டேவிட் சசூன்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

அருண் கொலட்கர்(மொழியாக்கம் – இரா.முருகன்)


1

என் காலத்தில்
பம்பாயின் வர்த்தக இளவரசன்
என்பார்கள் என்னை.

நான் முன்கை எடுத்து
எழுப்பிய இந்தப் பட்டணத்தில்
பாரசீக சுல்தான் போல் இருந்தேன்.

இப்போது இங்கே ஒரு
மடையன் போல இடுங்கிக் கிடக்கிறேன்.
ஒரு முட்டாள். சான்றிதழ் பெற்ற
நல்ல வேலைக்காரன்.

மெக்கானிக்குகளின் பள்ளிக்கூடத்
தோரண வாயில் மேல்
– மன்னிக்கவும், அதாவது,
என் பெயர் தாங்கிய நூலகத்தின்
தோரண வாயில் மேல் –
சுவர்கள் சந்திக்கும் கூரை விதானத்தில்
சட்டத்தின் இழுத்து மாட்டிய
என் தலையை நீட்டியபடி.

என் மூக்கு சிங்க வாசலைப் பார்த்து.
தாடி நடைபாதையில்
நாய்க் கழிசலையோ அதைவிட
மோசமான எதையோ நேராக நோக்கியபடி.

சியோலில் என் ஆன்மாவும்
புனே நகரில்
யூதக் கோவில் வளாகத்தில்
எங்கேயோ ஒரு சமாதிக்குள்
என் எலும்புகளும் உறங்கிக் கிடக்கும்.

2

உடம்பு இல்லாமல் போனது
பெரிய இழப்பு ஒன்றுமில்லை.
பலநேரம் அது இல்லை என்பதுகூட
நினைவில் வருவதில்லை.

சொல்லப் போனால் அதுவும் நல்லதுக்குத்தான்.
இருமல், ஜலதோஷம்,
மருத்துவனுக்குத் தர வேண்டிய பணம்;
பராமரிப்புச் செலவு எதுவுமில்லை.

குளிக்கும் சோப் வாங்காமல்
நான் சேமித்த பணத்தை வைத்து,
விருப்பப் பட்டிருந்தால்
இங்கிலாந்து வங்கியைக் கூட
விலைக்கு வாங்கியிருப்பேன்.

எனக்கு உடம்பே இல்லாதபோது
ஆண்குறிக்கு எங்கே போக ?
என்றாலும் சில நேரம்
இல்லாத குறி விரைத்துப் போகிறது.

காண்டாமிருகம் மாதிரிக்
கிளர்ச்சி அடைகிறேன்.
எரிச்சலாக இருக்கிறது.

ஆனாலும் இந்த நூலகத்தின்
குத்தகை ஒப்பந்தம் முடியும் முன்னால் –
அதாவது இன்னும் தொள்ளாயிரத்துத்
தொண்ணூற்றொன்பது வருடத்திற்குள் –
இதுவும் எனக்குப் பழகிப் போகும்.

3

ஒரு பெண்ணின் உடல் சூடு
என்மீது படிந்து
நூற்றுக் கணக்கான வருடமாகி விட்டது.

நான் இறந்தது எப்போ ?
இருங்க சொல்றேன்.
ஐயாயிரத்து அறுநூற்று இருபத்து நாலாம் வருடமா ?

அதாவது, யூத நாள்காட்டி கணக்குப்படி.
இப்போ என்ன ஆண்டு ?
ஐயாயிரத்து எழுநூற்று நால்பத்தாறு இல்லையா ?

அட கடவுளே!
நான் கடைசியாகப் புணர்ந்து
இத்தனை காலமாகி விட்டதா என்ன ?

4

ஒரு பெண்ணின்
இடுப்புக்கீழ் நெருப்பை
என் தீ கொண்டு போரிடுவது
எப்படி என்றே மறந்துபோய் விட்டது.

என் அக்னியை
அவளைச் சுற்றி வளைத்துப் பற்றி
ஒரே அச்சில் கிறங்கிச் சுழலவும்
மறந்தே போய்விட்டது.

பெண்ணின் வாய்ச் சுவை,
அவள் வயிறு என்மேல்
பதியும் உணர்ச்சி
எல்லாம் மறந்து விட்டது.

ஒரு பெண்ணின் கால்களுக்கு இடையே
ஓர் ஆணின் உள்ளங்கை
எவ்வளவு அழகாக
விரிந்து பதியும் என்பது
மறந்து விட்டது.

என் கட்டை விரலடியில்
அவள் உள்தொடை தசைகள்
விதிர்ப்பதை அனுபவிக்க முடியவில்லை.

ஒரு பெண்ணின் பாதம்
என்னைத் துழாவிச் செலுத்த,
இன்பக் கடலில்
மீனாக நீந்தவில்லை.

என் தோளில் அவள் தலை மெத்தென்று சாய,
கையிரண்டும், கால்களும், கனவுகளும்
சுருண்டு புரண்டு தழுவிக் கிடப்பது
எப்படி என்பதும் மறந்தேதான் போனது.

நானும் ஹன்னாவும்
அப்படி ஒரு படகாக
இரவின் நீள நதியில்
மிதந்து கொண்டே போவது வழக்கம்.

5

தங்கம், வெள்ளி;
வாசனை திரவியம், பருத்தி, பட்டு, கம்பளி;
கஞ்சா, கோதுமை, தேயிலை.

தரை மார்க்கமாக, கடல் மார்க்கமாக
எதை எடுத்துப் போனாலும்
அதெல்லாம் சசூன் அண்ட் கோ
கை தொட்டது அல்லது முத்திரை பெற்றது.

என் கப்பல்கள் அட்லாண்டிக் மாகடலிலும்
இந்தியப் பெருங்கடலிலும்
பசிபிக், சீன சமுத்திரங்களிலும்
பயணப் பட்டிருந்தன.

6

ஒன்றும் மோசமில்லை.
பாக்தாத் நகரிலிருந்து தப்பியோடி
இந்த நகரின் வாசல் வழியே நழுவி வந்த
என் போல் பழைய பரம்பரைக்கார யூதனுக்கு,
தரக்கேடில்லை இதொன்றும், இல்லையா ?

பிரார்த்தனை நேரத்தில் போர்த்தும் சால்வை,
இரண்டு சிறிய தோல்பெட்டிகளில்
யூத மந்திரங்கள், பஞ்சவேதப் புத்தகம்,
பணம் வைத்த இடுப்புவார்,
அங்கியின் உள்ளே பதித்த முத்துக்கள்.

இவ்வளவுதான் கூடக் கொண்டு வந்தது.
பாஸ்ரா நகரிலிருந்து,
கொன்று போடத் துரத்தி வந்த
தாவுத் பாஷாவின் துருக்கப் படைக்குத்
தப்பி வந்தேன்.

பாரசீகத்தில் புஷைர் நகரில்
ஏதோ ஒப்பேற்றினேன்.
அங்கே போய்ச் சேர்ந்த முதல்நாள்
ராத்திரி முழுக்க
கடல் பாலத்தருகே கொட்டகையில்
கடிக்க வரும் எலிகளைக்
கைத்துப்பாக்கியால் சுட்டபடி கழித்தேன்.

இந்த பம்பாய்த் தீவுகளில்
ஏகப்பட்ட செல்வம்
எனக்காகக் காத்திருப்பதாக
ஒரு ஜோசியன் சொன்னதை நம்பி
இங்கே வந்தேன்.

குடும்ப நண்பன் ஒருவனிடம்
கடன் வாங்கிய ஆயிரம் பவுண்ட் பணம்.
அதை வைத்து இங்கே புளியமரச் சந்தில்
தாயத்தைக் கதவில் மாட்டி
வியாபாரத்தை ஆரம்பித்தேன்.

7
வெறும் பார்வையாளன் என்ற
நான் வெறுக்கும் பாத்திரத்தில் இப்போது
நடித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.

சும்மா முகத்தைச் சுளித்து
இந்த நகரத்துக்கு
அழகு காட்டிக் கொண்டு
கண்ணை உருட்டி,
நாக்கை அவ்வப்போது வெளியே நீட்டும்
ஒரு பார்வையாளன்.

நகர்ந்து போகிற ஒவ்வொரு வருடமும்
இந்த நகரம் இன்னும் இன்னும்
அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.

நான் பார்ப்பது ஒரு
நோயாளி நகரம்.
இப்படி எதிர்வினை செய்யாமல்
ஓவென்று அழவேண்டும் போலுள்ளது.

இது சிமிட்டியைத் தின்று
ரத்தத்தைக் அள்ளிக் குடிக்கும் நகரம்.
வெள்ளியை மூத்திரமாகப் பெய்து
தங்க மலம் கழித்து,
தன் வாந்தியில் தானே
மூச்சுத் திணறிக் கிடக்கிறது.

இப்போ என்ன நடக்கிறதென்றால்,
அந்த நரகல் எல்லாம்
நகரத்தின் வாய்வழியே
வெளியே வந்து கொண்டிருக்கிறது.

நான் என்னை மறுபடியும் ஒரு
காலஞ்சென்ற கைதியாக உணர்கிறேன்.
கழுத்தில் கருங்கல்
பட்டை அணிந்த கைதி.

பாக்தாதில் இல்லை. பம்பாயில் கைதி.
பணம் கொடுத்து மீட்கப் படுவேன் என்றோ
யாராவது வந்து விடுவிப்பார்கள் என்றோ
நம்பிக்கை ஏதும் இப்போது இல்லை.

எல்லாவற்ற்கும் மேலாகப்
பிரியம் வைத்த இந்த நகரம்
சிதைந்து கொண்டிருப்பதைப்
பார்க்க நிர்ப்பந்திக்கப் பட்ட கைதி.

8

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி
இருபத்தேழு அடி உயரமும்
அதே அளவு அகலமுமாகப்
பிரம்மாண்டமாகப் பரந்து நின்ற
கோட்டைச் சுவர் விழுந்தது
எனக்குத் தெரியும்.

வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகத்தின்
கட்டிவைத்த கூடகோபுரம்
நான் பார்க்க
ராட்சசக் குமிழாக
உருண்டு திரண்டு எழுந்தது.

எண்ணெய் விளக்குகள் அணைக்கப் படுவதை,
எண்ணெய் விளக்கு ஏற்றுகிறவர்களே
இல்லாமல் போனதை
நான் பார்த்திருக்கிறேன்.

அவற்றின் இடத்தைப் பிடித்த
மின்சாரச் சீமாட்டி அயர்வு தருகிறாள்.
புதிரும் நட்சத்திரங்களும் நிறைந்த
என் ராத்திரிகளை அவள் பிடுங்கிக் கொண்டாள்.

குதிரை இழுக்கும் வண்டிகள்
வந்ததும் போனதும்,
குதிரை பூட்டாத அவற்றின் பெண்மக்கள்
அறுபது வருடம் தடதடத்து ஓடி
ஆண்டு அடங்கி இரைச்சலோடு
அவற்றைத் தொடர்ந்து
மறக்கப்பட்டு மறைந்ததும்
நான் பார்க்க நடந்தது.

நோய்போல் மோட்டார் கார்கள்
தெருக்களைச் சுவாசம் முட்ட வைத்ததுவரை
குதிரை பூட்டாத அந்த வண்டிகள்
முயல்களாக இனவிருத்தி செய்து
பல்கிப் பெருகி வந்ததைப் பார்த்திருக்கிறேன்.

9

வெறிபிடித்த ஒரு ராத்திரியில்,
மாதவிலக்கான நிலவொளியில்
கருப்புக் குதிரையொன்று
பயந்து நடுங்கி, கனைத்து,
பதினைந்து அடி உயர
பீடத்திலிருந்து குதித்து இறங்கி
ஓடிப் போனதைப் பார்த்திருக்கிறேன்.

அதன் மேல் உட்கார்ந்திருந்த
பாவப்பட்ட இளவரசன்
கிட்டத்தட்ட கீழே விழுந்துவிட்டான்,

ஒரு கால் சேணத்தில்
பிணைத்துத் தொங்கிய
பாதுகையில் இருக்க
மற்ற கால் மண்ணில் இழுபட,
அவன் தலை தரையில் முட்டி மோத,
சேனாதிபதியின் சீருடையில்,
குதிரைக் குளம்படி சத்தம்
ஹார்ன்பை சாலையில்
(இப்போ அதுக்கு வேறே ஏதோ பெயர்)
தேய்ந்து மறைய,
மிருகக் காட்சிசாலை வரை
அவன் இழுத்துப் போகப்பட்டான்.

ஆனாலும் துணிச்சலான அந்த இளவரசன்
வெள்ளைக்காரனின் திடசித்தத்தோடு
திரும்பவும் குதிரையை அடக்கி
இடுப்பில் உடைவாளும், கழுத்தைச் சுற்றி
வீரப் பதக்கமும், கையில் பிடித்த தொப்பியுமாக
மேலே ஏறிவிட்டதாகக் கேள்வி.

வழுக்கை விழுந்த அவன்
தலையில் பட்ட காயம் கூட
பறவை எச்சம் வழிந்து பற்றுப்போட,
குணமாகி விட்டதாம்.

10

பத்தாயிரம் பவுண்ட்
விழலுக்கு இரைத்த நீராக
வீணாகப் போய்விட்டது.
அப்துல்லா அப்படித்தான் செய்வான்.

என் கூறுகெட்ட மகன்.
அவனை ஆல்பர்ட் என்று
ஒருபோதும் அழைக்க மாட்டேன்.

போதாக்குறைக்கு அவன்
சர் ஆல்பர்ட் துரையாம்.
டேவிடின் சந்ததிக்கு
இப்படி ஒரு பெயரா ?

நூறு பெட்டி நிறைத்த
கஞ்சா விற்றால் கிடைக்கும் லாபம்
பத்தாயிரம் பவுண்ட். அதைச்
சீனக் கடல் அடித்துப் போனது.

அடிவருடலின் சின்னமான
அப்துல்லாவின் வெங்கலச் சிலையை
நூறு வருடம் முன்னால் ஜூன் மாதத்தில்
ஒரு மழைக்காலப் பகலில்
சர் ரிச்சர்ட் துரை
நகரத்தின் பேர்போன சில குடைகள்
கூடியிருக்கத் திறந்து வைத்த பொழுதில்
கூறியிருப்பேன் என் மகனிடம்,
சிலை கெட்டவாடை அடிக்கிறது என்று.
அருமையான படைப்பாக அதை
உருவாக்கிய சிற்பிக்குப்
பாராட்டுகள் என்றாலும்.

ஆனாலும், சர் பட்டம் வாங்க
பத்தாயிரம் பவுண்ட் விலையா கொடுப்பது ?
சரி, இப்போ பத்தாயிரம் பவுண்டுக்கு
பெரிதாக என்ன மதிப்பு இருக்கப் போகிறது ?

11
அவன் சிறைப்பிடிக்கப்பட்ட
மகத்தான இளவரசனாகியிருப்பான்,
என் மகன் அப்துல்லாதான்.

பட்டுத் தொப்பியும் பாவாடையும்
சட்டையுமாக உட்கார்ந்த
இங்கிலாந்து மகாராணி கரத்தை முத்தமிட்டு
‘இந்தியாவின் நட்சத்திரம் ‘ என்று
எழுத்துப் பொறித்த பதக்கம்
மார்பில் அணிவிக்கப் படாமல்

பழைய பாக்தாத் நகரின்
மகோன்னதக் காலத்தில்,
பூத்தையல் நிறைத்துப்
பொங்கித் ததும்பும்
பட்டு அங்கி உடுத்து,

‘பராக் பராக் இளவரசர் வருகிறார்
சிறைபிடிக்கப் பட்ட இளவரசர் ‘
என்று கட்டியம் எங்கும் முழங்க
அவையில் பிரவேசித்து,
தலையில் பெரிய முண்டாசிலிருந்து
நபிகளின் திருச்சின்னம் தழைந்து தொங்க
காலிபாவின் கையை முத்தமிட்டிருப்பான்.

12

கொஞ்சம் தூரத்திலிருந்து
குரல்கள் கேட்கின்றன.
இரைச்சலாக எழுந்த குரல்கள்.

எவ்வளவு கவனித்துக் கேட்டாலும்
ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை.

வெறுமனே பெருகி மோதும்
உக்கிர அலைகள்.
கூடவே விரக்தியும்
இழையோடுகிறது.

சன்னமான ஒலித் துகள்கள்
சாரலாக எழுந்து
என் செவிமடல்களிலும்
தாடிக்கு அடியிலும்
உப்புப் படிவமாகப் பதிகின்றன.

ஆத்திரம் கொண்ட டைகிரிஸ் நதி
பெருகித் தெருவெல்லாம் வழிந்தோடி
பாஷாவின் படைவீரர்கள்
கொள்ளையடித்த வீடுகளுக்குள் புகுவதை
நான் ஏன் இப்போது நினைத்துக் கொள்கிறேன் ?

அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – ‘David Sassoon ‘ –
மொழியாக்கம் – இரா.முருகன் – நவம்பர் ’04

இந்தக் கவிதையில் இடம் பெற்ற உருதுச் சொல்லின் பொருள் விளக்கிய நண்பர் ஆசாத்துக்கு நன்றி.

டேவிட் சசூன் பற்றி –

David Sassoon was born in 1792 in Baghdad into a family of Nasis, traditional leaders of the Jewish community settled in the city since the the twelfth century and bankers to the rulers of Mesopotamia. At that time the Jews were coming under pressure from the Muslim Turkish rulers of Baghdad. Fleeing a family with his wife and a small part of the family ‘s wealth, Sassoon arrived in Bombay in 1833.

He started business in Bombay with a counting house and a small carpet godown. His business acumen soon made him one of the richest men in Bombay. He chose to follow the market, but he pursued all his enterprises better than his chief rivals, the Parsis. By the end of the 1850 ‘s it was said of him that ‘silver and gold, silks, gums and spices, opium and cotton, wool and wheat– whatever moves over sea or land feels the hand or bears the mark of Sassoon and Company ‘.

Although he did not speak English, he became a naturalised British citizen in 1853. He kept the dress and manners of the Baghdadi Jews, but allowed his sons to adopt English manners. His son Abdullah changed his name to Albert, moved to England, became a Baronet and married into the Rothschild family. All the Sassoons of Europe are descended from David.

He built a synagogue in the Fort and another in Bycullah, as well as a school, a Mechanics ‘ Institute, a library, and a convalescent home in Pune. The Sassoon Docks in Colaba were built by his son.

David Sassoon was conscious of his role as a leader of the Jewish community in Bombay. The Bene Israeli and Cochin Jewish communities had almost been absorbed into the Indian society. He helped to arouse in them a sense of Jewish identity.

David Sassoon died in his country house in Pune in 1864.

(Acknowledgements – http://theory.tifr.res.in/bombay/persons/david-sassoon.html)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்