திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

மணி மாணிக்


திண்ணை இதழில் திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை (தமிழரைத் தேடி) சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. ஆயினும் வேளாளர் என்பவர் யார் என்பதில் அவருக்கு மிகுந்த குழப்பம் உள்ளது போல் தோன்றுகிறது. தமிழ் சமூகத்தில் வேளாளர் எனப்படுவோர், குறிப்பாக முதலியாரும், பிள்ளைமாரும் ஆவர். அரசர்களிடமிருந்து தானமாக பெற்ற நிலத்தில் குடியானவர்களை வைத்து விவசாயம் செய்வித்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசுக்கு கொண்டுசேர்ப்பதே இவர்களது தலையாய பணியாகும். இப்பணியின் காரணமாக கிராம நிர்வாகமும், கிராம கணக்கு வழக்கும் இவர்களிடமே இருந்தது. இவர்களிடம் விவசாய வேலை செய்த குடியானவர்கள், பள்ளமான (தாழ்ந்த) விவசாய நிலங்களில் வாழ்ந்து வந்ததால், பள்ளர் என அழைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்கர்களின் ஆட்சி ஏற்ப்பட்டபோதும், முதலியாரும், பிள்ளைமாரும் தங்களது பணியினை மிகுந்த பாதிப்பின்றி தோடர்ந்தனர். ஆனாலும், நாயக்கர்களின் ஆட்சி பகுதிகளில், ரெட்டியார்கள் கிராமநிர்வாக பணிகளில் முன்னிலை படுத்தப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சியின் முற்பகுதில் இக்கிராம நிர்வாக ஜாதியினர் அக்காலகட்ட தமிழ்/தெலுங்கு ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தபடியாலும், ஆங்கிலேய ஆட்சியை எற்க மறுத்து அவர்களுக்கு வரி செலுத்த மறுத்ததாலும், ஆங்கிலேயர்களால், ‘ராயத்துவாரி’ வரி வசூலிக்கும் முறை ஏற்ப்படுத்தப்பட்டது. ரயாத் என்பதற்கு விவசாயி என்று பொருள். ராயத்து-வரி என்பதன் திரிபே ராயத்துவாரி. அதாவது விவசாயிவரி என்பதாகும். ஆங்கிலேயர்கள் நிலத்தில் வேலைசெய்த குடியானவர்களை ‘வேளான்பெருமக்களாக’ கருதி (நியமித்து!) அவர்களிடமிருந்து நேரடியாக வரி வசூலித்த நிகழ்வே ராயத்துவாரி வரிமுறையாகும்.

படிக்காத குடியானவர்களிடமிருந்து வரிவசூலிக்கும் வேலைக்கு படித்த பிராமணர்களை ஆங்கிலேயர்கள் நியமித்தனர். அப்பிராமண அதிகாரிகள் ‘பில் கலக்டர்கள்’ என மக்களால் அழைக்கப்பட்டனர். கல்விப் பணி, கோவில் பணி என்ற நிலையிலிருந்து கிராம நிர்வாக பணியில் எற்பட்ட பிராமணர்களின் தலையீட்டை தடுக்க/தவிர்க்க முதலியாரும், பிள்ளைமாரும் மற்றும் முக்குலத்தோரின் ஒரு பிரிவான அகமுடையாரும் ஆங்கில ஆட்சியினை ஏற்றுக்கொண்டு நிர்வாகப்பணிகளுக்குப் போட்டியிட்டனர்.
(பார்க்க: http://www.tamilnation.org/caste/nambi.htm)

இடைப்பட்ட காலத்தில், வேளான்பெருமக்களாக பரிணமித்த ராயத்துவாரி குடியானவர்கள் (பள்ளர்) தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என அழைத்துக்கொண்டனர். எனவே வெள்ளால முதலி என அழைக்கப்படும் வேளாள முதலியார்களுக்கும், மற்றும் வெள்ளால பிள்ளை என அழைக்கப்படும் வேளாள பிள்ளைமார்களுக்கும், தற்கால தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் எந்தவொரு சம்மந்தமும் கிடையாது.

முடிவாக, தமிழ் அரசர்கள் காலத்து வேளாளர்கள் (கிராம)நிர்வாகிகள், தற்கால வேளாளர்கள் விவசாயிகள். ஏனவே, திரு. பிரகஸ்பதி அவர்கள் இவ்வேறுபாட்டினை நன்கு உணர்ந்து தனது கட்டுரையினை வடிப்பாரானால் அவரது கட்டுரைகள் ‘ஆய்வு’ மெருகு பெறும். இக்கடிதம் எழுதிய விதத்தில் ஏதாவது மரியாதை குறைவு இருந்தால், மன்னிக்கவும்


mani_manik@rediffmail.com

Series Navigation