தமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

குமரி மைந்தன்


26-12-2004 அன்று இந்தோனேசியாவின் சுமதுரைத் தீவின் அருகில் நிகழ்ந்த கடலடி நிலநடுக்கத்தின் விளைவாய் எழுந்து 1000கி.மீ. வேகத்தில் பாய்ந்தேறி வந்த சுனாமி எனப்படும் வீங்கலை யாருமே நினைத்துப் பார்க்காததும் அண்மைக்கால வரலாறு அறியாததுமான பேரழிவுகளைத் தமிழகக் கடற்கரை வாழ் மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகள் மீது நிகழ்த்தியது. அது நிகழ்த்திய பேயாட்டத்தில் கடற்கரையில் கிடத்தப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான கட்டுமரங்களும் வள்ளங்களும் சேர்ந்துகொண்டன. எந்தப் பிணைப்புமின்றி மணல் மீது இழுத்துப் போடப்பட்டிருந்த இந்த மிதவைகள் நீரில் மிதந்து பெரும் பீரங்கிக் குண்டுகள் போல் அலையின் 1000கி.மீ. வேகத்தில் மனிதர்கள் மீதும் மரங்கள் மீதும் கட்டடங்கள் மீதும் மோதியிருக்கவில்லையாயின் உயிர், உடைமை, வீடுகளுக்கு இவ்வளவு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்காது. கடல் வரம்பிலிருந்து 500கி.மீ. தொலைவுக்குள் கட்டுமானங்களை எழுப்பக் கூடாது என்ற இந்திய நீரியல் அமைச்சகத்தின் ஆணை கடைபிடிக்கப்பட்டிருந்தால் பாதிப்பு கட்டுக்குள் நின்றிருக்கும்.

குமரி,நெல்லை மாவட்டங்களின் கடற்கரையின் சிறப்பாகிய தேரிகள் எனப்படும் மணற் குன்றுகளிலிருந்து மணல் எடுக்கும் உள்நாட்டினருக்குத் துணை நின்று அந்த இடங்களில் கட்டிய வீடுகளும் மணல் தேரிகளின் முகடுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட இடங்களில் கட்டிய வீடுகளும் அவற்றிலிருந்த பல மக்களுடன் அழிந்து போயுள்ளன. நெல்லை குமரி மாவட்டக் கடற்கரையில் காணப்படும் அருமணல்கள் பல்லாயிரம் கோடி நேரடியாகவும், மணவாளக்குறிச்சி அருமண் தொழிற்சாலையில் பிரித்தெடுத்தும், ஏற்றுமதி செய்வதற்காக அகற்றப்பட்டதன் விளைவாக தேரிகள் அழிந்து போனதால் குளச்சலை அடுத்துள்ள பகுதிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் தளங்களாக வடிக்கப்பட்டுள்ள சொத்தவிளை கடற்கரையில் தேரி முகடுகள் அகற்றப்பட்டுவிட்டதால் கடல்நீர் தேரியைத் தாண்டி தென்னந்தோப்புகளுக்கு இடப்பட்டிருந்த சுற்றுச் சுவர்களைத் தகர்த்ததுடன் மக்களில் பலரையும் கொன்றுள்ளது.

கடற்கரை கடலினுள் துருத்தி நின்ற இடங்களை விட கடல் நிலத்தை நோக்கிக் கரையில் குழிவுகள் ஏற்படுத்தியிருந்த பிள்ளைத்தோப்பு போன்ற இடங்களில் அழிவு மிகுதி. அதேபோல் மீன்பிடி விசைப்படகுகளைப் பிணைத்துக் கட்டி வைப்பதற்குக் கட்டப்பட்ட தூண்டில் வளைவுகள் இருக்கும் இடங்களில் பாதிப்பு குறைவு.

இதுவரை கடலைத் தாயாகவும் கடற்கரையைத் தாய்மடியாகவும் கருதி நம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த கடற்கரை மீனவர்களின் காலங்காலமாகவுள்ள நம்பிக்கையையும் இந்த பேரலை அடித்துச் சென்றுவிட்டது. எனவே அவர்களில் பலர் மீண்டும் கடற்கரையில் குடியேறவும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவும் மிகவும் தயங்குகின்றனர். உயிரிழந்த மீனவர்களில் ஏறக்குறைய 40% பகுதி சிறுவர்களூம் குழந்தைகளுமாவர். இவையனைத்திற்கும் பிறகு இன்றைய தலைமுறையினர் கடற்கரையில் குடியேறி பழைய முறைப்படி கட்டுமரங்களில் மீன் பிடிக்கப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பதற்கில்லை.

இந்த நிகழ்வுகள் மற்றும் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் இன்றியமையா ஊட்ட உணவுகளில் தலையாயதாகிய மீனை வழங்குவதும் பல இலக்கம் மக்களின் உயிர்காக்கும் தொழிலும் ஆகிய மீன்பிடித் தொழிலை மீட்பது, கடலின் மீதுள்ள அச்சத்தை அகற்றும் வகையில் உரிய இடத்தை தேர்ந்தெடுத்து அவர்கலைப் புதிய கடல் அலை தாக்க முடியாத இடங்களில் குடியமர்த்துவதுமாகிய இரு பகுதிகளாக நமது திட்டமிடல் அமைய வேண்டும். இவை இரண்டும் உடனடியாக ஒரே நேரத்தில் செய்து முடிக்க வேண்டியிருந்தாலும் இவற்றை நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்கோடு அணுக வேண்டும்.

1.குமரி மாவட்டத்தையும் நெல்லை மாவட்டத்திலுள்ள பகுதிகளையும் பொறுத்த வரை அங்கு இயற்கையாக உருவாகும் தேரிகள் காற்றில் கரையாதிருக்கவும் மணலின் படிமானத்தை ஊக்கவும் அங்கு இயற்கையாக வளரும் புல் இனத்தை வளர்த்து நட வேண்டும்.

2.தேரி உருவாகும் தன்மையை ஆய்ந்து இப்போது தேரி இல்லாத தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் தேரியை செயற்கையாக உருவாக்கிப் பராமரிப்பதற்கான வாய்ப்புகளை மதிப்பிட்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

3.தற்போது கன்னியாகுமரியிலிருந்து ஈத்தாமொழி, குளச்சல் போன்ற ஊர்கள் வழியாகச் செல்லும் மேற்குக் கடற்கரை சாலைக்கும், கடற்கரைக்கும் இடையில் மீனவர்கள் வாழும் ஊர்களை இணைக்கும் சாலைகள் உள்ளன. இவை பெரும்பாலும் முறையாக பராமரிக்கப்படாத தேரிகளின் முகட்டிலேயே செல்கின்றன. அந்தச் சாலைகளுக்கும் கடலுக்கும் இடையில் தெருக்கள் அமைத்தோ இன்றியோ கட்டப்பட்ட குடியிருப்புகள்தான் பெருமளவு இடிந்ததும் மக்கள் மடிந்ததும். எனவே தேரிகளை முறைப்படி உருவாக்கி அவற்றின் இரு புறங்களிலும் குட்டைத் தென்னை மரங்களையும் மணற்புற்களையும் வளர்த்துப் பராமரித்தால் அச்சாலை தேரிகளின் பராமரிப்பிற்குத் துணை நிற்பதுடன் அதன் மீது செல்வோருக்குச் சாலையின் இருபுறங்களிலும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தென்னை மரங்களைக் குத்தகைக்கு விட்டுச் சாலைப் பராமரிப்புச் செலவை ஈடுகட்ட முடியும்.

4.கடற்கரையின் அமைப்புக் கேற்பவும் உள்நாட்டிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலைத் தொடர்பிற்கு ஏற்பவும் உடனடியாகத் தூண்டில் வளைவுகள், சிறு மீன்பிடி துறைமுகங்கள், சிறு போக்குவரத்து துறைமுகங்கள் என்று முன்னுரிமை வரிசையில் கடடுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அவற்ரில் விசைபடகுகள், சிறுமீன்பிடிக் கப்பல்கள், சிறு போக்குவரத்துக் க்ப்பல்கள் என்று தொழிலில் இறங்க முன்வருவோருக்கு வருமான வரி விலக்கு போன்ற ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும்.கட்டுமரங்களைத் தவிர்ப்பதற்கு, பழைய கட்டுமரத் தொழிலில் ஈடுபட்டிருந்தோருக்கு அவர்களது அகவைககு ஏற்ப ஓய்வூதியம் வழங்கல், வலைகள், தூண்டில்கள் போன்ற மீன்பிடி தளவாடங்களைப் பராமரித்தல் பணிகளில் ஈடுபடுத்தல், கூட்டாக சேர்ந்து தொழில் செய்ய முன்வருவோருக்கு விசைபடகுகள் வாங்க கடன் வழங்குதல், மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கும் பயிற்சியளித்தல்,பிடித்த மீனை உரிய பக்குவத்தில் சந்தைக்கு அனுப்புதல், ஊரகங்களிலும் நகரங்களிலும் துப்புரவுடன் பராமரிக்கத்தக்க கட்டமைப்புகளுடன் விற்பனை நிலையங்களை உருவாக்கி அவற்றில் மீன் விற்பனைக்குப் பயிற்றுவித்தல் என்று எண்ணற்ற வகையில் வேலை வாய்ப்பை அளிக்க முடியும். இத்தகைய பயிற்சிகளை அளிப்பதற்கு மீன்வளத்துறை, தொழில்நுட்பத்துறை போன்றவை வகுக்கும் பாடத்திட்டங்களின் அடிப்படையில் தொழில்நுட்பப் பயிலகங்களீல் பயிற்சியளீக்க வேண்டும். இன்று மீன்பிடித் தொழில் எய்தியிருக்கும் முன்னேற்றத்துடன் ஒப்பிட, உலகில் முதன்முதலில் மீன்பிடிக்க மனிதன் தொடங்கிய காலத்துக்குரிய தொல்பொருட்காட்சியகங்களில் வைக்க வேண்டிய காலங்கடந்து போன கட்டுமரங்களைக் கைவிட்டு அவற்றை விட மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள விசைப்படகுகள், சிறு மீன்பிடி கப்பல்களைப் பயன்படுத்துவதால் இன்றுபோல் வெவ்வேறு பகுதி மக்களூக்கிடையில் உருவாகும் சச்சரவுகளுக்கும் மோதல்களுக்கும் வாய்ப்பு குறையும்.

5.தடுப்புச் சுவர் கட்டுவதற்கு 500 கிலோகிராம் வரையும் தூண்டில் வளைவுகள் அமைக்க 3 முதல் 5 டன்கள் வரையும் எடையுள்ள பெருங்கற்கள் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் மைலாடி, பொற்றையடி, சுங்கான் கடை போன்ற எண்ணற்ற இடங்களில் கல்லுக்காகப் பாறைகளை உடைத்ததில் மண்மீது உயர்ந்து நின்ற மலைகளும், குன்றுகளும், பாறைகளும் காணாமல் போய்விட்டன. குமரி மாவட்டத்தில் மழை வளம் குன்றியதற்கு மேகத்தைத் தடுத்து மழையைப் பெய்வித்த மலைகள் குறைந்ததும் ஒரு காரணமாகும். இராதாபுரம் போன்ற அண்மையிலுள்ள நெல்லை மாவட்ட பகுதிகளிலும் மழை குறைந்ததற்கு இது காரணமாகலாம். எனவே தேரிகளை உருவாக்கிப் பராமரிப்பதன் மூலம் தடுப்புச் சுவர்களைத் தவிர்க்க முடியும். தவிர்க்க இயலாத இடங்களில் மட்டும் தடுப்புச் சுவர்களுக்கும் தூண்டில் வளைவுகளுக்கும் துறைமுகங்களுக்கும் நில மட்டத்திற்கு அடியிலிருந்து கற்களை எடுக்க வேண்டும். வேறுவழியில்லை என்றால் மட்டுமே நிலத்துக்கு மேலேயுள்ள பாறைகளை உடைக்க வேண்டும். அவ்வாறு இனி உடைக்கும் பாறைகளும், முன்பு உடைத்த பாறைகளும் இருந்த இடத்தில் இந்திய அரசு நில அளவை(G.I. maps) வரைபடத்தின் துணையுடன் நகராட்சி, ஊராட்சிகளில் எடுக்கப்படும் மட்காத திடக் கழிவுகளைக் கொட்டி பழைய உயரத்துக்கு புதிய மலைகளை உருவாக்கி குலைந்துவிட்ட இயற்கைச் சமநிலையை மீட்க வேண்டும்.

6.கல், மண், கனிமங்கள் போன்ற மீட்க முடியாத இயற்கைச் செல்வங்களை எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுமதி செய்வது பொருத்தமான பொருளியல் அணுகுமுறையாகாது. அவை இனிவரும் தலைமுறையினருக்கும் உரிமையுள்ள அரும்பொருட்களாகும். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டக் கடற்கரையிலிருந்து பல்லாயிரம் கோடி டன்கள் அருமணல் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டிள்ளது. (குமரி மாவட்டத் தேரிகள் அழிய இதுவும் ஒரு காரணமாகும்.) இதனுடன் கருங்கல் சல்லியும், ஆற்றுமணலும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதியாகும் பொருள்களில் முதலிடம் பிடிக்கின்றன. இந்த ஏற்றுமதியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

7.ஏறக்குறைய 6000 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்ட இந்தியாவின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு கடல் வழியில் செல்வதற்கு உரிய நீர்வழி இல்லை. உள்நாட்டு மக்கள் மீன்பாடுள்ள

இடங்களைத் தேடிச் செல்லவும் கடல் வழியில் பண்டங்களை நாட்டினுள் கொண்டு செல்லவும் கடலோரப்

பாதுகாப்புக்கும் இது இன்றியமையாதது. பேரலைகள் தாக்கிய போது அத்தகைய ஒரு கடல் வாய்க்கால்

இருந்திருந்தால் அதன் வழியாக அலை விசையின் ஒரு பகுதி கரைக்கு ஒரு போகாக திரும்பிச் செல்லும் வாய்பிருந்தது. எனவே அத்தகைய ஒரு கடல் வாய்க்காலை இந்தியக் கடற்கரையை ஒட்டி உடனடியாக அமைக்க வேண்டும்.

8.கிழக்கு கடற்கரையில் விசாகப்பட்டினம் – நாகப்பட்டினத்தை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அதில் விசாகப்பட்டினம் – சென்னைக்கு இடைப்பட்ட பகுதி இன்றும் பொருட் போக்குவரத்துக்கு பயன்படுகிறது. சென்னை மாநகர எல்லைக்குள் தூர்ந்து போய் சாக்கடையாக மாறி ஓர் சூழியல் சிக்கலாகி உள்ளது. சென்னைக்குத் தெற்கில் சில் இடங்களில் அந்த கால்வாயை காண முடிகிறது. குமரி மாவட்டத்தில் குமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை திருவிதாங்கூர் மன்னர்கள் உருவாக்கிய ஏ.வி.எம். வாய்க்கலைக் குளச்ச்லுக்குக் கிழக்கில் கதம்பை ஊறவைப்பதற்காகப் பயன்படுத்தியதால் அது முற்றிலும் தடமழிந்து கிடக்கிறது. பிற பகுதிகளிலும் முறையான பராமரிப்பில்லை. தற்போதைய பேரலை வாய்க்கால் இருந்த ஒடங்களில் வாய்க்காலுக்கும் க்டலுக்கும் இடையில் குடியிருந்த மக்களை அடித்துக் கொண்டு வாய்க்காலுக்குள் புதைத்துவிட்டது. வாய்க்காலுக்கு வெளியே, கடலுக்கு எதிர்க்கரையிலுள்ள நிலப்பகுதிகள் குடியிருப்புகள் அமைந்திருந்தால் இந்த வாய்க்கால் அலையின் வேகத்தை மட்டுப்படித்தும் ஒரு காப்பரணாச் செயற்பட்டிருக்கும். எனவே ஏ.வி.எம். வாய்க்காலையும் பக்கிங்காம் வய்க்காலையும் முழுமையாக மீட்பது மட்டுமின்றி இந்தியக் கடற்கரை முழுவதும் சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு உகந்த நீர் வழிப்பாதையாக அதை விரிவு செய்தால் பல்முனைப் பயன் அதற்கு உண்டு. அத்துடன் தேரி முகட்டில் போடப்படும் சலைக்கு இணையாக இந்த வாய்க்காலும் அமைந்தால், இந்தியக் கடற்கரை கண்ணைக் கவரும் உலகிலுள்ள சிறந்த கரையாக இந்தியக் கடற்கரை பொலிவுறும்.

இப்போது கடற்கரையில் வாழும் மக்களின், குறிப்பாக மீனவர்களின் குடியிருப்பு பற்றி பார்போம். அவர்களை

1.மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டோர்,

2.மீன் வாணிகத்தை மேற்கொள்ளும் ஆடவர் மற்றும்பெண்டிர்

3.பிற தொழில்கள் செய்து கடற்கரையில் குடியிருப்போர்,

4.உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கப்பல்களிலோ, வேறு வகைகளிலோ பணிபுரிவோர்ரின் குடும்பத்தினர்,

5.கடற்கரையில் கடைகள் முதலியவற்றை நடத்துவோர்,

என்று பெரும்போக்காக வகைப்படுத்தலாம்.

இன்னொரு வகையில், கட்டுமானத் தன்மையைப் பொறுத்து,

1.குடிசைகளில் வாழ்வோர் (குமரி மாவட்டத்தைப் பொறுத்த வரை இது அரிதாகவே தென்படுகிறது.),

2.ஓட்டுக் கூரையுடன் மண் அல்லது செங்கல் சுவர்,

3.வலுவான கான்கிரீட் கட்டடங்கள்,

என்று வகைப்படுத்தலாம். இத்தகைய எந்த வீடாக இருந்தாலும் கடற்கரையிலிருந்து 500 மீட்டர்களுக்கு உட்பட்ட தொலைவிலுள்ளவற்றையும் பாதிப்புக்குட்படும் நிலமட்டம் (Velnerable level) என்பதனை விடத் தாழ்ந்த இடத்தில் உள்ள வீடுகளையும் அகற்றிவிட வேண்டும்.

1.இதுவரை வலை, தூண்டில் முதலிய மீன்பிடி தளவாடங்களையும் கருவாடு போன்ற மீன் பொருட்களையும் குடியிருப்புகளில் வைத்து வாழ்ந்ததை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். படகுகள் அல்லது மீன்பிடி கப்பல்களில் மீனைப் பிடித்து துறையில் சேர்த்துவிட்டு மீனவர் என்ற தொழில் அடையாளத்தை அத்துடன் இறக்கி வைத்துவிட்டு சராசரியான ஒரு குடிமகனாகக் குடியிருப்பினுள் நுழையும் புதிய சூழலை உருவாக்க வேண்டும். பிடித்த மினை வகைப்படுத்துதல், பிரித்துச் சந்தைக்கு விடுதல், மீன்பாடு மிகுந்த காலத்தில் மிகுதியாக உள்ள மீனைப் பதப்படுத்திச் சேர்த்து வைத்தல், ஊறுகாய், கருவாடு, ஓரளவு வேக வைத்துக் கலன்களில் அடைத்தல் போன்ற பணிகள், வலை, தூண்டில் போன்ற தளவாடங்களையும் மீன்பிடி கலன்களையும் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்யும் தனித்தனிப் பணியாளர்களும் தம் தொழில் நேரம் முடிந்ததும் தொழில் அடையாளத்தை அங்கேயே விட்டுத் தம் வீடுகளுக்குச் செல்லும் நிலை உருவாக வேண்டும். முதற்பகுதியில் நாம் குறிப்பிட்டிருக்கும் தூண்டில் வளைவுகள், துறைமுகங்கள், விசைபடகுகள், கப்பல்கள் போன்ற கட்டமைப்புகள் இந்தச் சூழலை உருவாக்கித்த்ருவது மட்டுமல்ல தேவையும் ஆக்கும்.

2.மீன் வாணிகத்தை மேற்கொள்ளும் ஆடவரும் பெண்டிரும் தாங்கள் செயற்படும் சந்தைப் பகுதி அருகில் குடியிருப்பை அமைத்துக் கொள்வது சிறப்பு. அவர்களது விருப்பத்தை அறிந்து அப்பகுதியில் நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்.

3.பிற தொழில் செய்து கடற்கரையில் குடியிருப்போர் தாங்கள் தொழில் செய்யும் பகுதிகளுக்குத் தம் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

4.குடும்பத்தார் கடற்கரையில் குடியிருக்க, தாம் வெளியில் பணியாற்றுவோரும் நகரங்களுக்கோ, வேறு தாம் விரும்பும் இடங்களுக்கோ தம் இருப்பிடங்களை மாற்றிக் கொள்ளலாம்.

இப்போது உண்ணையான கட்டுமானப் பொறியியல் சிக்கல் கடற்கரையிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் கட்ட வேண்டிய தடுப்புச் சுவர்கள், தூண்டில் வளைவுகள், துறைமுகங்கள், மீன் தொழில்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான கட்டுமானங்களும், 500 மீட்டருக்கு வெளியே கடலையடுத்து குடியிருப்பது ஏதோவொரு காரணத்தால் தேவைப்படும் மீனவர்கள் மற்றும் மீனவரல்லாதவர்களின் குடியிருப்புகளும் பற்றியதே.

1.இவ்வாறு புதிதாகக் கட்டப்படும் கட்டடங்கள், பாதிக்கத்தக்க மட்டத்தின் கீழ் உள்ள நிலங்களில் கட்டப்பட வேண்டியிருந்தால் கான்கிரீட் தூண்களாலான சட்டமிட்ட (Framed) அமைப்புகளாக, தரைத்தளம் ஊர்திகள் நிறுத்துமிடம் போன்ற பொதுப் பயன்பாட்டுடன் அதற்கு மேல் மூன்று தளங்களுக்குக் குறையாமல் கட்டப்பட வேண்டும். கட்டடங்கள் உயரம் கூடும் தோரும் அவற்றின் பாரத்துக்கு ஏற்ப அமைக்கப்படும் தூண்கள் இயல்பாகவே பேரலைகள், நில நடுக்கம் போன்ற தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கும் தன்மையை ஓரளவு எய்திவிடுகின்றன. எனவே இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக சிறிதளவே கூடுதல் செலவு இருக்கும்.

2.பல எண்ணிக்கையிலான குடியிருப்புகள் ஒரே கட்டடத்தில் இருப்பது உயரிய நிலப்பயன்பாடு, சிக்கனமான கட்டுமானப் பொருட்செலவு, சூழியல் பராமரிப்பு எளிதாதல், குடியிருப்போரிடையில் இணக்கமான உறவு நிலவ வேண்டிய கட்டாயத்தினால் மக்களின் பண்பாட்டு மேம்பாடு போன்ற பல பயன்கள் உள்ளன.

3.பேரலையின் போது குடியிருப்புகளை இழந்தோருக்கும், அவ்வாறு பாதிப்பில்லாத 500 மீட்டருக்குள் வீடுகளைக் கொண்டோரும் இந்தத் திட்டத்தின் கீழ் வெளியேறும் போது அவர்களது வீடுகளின் மதிப்புக்கு ஏற்ற இழப்பீடு வழங்க வேண்டும். பின்னர் அவர்களது தேவை மற்றும் பொருளியல் வலிமைக்கு ஏற்றவாறு கடன் வழங்கு நிறூவனங்களில் கடன் ஏற்பாடு செய்து அவர்கள் விரும்பும் இடங்களில் வீடுகளைக் கட்டித் தரலாம். ஒவ்வொரு நேர்விலும் பாதிக்கப்பட்டோர், பயனாளிகள் என்ற இரு கோணங்களிலும் அவர்களைக் கலந்தே முடிவுகள் எடுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

இதில் விளக்கியுள்ளது போன்ற மீன்பிடி கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் குடியிருப்புகளும் உருவாவது வரை பாதிக்கப்பட்டபகுதி மக்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் வீடுகள் நல்ல நிலையிலிருந்தால் அவற்றிலும் இல்லையெனில் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்படும் தற்காலிகக் குடியிருப்புகளிலும் குடியமர்த்தலாம்.

====

ஊண்ந்ுஆண்ஞ்ிச்வ்ி,

‘ச்ண்ுய்ிழூிஊஈப்ி ‘,

ளச்ல்ிஊ வந்வ்ிஊஈ,

ஊண்ந்ு ண்ீம்க்ிக்ண்ி. 629501

அட்றூு: 04652 251881

[ ஊண்ந்ுஆண்ஞ்ிச்வ்ி லூத்ிதளட்ல்ில் ளட்ீல்ுத்ீர்ந்ி. ண்ீந்ிழூிழ்ுத் – ச்ண்ுய்ுத் கூல்ுனூந்ி. ண்ீந்ிழூிழ்ுத் கூல்ுசழூ டாப்ிழூர்ி தூர்ிட்க் ட்ப் டாப்ிழூஆர் பூநச்ுத்ுடழூிழூுல்ீந்ி. ளட்ீடர்ுத்ப்ி தூந்ுஆண் பூவ்ில் டூச்ஆய் ஞ்க்ச்ிச்ுயவர். குமரி மாவட்ட வளர்ச்சிப் பேரவையின் அமைப்பாளர். தெற்கு சூரன்குடி ஜவஹர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்.]

Series Navigation