“ஜெனரலி” ஸ்பீக்கிங்!

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

நரேந்திரன்


பாகிஸ்தானின் ஜெனரல் பர்வேஸ் முஷார·ப், அவரின் சுயசரிதமான, “In the Line of Fire”-இல் கார்கில் போர் குறித்து எழுதியிருப்பதிலிருந்து சில பகுதிகள் (பக்கம் 95-98).

கார்கில் போர் பாகிஸ்தானிய அரசியல் தலைவர்களின் அனுமதியின்றி, ராணுவத்தலைமை மட்டுமே எடுத்த முடிவு என்பது ஒரு மிகப் பெரிய பொய்.

இந்திய, பாகிஸ்தான் எல்லை (Line of Control) கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் ஓட்டைகளை அடைப்பது, அந்தந்த பகுதியில் இருக்கும் ராணுவ கமாண்டரைப் பொருத்த ஒரு செயல். அப்படிச் செய்வது எந்த ஒரு இந்திய-பாகிஸ்தானிய ஒப்பந்தத்தையும் மீறுவதாகாது. பாகிஸ்தானின் எல்லையைப் பலப்படுத்தும் முடிவு ராணுவத் தலைமையகத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே செய்யப்பட்டது. ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 5, 1999 ஆகிய இரு தேதிகளில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு, ராணுவத் தலைமை, ஸ்கார்டு (Skardu) பகுதியில் எடுக்கப்படும் தற்காப்பு நடவடிக்கைகள் பற்றியும், இந்திய பகுதிகளின் உள்ளே நிலவும் நிலவரம் குறித்தும் விளக்கியது. மேலும், மார்ச் 12-ஆம் தேதியன்று, I.S..I (Inter Service Intelligence)யின் டைரக்டரேட் ஜெனரலும், ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து அவரிடம் பேசினார். மே 17, ஜூன் 2 மற்றும் 22 தேதிகளில் மீண்டும் பிரதமருக்குத் தேவையான தகவல்களை ராணுவ தலைமையகம் வழங்கியது.

இரண்டாவது பொய், கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியின் விளிம்பில் இருந்தது என்பதுவும், அழிவிலிருந்து பாகிஸ்தானிய ராணுவத்தைக் காப்பாற்றுவதற்காக, பிரதமர் நவாஸ் ஷெரீப் அவசரமாக வாஷிங்டனுக்கு ஓட வேண்டியதாகி விட்டது என்று சொல்லப்படுவதும்.

பாகிஸ்தான் ராணுவத்தினை விரட்டுவதற்கென இந்திய ராணுவம் செயல்படுத்திய இரண்டு மாத ஆபரேஷனின் போது, எங்களை அவர்களால் நெருங்கக்கூட முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கையால், எங்கள் பகுதிகளில் இருந்த மிகச் சொற்பமான எங்களின் அவுட்-போஸ்ட்களை மட்டுமே (மூன்றிலிருந்து ஐந்து) அவர்களால் கைப்பற்ற முடிந்தது. ஜுலை 2, 1999 அன்று பாகிஸ்தானிய பாதுகாப்புச் செயலகம் (Defense committee) தனிப்பட்ட முறையில் எனக்களித்த தகவல்களின் அடிப்படையில், நான் வந்த ராணுவ ரீதியான முடிவு இதுதான்,

– நான் அறிந்தவரை, இந்தியர்கள் all-out offensive என்று சொல்லப்படும் தரை, கடல், ஆகாயம் வழியான தாக்குதல்களைத் தொடங்க எந்த விதத்திலும் வல்லமை இல்லாதவர்களாக இருந்தார்கள்.

– இந்தியர்கள் காஷ்மீரில் ராணுவத்தைக் குவித்து வைத்திருந்தார்கள். எனவே, பாகிஸ்தான் மிகவும் வலிமையான (statergically advantageous) இடத்தில் இருந்தது. போர் மிகப் பெரிதாக வெடித்தால் அது பாகிஸ்தானிய ராணுவத்திற்கே நன்மையாக முடியும்.

– எவ்வளவுதான் வலிமையாக இருந்தாலும், இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானின் மிகத் தீரமான NLI (Northern Light Infantry) படையினரையும், காஷ்மீர விடுதலைப் படையினரையும், அவர்களால் பிடித்து வைத்திருந்த பகுதிகளையும் ஒன்றும் செய்ய இயலாது.

கலந்தாலோசனைக் கூட்டங்களில், பிரதமர் நவாஸ் ஷெரீப், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு ராணுவத்தை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்துப் பல முறை என்னிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் என்னுடைய பதில், ராணுவ ரீதியான வெற்றி பெற பாகிஸ்தான் ராணுவத்தால் நிச்சயம் முடியும் என்பதுதான். அரசியல் ரீதியான முடிவுகளை நான் அவரிடமே விட்டு விட்டேன். எல்லாத் தவறுகளையும் என் தோளில் சுமத்துவதே அவரின் (பிரதமரின்) நோக்கமாக இருந்தது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தில் நான் இல்லை. அப்படியான ஒரு கூட்டத்தில், நவாஸ் ஷெரீப்பின் மந்திரி சபையில் இருந்த, அவரின் மிகப்பெரும் ஆதரவாளரன ராஜா ஜா·பர்-உல்-ஹக், சண்டை நிறுத்தத்தை ஏற்று, ராணுவத்தை பின்னுக்கு அழைப்பதினை எதிர்த்துப் பேசியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

அதே நேரத்தில், அப்போதைய உள்நாட்டு அமைச்சராக இருந்த சவுதிரி சுஜ்ஜத் ஹ¤செய்ன், கார்கில் குறித்து நடந்தவை அனைத்தும், இனிமேல் நடப்பது பற்றி நாம் என்ன முடிவு செய்தாலும் அது ஒரு கூட்டு முயற்சியாகவும், அனைவரின் கூட்டுப் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியதும் என் நினைவில் இருக்கிறது. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத நவாஸ் ஷெரீப், இதைப் பற்றி பின்னர் பேசலாம் (அந்த பின்னர் பிறகு வரவேயில்லை) என்று சொல்லிவிட்டுச் சடாரென கூட்டத்திலிருந்து வெளியேறினார். ஜூலை 5, 1999 அன்று மீண்டும் கூடி இறுதி முடிவினை எடுப்போம் என்று பேசிக் கலைந்து போனோம்.

வார இறுதியில் நான் என் குடும்பத்தினருடன் மலைவாசஸ்தலமான முரீ (Muree)க்கு குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கப் போய்விட்டேன். சனிக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் (ஜூலை 3) நவாஸ் ஷெரீப் என்னை அவசரமாகத் தொடர்பு கொண்டார். தான் அமெரிக்கா போக இருப்பதாகவும், உடனடியாக தன்னை இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சந்திக்கும்படியும் கேட்டுக் கொண்டார். நான் உடனடியாக முரீயிலிருந்து புறப்பட்டு, நடு இரவில் இஸ்லாமாத் விமான நிலையத்தில் பிரதமரைச் சந்தித்தேன். மீண்டும் அவர் என்னை கேட்ட கேள்வி, சண்டை நிறுத்தத்தை ஒப்புக் கொண்டு, படைகளை வாபஸ் வாங்கி விடலாமா? என்பதுதான். நான் என்னுடைய பதிலில் உறுதியாக நின்றேன். ராணுவ வெற்றி சாத்தியமான ஒன்று; அரசியல் ரீதியான முடிவினை நீங்கள்தான் எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினேன். நவாஸ் ஷெரீப் பதில் எதுவும் சொல்லாமல் விமானம் ஏறினார். போர் நிறுத்தத்திற்கு அவர் ஒப்புக் கொள்வதாக அமெரிக்காவிலிருந்து தகவல் வந்தது. எதானால் அந்த முடிவினை அவர் எடுத்தார் என்பது இன்றளவும் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. It remains a mystery to me why he was in such a hurry.

கார்கில் போரின் மூன்றாவது பெரிய பொய், ராணுவத்தின் கீழ்நிலை hierarchy கார்கில் போர் குறித்து, அது துவங்குவதற்கு முன்பு எதுவும் அறிந்திருக்கவில்லை என்பது. பல சீனியர் ராணுவத்தலைவர்களூக்கே இதுகுறித்து எதுவும் தெரியாது என்பதனையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ராணுவம் குறித்தும், அது இயங்கும் விதம் குறித்தும் அறிந்தவர்களுக்கு இந்த செய்தி நகைப்பிற்கிடமாக இருக்கும். எல்லா ராணுவ அதிகாரிகளும், ராணுவத் தலைமையிடமான ராவல்பிண்டியிலிருந்து வரும் உத்தரவிற்கேற்ப தங்களின் படைகளை ஒரே அணியில் கட்டுப்பாட்டுடன் நகர்த்துவார்கள். அவ்வாறு நகர்த்துவதற்கான காரண, காரியங்கள் அந்த அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படும். எல்லா ராணுவ தகவல்களும் தேவைக்கேற்ப (Need to know basis) மற்ற அதிகாரிகளுடன் பகர்ந்து கொள்ளப்படும். கார்கில் போர் குறித்தான எல்லா விவரங்களும், ராணுவத்தின் எல்லா மட்டங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.

நான்காவது பொய், இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருந்தன என்பது. 1999-ஆம் ஆண்டு அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தேவையான தொழில் நுட்பம் பாகிஸ்தான் வசம் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அணுகுண்டுகளை வெடிக்க வைப்பது மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும், எல்லை கடந்து ஒரு குறிப்பிட்ட இடத்தினைத் தாக்கியழிக்கும் வலிமையை ஒரு நாட்டிற்கு அளிப்பதில்லை. அந்தச் சூழ்நிலையில் அணு ஆயுதப் போரை பாகிஸ்தான் துவக்கும் என்ற பேச்சிற்கே இடமில்லை.

ஐந்தாவதாக, கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவம் மிகப் பெரும் அளவில் துருப்புகளை இழந்தது என்பது.

முந்தைய இந்திய-பாகிஸ்தானிய போர்களை விட கார்கில் போர் மிக நீண்டது. உக்கிரமானது. இந்தியர்கள் எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு படைகளையும், ஆயுதங்களையும், பீரங்கிகளையும் இந்த போரில் பயன்படுத்தினார்கள். அதே சமயம் மலைகள் எங்களுக்குச் சாதகமாக இருந்தன. இந்தியர்கள், அவர்கள் கணக்கில், 600-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 1500 பேர்களுக்கும் மேலாக காயமடைந்ததாகவும் அறிவித்தனர். எங்களுக்குக் கிடைத்த தகவிலின்படி, இந்திய ராணுவ இழப்பு அதனை விட இரண்டு மடங்கு அதிகம். இறந்த இந்திய ராணுவத்தினரை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு வந்தது, அவர்களுக்கு ஏற்பட்ட கணக்கிலடங்காத இழப்பினால்தான். சவப்பெட்டிகள் சம்பந்தமான ஒரு ஊழல் பற்றிய விபரம் இதன் பிறகே வெளிவந்தது. அதே சமயம், பாகிஸ்தானிய ராணுவம் மிகுந்த தீரத்துடனும், வீரத்துடன் போரிட்டது. இந்தியர்களுக்கு ஏற்பட்ட மிக அதிகமான இழப்பே இதற்குச் சான்று.

In The Line of Fire – A Memoir, Pervez Muharraf, Published by fP (Free Press)

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்