தகத்திலிருந்து)

திறந்த ஜன்னல் வழியே( மொழிபெயர்ப்பு பற்றிய கட்டுரைத் தொகுப்பு) வெங்கட் சாமிநாதன்: பிரசுரம்: சந்தியா பதிப்பகம், 57-A,

53வது தெரு, அசோக் நகர், சென்னை-83

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்