ஜனநாயக அராஜகம்

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்)


ஜூன் 30ஆம் தேதி அதிகாலை மு. கருணாநிதியின் இல்லம் பேய்களால் தாக்கப்பட்டது. நாய்கள் குரைத்தன. தொலைபேசிகள் செயலிழந்தன. பிற துர்ச்சகுனங்களும் தோன்றின. வழக்கத்திற்கு மாறாக இந்தப் பேய்கள் கதவை உடைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றன. ஒரு முதியவரை, முன்னாள் முதல்வரை இந்தப் பேய்கள் தாக்கிய காட்சி படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப் பட்டது. அவருடைய மனைவியையும் மக்களையும் கூட இந்தப் பேய்கள் விட்டு வைக்கவில்லை. வீட்டில் இருந்த கருணாநிதியின் மாமியார் அதிர்ச்சியில் இறந்தார். கலைஞர் மீது தொடுக்கப்பட்ட வன்முறையை தொலைக்காட்சியில் கண்ட பல திமுக தொண்டர்களும் வன்னிய அடிகளாரும் அதிர்ச்சியில் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சி சார்பற்ற பலரையும் இந்த நிகழ்வு ஆழமாகப் பாதித்தது.

ஜெயலலிதா அரசின் பழி வாங்கும் வெறியில் மீடியாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ஜெயலலிதா ஆட்சியில் வீடியாவுக்கு பாதிப்பு உண்டு என்றாலும், மீடியாவுக்குக் குறிப்பாக அனைத்திந்திய மீடியாவுக்கு ஒரு செல்லம் உண்டு. ஜெயலலிதா ஆளும் போது ருசிகரமான பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. விற்பனையும் பார்வையாளர் எண்ணிக்கையும் உயரும். மதராஸிகள் மீதுள்ள கண்டனத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக்கொள்ளவும் முடியும். மேலும் ஜெயலலிதா நல்ல கான்வென்ட் ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்( அப்படியானால், பண்பாளராகத்தானே இருக்க முடியும் ?) பிராம்மணர், பெண், முன்னாள் அழகி, முன்னாள் நடிகை, தேசியவாதி, ஆஷாட பூதி. மஞ்சள் துண்டு போர்த்தினாலும், கருணாநிதியின் திராவிடத் தோற்றம் ஆப்பிள் கன்னங்களுக்கு ஈடாகுமா ?

கடந்த ஐந்தாண்டுகளாக திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள் கையாளப் பட்டதற்கும், இப்போது ஜெயலலிதா அரசு நடத்திவரும் பழிக்குப்பழி அரசியலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்ற போதிலும், ஸ்டார் நியூஸ் ஒவ்வொரு அரை மணிக்கும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் ‘டமல் நாடுவில் ‘ அரசியல் சக்கரம் மீண்டும் ஒருமுறை சுழன்று விட்டது. இப்போது ஜெயலலிதாவின் முறை. இந்த பழிவாங்கும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் ஒரு நீண்ட வரலாறு உள்ளது என்று – இந்த மதராஸிகள் திருந்த மாட்டார்கள் என்ற தொனியில் – அறிவித்து வந்தது. ஸ்டார் நியூஸின் சென்னைக்கிளை சில வேறுபாடுகளை சுட்டிக்காட்ட முயன்ற போதும் கூட வட இந்திய மூளைகளில் அது ஏறவில்லை. இந்த நிகழ்வின் அதிர்வுகள், நம் ஞாபகங்களையும் அச்சங்களையும் கவலைகளையும் மேலெழ வைத்துள்ளன.

போலீஸ் அராஜகத்தைப்பற்றிய அச்சமில்லாத இந்தியக் குடிமகன் இருக்க முடியாது. அராஜகம் என்பது போலீஸோடு இரண்டரக் கலந்துவிட்ட ஒரு சொல். போலீஸ் என்று எழுதும் போதே, அராஜகம் என்ற சொல்லும் வந்து ஒட்டிக்கொண்டுவிடுகிறது. சூன் முப்பது முற்பகலில் சன் டிவியில் கருணாநிதியின் கைது பற்றிய ‘மக்கள் ‘ எதிர்வினைகள் ஒலிபரப்பப் பட்டன. ‘பகல் நேரத்தில் கைது செய்திருக்கலாமே ? ஒரு வயசாளியை இப்படித் தாக்க வேண்டுமா ? என்பது பொதுவான ஒரு கருத்தாக வெளிப்பட்டது. அதே சமயம் ஒளிபரப்பப் பட்ட அரசியல் வாதிகள், சினிமாக்காரர்கள் போன்றோரின் கருத்து கொஞ்சம் வேறுபட்டது. ‘நான்கு முறை முதலமைச்சராக இருந்தவரை தாக்குவதா ? பழுத்த அரசியல் தலைவரின் வீட்டை உடைப்பதா ? என்று அவர்கள் ஆத்திரப்பட்டனர். அடிப்படை மனித உரிமைகளை அவர்கள் வலியுறுத்தியதை விட ஆளும் வர்க்கத்தின் தனிச்சலுகை மீறப்பட்டுவிட்ட ஆத்திரமே அதில் அதிகம் தெரிந்தது. ஆனால் பொதுமக்களில் போலீஸ் அராஜகத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமட்டப் பிரஜைகள் கூட கலைஞருக்கு ஏற்பட்ட அநீதியைக் கண்டித்தனர்.

போலீஸ் நள்ளிரவில் வீட்டை உடைப்பதோ, அப்பாவிகளை தாக்குவதோ, பெண்களை இழிவு படுத்துவதோ, சந்தேகக் கேஸில் ஆயிரக்கணக்கில் பொதுமக்களை பிடித்து அடைத்து வைப்பதோ, தமிழகத்துக்குப் புதிதல்ல. இவை, இங்கு திமுக அதிமுக ஆட்சியென்று வேறுபாடில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன. திமுகவின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சி, தமிழகம் கண்டிருக்கும் சிறந்த ஆட்சிகளில் ஒன்று என்று மத்தியதர வர்க்கத்தின் பொதுவான கருத்து. இதே ஐந்தாண்டுகாலத்தைப் போன்ற தலித் விரோத ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டதில்லை என்கின்றனர் சில தலித் நண்பர்கள். ஏன் இந்த முரண்பாடு ? கலைஞர் ஆட்சியில் சில மோசமான போலீஸ் அராஜகங்கள் நடந்தன. ஜாலியன் வாலா பாக்கோடு ஒப்பிடப்பட்ட தாமிரபரணி படுகொலை, நீலகிரி தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் போலீசால் கொடுமையாக ஒடுக்கப்பட்ட நிகழ்ச்சி. கணக்கற்ற லாக்கப் மரணங்கள், பல விசாரணைக் கமிஷன்கள் போலீஸ் அராஜகத்தை விசாரித்தன. எந்த போலீஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்கப் படவில்லை. ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் நடந்த, கொடியன் குளம் தாக்குதலைப் பற்றிய போலீஸ் அத்துமீறலை நியாயப்படுத்திய கோமதிநாயகம் அறிக்கையை திமுக அரசு ஏற்றுக்கொண்டது.

இன்று கலைஞரின் இல்லத்தைத் தாக்கிய பேய்களின் அமைப்பை வளர்த்தெடுத்ததில், பாதுகாத்ததில், நான்கு முறை முதலமைச்சரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. அதிமுக ஆட்சியிலிருந்து திமுக வேறுபடும் முக்கிய இடம்தான்: திமுக ஆட்சியில் போலீஸ் அராஜகம் பிற அரசியல் வாதிகளை, பத்திரிக்கையாளர்களை, ஆளும் வர்க்கத்தினரை, மத்தியதர வர்க்கத்தினரை சீர்குலைப்பதில்லை. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவை எதிர்க்கும் எவருக்கும் – பிணத்திலிருந்து பிரதம மந்திரிவரை – பாதுகாப்பில்லை. இந்த வகையில் ஜெயலலிதாவின் அராஜகம் ஜனநாயகத்தன்மையுடையது. சமத்துவத்தைப் பேணுவது.

ஜெயலலிதாவால் பெரும் அதிகாரிகள் பந்தாடப்படும்போதும், வாண்டையார்களும், மிராசுதார்களும் அவர் முன் கூனிக்குறுகும் போது மக்கள் பெருமளவிற்கு மகிழ்கின்றனர். தாங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஆளும்வர்க்கத்தை இப்போது எட்டியிருப்பதில் நிறைவு கொள்கின்றனர். குறிப்பாகப் பெண்கள்.

கருணாநிதி போலீஸாரால் துன்புறுத்தப்படும் காட்சியும் ஓலங்கலும் அதிகாலையில் என்னைத் தாக்கியபோது ஏற்பட்ட பாதிப்பு நீண்ட நேரம் நீடித்தது. இதற்கு தமிழகம் ஆற்றப்போகும் எதிர்வினை பற்றிய பீதியும் கூடவே எழுந்தது. எனினும் நான் அறிய நேர்ந்த சில எதிர்வினைகள் – பணியாளர்கள் முதல் முதலாளிகள் வரை – ஏமாற்றமும் வியப்பும் அளித்தன. கலைஞர் கைதான செய்தியை அச்சில் கண்டு தமிழகம் அதிர்ந்த காலகட்டம் நினைவிருக்கிறது. இன்று திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்படுத்தும் வீடியோ பதிவை சன் டிவி வழியாகப் பட்டி தொட்டியெல்லாம் கண்ட பின்னரும் சென்னைக்கு வெளியே பெரிய தாக்கம் இல்லை. ஜெயலலிதா அரசுக்கு எதிர்வினை புரிய தொண்டர்களையும் மக்களையும் விட மத்திய அரசையும் சன் டிவியையும் அதிகம் நம்பி இயங்கியது திமுக.

நான் அறிய நேர்ந்த சில ‘மக்கள் ‘ எதிர்வினைகள்:

1. கலைஞர் ஜெயலலிதாவுக்குச் செய்ததை இன்று ஜெயலலிதா திரும்பச் செய்கிறார். இதில் அனுதாபப் பட என்ன இருக்கிறது ?

2. சன் டிவி காட்டும் நிகழ்ச்சிகள் பொய். கலைஞர் நடிக்கிறார். ஓலமெழுப்பும் குரல்கள் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இவை எல்லாம் சன் டிவிக்கு எதிர்ப்பிரச்சாரத்தை ஜெயா டிவி துவங்கும் முன்னரே கூட நான் கேட்டவை.

முன்னர் ஜெயலலிதாவை கைது செய்ததில் திமுக அரசு சட்ட நுணுக்கங்களை கவனமாகப் பின்பற்றியது என்ற போதிலும், இப்போது கருணாநிதியை கைது செய்ததில் விதிகள் வெளிப்படையாக மீறப்பட்டுள்ளன என்ற போதிலும், இந்த வேறுபாடுகளை மக்கள் காண விரும்பவில்லை. எல்லாக்காலங்களிலும் அதிகார வர்க்கத்துடன் மக்களுக்கு ஏற்படும் எல்லாத் தொடர்புகளும் அவமானகரமானதாகவே இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அடுத்தது திமுகவிற்கும் ஊடகங்களுக்கும் மொழிக்கும் இடையிலான உறவு. கட்சியை வளர்க்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் ‘சினிமா மாயையும் ‘ ‘நடிகனின் அரசியலும் ‘ திமுகவுக்குப் பயன்பட்டன. எம்ஜியாரை முன்னிறுத்தி ஓட்டுக்களைப் பெற நிழல் உலகத்துக்கும் யதார்த்த வாழ்விற்குமான வேறுபாட்டை திமுக திட்டமிட்டு அழித்தது. இதன் பின் விளைவுக்ளை தமிழ் சமூகத்திற்கு நாசக்கேடானவையாக இன்று தெரிகின்றன.

இப்போது மேற்படிப் போக்கின் பின்விளைவாக கலைஞர் தாக்கப்படும் ‘அசல் பதிவை ‘ கண்டபோது பார்வையாளர்களின் ஒருபகுதியினர் ‘நடிப்பு ‘ என்கின்றனர். திரையுலக நடிப்புகளையும் வசனங்களையும் ‘அசலாக்கி ‘ வாக்குக்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக இப்போது அசலை நடிப்பாகப்பார்க்கும் மனிதர்களை உருவாக்கியுள்ளது. அதே போல மொழிக்கும் திமுகவுக்குமான உறவு. மிகையும், அதீத உணர்ச்சியும், பொய்யும் கலந்த மொழி. அரசியல் மேடையில் அழுகையும் ஆவேசமும் நடிப்புமாகப் பீரிட்ட வசனங்கள். இன்று இந்தப் போக்கு தர்க்க ரீதியாக வந்து சேர்ந்துள்ள மொழி வெளியின் எல்லையில் தொலைக்காட்சியில் கலைஞர் தாக்கப்படும் போது எழும் ‘கொலை பண்றாங்க ‘ என்ற அலறல் மீது பலருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.

மேற்படி சம்பவம் நடந்தேறிய முறையிலும், இதன் மணியோசையாக வந்த தேர்தல் கால சவால்களிலும் இருக்கும் தமிழ் சினிமாவின் தாக்கம் வெளிப்படையானது. அடிக்கடி தமிழ்ச்சினிமாவில் கேட்கும் ‘பழிக்குப்பழி -ரத்தத்திற்கு ரத்தம் ‘; ‘உன்னைச்சும்மா விட மாட்டேன் ‘; ‘போய் இழுத்துக்கிட்டு வாங்கடா ‘; ‘சபாஷ் சரியான போட்டி ‘ போன்ற வசனங்கள் காட்சிகளின் இடைவெளிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

இந்தப் பிரச்னையை சன் டிவியும் ஜெயாடிவியும் எதிர்கொண்ட விதத்திலும் சினிமா உலகிற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக அதிகம். சன் டிவியில் கண்டனம் தெரிவித்த அரசியல் அறிஞர்களை அதிகம் பார்க்க முடியவில்லை. திமுக எழுத்தாளர்களை, கவிஞர்களை அது முன்னிறுத்தவில்லை. சில கூட்டணிக்கட்சி தலைவர்களைக் கூட காணவில்லை. ஸ்டாலின் கொடுத்த உணர்ச்சிமயமான சிறைக்கு முந்திய கடைசிப் பேட்டி கூட ஓரிருமுறை ஒளிபரப்பப் பட்டு முடக்கப்பட்டது. கருணாநிதி கைதான பிரச்னையை அடுத்து சன் டி.வி.யில் நடித்த ஹீரோ சரத்குமாருக்கு திமுகவிலிருந்தும், ஜெயா டி.வி.யில் நடித்த காமெடியன் எஸ்.எஸ். சந்திரனுக்கு அதிமுகவிலிருந்தும் எம்.பி. சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் குடும்பத்தின் மாறன் பிரிவு நீங்கலாக பிற கிளைகள் கணிசமாக இருட்டடிப்பு செய்யப் பட்டன. ஆனால் சினிமாக்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தனர். அருவருப்பூட்டும் மிகையுடன் நாடகமாடினர். கவிஞர்களில் நடிகரான வைரமுத்து தோன்றினார். அழுதார். இவையெல்லாம் பலமுறை ஒளிபரப்பப் பட்டன.

கலைஞரின் தாக்குதலுக்குப் பத்திரிகைகளும் ஊடகங்களும் மத்திய அரசும் பிற மாநில அரசுகளும் கட்சிகளும் கடுமையாக எதிர்வினையாற்றின. கிட்டத்தட்ட எல்லா அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்ட முறையைக் கண்டித்தனர். (ஆதரித்த இரு தலைவர்கள் கி. வீரமணியும் அப்துல் லத்தீப்பும்) மத்திய அரசு இரு குழுக்களை அனுப்பியது. ஆளுனரைத் திரும்பப்பெற்றது. மாநில அரசை எச்சரித்தது. மனித உரிமைக்கழகம் 48 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. ஊடகங்களில் சிறப்புச் செய்திகள் அரை மணிக்கொரு முறை ஒளிபரப்பப்பட்டன. இந்த எதிர் வினைகள் அவசியமானவைதான்.

கலைஞர் தாக்கப்பட்டதை மனித உரிமை அடிப்படையில் பலரும் கண்டித்தாலும் இந்தியாவில் விஐபிகளுக்கும் பிறருக்கும் ஒரே மனித உரிமை அமலாகும் என்று தோன்றவில்லை. நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை தொடர்பாக நீதிபதி அரசு வழக்கறிஞரை நோக்கி கூறியதாவது : ‘முக்கியமான விஐபியை கைது செய்யும் போது நன்கு பரிசீலனை செய்த பிறகுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ‘ உங்களையும் என்னையும் கைது செய்யும் போது போலீஸ் கொஞ்சம் கவனக்குறைவாக தீர விசாரிக்காமல் போனாலும் பரவாயில்லை போலும். இந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டுப் பார்த்தாலும் கொடியங்குளம் தாக்குதலையும், அதிரடிப்படையின் காட்டுமிராண்டித்தனங்களும், தாமிரபரணிப் படுகொலையும் கலஞர் இல்லத்தில் ஏற்பட்ட வன்முறையைவிடவும் மிகக் கொடுமையானவைதான். அப்போது எங்கே போயிற்று மத்திய அரசு ? ஏன் ஆளுனரை ஜனாதிபதி அப்போதெல்லாம் கேள்வி கேட்கவில்லை ? மத்திய அரசு குழு அனுப்பியதா ? மீடியாவில் சிறப்புச் செய்திகள் உண்டா ? கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகு திமுக அரசு இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அராஜகத்தை எதில் சேர்ப்பது ? மனித உரிமைக் கழகம் அப்போதெல்லாம் இவ்வளவு ஜரூராக நடவடிக்கையில் இறங்கியதா ?

இந்தக்கேள்விகளை உரத்து எழுப்ப வேண்டிய தருணம் இது. எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் மனித உரிமைப் பணியாளர்களும் அக்கறை உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் இணைந்து ஒரு ஆக்கபூர்வமான செயல்திட்டத்தை – போலீஸ் மற்றும் நீதி அமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கோடு – முன் வைக்க வேண்டும்.

(கண்ணன் காலச்சுவடு இதழின் ஆசிரியர்)

Series Navigation

கண்ணன்

கண்ணன்