ஞானி- படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் புத்தக விமர்சனம்

This entry is part [part not set] of 7 in the series 20001119_Issue

இந்திரன்


தமிழ் மார்க்ஸீய விமரிசகர்களுக்கு மத்தியில் தனக்கென குரல் ஒன்றைப் பெற்றுள்ள ஞானியின் 12 கட்டுரைகளின் தொகுப்பு ‘படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் ‘. பல்வேறு கருத்தரங்குகளில் படிக்கப் பெற்றவை இவை. 1988-ல் வந்த ஞானியின் கனமான கட்டுரைத்தொகுப்புக்குப் பிறகு இந்நூல் வெளிவந்துள்ளது.

இந்த நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல்பகுதி தொல்காப்பியரின் கவிதைக் கோட்பாட்டிலிருந்து இன்றைய திறனாய்வுச் சிக்கல்கள் வரையிலான பொதுநெறிகளைப் பற்றி விமரிசிக்கின்றது. இரண்டாம்பகுதியில் பாரதிதாசன், மெளனி, பிரமிள், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன் ஆகிய எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனங்களும், எண்பதுகளில் தமிழ் நாவல்கள் குறித்த விமர்சனமும் இடம் பெற்றுள்ளன.

ஞானியின் விமர்சன இயக்கம் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் சலியாது நடைபெற்று வருகிறது. மார்க்ஸீயத்தை ஒரு கட்சி சித்தாந்தமாகவோ பொருளாதார அணுகுமுறையாக மட்டுமோ குறுக்கி விடாமல், அதனைத் தேடல்தாகம் கொண்ட ஒரு வாழ்வியல் தத்துவமாகக் கொண்டு இலக்கியங்களை விமர்சிக்கிறார் ஞானி.

‘தொல்காப்பியக் கவிதைக் கோட்பாடும் தற்காலத் தமிழ்க்கவிதையும் ‘ எனும் முதல் கட்டுரையில் தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகளைத் தெளிவுற எடுத்துரைக்கிறார். மலையாள விமர்சகர் அய்யப்பப் பணிக்கர் கவிதை பற்றிய விமர்சனக் கோட்பாடுகளை தமிழர்களின் ஐந்திணைக் கோட்பாடுகளிலிருந்து பெற முடியும் என்று கருதுகிறார். தமிழவன், ‘ஐந்திணைக் கோட்பாடு உலகளாவிய மானுடவியல் பகுப்பாய்வோடு ஒப்பிடப்பட்டு புது உருவம் பெற்றால் இன்றைய அமைப்பியல் தரவுகளோடு இணைக்கப்பட முடியும் ‘ என்று எழுதுகிறார். இந்த வெளிச்சத்தில் ஞானி போன்றவர்களின் தளராத முயற்சிகள் தொடருமெனில் விமர்சனத்திற்கு பெரிதும் உதவுகிற தமிழ் அழகியல் கோட்பாடுகளை நாம் விரைவில் உருவாக்கமுடியும் என்கிற நம்பிக்கை உறுதிப்படுகிறது.

‘அன்னியமாதல் ‘, ‘தமிழிலக்கிய ஆய்வில் மார்க்ஸீய நெறி ‘, ‘தமிழ் வளர்ச்சியில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு ‘ ஆகிய கட்டுரைகள் மார்க்ஸீயத்தை தமிழ்ச் சூழலில் வைத்து ஆழமாக ஆராய்கின்றன. இவற்றில் இலக்கியத்தை பொருளியல் உறவுகளின் வெற்றுப்பிரதிபலிப்பாகச் சுருக்கிவிடுகிற தவறை இடதுசாரி இயக்கங்கள் செய்துவிடக்கூடாது என்கிற அக்கறை வெளிப்படுகிறது.

தமிழ்மரபு தமிழ் அடையாளம் போன்ற வார்த்தைகள் மறுபிறப்பு எடுத்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஞானியின் கட்டுரைகள் பழந்தமிழ் உலகைக் கண்மூடித்தனமாகப் புகழ் பாடும் போக்கிலிருந்து விலகி, அவற்றை விமர்சனப்பூர்வமான பார்வைக்கு உட்படுத்துகின்றன. இடதுசாரி இயக்கங்களின் மீதான ஞானியின் தயவுதாட்சண்யமற்ற விமர்சனங்கள் அவர்களின் பலம் பலவீனம் பற்றி பேசுகின்றன. ‘அன்னியமாதல் ‘ தத்துவத்தினால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஞானி ‘படைப்பிலக்கியம் பற்றி மார்க்ஸீயத்தின் கோட்பாடு என எதையும் குறிப்பாகச் சொல்ல இயலுமா என்றும் தெரியவில்லை ‘ ( பக்கம் 183) என்று பேசும் அளவுக்கு நேர்மையாக இயங்கியிருக்கிறார்.

இக்கட்டுரைகளைப் படிக்கையில், மதத்தின் மீது ஞானிக்கு இருக்கும் ஒருவிதமான பற்றுதல் என்ன என்கிற வினா வாசகனுக்கு எழுகிறது. ‘ஆன்மாவற்ற உலகின் ஆன்மா சமயம் ‘ என்ற மார்க்ஸின் வார்த்தைகள் திரும்பத்திரும்ப கையாளப்படுகின்றன. நிறுவனமயப்படுத்தப்பட்ட சமயம் எந்தக்காலகட்டத்திலும், நன்மைகளைக் காட்டிலும் தீமைகளையே அதிகம் செய்துவந்திருக்கிறது என்பது வரலாறு. இப்படி இருக்கையில், ஞானிக்கு சமயத்தின் மீதுள்ள பிடிப்பு எந்த அளவுக்கு விஞ்ஞானப்பூர்வமான ஒரு சுய விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்த ஒரு தனிக்கட்டுரையையே ஞானியிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அளவுக்கு வாசகன் இந்த விஷயத்தில் குழப்பிவிடப்படுகிறான்.

‘யதார்த்தவாதத்துக்கு என்ன நேர்ந்தது ? ‘ என்கிற கட்டுரையில் இன்று பரவலாகப் பேசப்படுகிற நவீனத்துவம், பின்நவீனத்துவம் ஆகியவற்றை அக்கறையுடன் கணக்கிலெடுத்துக்கொண்டு யதார்த்தவாதத்திற்கான இன்றைய பொருத்தத்தை வலியுறுத்துகிறார்.

‘தமிழில் இன்று திறனாய்வு – சிலக் கோட்பாட்டுச் சிக்கல்கள் ‘ என்கிற கட்டுரையில் கல்வியியலாளர் , பெண்ணியலாளர், இலக்கியவியலாளர், மார்க்ஸியர், அமைப்பியலாளர், தலித்தியர் ஆகியவர்களின் விமர்சனங்கள் குறித்த தன் கருத்துக்களை வைத்து, தமிழனுக்கான திறனாய்வுக் கோட்பாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வாதிடுகிறார்.

இரண்டாம் பகுதியில், ‘மெளனி – ஒரு மறு பார்வை ‘ என்ற கட்டுரை மெளனியின் படைப்புகளை ஒரு தீவிரமான வாசிப்புக்கு உட்படுத்துகிறது. மெளனியின் தமிழ் நடை ஒரு அற்புதம் என்று சொல்கிற ஞானி, மெளனியிடமிருந்து வெளிப்படையாக பெயர் சொல்லக்கூடிய மெய்யியல் தென்படவில்லை என்கிற முடிவுக்கு வருகிறார். மற்றும் பாரதி தாசன், பிரமிள், சுந்தர ராமசாமி, ஜெய காந்தன் ஆகியவர்களின் படைப்புகள் பற்றியும் , எண்பதுகளில் தமிழ் நாவல்கள் பற்றியும் எழுதுகிற போது பொறுப்புணர்ச்சியோடு பல முறை அவர்களது படைப்பைப் படித்து எழுதுவது தெரிகிறது.

எல்லோருடைய எழுத்தையும், ஒரு மனந்திறந்த வாசிப்புக்கு உட்படுத்துவது ஞானியின் பலம். மார்க்ஸியத்தின் மீதும் , தமிழ்ப் பண்பாட்டின் மூலம் சக எழுத்தாளர்களின் மீதும் , விமர்சகர்களின் மீதும் உள்ள அக்கறையும், பரந்து பட்ட படிப்பறிவை மீறிய தேடலும், இவருடைய கட்டுரைகளைச் செழுமைப் படுத்துகின்றன. அதே நேரத்தில் கட்டுரைகளைக் குறுகத்தறிக்க முயலாததும், வளவளவென்று எழுதிக் கொண்டு போகிற போக்கும் இவரது பலவீனம்.

பெயர் உதிர்ப்புகளின் பயமுறுத்தலில் படைப்புகள் குறித்த தன் தீர்ப்புகளை வாசகனின் தலையில் கட்டும் போக்கு அறவே இல்லை. மாறாக இவர் வாசகனைச் சிந்தனை மட்டத்தில் உயர்த்தி கட்டுரைகளைக் கடந்து அவன் சிந்திக்குமாறு அவனை உற்சாகப் படுத்துகிறார். இந்நூலின் மூலம் படைப்புகளை பொறுப்புணர்ச்சியோடு கூடிய ஆழமான பார்வைக்கு உட்படுத்தும் மரபை வளர்த்தெடுக்கிறார் ஞானி.

(வைகறை வெளியீடு : 4அ ஐடியல் பள்ளிச் சாலை, நரசிம்ம நாயக்கன் பாளையம், கோவை 641031, பக்கம் 238. விலை ரூ 36)

Series Navigation