தடுமாற்றமும் தெளிவும் : சாசனம் -திரைப்பட அனுபவம்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

பாவண்ணன்


எண்பதுகளில் தமிழ்த்திரைப்படங்களில் மனமொன்றி ரசிக்கத்தக்க வகையில் கலைநயத்தோடு காட்சிகளை அமைத்து வளமூட்டிய முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். பொருத்தமான தயாரிப்பாளர்கள் அமையாததால் பல நல்ல படங்களுக்கான திரைக்கதைகளை அவர் தன் மனத்துக்குள்ளேயே சுமந்துகொண்டிருப்பதாக அடிக்கடி பத்திரிகைச் செய்திகள் வருவதுண்டு. பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. எழுத்தாளர் கந்தர்வனுடைய ‘சாசனம்’ என்னும் சிறுகதைளை ஆதாரமாகக் கொண்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் அளித்த பணஉதவியால் எடுத்த படமும் நீண்ட காலமாக திரைக்கு வராமலேயே முடங்கியிருந்து சமீபத்தில்தான் வெளியானது.

தான் பட்ட பல லட்ச ரூபாய் கடனை அடைக்க பிள்ளைளையில்லாத இன்னொருவருக்கு சாசனம் எழுதித் தத்து கொடுக்கப்பட்ட இருபத்தைந்து வயது மகனுடைய வாழ்க்கையை முன்வைக்கிறது திரைப்படம். கடன்சுமை இறங்கிய ஆறுதல் ஒருபக்கம் இருந்தாலும் பெற்றெடுத்த பிள்ளைக்கும் தனக்கும் எவ்விதமான உறவுமில்லை என்று எழுதித் தந்துவிட்டோமே என்று தினந்தினமும் குற்ற உணர்ச்சியால் வாடி நோய்வாய்ப்பட்டு மனம் நொந்து போகும் தந்தைக்கு அந்தச் சாசனம் எவ்வித ஆறுதலையும் தேடித்தரவில்லை. சாசனத்தின்மூலமாக தன் சொத்துக்கு ஒரு வாரிசையும் கொள்ளிவைக்க ஒரு அன்பான பிள்ளையும் வைரவன் செட்டியார் தேடிக்கொள்ள முடிந்தாலும் காணாதுகண்ட அந்தத் தோளுயர்ந்த பிள்ளையின் அன்பிலும் நெருக்கத்திலும் தோய்ந்து நனைய காலமின்றி மூன்றே ஆண்டுகளில் எதிர்பாராதவிதமாக மரணத்தைத் தழுவிவிடுகிறார். அவருக்கும் அந்தச் சாசனத்தால் பெரிய அளவில் எவ்வித மகிழ்ச்சியும் உருவாகவில்லை என்றே சொல்லவேண்டும். இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கிற பெற்றெடுத்த தந்தையை மறைவாக நின்று எட்டிப் பார்த்துவிட்டு பெருமூச்சோடு திரும்பிவிடுகிற முத்தையா என்கிற ராமனாதன் என்னும் இளைஞனுக்கும் அந்தச் சாசனத்தால் எவ்விதப் பயனுமில்லை. ஒருபுறம் நம்பி வந்தவர்களின் துக்கத்தைக்கூட வெளிப்படையாக அவனால் பகிர்ந்துகொள்ள இயலவில்லை. இன்னொருபுறம் வசதிகளால் கிடைக்கக்கூடிய சந்தோஷத்துடன் ஒன்றிப் போகவும் இயலவில்லை. இருதலைக்கொள்ளி எறும்பாக ஓர் இளைஞனை முதுமைவரை நெருக்கடிக்குள்ளளாக்கித் தவிக்கவைப்பதைத் தவிர அந்தச் சாசனத்தால் எதுவும் நேரவில்லை. யாருக்கும் நிம்மதியைத் தராத அந்தச் சாசனம் ஏன் எழுதப்பட்டது என்கிற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. ஆத்திரத்தில் இடுப்பில் கட்டப்பட்ட வெள்ளி அரைஞாண்கயிற்றை அறுத்து தன்னுடைய மன எண்ணங்களுக்கு எதிராக எழுதப்பட்ட அந்தச் சாசனத்தின்மீதான வெறுப்பை அவனாளல் சற்றே தணித்துக்கொள்ளமுடிகிறதே தவிர, அந்தச் சாசனத்தை உதறிவிடவோ அல்லது அதிலிருந்து விடுபடவோ ஏன் அவனால் முடியவில்லை என்கிற கேள்விக்கும் விடையில்லை. விடையற்ற அக்கேள்விகளுக்கும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாத அவன் தவிப்புகளுக்கும் இடையே ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன அவன் தடுமாற்றங்கள். கோபங்கள். காதல் உணர்வுகள். வருத்தங்கள். வைராக்கியங்கள். அச்சங்கள்.

சாசனத்துக்குக் கட்டுப்பட்ட ராமனாதனுடைய மனநிலையை உணர்த்தும் வகையில் முக்கியமான ஒரு காட்சி திரைப்படத்தில் இடம்பெறுகிறது. இருளடர்ந்த அறையில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வெறுமையடர்ந்த வீதியைப் பார்த்தபடி நிற்கிறான் அவன். பெற்றெடுத்த சொந்தத் தந்தை மரணம¨டுந்த நாள் அது. அவர் முகத்தைக்கூட பார்க்கச் செல்ல இயலாதவனாகவும் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்துக்கொள்ள இயலாதவனாகவுமாக குமுறிக்கொண்டிருக்கிறது அவன் மனம். முகமும் தாடையும் இறுகுகிறது. தோள் இறுகித் துடிக்கிறது. விரல்கள் ஜன்னல் கம்பிகளை அழுத்துகின்றன. கணங்கள் கரையத் தொடங்கும்போது அந்த அறையின் தோற்றம் ஒரு சிறையாக நம் மனத்தில் உருமாற்றம் பெற்றுவிடுகிறது. கூண்டுக்குள் அகப்பட்டுக்கொண்ட கிளியைப்போல சாசனம் என்னும் சிறைக்குள் அவன் விலங்கிடப்படாதவனாக குமுறியபடி நிற்பதுபோலத் தோற்றம் தருகிறது. படம் முழுதும் அவனுடைய குமுறல் அடங்காத ஒரு கடலாகப் பொங்கியபடியே இருக்கிறது. பொருத்தமில்லாத ஒரு வேடத்தில் காலம் முழுதும் நடிப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட நடிகனைப்போல துளியும் பொருத்தமில்லாத தத்துமகன் பாத்திரத்தை காலம் அவனை ஏற்கவைத்துவிடுகிறது. இறக்கிவைக்க இயலாத அச்சுமை அவன் தோளை அழுத்தியபடி இருக்கிறது. அளவு சரியில்லாத மோதிரத்தை அவன் விரல் அலங்கரித்துக் கொண்டிருப்பதைப்போல. அவ்விரலிலிருந்து மோதிரத்தை உருவுவதையும் மீண்டும் அணிவதையும் தொடர்ச்சியாகவும் அனிச்சையாகவும் செய்கின்றது அவனுடைய இன்னொரு விரல். ஒட்டிக்கொள்ளவும் முடியாமல் உதறவும் முடியாமல் அந்தத் தத்து உறவோடு அவன் நடமாடிக்கொண்டிருப்பதை அத்தகு காட்சிகள் ஒவ்வொரு கணமும் சொல்லாமல் சொன்னபடி இருக்கின்றன.

மருதாணியை ஒரு வலிமையான படிமமாக மாற்ற மகேந்திரன் செய்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. ஆதரவை நாடி திருவாரூரிலிருந்து கண்டனு¡ர் வந்து இறங்கும் சரோஜாவும் அவளுடைய தாயாரும் ராமனாதனின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ராமனாதன் தன் மனைவி விசாலத்தை அழைத்து அவ்விருவரையும் அறிமுகம் செய்துவைக்கிறான். விசாலத்தின் பார்வை மருதாணியால் சிவந்த சரோஜாவின் உள்ளங்கையின்மீதும் விரல்கள்மீதும் முதன்முறையாகப் படிகிறது. மருதாணிச் சிவப்பு அவள் கையில் படிந்திருக்கும் விதம் குறித்து அவள் தன் ஆச்சரியத்தைத் தெரிவிக்கிறாள். ஒரேஒரு கணம் அவள் முகம் துணுக்குற்று மறுகணம் மலர்ந்துவிடுகிறது. அவள் முகம் துணுக்குறவேண்டிய அவசியம் என்ன என்னும் கேள்வி பார்வையாளனுடைய மனத்தில் பற்றிப் படரத் தொடங்கிவிடுகிறது. வேறொரு காட்சியில் மெய்யம்மை அக்காவும்கூட மருதாணிச்சிவப்பின் அழகு பொலியும் சரோஜாவின் கையைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள். இன்னொரு காட்சியில் மருதாணியால் சிவந்த அந்த உள்ளங்கைகளுக்கிடையே ராமனாதன்முன் தீபத்தை ஏந்திவந்து நிற்கிறாள் சரோஜா. தன்னை அடைக்கலமாகத் தாங்கும் கையிலும் விரல்களிலும் நிரந்தரமாகப் படிந்து தன் சிவப்பை அக்கைக்கு வழங்கிவிட்டு மருதாணி இலைகள் உதிர்ந்துவிடுகின்றன. எல்லாருக்கும் தெரிந்த உலக உண்மைதான் இது. காட்சிகள் நகரநகர அந்த உலக உண்மை படத்தில் ஒரு படிமமாக மாறி நிற்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கு அடைக்கலம் தந்த ராமனாதனுடைய நெஞ்சில் ஆழமாகப் படிந்து தன்னையே அவனுக்கு வழங்கிவிட்டு வாழ்க்கையின் வேறொரு திசையில் ஒதுங்கிவிடுகிறாள் சரோஜா. மருதாணிக்கு நிகராக அவள் வாழ்க்கை பொலிவதை நம் மனம் கண்டடைகிறது. விசாலத்தின் கண்கள் தொடக்கக் காட்சியில் ஏன் துணுக்குற்றன என்னும் கேள்விக்கான விடையையும் நம் மனம் கண்டடைந்துவிடுகிறது. நடக்கப் போவதை அவளுடைய சூட்சுமமான மனம் ஏதோ ஒருவகையில் எடுத்த எடுப்பிலேயே உணர்ந்துவிட்டதுதான் காரணம்.

சரோஜாவின் குடும்பத்தினரிடம் அவர்களுடைய எதிர்காலத் திட்டத்தைப்பற்றி கேட்பதற்காகச் செல்கிறான் ராமனாதன். இருட்டத் தொடங்குகிற நேரம். காலையிலேயே வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பியவனால் அப்போதுதான் அவர்களைப் பார்த்துப் பேசமுடிகிறது. அவர்களுடைய சோகக்கதையைக் கேட்டபோது அவனுக்குத் தன்னுடைய சோகக்கதையைச் சொல்லத் தோன்றுகிறது. பெற்ற தந்தை உயிருடன் இருக்கும்போதே சாசனத்துக்குக் கட்டுப்பட்டு வளர்ப்புத் தந்தைக்குக் கொள்ளியிட்டதையும் கருமாதி செய்ததையும் ஆழ் ந்த துயரத்துடன் சொல்கிறான். துயரத்தையும் உதவிசெய்யும் நல்ல எண்ணங்களையும் ஒருங்கே சுமந்துகொண்டிருக்கும் அவனுடைய தோற்றம் ஆறுதலுக்காக ஏங்கும் ஒரு நல்ல உயிராகப் படுகிறது சரோஜாவுக்கு. அவன் புறப்பட்டுப் போனபிறகு அவனுக்கு ஆறுதல் தரும் வரிகளைப் புனைந்து பாடத் தொடங்குகிறாள் சரோஜா. பாட்டின் முடிவில்தான் அவன் வெளியே நின்றபடி சுவைத்துக்கொண்டிருப்பதை அவள் அறிந்துகொள்கிறாள். பாட்டின் இனிமை அவனை ஒருவித பித்துநிலைக்கு உந்தித் தள்ளுகிறது. என்ன சொல்கிறோம் என்கிற சுயஉணர்வே இல்லாமலும் முன்பின் அறிமுகற்ற இளம்பெண்ணிடம் பேசுகிறோம் என்கிற எண்ணமும் இல்லாமல் பித்துநிலையின் உச்சத்தில் காலமெல்லாம் “நீ எனக்காகவே பாடிக் கொண்டிருக்க மாட்டாயா என்று தோன்றுகிறது” என்று பிதற்றுகிறான். அந்த உச்ச மனநிலையிலேயே காலணிகளை அணிந்துகொள்ள மறந்து மழைஈரம் படிந்த தெருவில் பாடல்வரியை மனத்துக்குள் அசைபோட்டபடி நடந்துசெல்கிறான். தன்னைக் கட்டுப்படுத்தும் சாசனத்தை மறந்து, தன் பிள்ளையின் மரணத்தை மறந்து, இந்த உலகத்தை மறந்து, தன்னைக் குழந்தையாகக் கருதி அன்பைப் பொழியும் விசாலத்தையும் மறந்து காற்றில் மிதப்பதைப்போல மெதுவாக நடந்தபடி செல்லும்போது அவன் மனம் உணரும் ஆனந்தம் அதற்குப் பிறகு அவனுக்கு எப்போதுமே வாய்க்கவில்லை. அவன் வாழ்வில் அது ஓர் உச்சப்புள்ளி. அப்புள்ளியைச் சித்தரித்துள்ள விதம் மகேந்திரனுக்குப் பெருமை சேர்க்கக் கூடியது. (அவன் ஆனந்தம் அந்த உச்சப் புள்ளியைநோக்கி மெல்லமெல்ல நகரத்தொடங்கும்போது கேமிரா மெய்யம்மையையும் விசாலத்தையும் ஊரையும் தெருக்களையும் வெட்டிவெட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறது. இருள் படியத் தொடங்கிவிட்ட நேரத்தில் அவர்கள் மட்டும் வெளிச்சப் பின்னணியில் தோற்றமளிப்பது அத்தருணத்துக்குப் பொருத்தமாக இல்லை. )

திருவாரூருரில் பிறந்துவளர்ந்த சரோஜா அடைக்கலமாக கண்டனு¡ர் சென்று மீண்டும் திருவாரூருக்கே வேலை கிடைத்துவந்து நிலைத்துவிடுகிறாள். அவளுடைய தந்தையைக் குழந்தைப் பருவத்திலேயே பறித்துக்கொண்ட வாழ்க்கை அவளை வறுமைநிலைக்குத் தள்ளி ஊரைவிட்டே வெளியேறும்படியான சூழலை உருவாக்குகிறது. எங்கோ இருக்கும் கண்டனு¡ரில் இருக்கிற ராமனாதனுடைய நெஞ்சில் மருதாணியாய் ஒட்டிக்கொள்ளவைக்கிறது. உள்ளத்தை அங்கே பறிகொடுத்துவிட்டு உடலைமட்டும் சுமந்துகொண்டு திருவர்ருருக்குத் திரும்பவைக்கிறது. இந்த விசித்திரம் ஏன் நிகழ்ந்தது என்பது மிகப்பெரிய புதிர். வாழ்க்கையில் இப்படி விளங்கிக்கொள்ள முடியாத பல புதிர்கள்.

“காலமெல்லாம் எனக்காகவே நீ பாடிக்கொண்டிருக்கமாட்டாயா என்று தோன்றுகிறது” என ராமனாதன் வெளிப்படுத்தும் ஆவல் முற்றிலும் தற்செயலான ஒன்றென்றாலும் அது மானுடமனத்தின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் இச்சையைத் தொட்டுக்காட்டக்கூடிய ஓர் அம்சமாகும். சீதையைக் கண்டதும் அவளை அடைய நினைத்த இராவணனுடைய இச்சை. சத்யவதியைக் கண்டதும் அவளை அடைய ஆவலுற்ற சந்தனுவின் இச்சை. மாதவியின் நடனத்தைக் கண்டதும் அவள் எழிலில் மனம் பறிகொடுத்துவிட்டு அலைகிற கோவலனுடைய இச்சை. சரித்திரம் நெடுக இப்படி நீண்டுகொண்டிருக்கும் இச்சையின் வேர்தான் வேறொரு விதமாக ராமனாதனிடம் வெளிப்படுகிறது. அடுத்த நாளே கணக்குப் பிள்ளையிடம் அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளைப் பையனைப் பார்த்து கல்யாணம் செய்துவைக்கணும் என்று சொல்லும் அளவுக்கு தன் பித்துநிலையிலிருந்து விடுபட்டு அவன் தெளிந்திருந்தாலும் எங்கோ கண்ணுக்குப் புலப்படாத ஆழத்தில் ஒரு தளிரைப்போல அவனையறியாமலேயே அந்த இச்சை வளர்ந்தடி இருக்கிறது. ஏதேதோ சாக்குப்போக்குகளை அடுக்கி அவளுடைய உறவுவரை அவனை அழைத்துச்செல்வதும் அந்த மனஆழத்து இச்சைதான். கலையொருமையோடு சொல்லப்பட்டிருக்க வேண்டிய மானுட மனத்தின் ஆழத்தை நோக்கிய பயணத்துக்கு காட்சிகள் நம்மை அழைத்துச் செல்வதை திரைக்கதையின் பலம் என்றுதான் சொல்லவேண்டும். பயணத்தின் திசையில் தெளிவில்லை என்பதுதான் மிகப்பெரிய பலவீனம்.

வேறொருவகையாகவும் இதைச் சொல்லலாம். தத்துக்காக எழுதப்பட்ட ஒரு சாசனத்தால் தடுமாற்றங்களிடையே பொங்கித் தத்தளித்துக்கொண்டிருக்கும் ராமனாதன் தன்னை நெருக்கமாக நேசிப்பவளும் தன் அன்புக்கு உரியவளுமான விசாலம் அருகில் இல்லாத ஒரு கணத்தில் மனப்பாரத்தை இறக்கி ஆதரவு பெறும் வகையில் சரோஜாவுடன் கொள்ள நேரும் உறவு ஓர் எழுதாத சாசனமாக உருமாறி மேலும்மேலும் அவனைத் தடுமாறவைக்கிறது. அவளை ஊரறிய ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் உதறிவிடவும் முடியாமல் தடுமாறத் தொடங்குகிறான் அவன். தடுமாற்றங்களிலிருந்து தெளிவைநோக்கி அவன் நகர அவனுக்குப் பதினைந்து ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அன்புக்குரிய விசாலத்தை அவன் இழக்கவும் நேர்கிறது. தடுமாற்றத்திலிருந்து தெளிவை நோக்கிய அப்பயணம் அழுத்தமாகவும் கச்சிதமாகவும் சொல்லப்படவில்லை. திரைப்படத்தைப் பலவீனப்படுத்துவது இந்த அம்சம்தான். துண்டுதுண்டாகப் பல காட்சிகள் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தாலும் முழுத் திரைப்படமாக ஒரு பார்வையாளனிடம் எவ்விதப் பாதிப்பையும் நிகழ்த்த இயலாமல் சரிந்துபோவதற்கான காரணம் இந்தச் செறிவின்மைதான். உரையாடல்கள்வழியாக மட்டுமே பெரும்பாலான காட்சிகள் நகர்வது அளிக்கும் சோர்வு படத்திலிருந்து பார்வையாளனை சற்றே விலகவைத்துவிடுகிறது.

paavannan@hotmail.com

Series Navigation