தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
தமிழிலக்கிய உலகில் அதிகமாக எழுதி புகழ் பெற்றவர்களும் உண்டு. குறைந்தளவே எழுதி புகழ்பெற்றவர்களும் உண்டு. சங்க இலக்கியமான புறநானூற்றில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதி மிகுந்த புகழைப் பெற்றவர் கணியன் பூங்குன்றனார். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் தான் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருலட்சம் கவிதைகளுக்கும் மேல் எழுதிப் புகழ் பெற்றவராவார். இதனைப் போன்றே தமிழ்ச் சிறுகதை உலகில் மிகக் குறைந்தளவே எழுதி நிலைத்த புகழைப் பெற்றவர் மௌனி ஆவார். மௌனி அவர்கள் இருபத்துநான்கு கதைகள் மட்டுமே எழுதி உள்ளார். அவை அனைத்தும் மனித மனங்களை எக்காலத்திலும் பிணிக்கின்ற வகையில் அமைந்துள்ளன.

இத்தகைய சிறப்புடைய மௌனி அவர்கள் 1907-ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 27-ஆம் நாள் சிதம்பரத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் மணி என்பதாகும். இவர் தமது சிறுகதைகளை “மௌனி“ என்ற புனைப் பெயரில் எழுதினார்.

தமிழின் தனித்துவமான எழுத்தாளரான மௌனி மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் படித்ததெல்லாம் ஆங்கிலம்தான். கல்லூரியில் தமிழ் முறையாகப் படித்ததில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். சிதம்பரத்தில் மௌனியை மில் மணிஐயர் என்று கூறினால் மட்டுமே பலரும் அவரைப்பற்றிக் கூறுவர்.

மௌனியின் உலகம் தனித்துவமானது, தமிழ் இலக்கியத்துக்கு அவர் பங்களிப்பு போல. எஸ். மணியாக அவர் உயர் கணிதத்தின், தத்துவ விசார பயின்ற மாணவர். கர்னாடக சங்கீத ரசிகர். எப்போதாவது தனது மகிழ்ச்சிக்கு வயலின் வாசிப்பவர். இலக்கியத்தையும் விட, சங்கீதத்திலும் தத்துவங்களிலும் அவருக்கு ழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர். எஃப். எ.ஹெச் ப்ராட்லியின் யுppநயசயnஉந யனெ சுநயடவைல அவர் திரும்பத் திரும்ப விரும்பிப் படிக்கும் புத்தகம். இலக்கியத்தில் ஃப்ரான்ஸ் காஃப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹே, ராபர்ட் ம்யூசீல் போன்றோரின் படைப்புகள் அவர் மிகவும் ரசித்தவை.

1959ஆம் ஆண்டு மௌனியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ஹஅழியாச்சுடர்’ வெளியானது. பின்பு 1967ஆம் ஆண்டு ஹமௌனி கதைகள்’ என்ற தலைப்பில் ஹக்ரியா’ பதிப்பகம் ஒரு தொகுப்பையும் 1978ஆம் ஆண்டு மற்றொரு தொகுப்பையும் வெளியிட்டது. 1991ஆம் ஆண்டு ஹபீக்காக்’ பதிப்பகம் மூலமாக கி.அ. சச்சிதானந்தம் மௌனியின் எல்லாக் கதைகளும் அடங்கிய ஹமௌனி கதைகள்’ புத்தகத்தைக் கொண்டுவந்தார். இப்புத்தகத்தில் 1968ல் ஆனந்த விகடனில் மௌனி எழுதிய ஹசெம்மங்குடி _ தன் ஊர் தேடல்’ கட்டுரையும் 1965 பி.எஸ். ராமையா மணிவிழா மலருக்காக எழுதப்பட்ட ஹஎனக்குப் பெயர் வைத்தவர்’ கட்டுரையும் இடம்பெற்றது. அதன் பின்னர் இன்றுவரை மௌனி கதைகள் மறுபதிப்பு காணவில்லை.

தன்னுடைய கதைகள் எதற்கும் தான் தலைப்பு வைத்ததில்லை என்றும் எல்லாம் பத்திரிகைக்காரர்களே வைத்த தலைப்புக்கள் என்றும் மௌனி குறிப்பிடுகிறார். தீபத்தில் வெளிவந்த அவரது நேர்காணலிலும் இவ்வாறே குறிப்பிட்டுள்ளார் என்பது நோக்கத்தக்கது. அவருடைய பெரும்பாலான கதைகளுக்குப் பி. எஸ். ராமையாவே தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்ததாக அறிஞர் பலர் குறிப்பிடுகின்றனர். இதனை,“ 1965 பி.எஸ். ராமையா மணிவிழா மலருக்காக எழுதப்பட்ட ஹஎனக்குப் பெயர் வைத்தவர்’ என்ற கட்டுரையில் மௌனி குறிப்பிடுவது உறுதிப்படுத்துவதாக உள்ளது.

மௌனியின் சிறுகதைகள் பெரும்பாலும் ஒரு புதினத்தின் நடுவிலிருக்கும் ஒரு பகுதியின் தோற்றத்தையே தருவதாக அமைகிறது. பெரிய சூழ்நிலை மாற்றங்களோ, எதிர்பாராத முடிவோ திருப்பமோ நாடகத்தன்மை வாய்ந்த முடிவோ அவரது சிறுகதைகளில் இருப்பதில்லை. மௌனியின் கதைமாந்தர்கள் எந்த ஒரு நாடகத் தன்மையோ, தலைமைத் தன்மையோ கொள்ளாமல், சராசரி உணர்வுகளுடன், எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் மன உணர்ச்சிகளுடன் தான் இருக்கின்றனர் என்பது நோக்கத்தக்கது.

மௌனியின் கதைகளில் பெரும்பாலும் நிறைவேறாத காதலும் மரணமும் முக்கிய அனுபவமாக தொடர்ந்து வருகிறது. காதல், மரணம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஏதோவொரு பிரிக்க முடியாத உறவு கொண்டிருக்கிறது. மரணத்தைக் கடந்து செல்வதும், அதன் தாக்கத்தால் எழுந்த மனஉணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதிலும் மௌனி அதிக அக்கறை கொள்கிறார் எனலாம். அவரது தொடக்காலக் கதைகளில் கூட வழக்கமாகக் கதை கூறும் முறை என்பது கிடையாது. இதனால் மற்ற எழுத்தாளர்கள் மௌனியை சித்தரைப் போன்றே இவரைக் கருதினார்கள். மௌனி தத்துவார்த்தமாகவே எழுதினார்.

இதற்குக் காரணம் அவரது வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட மனதைக் கலங்கடிக்கும் வகையில் நடந்த இழப்புகளே காரணம் எனலாம். இதனால் ஒரு உள்ளாந்த சோகம் அவரைக் கவிந்து கொண்டிருந்தது என்பது நோக்கத்தக்கது. ஏனெனில் அவரது நான்கு மகன்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களின் வாழ்க்கை மிக மோசமாகவும் அதிகத் துன்பத்தைத் தருவதாகவும் அமைந்துவிட்டதே காரணம். மௌனியின் இரண்டு மகன்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து விட்டார்கள். இன்னொருவர் தத்துவத்தில் எம்.ஏ. படித்து விட்டு மனக்கோளாறோடு அவருடன் அவரது வீட்டில் இருந்தார். இத்தகைய சுமக்க இயலாத சோக உணர்வுகளுடன் அவர் வாழ்ந்ததால்தான் அவர் எழுதி கதைகள் தத்துவார்த்தமாக அமைந்தன.

மௌனியின் சிறுகதைகள் அனைத்தும் 1936, 1937-ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1960-ஆம் ஆண்டுகளில் மௌனி தான் எழுதுவதைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டார் எனலாம். ஏனெனில் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட அவல அனுபவமே இதற்குக் காரணம் என்றும் அறிஞர்கள் கூறுவது நோக்கத்தக்கது.

வாழ்க்கையில் நடக்கும் பலவிதமான இழப்புகள் மனிதனுக்கு மன வலியை அதிகம் ஏற்படுத்துவதுடன் மனிதனது வாழ்க்கை சிதலமடையவும் காரணமாக அமைகின்றன. இதனால் மனிதனின் மனம் பக்குவமடைவதும் உண்டு. மனிதன் சித்தர்களின் நிலையை அடைவதும் உண்டு. மௌனி சித்தர்களின் நிலையை அடைந்தார். இதனை, “தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்த்வர் ஒருவரை சொல்ல வேண்டுமென்றால் மௌனி என்ற புனைப்பெயரில் எழுதி வருபவரைச் சொல்ல வேண்டும். அவரைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று சொல்ல வேண்டும். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களை மடக்கிக் கொண்டு வரக்கூடியவர் அவர் ஒருவரே“ என்ற புதுமைப்பித்தனின் கூற்று மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது.

புதுமைப்பித்தன் கூறிய தமிழ்ச்சிறுகதையின் திருமூலர் என்ற பெயரே மௌனிக்கு சிறுகதை உலகில் என்றும் நிலைத்து நின்றுவிட்டது எனலாம். மௌனி தமது சிறுகதைகளால் பலரின் மனதையும் கவர்ந்தார். ஒருமுறை ஜெயகாந்தன் அவர்களிடம் தங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் ஒருவரைக் குறிப்பிடவும் என்று நேர்காணலில் ஒருவர் கேட்டபோது, அவர் தனக்குப் பிடித்த எழுத்தாளர் மௌனி’ என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோன்றே அவருக்குப் பிடித்தமான சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டபோது அவர் மௌனியின் சிறுகதையைத் தேர்வு செய்த்தாகவும் அறிஞர் திலீப்குமார் தமது நூலில் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

க. நா. சுப்ரமணியம் 1959-ஆம் ஆண்டில் தாம் எழுதிய கட்டுரை ஒன்றில், “ஒதுங்கி நின்று ஒரு குறிப்பிட்ட கோணத்தில் நோக்கிய பூராவையும் கனமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகிற காரியத்தை மௌனி சாதித்திருக்கிறார். இந்த அளவுக்கு இந்த சாதனையைச் செய்து வெற்றி பெற்றவர்கள் என்று இன்றைய தமிழ் சிறுகதையில் வேறு ஒருவரையும் சொல்லமுடியாது. அவர் நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் சிறந்தது தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாது” என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமான ஆய்வுரையாக அமைந்துள்ளது எனலாம்.

இவ்வாறு அனைவரையும் தமது எழுத்துக்களால் கவர்ந்தவரும், சிறுகதையின் திருமூலர் என்று அனைவராலும் புகழப்பட்டவருமாகிய மௌனி 1985-ஆம் ஆண்டு ஜுன் 6-ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் மறைந்தாலும் அவரது கதைகள் என்றும் நிலைத்து நின்று தமிழ்ச் சிறுகதை உலகில் அவரது பெயரைக் கூறிக்கொண்டே இருக்கும்.

Series Navigation