தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

அக்னிபுத்திரன்



தாய்மொழி ஒரு இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் ஒரு கருவி. தாய்மொழியில் சிந்தித்துச் செயல்படுவதுதான் குழந்தைகளுக்கு இயற்கையாகவே சிறப்பாக அமையும் என்பது மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தாய்மொழியில் கல்வி கற்பித்து வரும் பல நாடுகளில் குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் அறிவுசார்ந்த பொருளாதார வளர்ச்சி இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஜப்பான் நாட்டில் படிப்பெல்லாம் ஜப்பானிய மொழியிலேயேதான் சொல்லித் தருகிறார்கள். இளம் சமுதாயத்துக்குச் நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தருவதிலும், மாணவர்களைப் பண்படுத்தி நல்ல குடிமக்களாக உருவாக்குவதிலும், நற்பண்புகளை விதைத்துச் சான்றோராக்குவதிலும் தாய்மொழியின் பங்கு இன்றியமையாதது. ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டுக்குரிய உயர்ந்த பண்புகளுடன் விளங்க வேண்டுமானால் அந்த நாட்டு இளைஞர்களுக்கு உயர்தரக் கல்வி மட்டுமின்றி அனைத்துக் கல்வியையும் தாய்மொழி மூலமாகவே கற்பிக்க வேண்டும் என்பது அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பொன்மொழியாகும்.

இவ்வாறு ஒரு இனத்தின் கலை, கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கு அவ்வினத்திற்குரிய மொழியே முக்கியக் காரணமாக அமைகிறது. அதனால்தான் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவ்வினம் பயன்படுத்தும் மொழியை முதலில் அழிக்க முயற்சித்தாலே போதுமானது. விரைவிலேயே அவ்வினமே அழிந்துவிடும் என்பது மொழி ஆய்வாளர்களின் கூற்றாகும். எனவே தாய்மொழியைப் போற்றிப் பாதுகாப்பது அவ்வினத்தில் பிறந்த ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். அப்போதுதான் அந்த இனத்தின் தொன்மையையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் கட்டிக்காக்க முடியும்.

இவ்வகையில் பார்த்தால், ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிக வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பது புலனாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்றத் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன. உலகின் தொன்மையான மொழிகளில் கிரேக்கம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள்தான் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளதாக அறியப்படுகிறது. இவற்றுள் காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு பேச்சு, எழுத்து என்னும் இரு வழக்கிலும் இன்று மிகச்சிறந்து விளங்கும் ஒரு மொழியாக நமது தாய்மொழியாம் தமிழ்மொழி விளங்கி வருகின்றது.

ஈராயிரமாண்டுகளாத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலக மொழியாக விளங்கினும், ஆங்கிலோ சாக்சான் காலத்தில் அது வெறும் இருநூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது, பிற்காலத்தில் பிறமொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி. ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைத் தன்னகத்தே கொண்டு கருத்து வளமுடன் விளங்கிய உயர்தனிச் செம்மொழி. தமிழ் மக்களின் நாகரிகமும் பண்பாடும், அரசியல் அமைப்பும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், முன்னேற்றம் மிக்க சிறந்த அரசியல், பொருளாதார, நாகரிகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும். அவனின் இனிய தமிழ்மொழி காலம் காலமாகக் கண்டு வரும் அல்லல்கள் அளவிடற்கரியதாகும். முன்பு எப்போதும் இல்லாத அளவில் தற்போது ஊடகங்களின் தாக்கத்தாலும் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தாலும் தமிழ்மொழி பெரிதும் பாதிப்படையக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

ஊடகங்களில் குறிப்பாக தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் ஆங்கிலம் கலந்த “தமிங்கலம்” தாங்க முடியாத தலைவலியாக உருவெடுத்து வருகிறது. அண்மையில் “விஜய்” தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்..காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்குத் தமிழ்மொழி சிதைக்கப்படுகிறது. நமது மொழியை உருக்குலைத்து அந்த அறிவிப்பாளர் பெண்மணி இப்படித்தான் விளம்பரம் செய்வார்.

“பாக்லாம், கேக்லாம்…கேக் வெட்டிக் கொண்டாலாம்…பிறந்தநாள் வாத்துகள்! இந்த வாரம் உங்க பர்த்துடே பேபி யார்ருன்னு கண்டுபுடிங்கோ….பாக்லாம்…”

இப்படி வாழ்த்துகள் “வாத்துகளாக” மாறி நம்மை வந்து தாக்குகின்றன. இப்படிப்பட்ட தமிழ்க்கொலை அறிவிப்புகளை ஊடகங்கள் வெளியிடும்போது நமது இரத்தம் கொதிக்கின்றது. காலில் கிடப்பதைக் கழற்றி அடிக்க வேண்டும் போல் ஒரு ஆவேசம் நமக்குள் எழுகின்றது. அவர்கள் எதையாவது பேசிவிட்டுப் போகட்டுமே.. விருப்பம் இருந்தால் கேட்க வேண்டியது…இல்லாவிட்டால் அத்தொலைக்காட்சியைப் பார்க்காமல் இருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம். நாம் பார்க்கின்றோமா இல்லையா என்பது இங்குப் பிரச்சினை இல்லை. இந்நிகழ்ச்சியைக் காணும் எண்ணற்ற தமிழ்க்குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் திட்டமிட்டுப் பரப்பப்படும் நஞ்சாக அல்லவா இவை அமைகின்றன! எதையும் பார்த்து அதைபோலவே செய்யும் இயல்பு குழந்தைகளுக்கு ஏன் மனித இனத்திற்கே உண்டு. இப்படிப்பட்ட மொழிச் சிதைவால் எதிர்கால தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட மொழிச்சிதைவு அறிவிப்புகளை தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பொதுமக்கள் இம்மாதிரியான அறிவிப்புகளை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளைப் பொது இடங்களில் கண்டால் அவர்கள் முகத்தில் காரி உமிழும் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைத் தமிழ்மொழி ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளும் முன்னின்று நடத்திட முன் வர வேண்டும்.

தமிழுக்கு வெளிப்பகையை விட உட்பகைதான் எப்போதும் அதிகம். தமிழ்ச் சமூகம் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடிய ஆபத்தான நிலை இன்று உருவாகியுள்ளது. மொழியைச் சிதைத்தால் பண்பாடு சிதையும். நம் தாய் மொழியை நாமே சிதைத்தால் எதிர்கால சந்ததியினரின் நிலை படு கேவலமாக இருக்கும் மொழியை இழந்தவன் தன் விழியை இழந்தவனாவான். தாய் மொழி வாயிலாக கலை கலாச்சாரம் மற்றும் அறநெறிக் கருத்துக்கள் இளம் உள்ளங்களுக்கு வழங்கும்போது அவை எளிமையாகவும் அதே சமயம் இனிமையாகவும் மனதில் நன்கு ஆழமாகப் பதியும் என்பது உளவியல் சார்ந்த உண்மைக்கருத்தாகும்.

தமிழினத்தை, தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டுமானால் உடனடியாக தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கும் இச்சூழலே இதற்கு ஏற்றத் தருணம்.

தமிழ்மொழியைப் பாதுகாக்க முதலில் அதை ஆர்வத்துடன் பயில இளம் சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி பொருளாதார நிலையில் அக்கல்வி பயில்வோரை உச்ச நிலைக்குக் கொண்டு செல்வதேயாகும்.

கலைஞர் அவர்களின் ஒரே ஒரு உத்தரவால் அதாவது தமிழ்த்திரைபடங்களுக்குக் தமிழில் பெயரிட்டால் வரிச்சலுகை என்ற அந்த உத்தரவால், திரையுலகில் தமிழ்த்திரைப்படங்களுக்கு ஆங்கில பெயர் வைக்கும் மோகம் அழித்தொழிக்கப்பட்டுத் தற்போது தமிழிலேயே பெயர் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே உத்தியை இப்போது இதற்கும் பயன்படுத்த வேண்டும்.

ஐயா கலைஞருக்கு எனது வேண்டுகோள்:

1. தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை அதிகப்படுத்த வேண்டும்.

2. தாய்மொழி வழியாக நற்பண்புகளை ஊட்டி எதிர்காலத்திற்கு சிறந்த நற்குடிமக்களை நாட்டிற்கு உருவாக்கும் அற்புதப் பணியைத் தமிழாசிரியர்கள் ஆற்றுவதால் அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையுடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்.

3. தமிழை தனி ஒரு முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்மொழி இலக்கணம், இலக்கியம் மற்றும் திறன் வளர்க்கும் பயிற்சிகள் பெற்று ஆற்றல் மிகுந்தவர்களாகத் தமிழ்ப்பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் தமிழ்மொழிப்பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

4. தமிழ்ப் பட்டதாரிகள் படித்து முடித்தவுடன் உடனடியாக வேலைவாய்ப்பு பெறவும் அவர்களுக்கு மற்றவர்களைவிடக் கூடுதல் சம்பளம் கிடைக்கவும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ்த்தானே என்று ஓடியவர்கள் எல்லாம் தமிழ்த்தேனே என்று தமிழ் பயில ஓடி வர வேண்டும்.

5. தமிழ் இலக்கியங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் தாய்மொழி வழியிலான கல்வித்திட்டம் ஒன்றைத் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழங்கள் வரை ஏற்படுத்த வேண்டும்.

6. தமிழைத் தனி ஒரு முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமானதாகத் திகழ்வதற்கு அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அதற்கு இம்மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும். அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீதப் பணியிடங்கள் தமிழ்ப் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்.

7. மென்பொருள் துறையில் வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாகத் திறன் மிகுந்த தமிழ்ப்பட்டதாரிகளுக்குச் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

8. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை உருவாக்க தமிழ்மொழி அறிஞர்கள் குழு அமைத்து ஆராய வேண்டும்.

இவ்வாறு பொருளாதார நிலையில் தமிழ் ஏற்றம் பெற்றால் நமது மொழி நிச்சயம் நிலைக்கும். நமது இனம் பாதுகாக்கப்படும். நமது கலை, கலாச்சாரம், பண்பாடு கட்டிக் காக்கப்படும்.

நமது தாய்மொழியாம் தமிழ்மொழியைப் போற்றிப் புகழ்வோம். தமிழாய்ந்த தமிழன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இத்தருணமே தமிழ் தலைநிமிர்ந்து நிற்க மிகச்சரியான காலமாகும். தமிழனுக்குத் தமிழ்தான் முகவரி. இதுவே நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒப்பற்ற உண்மையாகும்.


agniputhiran@yahoo.com

Series Navigation