தமிழில் உலகளாவிய தகுதித் தேர்வு – அவசியம்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

சித்ரா சிவகுமார்



தமிழ். தமிழ். தமிழ். நாம் அனைவரும் தமிழில் எழுதுகிறோம். பேசுகிறோம். பாடுகிறோம். ஆடுகிறோம். தமிழ் மொழி வளர வேண்டும் என்று நம்மில் பலரும் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழைச் செம்மொழி ஆக்கிவிட்டோம். அதற்கு அடுத்து என்ன? தமிழை உலகளவில் வளர்க்க என்ன செய்ய வேண்டும்? தமிழைக் கற்க விரும்புவர்கள் அதை எப்படி கற்கலாம்? எப்படி தகுதி பெறலாம்?

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலரும் தங்கள் குழந்தைகள் தாய்மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆவலில் தமிழ் வகுப்புகளுக்கு அவர்களை அனுப்புகின்றனர்.

நான் வாழும் ஹங்காங்கில் அப்படிப்பட்ட வகுப்பிற்கு பலத்த வரவேற்பு இருக்கிறது. ஆர்வத்தோடு பயில்வோர் ஒரு சாரார். ஹங்காங் வருவோரில் பலரும் வேலை நிமித்தமாக இரண்டு மூன்று ஆண்டுகளுக்கென்று வருவார்கள். பின்னர் இந்தியா திரும்பிச் செல்வோரும் உண்டு. இங்கேயே தங்கிவிடுவோரும் உண்டு. மேலும் சிலருக்கு தாம் எப்போது வேண்டுமானாலும் ஊர் திரும்ப வேண்டி இருக்கும் என்ற எண்ணம் உண்டு. அதனால் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பது நலம் என்று எண்ணுகின்றனர். இங்கு தமிழ் வகுப்பு சிங்கப்பூர் தமிழ் வகுப்பு பாட திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

இது போன்றே பல்வேறு நாடுகளில் வகுப்புகள் நடந்து வருவதை பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இணையத்தின் மூலமும் அறிந்திருப்பீர்கள்.சிறார்கள் பயில்வதால் நாம் பள்ளித் திட்டத்தையே பாடமாகப் பயிற்றுவிக்கிறோம். தேர்வு நடத்தி சான்றிதழ் தருகிறோம். இத்தகையச் சான்றிதழ் நாம் தமிழ் நாட்டிற்குச் சென்றால் செல்லுபடியாகுமா? பெரியவர்கள் கற்க விரும்பினால் என்ன செய்வது?

இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு ஒவ்வொருவரிடமிருந்து ஒவ்வொரு பதில் வரும். இதைப் பற்றி யோசித்த போது உலகளாவிய தகுதித் தேர்வு ஒன்றை தமிழக அரசு ஏன் நடத்தக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

தென்னிந்தியாவில் இந்தி மொழியைப் பரப்ப இந்திய அரசு இந்தி பிரசார சபா என்ற சபையை அமைத்து பிராத்மிக் முதல் பிரவீன் வரையிலான எட்டு தேர்வுகளை நடத்தி இந்தி மொழியில் தகுதி பெறச் செய்கிறது. உலகில் பல்வேறு மொழிகளுக்கும் இதைப் போன்று தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜப்பானிய மொழி பயில்வோர் உலகில் எங்கு வேண்டுமானாலும் மொழியைக் கற்று நான்கு நிலைகளில் தகுதி பெறலாம். அதைப் போன்று பிரன்சு மொழி பயில்வோரும் பல நிலைகளில் தகுதித் தேர்வை எழுதலாம். அதைப் போன்று ஏன் தமிழிலும் செய்யக் கூடாது?

இது போன்ற தேர்வுகள் தமிழகத்தில் ஏற்கனவே நடத்தப்படுகிறதா?

சென்ற ஆண்டு மே மாதம் சென்னையில் இருந்த போது எனக்குத் தெரிந்த தமிழ் பேராசியர்களிடம் இதைப் பற்றி கேட்டுப் பார்த்தேன். அரசு பிற மாநிலத்தாரின் நலனுக்காக ஒரேயொரு சான்றிதழ் தேர்வு நடத்துவதாகத் தெரிய வந்தது. பல்வேறு நிலைகளில் தேர்வுகள் ஏதும் நடத்தப்படுவதில்லை.

சிறுகச் சிறுக ஆர்வத்துடன் பயிலும் மாணவர்கள் எழுத தேர்வுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆமாம் .. தமிழில் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறார்கள் என்று சிலர் இதை ஏளனமாகக் கூட கருதலாம். ஆனால் எத்தனையோ ஆர்வம் உள்ளவர்கள் தேர்வு எழுத விரும்பலாம். அத்தகையோருக்கு இது பெரிதும் பயன்படும். எனக்குத் தெரிந்த ஒரு ஜப்பானியப் பெண் தமிழ் கற்கக் காட்டிய ஆவலை நான் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். தமிழாசிரியர்களைத் தேடிப் பிடித்து எழுதப் படிக்கக் கற்றார்.

பல இணைய தளங்கள் பாட திட்டத்தையும் தந்து அதற்குத் தக்க தேர்வுகளையும் நடத்துகின்றன.

தமிழைச் செம்மொழியாகச் செய்து விட்டு அதைக் கற்பவருக்கு தமிழக அரசே தகுதிச் சான்றிதழ் தேர்வு நடத்துவது அவசியம் என்பது என் எண்ணம். இதைப் பலரும் ஆதரிப்பீர்கள் என்று நம்புகின்றேன். வருடம் இரு முறையோ மூன்று முறையோ பல நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள் மூலம் தேர்வுகளை நடத்தலாம். அதற்கான பாட திட்டத்தையும் தமிழ் வளர்ச்சிக் கழகமே தரலாம். நேரடித் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில் இணையத்தின் மூலம் இத்தேர்வுகளை சிறப்பாக எப்படி நடத்தலாம் என்று யோசிக்கலாம்.

இது பற்றி சென்ற ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு ஒரு மனு அனுப்பி வைத்தேன். அதற்கான வழிமுறைகளை யோசிக்க மனு தரமணியில் உள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக பதில் வந்தது. தரமணியிலிருந்தும் இதற்கு ஆவணம் செய்வதாக கடிதம் வந்தது. அதற்கான வேலை தொடங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.

வரும் ஆகஸ்டு மாதம் நான் சென்னை செல்ல திட்டமிட்டு உள்ளேன். அப்போது இது பற்றி தமிழ் கழகத்தாரிடம் பேச உள்ளேன். அதற்கு முன்னர் உலகளாவிய தமிழர்களின் கருத்துக்களைப் பெற விரும்புகின்றேன். நன்முறையில் இனிய தமிழ் இணையப் பத்திரிக்கையாக விளங்கும் திண்ணையைப் படிப்போர் நல்ல கருத்துக்களைத் தருவார்கள் என்ற மேலான நம்பிக்கையில் என் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். தங்கள் மேலான கருத்துக்களை எனக்கு chitra.sivakumar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழைப் பெருமையோடு வளர்ப்போம். வளர்;க தமிழ்.

chitra.sivakumar@gmail.com

Series Navigation