தலைகளின் கதை (Hayavadana – Girish Karnad)

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

என். சொக்கன்


தமிழ்ப் படக் கதாநாயகிகளின் அப்பாவாகவோ, அமைதியான டாக்டராகவோ உபத்திரவமில்லாத கதாபாத்திரங்களில் ‘சும்மா ‘ வந்துபோகிற கிாீஷ் கர்னாடின் இலக்கிய முகம் வேறுவிதமானது. கன்னடத்தின் குறிப்பிடத்தக்க நாடக ஆசிாியர்களில் ஒருவரான கிாீஷ் கர்னாட் ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர்., கன்னட நவீன நாடகத்துறை முன்னேற்றத்தில் இவரது பங்கு முக்கியமானது.

கர்னாடின் ஆரம்பகால நாடகங்களில் முக்கியமான ஒன்று ‘ஹயவதனா ‘, இன்றைக்கும் குறிப்பிட்டு பேசப்படும் முன்னோடி படைப்பாகிய இதனை முதலில் கன்னடத்தில் எழுதி, பின்னர் அவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார். சோமதேவாின் ‘கதா சாித சாகரம் ‘ சமஸ்கிருத நூலிலிருந்து இந்த நாடகத்துக்கான மையக்கருவைப் பெற்றிருக்கும் கிாீஷ் கர்னாட், அதே கதையை தாமஸ் மன் என்பவர் ‘The Transposed Heads ‘ என்ற தலைப்பில் மீண்டும் எழுதியதையும் அடித்தளமாய்க் கொண்டு இந்த நாடகத்தைச் செய்திருக்கிறார். இந்நாடகம் மேடையேறியபோது இசையமைத்தவர் சமீபத்தில் மறைந்த நாடகக் கலைஞர் பி. வி. காரந்த்.

நாடகத்தின் மையக்கதை என்னவோ அம்புலிமாமாவை நினைவுபடுத்தினாலும், ஆசிாியர் அதற்குக் கொடுத்திருக்கிற புதிய முகமும், கையாளலும்தான் (treatment) பல வருடங்களுக்குப்பிறகும் இதை ஆழ்ந்து வாசிக்கவைக்கிறது. குதிரைத் தலை – மனித உடல் கொண்ட ஹயவதனா என்றவனின் ‘முழுமை ‘யாகிற ஆர்வமும், தேவதத்தா, கபிலா என்ற இருவேறுபட்ட ஆண்களுக்கிடையே சிக்கிக்கொண்ட பத்மினி என்னும் பெண்ணின் சலனங்களும், குழப்பங்களும்தான் கதை, பாகவதா என்னும் இன்னொரு பாத்திரம் நம்மூர் சூத்திரதாாிபோல் செயல்பட்டு பாடல்கள், விவரணைகளின்மூலம் கதையை நகர்த்திப்போகிறது. சம்பவங்கள் யாவும் ஒரு நிஜ நாடக மேடையிலேயே நடப்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது (நாடக நடிகர்களே பாத்திரங்களாய் அவ்வப்போது வந்துபோகிறார்கள் !) இன்னொரு அழகு.

ஹயவதனாவின் அம்மா ஒரு குதிரையைக் காதலித்துத் திருமணந்துகொள்கிறாள், குதிரைத் தலையோடு ஒரு குழந்தை பிறக்கிறது, சில வருடங்கள் கழித்து குதிரை அப்பா மனிதனாகிவிடுகிறார், ‘நான் ஒரு கந்தர்வன், ஒரு சாபத்தால் இத்தனை காலமாய் குதிரையாய் இருந்தேன் ‘ என்று சொல்லும் குதிரைப்பா, ‘நான் தேவ லோகத்துக்குப் போகிறேன், நீயும் வா ‘ என்று அவளை அழைக்கிறான். குதிரையைக் காதலித்த பெண்ணோ, ‘அதெல்லாம் முடியாது, நீ மறுபடி குதிரையானால்தான் வருவேன் ‘ என்று பிடிவாதம்பிடிக்க, முன்னாள் குதிரையார் கோபம் கொண்டு அவளை சபித்துவிடுகிறார், ‘குதிரையின்மேல் ஆசைகொண்ட நீயும் குதிரையாகவே மாறிப்போ ! ‘, அவ்வளவுதான், அப்பா தேவலோகம் போக, அம்மா குதிரையாகி ஓட்டம்பிடிக்க, ஹயவதனா அநாதையாகிறான், முழுக் குதிரையாகவும் செயல்படமுடியாமல், மனிதனாகவும் தன்னை எண்ணிக்கொள்ளவொண்ணாமல் தவிக்கிறான், எனக்கு முழுமை கிடைக்குமா என்று எங்கெங்கோ சுற்றித்திாிகிறான், கடைசியில் பாகவதா நடத்துகிற நாடக மேடைக்கு வந்து சேர்கிறான், அவனுடைய கதையைக் கேட்டு உச்சுக்கொட்டிய பாகவதா, அவனை ஒரு சக்திவாய்ந்த காளி கோவிலுக்கு போகச்சொல்கிறான், துணைக்கு அவனுடைய நாடகக்குழுவின் ஒரு நடிகனையும் அனுப்பிவைக்கிறான்.

இது ஒரு பக்கக் கதை, இதனிடையே நாடக மேடையில் தேவதத்தா, கபிலா என்கிற இரு நண்பர்கள் தோன்றுகிறார்கள். தேவதத்தா நிறைய படித்த பண்டிதன், கவிதைக்காரன். கபிலா மரம் உடைப்பது, இரும்படிப்பது என்று உடல் உழைப்பில் மூழ்கிப்போன பாமரன். தேவதத்தா கபிலனுக்கு கவிதைகள்பற்றி, இலக்கியம்பற்றியெல்லாம் நிறைய சொல்லிக்கொடுத்திருக்கிறான், கூடவே அவன் ‘ஆழ்ந்த ‘ காதலில் மூழ்கின பதினைந்து பெண்களைப்பற்றியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கபிலனுக்குச் சொல்லியிருக்கிறான். அவனுடைய ‘காவியக் ‘காதல்களுக்கு பழகிப்போன கபிலன், அவன் எந்த பெண்ணைப்பார்த்து உருகினாலும் பொிதாய் அலட்டிக்கொள்வதில்லை.

ஆனால் தேவதத்தனின் பதினாறாவது காதல் உண்மையிலேயே மிகத் தீவீரமானதாய் இருக்கிறது. பத்மினி என்கிற அந்தப் பெண்ணின் அழகை ஏகத்துக்கு வர்ணிக்கும் தேவதத்தன், ‘அவளை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கமுடிந்தால், நான் காளிதாசனையே கவிதையில் மிஞ்சிவிடுவேன், அத்தனை அழகு அவள் ! ‘ என்று மலைத்துப்போகிறான். கூடவே வைரமுத்து எழுதும் சமீபத்திய சினிமாப் பாட்டுபோல, ‘அவள் எனக்குக் கிடைத்துவிட்டால் போதும், என் தலையையும், இரு கைகளையும் காளிக்குக் காணிக்கையாய் வெட்டித் தந்துவிடுவேன் ‘ என்கிறான். அவனுடைய காதல் வன்முறையைக்கண்டு பயந்துபோன கபிலன், அவன் சார்பாய் தூதுபோகிறான்.

தூதுபோகிறவன் கதாநாயகியைப் பார்த்ததும் என்ன ஆவான் என்பது தொியாததா ? அவனுக்கும் பத்மினியை ரொம்ப பிடித்துப்போகிறது, ‘இவளுக்கு உாியவன் தேவதத்தன் மாதிாி கவிஞன் இல்லை, என்னை மாதிாி ஒரு வீரமான, வலுவான ஆசாமி ‘ என்று நினைக்கிறான், ஆனாலும் நண்பனுக்கு செய்துகொடுத்த சத்தியம் நினைவுக்கு வரவே, தன்னுடைய எண்ணங்களை துடைத்துப்போட்டுவிட்டு பத்மினியின் வீட்டாரோடு பேசுகிறான், தேவதத்தா – பத்மினி கல்யாணம் நடக்கிறது.

திருமணத்துக்குப்பிறகு கபிலன் ‘எங்கிருந்தோ வந்த ‘ கண்ணன்போல இருவருக்கும் சேவைகள் செய்கிறான், பத்மினி அவனிடம் பிாியத்தோடு பழகுகிறாள், ஆனால் தேவதத்தாவுக்கு அவர்களின் அந்தரங்கத்தில் கபிலன் குறுக்கிடுவது பிடிக்கவில்லை, பத்மினியோடு அவன் நெருங்கிப் பழகுவதும் எாிச்சலாய் இருக்கிறது. ‘அதான் எனக்கு கல்யாணமாகிவிட்டதே, இன்னும் ஏன் அவன் பழையபடி வந்து ஒட்டுகிறான் ? விலகிப்போகக்கூடாதா ? ‘ என்று நொந்துகொள்கிறான், ஆனாலும் கர்ப்பமாயிருக்கிற மனைவியை சங்கடப்படுத்த விரும்பாமல் கபிலனை சகித்துக்கொண்டிருக்கிறான்.

பத்மினி ஒரு திருவிழாவுக்குப்போக விரும்புகிறாள், இந்த நிலைமையில் அவள் போகக்கூடாது என்கிறான் தேவதத்தா, பத்மினி பிடிவாதம் பிடிக்கிறாள், தேவதத்தா கடைசியில் ஒத்துக்கொண்டு, மூவரும் கிளம்புகிறார்கள்.

கபிலன் ‘பூப்போல ‘ வண்டியோட்டுவதை பத்மினி ரசிக்கிறாள், அவள் கணவன் ஒருமுறை முரட்டுத்தனமாய் மாடுகளை விரட்டியதைச்சொல்லி கிண்டலடிக்கிறாள், எல்லாமே தேவதத்தனுக்கு எாிச்சலாய் இருக்கிறது. வழியில் ஒரு மலைப்பிரதேசத்தில் மூவரும் ஓய்வெடுக்கிறார்கள். பத்மினிக்கு பூப்பறித்து வருவதாக சொல்லி கபிலன் ஒரு மரத்தில் சரசரவென்று ஏறுகிறான். அவனுடைய லாவகத்தையும், சட்டையில்லாத அவன் உடலையும் உள்ளுக்குள் ரசிக்கிறாள் பத்மினி, ‘எந்தப் பெண்ணாலும் இவனை ஆசைப்படாமல் இருக்கமுடியாது ‘ என்று நினைக்கிறாள் – துரதிருஷ்டம், அவள் கணவனும் அவளை, கபிலனை அடுத்தடுத்து பார்த்துவிட்டு அதையே நினைக்கிறான், அவனுக்கு ஆற்றாமை பொங்குகிறது.

பூப்பறித்துவந்த கபிலன் பேச்சுவாக்கில் பக்கத்திலிருக்கிற ஒரு காளி கோவிலைப்பற்றி சொல்கிறான், சுயஇரக்கத்தில் மூழ்கிக்கிடக்கிற தேவதத்தனுக்கு முன்பு செய்த சத்தியம் நினைவுக்கு வருகிறது – ‘அவள் எனக்குக் கிடைத்துவிட்டால் போதும், என் தலையையும், இரு கைகளையும் காளிக்குக் காணிக்கையாய் வெட்டித் தந்துவிடுவேன் ‘ … தான் இப்போது அனுபவிக்கிற மனஅவஸ்தைகளுக்கெல்லாம் அதுதான் தீர்வு என்று முடிவு செய்கிறான், மற்ற இருவரும் பார்க்காத சந்தர்ப்பத்தில் காட்டுக்குள் புகுந்து அந்த காளி கோவிலை அடைகிறான், ‘உனக்குச் செய்த சத்தியத்தை மறந்ததற்காக என்னை மன்னித்துவிடு காளி, இதோ என் தலை ‘ என்று வாளால் தலையை வெட்டிக்கொண்டு செத்துப்போகிறான்.

கபிலனும், பத்மினியும் ரொம்பநேரம் காத்திருக்கிறார்கள், அவனைக் காணவில்லை, கபிலன் அவனைத் தேடிக்கொண்டு போகிறான், காளி கோவிலில் அவனுடைய சடலம் – நண்பனாய், சகோதரனாய்ப் பழகியவன் இறந்துபோனதைத் தாங்கமுடியாத கபிலன் அதே வாளால் தன்னை வெட்டிக்கொண்டு சாகிறான்.

இருவரும் சென்று நெடுநேரம் ஆகிவிட்டது என்று பத்மினி அவர்களைத் தேடிக்கொண்டு வருகிறாள், காளி கோவில் – சடலங்கள் – அதிர்ந்துபோகிறாள், இனிமேல் நான் என்ன செய்வேன் ? ஊருக்குள்போய் இதைச் சொன்னால் நம்புவார்களா ? இந்த ஒழுக்கம்கெட்ட பெண்ணுக்காக இருவரும் சண்டையிட்டு இறந்தார்கள் என்றுதானே பேசுவார்கள் – அடுத்து நிகழப்போவதையெல்லாம் கற்பனை செய்துபார்க்கவே அவளுக்கு பயமாய் இருக்கிறது. கடைசியில் அவளும் சாவதுதான் சாியான முடிவு என்று நினைக்கிறாள், கீழே கிடந்த ரத்தம் படிந்த வாளை எடுத்து தன்னையே குத்திக்கொள்ளப்போகையில் காளி தோன்றுகிறாள். (காளி தூக்கக் கலக்கத்தில் பேசுவதாய் கர்னாட் எழுதியிருக்கும் சில வசனங்கள் நாத்திகவாடையில்லாது சிாிக்கவைப்பவை !)

அடுத்து நடப்பதுதான் கதையின் முக்கிய திருப்பம் – ‘இருவாின் தலையையும் உடம்பில் ஒட்ட வைத்துவிடு, அவர்கள் பிழைத்துவிடுவார்கள் ‘ என்று காளி பத்மினிக்கு வரம் கொடுக்கிறாள், பத்மினியும் அப்படியே செய்கிறாள், இருவரும் மலங்க மலங்க விழித்துக்கொண்டு எழுந்துநின்று சினிமாவில்போல், ‘நான் எங்கே இருக்கேன் ? என்ன நடந்தது ? ‘ என்கிறார்கள்.

அப்போதுதான் பத்மினி அவர்களை சாியாய் கவனிக்கிறாள் – தான் செய்துவிட்ட முட்டாள்தனம் அவளுக்குப் புாிகிறது – பதட்டத்தில் தேவதத்தாவின் தலையை கபிலன் உடம்பிலும், கபிலன் தலையை தேவதத்தா உடம்பிலும் மாற்றி வைத்துவிட்டாள். இப்போது பிரச்சனை – இவர்களில் அவளுடைய கணவன் யார் ? தேவதத்தாவின் தலை கொண்ட முதலாமவனா ? அல்லது கபிலனின் தலைக்குகீழே தேவதத்தாவின் உடம்பு இருப்பதால் அவன்தானா ?

இந்த விஷயத்தில் இருவருக்கும் நல்ல சண்டை – பத்மினி தேவதத்தாவின் தலை இருக்கிறவனையே தன் கணவனாய் நம்புகிறாள், ஆனால் அடுத்தவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, ‘இந்த உடலோடுதான் நீ இத்தனை நாள் வாழ்ந்தாய், ஆகவே நீ எனக்குதான் சொந்தம் ‘ என்கிறான். குழப்பம் !

மூவரும் ஒரு முனிவாிடம் செல்கிறார்கள், நடந்ததையெல்லாம் சொல்லி நியாயம் கேட்கிறார்கள் – முனிவர், தலைதான் மனித உடம்பில் முதன்மையானது என்று தீர்ப்புச்சொல்லி, தேவதத்தாவின் தலை உள்ளவன்தான் உண்மையில் தேவதத்தன் என்கிறார். அவனும், பத்மினியும் ஆனந்தக் கூத்தாட, கபிலன் காட்டுக்குள் சென்று மறைகிறான். அதன்பிறகு அவன் ஊருக்குள் வருவதே இல்லை !

இதற்குப்பின் நடப்பவையெல்லாம் மனோதத்துவ ாீதியில் ஆராயத்தக்க காட்சிகள். கபிலனின் ‘கட்டுமஸ்தான ‘ உடலுடைய தேவதத்தன் அதைக்கொண்டு சண்டைகள் செய்கிறான், நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி என்று ஈடுபடுகிறான், ஆனால் மெல்லமெல்ல அவனுடைய இயல்பான இலக்கிய ஆர்வமும், எழுத்தில் காலம்கழித்த பிராமணனுக்குாிய பாவனைகளும் அவனுக்குள் வந்துவிடுகிறது. அதேபோல் காட்டில் கபிலன் தன்னுடைய ‘சுமாரான ‘ உடலை, கடுமையான பயிற்சிகளின்மூலம் தன் பேச்சைக் கேட்கவைக்கிறான். (சில வருடங்கள் கழித்து சந்திக்கையில் இருவரும் தலை மாறியதற்கு முன்பிருந்ததுபோலவே சந்திக்கிறார்கள் என்பது கர்னாடின் புத்திசாலித்தனமான உத்தி !)

தேவதத்தாவோடு வாழும் பத்மினியும் இந்த மாற்றங்களை உணர்கிறாள், அவளுக்கு தன் கணவனைப் பிடித்திருக்கிறது, ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஆயினும் அவளோடிருக்கிற தேவதத்தன் பழையபடி மாறமாற, அவளுடைய கனவுகளில் உழைப்பாள உடம்போடு கபிலன் வந்துபோய்க்கொண்டிருக்கிறான். (இரண்டு ‘பேசும் ‘ பொம்மைப் பாத்திரங்களால் இந்த தகவல்களெல்லாம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது !), தேவதத்தா, கபிலா, தேவதத்தாவின் உடல், கபிலாவின் உடல் – இந்த நான்கில் தான் விரும்பியது, விரும்புவது எதை என்று புாியாமல் தவிக்கிறாள் அவள். ( ‘உனக்கு எதிலும் சிறந்தது வேண்டும், கபிலனின் கட்டுமஸ்தான உடம்பு, தேவதத்தாவின் அறிவு – அந்த சேர்க்கைதான் நீ விரும்பியது ‘ என்கிறது ஒரு வசனம் !)

கடைசியில் ஒருநாள், தேவதத்தா ஒரு திருவிழாவுக்குப் போயிருக்கும்போது பத்மினி குழந்தையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போகிறாள், கபிலனைச் சந்திக்கிறாள் – அவன் பழையபடியே இருக்கிறான், விரக்தியாய் பேசுகிறான், அவளிடம் சாியாய் ஒட்டுவதில்லை. பத்மினி அவனுக்கு தன் குழந்தையைக் காட்டுகிறாள், ‘உன் உடம்பால் பிறந்த குழந்தை இது கபிலா ‘ என்கிறாள். ‘தேவதத்தா ஒரு நாளில் பழையபடி மாறியிருந்தால் எனக்கு உன் நினைவே வந்திருக்காது, ஆனால் அவன் முழுதாய் மாறும்வரை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாற்றத்திலும் எனக்கு உன்னை நினைவுபடுத்திக்கொண்டிருந்தான் ‘ என்கிறாள், ‘ஒரு வேளை அந்த முனிவர் என்னை உனக்குக் கொடுத்திருந்தால், நீ பழையபடி மாறும்போது எனக்கு தேவதத்தன் நினைவு வந்து, இதேபோல் ஒருநாள் நான் அவனைத் தேடிப் போயிருப்பேனோ ? ‘ என்கிறாள்.

கபிலா இன்னும் இயல்பாகவில்லை, ‘என் உடம்பு பழையபடி மாறிவிட்டது, ஆகவே நான் இந்தப் போாில் ஜெயித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கையில் நீ ஏன் இங்கே வந்தாய் ? பேசாமல் உன் கணவனிடமே திரும்பிப்போய்விடு, அதுதான் எல்லோருக்கும் நல்லது ‘ என்கிறான். பத்மினி விரக்தியாய், ‘இந்தப் போாில் நீயும் ஜெயித்துவிட்டாய், தேவதத்தாவும் ஜெயித்துவிட்டான், ஆனால் ஒரு விதத்தில் உங்கள் இருவருக்கும் மனைவியான நான்தான் ஜெயிக்கவும் இல்லை, தோற்கவும் இல்லை ‘ என்கிறாள். அப்போது யதேச்சையாய் அவளது விரல் கபிலாவின்மேல் பட்டதும் அவன் சிலிர்த்துப்போகிறான், ‘இந்த உடலுக்கு உன்னுடைய ஸ்பாிசம் பழகியிருந்தது, ஆனால் அதையெல்லாம் மறந்திருந்தேன். நீ தொட்டதும் இப்போது எல்லாம் மீண்டும் துளிர்ப்பதுபோல் இருக்கிறது ‘ என்கிறான்.

பத்மினி அவனைப் பாிதாபத்தோடு பார்க்கிறாள், அவன் முகத்தைப் புதிதுபோல் வருடிக்கொடுத்து, ‘உன் உடல்முழுக்க ஆற்றில் நீராடியிருக்கும்போது தலையும் மூழ்கவேண்டாமா ? ‘ என்கிறாள். இருவரும் அருகிலிருக்கும் கபிலாவின் குடிசைக்குள் செல்கிறார்கள்.

ஓாிரு நாட்கள் கழித்து தேவதத்தா கையில் வாளுடன் கபிலாவைத் தேடிக்கொண்டு அந்த காட்டுக்குள் வருகிறான். ‘என் மனைவி கபிலாவோடு இருப்பதாய் கேள்விப்பட்டேன், எங்கே அவர்கள் ? ‘ என்று ஆக்ரோஷமாய் தேடித்திாிகிறான். கபிலா தன் குடிசையிலிருந்து வெளியே வந்து, ‘வா தேவதத்தா, உன்னைத்தான் எதிர்பார்த்தேன் ‘ என்று சாதாரணமாய்ச் சொல்கிறான்.

அவர்கள் தங்களுடைய (புதிய) உடல்களை ஆச்சாியமாய்ப் பார்க்கிறார்கள், ‘உன் உடம்பு இந்த காட்டு வாழ்க்கைக்கு ஒத்துவரவில்லை, நான் ரொம்ப போராடவேண்டியிருந்தது ‘ என்கிறான் கபிலா, ‘அதுமட்டுமில்லை, எனக்குக் கிடைத்தது உன் உடல்தான், உன் புத்திசாலித்தனம் இல்லை ! ‘ என்கிறான். தேவதத்தாவும் அதை ஆமோதிக்கிறான், ‘எனக்கும் உன் உடம்பு சாிப்படவில்லை, நான் ஆசைப்பட்டது உன்னுடைய பலத்துக்குத்தான், முரட்டுத்தனத்துக்கு இல்லை ‘.

இருவரும் முக்கியமான விஷயத்துக்கு வருகிறார்கள், ‘நீ பத்மினியை விரும்புகிறாயா ? ‘

‘ஆமாம், நீ ? ‘

‘நானும்தான் ‘

‘எனக்கு அது தொியும், அப்படியென்றால் நாம் மூவரும் சேர்ந்து இருக்கலாமா ? பாண்டவர்கள், திரெளபதிபோல ? ‘

கபிலா சற்று யோசித்துவிட்டு, ‘அது சாிப்படாது ‘ என்கிறான்.

தேவதத்தா சிாித்து, ‘நானும் அதேதான் நினைக்கிறேன், இப்போது நம் பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வுதான் ‘, கையிலிருந்த வாளை உயர்த்திக் காட்டுகிறான், ‘எங்கே உன் வாள் ? ‘

கபிலா உள்ளே சென்று எடுத்துவருகிறான், ‘வயதாகிவிட்டது, முன்போல் விரைவாய் வாள் சுழற்ற முடியவில்லை ‘ என்றும் சொல்கிறான்.

தேவதத்தா, ‘இப்போதைய நம் போருக்கு வாள் முக்கியமில்லை நண்பனே ‘ என்கிறான், ‘நாம் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு இறக்கவேண்டும், அதுதான் இந்தக் குழப்பத்தின் முடிவு ‘.

கபிலா அதை ஏற்கிறான், ‘உண்மைதான், ஆனால் ஒன்று, நம் உடல்களும் தலையும் மாறியிருப்பதால், நான் உன்னைக் கொன்றாலோ, அல்லது நீ என்னைக் கொன்றாலோ அது கொலையா, தற்கொலையா தொியவில்லை ! ‘

இருவரும் இசைக்கேற்ப நடனம்போல் சண்டையிடத் துவங்குகிறார்கள், இவர்கள் சண்டையைக் காண்கிற பத்மினியின் அசைவுகள்கூட நடனமாகவே இருக்கிறது. சண்டை உச்சத்தை எட்டி, இருவரும் ஒருவரையொருவர் குத்திக் கொல்கிறார்கள், வீழ்கிறார்கள். இருவருக்கும் இடையே பத்மினி வந்து அமர்கிறாள், ‘இவர்கள் இருவரோடுமே நான் சேர்ந்து வாழ்கிறேன் என்று நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இந்த சண்டையை, சாவுகளைத் தவிர்த்திருக்கலாம், ஆனால் தேவதத்தாவாலும், கபிலாவாலும் ஒன்றாக வாழமுடியாது, அவர்கள் பகிர்ந்துகொள்ளப்போவது என்னை மட்டுமல்ல, அவர்களின் உடல்களையும்தான் என்பதால், அவர்களுக்குள் குழப்பமும், போட்டியும், சண்டைகளும்தான் மிஞ்சியிருக்கும், இப்போது இந்த சாவினால் அவர்கள் தங்களை மன்னித்துக்கொண்டுவிட்டார்கள், ஆனால் வழக்கம்போல், என்னைத் தனியாக விட்டுவிட்டார்கள் ‘

தேவதத்தா வரும்போது கையோடு கொண்டுவந்திருந்த பொம்மைகளை அவள் பாகவதாவிடம் கொடுக்கிறாள், ‘என் மகன் உள்ளே தூங்கிக்கொண்டிருக்கிறான், அவனுடைய பொம்மைகள் இவை, அவனையும், இந்த பொம்மைகளையும் காட்டுவாசி மக்களிடம் கொடுங்கள் – அவன் கபிலாவின் மகன் என்று அவர்களிடம் சொல்லுங்கள், அவர்கள் அவனை அன்போடு வளர்ப்பார்கள், இந்த கானகத்தையும், ஆற்றையும், இயற்கையையும் ருசித்து அவன் நன்கு பலசாலியாய் வளரட்டும், அவனுக்கு ஐந்து வயதானதும் அவனை தேவதத்தாவின் அப்பா பண்டிதர் வித்யாசாகரா-விடம் கொண்டுசெல்லுங்கள், அங்கே அவனை தேவதத்தாவின் மகன் என்று அறிமுகப்படுத்துங்கள் ‘ என்கிறாள்.

‘அதெல்லாம் சாி அம்மா, நீ என்ன செய்யப்போகிறாய் ? ‘

‘நெருப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள், எாியப்போவது இரண்டு அல்ல, மூன்று உடல்கள் ‘

பாகவதா அதிர்ச்சியடைகிறான், ‘உடன்கட்டை ஏறப்போகிறாயா குழந்தாய் ? ‘, பத்மினி அதற்கு எந்த பதிலும் சொல்வதில்லை, ‘காளி, எல்லாப் பெண்களும் சாகும்போது மறு ஜென்மத்திலும் இதே கணவன் வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள், எனக்கு நீ அந்த சந்தோஷத்தையும் விட்டுவைக்கவில்லையே ‘ … நமஸ்காிக்கிறாள். நெருப்பு தகதகத்து எாிகிற திரை அவளுக்குமுன் பிடிக்கப்படுகிறது, பாடகிகள் அவளை வாழ்த்திப் பாடுகிறார்கள்.

பத்மினி எங்கே சென்று மறைந்தாள் என்று யாருக்கும் தொியவில்லை, கானகவாசிகளைக் கேட்டால், ‘அதிர்ஷ்டப் பெண் ‘ என்றழைக்கப்படும் ஒரு மரத்தைக் காட்டுகிறார்கள், இப்போதும் முழுநிலவு மற்றும் அமாவாசை தினங்களில் காட்டிலிருக்கும் அந்த மரங்களிலிருந்து ஒரு பாடல் கிளம்பி கானகத்தையே நறுமணம்போல நிறைக்கிறதாம் – பாகவதா கதையைச் சொல்லிமுடித்து அரங்கை நமஸ்காிக்கிறான்.

அப்போது அரங்கத்துக்குள் ஒரு நடிகனும், சிறு பையனும் வருகிறார்கள் – ஹயவதனா காளி கோவிலுக்குச் சென்றபோது அவனுடன் துணைக்குப் போன அதே நடிகன், பாகவதா அவனைப் பார்த்ததும் ஹயவதனாவை விசாாிக்கிறான், ‘அவனுடைய குதிரைமுகம் போய்விட்டதா ? காளி அவன் வேண்டியதைத் தந்தாளா ? ‘

அந்த நடிகன் சலிப்போடு பதில் சொல்கிறான், ‘எனக்குத் தொியவில்லை, அந்த காளி கோவிலுக்குச் சென்றதுதான் தாமதம், அந்த ஹயவதனா எனனைத் துரத்திவிட்டுவிட்டான் ‘

‘அது சாி, யார் இந்தப் பையன் ? ‘

‘நீங்களே விசாாியுங்கள், என்னிடம் ஒன்றும் சொல்ல மறுக்கிறான், ஒரு பேச்சு இல்லை, அழுகை இல்லை, சிாிப்புகூட இல்லை, இருபத்து நான்கு மணிநேரமும் இப்படியே முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறான் பயல் ‘

பாகவதா அந்தப் பையனிடம் பேச முயல்கிறான், உபயோகமில்லை, ‘எங்கே பிடித்தாய் இவனை ? ‘

‘காட்டிலிருக்கும் ஆதிவாசிக் கூட்டத்தில், அங்கே நான் தங்கியிருந்தபோது ஒரு பெண் இவனை என்னிடம் தந்து, இவன் எங்களைச் சேர்ந்தவன் இல்லை, இவனை நகரத்தில் சேர்த்துவிடு – என்று சொன்னாள் ‘, அப்போதுதான் அந்தப் பையனின் கையிலிருந்த பொம்மைகளைப் பார்க்கிறான் பாகவதா, பத்மினி அவனிடம் தந்த அதே பொம்மைகள். சந்தேகத்தோடு அந்தப் பையனின் தோளையும் பார்க்கிறான், அவன் பத்மினியின் மகன்தான் என்பது உறுதியாகிறது, சந்தோஷத்தில் கூச்சலிடுகிறான், ‘சந்தேகமே இல்லை, இவன் பத்மினியின் குழந்தை ‘

நடிகனுக்குக் குழப்பம், ‘எந்த பத்மினி ? ‘

பாகவதா பதில் சொல்வதற்குள் ஒரு குதிரை நம் தேசிய கீதத்தைப் பாடியபடி அரங்கினுள் வருகிறது, ‘பாகவதா, என் நண்பா, எப்படி இருக்கிறாய் ? ‘ என்கிறது.

பாகவதா அதை நம்பமுடியாமல் பார்த்து, ‘நீ ஹயவதனாவா ? ‘ என்கிறான்.

‘நானேதான் ‘ என்று அந்தக் குதிரை சிாிக்கிறது, அதுவரை எந்த அசைவும் இல்லாமலிருந்த குழந்தை அதைப்பார்த்ததும் கைதட்டி ரசிக்கிறது.

‘ஹயவதனா, நீ முழு மனிதனாக விரும்பிதானே காளியிடம் போனாய், நீ எப்படி குதிரையானாய் ? ‘

‘அது ஒரு பொிய கதை, காளியிடம் என்னை முழுமையாக்கு என்று கேட்டேன், அப்படியே ஆகட்டும் என்று காளி வரம் தந்தாள், அடுத்த விநாடி என் முகம் மட்டுமில்லை, உடல் முழுதும் குதிரையாகிவிட்டது, முழு மனிதனாக்கு என்று நான் தெளிவாக கேட்டிருக்கவேண்டும், என் தப்புதான் ‘ என்கிறான் ஹயவதனா, பாகவதா உச்சுக்கொட்டுகிறான்.

‘அதனாலென்ன பரவாயில்லை, ஏதேனும் ஒரு விதத்தில் முழுமையாய் ஆனது எனக்கு சந்தோஷம்தான், ஆனால் ஒரே ஒரு பிரச்சனை, என் குரல் மட்டும் இன்னும் மனிதக் குரலாகவே இருக்கிறது, ஆகவே இன்னும் நிறைவில்லாத உணர்ச்சிதான் எனக்கு ‘ என்கிறான், ‘அதனால்தான் அடிக்கடி தேசிய கீதம் மற்றும் பிற நாட்டுப்பாடல்களைப் பாடிப் பார்க்கிறேன், அப்படிப் பாடுகிறவர்களின் குரல் மாறிப்போவதைத்தான் நீ பார்த்திருப்பாயே ‘ என்கிறான் கேலியாய். (கேலி ஹயவதனாவுடையது இல்லை, கர்னாடுடையது 🙂

பேசிக்கொண்டே ஹயவதனா அழ ஆரம்பிக்கிறான், ‘நான் எப்போது உண்மையிலேயே முழுமையடைவேன் ? ‘

அவன் அழுவதைப் பார்த்ததும் குழந்தையும் கவலையடைகிறது, ‘அழாதே குதிரை, நீ சிாிக்கும்போதுதான் ஜோராய் இருக்கிறாய் ‘

ஹயவதனா அவனைப்பார்த்து, ‘அப்படியானால் நான் சிாிக்கிறேன், ஆனால் அதற்குமுன் நீ ஒரு பாட்டுப் பாடவேண்டும் ‘ – குழந்தை ஒரு பாடலைப் பாடுகிறது, அதன் அம்மா அதற்கு கற்றுக்கொடுத்த சோகமான பாட்டு அது. ‘

பாகவதா கேட்கிறான், ‘இந்த சோகமான பாட்டெல்லாம் எதற்கு ? உண்மையான அழகு, குழந்தையின் களங்கமில்லாத சிாிப்பில் இருக்கிறது, எந்த சோகத்தாலும் அதைத் தொட்டுவிடமுடியாது ‘

‘அப்படியா ? ‘

‘ஆமாம், குழந்தையின் சிாிப்பை மிஞ்சக்கூடிய தூய்மை வேறேதும் உண்டா ? ‘

ஹயவதனாவால் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை, ‘நேர்மையாய்ச் சொல்வதானால் பாகவதா, என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை, இதுபோன்ற உணர்ச்சிமயமான நெகிழ்ச்சிதான் நம் தேசத்து இலக்கியம் மற்றும் வாழ்க்கையின் அடிப்படையாய் இருந்திருக்கிறது, இதன்மூலம் உண்மையான, யதார்த்தமான வாழ்வை நமக்குக் காட்டாமல், நம்மை அதிலிருந்து தப்பித்துப்போகத்தான் ஊக்குவிக்கிறன இவை ! ‘

பையனுக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை, ‘சிாிப்பதாய்ச் சொன்னாயே ? ‘

குதிரை ஹயவதனா பேச்சை நிறுத்திவிட்டு சிாிக்கிறது, மெல்லமெல்ல அந்த சிாிப்பு கனைப்பாய் மாறுகிறது, ‘ஹயவதனா, என்ன ஆயிற்று உனக்கு ? ‘ என்று கேட்கிறான் பாகவதா, அவன் கேள்விக்கும் கனைப்புதான் பதில். சந்தோஷமான கனைப்பு !

குதிரையின் கனைப்பைக் கேட்டதும் பையனுக்கு இன்னும் குஷி, குதிரையின்மேல் ஏறிக்கொண்டிருந்தவன், தான் முன்பு பாடிய பாட்டை மீண்டும் பாடியபடி அதை விரட்டுகிறான் – அவர்கள் சவாாி சென்று மறைகிறார்கள்.

பாகவதா பெருமூச்சோடு, ‘கடைசியில் ஹயவதனாவுக்கு அவன் விரும்பிய முழுமை கிடைத்துவிட்டது ‘ என்கிறான், பின்னர் நாடக நடிகர்களிடம் திரும்பி, ‘நீங்கள் பண்டிதர் வித்யா சாகராவின் வீட்டுக்குச் சென்று அவருடைய பேரன் ஒரு குதிரைமேல் ஏறி வருகிறான் ‘ என்று செய்தி தொிவியுங்கள் ‘ என்று பணிக்கிறான்.

அனைவரும் மேடையில் தோன்ற, பிரார்த்தனைப் பாடலோடு நாடகம் முடிகிறது.

முன்பே குறிப்பிட்டதுபோல், இந்த சிறிய நாடகத்தைச் சுவையாக்குவது நாடகமாக்கத்தின் புதிய உத்திகள்தான், அல்லது பழைய உத்திகளையே ரசிக்கும்படி பயன்படுத்தியிருப்பது. உதாரணமாய், ‘குதிரைத்தலை மனிதனைக்கண்டு இவனே பயந்துவிட்டால், நம் ரசிகர்கள் எத்தனை பயப்படுவார்கள் ! ஆகவே அவனை திரையிட்டு அழைத்துவாருங்கள் ‘ என்று பாகவதா சொல்வதால், திரையைப்பிடித்தபடி பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் பாணிக்கு ஒரு புதிய முகம் கிடைக்கிறது !

கர்னாடின் வசனங்களும், பாடல்களும் மிக இயல்பானவை, ஒரு சாித்திரக்கதை போன்ற தொலை தோற்றத்தை உண்டாக்காமல், இயல்பாக அதனோடு நம்மை கலந்துவிடச் செய்கிறது – உரையாடல்களில் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் பொிய பலம். (உ.ம் : குழந்தை பேசாமல் எப்போதும் முகத்தை உம்மென்று தூக்கிவைத்துக்கொண்டிருக்கிறான், வருங்காலத்தில் பொிய நாடக விமர்சகனாய் வருவான் என்று நினைக்கிறேன் !)

வாசிப்புக்கும், சிந்தனைக்கும் சுவையான இந்த நாடகம் தமிழில் மொழிபெயர்ப்பாகியிருக்கிறதா தொியவில்லை. ஆசிாியாின் எளிய ஆங்கில மொழிபெயர்ப்பு சிறப்பாய் இருக்கிறது.

– என். சொக்கன்

(Hayavadana – Girish Karnad – Oxford University Press, Chennai – Rs 30/-)

***

Series Navigation

என். சொக்கன்

என். சொக்கன்