சொட்டாங்கல்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன்


விறகு மஞ்சளில் புடவை
மஞ்சமசேர் ரவிக்கை
நடைபாதையில்
நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து
கையை இடுப்பில் ஊன்றித்
தோழிகளோடு
சொட்டாங்கல் ஆடிக்கொண்டிருக்கிறாய்.

ஒரு முடியிழைகூடக்
கீழே இறங்கி உன்
திமிர்த்து நிமிர்ந்த கழுத்தைத்
தொட அனுமதிக்காமல்,
அள்ளி முடிந்த கருங் கூந்தலில்
காதுமடலுக்கு மேலே ஒரு
சிவப்பு பிளாஸ்டிக் சீப்பு.

நீ விற்கிற மட்டரக கஞ்சா வண்ணத்தில்
கருத்த கூந்தல். அதைப் போல்
அள்ள அள்ளக் குறையாமல்
மார்க் குவட்டில் மறைத்துவைத்த
கஞ்சா அத்தனைக்கும்
எல்லா நேரமும் காவலிருப்பவை
உன் துடிப்பான முலைகள்.

ஒத்திசைந்த குறுவாள் போல்
காலிரண்டு. வலது நீண்டு
கத்தியின் வலிமையோடு பளபளக்க
இடதோ முழங்காலுக்கு மேல்
மடங்கி இருக்கும்.

வழக்கறிஞர்கள், வங்கி அதிகாரிகள்,
ஓவியர்கள், கடைச் சிப்பந்திகள்
கடந்து போகிற எல்லாரும்
உன் கால்களைப் பார்த்து
கைக்கடியாரத்தில்
நேரத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம்.
(பத்து மணி பத்து நிமிடம்).

கால்கள் வளைத்த வெளி நடுவே
ஓர் ஆடுகளம். அங்கே
சித்தம் கலங்கிய மைனாவாகக்
கூழாங்கல் கொத்திக் கொத்தி
நிமிர்கிறது உன் வலக்கை.

ஒவ்வொரு முறை
ஏழுகல்லை எறியும்போதும்
வளைந்த உன் கால்வெளிக்கு இடையே
ஒரு புது நட்சத்திர மண்டலம்
உருவாகிறது.

அட, இந்தத் தடவை ஆடியது
தப்பாட்டமாகிப் போச்சே,
ஒத்துக்கொள் கண்ணே.
கிரகநிலை சரியில்லை.
தோற்கப் போகிறாய் பார்.

இல்லை. இப்படிக் கல் சிதறினால்
மற்ற விளையாட்டுக் காரர்களுக்கு
வேண்டுமானால் சிரமமாக இருக்கும்.
நீ எப்படியும் வெல்லுவாய் தெரியும்.

வடகோடி நட்சத்திரக் கல்லை
மேலே உயர்த்தி வீசிக்
தரையில் கிடந்த ஆறு கற்களை
ஒரே அள்ளலில் சேர்த்தெடுக்க,
விழும் நட்சத்திரமாக
இறங்கி வந்த கல்
உள்ளங்கைக் கூட்டிலிருந்த
உடன்பிறப்புகளோடு சேர
ஒரு வினாடி கூடப் பிடிக்கவில்லை.

கல்லூரி மாணவன் போல்
ஒரு பையன் வந்து
சரக்கு கேட்கிறான்.
ஊசியாகக் குத்தும் வலியோடு
மரத்துப் போனது உன்கால்.

குதத்தில் பெரிய புன்சிரிப்போடு
எழுந்திருக்கிறாய்.
உன் புட்டங்களுக்கு நடுவே
செருகிக் கிடக்கும் சேலை
இளிக்கிறது.

இதனால் எல்லாமே
பத்து வினாடி பின்னுக்குப் போகிறது.
உன் சேலை மட்டுமில்லை
நேரமும் சுருங்கி விட்டது.

கடியாரக்கடை வெளியே
உலகின் எல்லாப் பெருநகர
நேரங்கள் காட்டும் கடிகாரமும்
தடுமாறி உலகம் முழுக்கப்
பத்து வினாடி இழக்கிறது.

விமானங்கள் தாமதம்.
ரயில்கள் நேரம் தப்புகின்றன.
சீறிக் கிளம்பி வானில் ஏறிய
இந்திய சோதனை விண்கலம்
கிறுகிறுத்து நிற்கிறது.

எங்கும் ஏற்பட்ட குழப்பத்தில்,
ரசாயனத் தொழிற்சாலைக்கு
அடிக்கல் நாட்ட வந்த ஆளுநரும்
நாட்டப்படுகிறார் கல்லோடு.

ஆனாலும் நீ புத்திசாலித்தனத்தோடு
பெரிய ஆபத்து உருவாகாமல்
நடவடிக்கை எடுக்கிறாய்.

உன் பின்புறம் சேலையைச்
சரிசெய்து கொள்ளும்போது
காலம் திரும்பச் சரியாகிறது
உலகம் வழக்கமான வேகத்தில்
சுழல்கிறது. எந்தக் கெடுதலுமில்லை.

ஒரு பத்து விநாடி நேரம்
சாசுவதத்தைக் கறைப்படுத்த முடியாதுதான்.
ஆனால், இப்படிப் பத்துப் பத்து
வினாடியாகச் சேர்ந்து சேர்ந்து,
உனக்குத் தெரியுமே,
யுகப் பிரளயமே தாமதமாகும்
இல்லை, அதை முற்றிலும்
விலக்கிப் போகும். ஆக,
எனக்குச் சொல்ல முடிந்தது –
இன்னொரு தடவை இப்படிச் செய்யாதே.

அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – Knuckle bones –
மொழியாக்கம் இரா.மு நவம்பர் 16 ’04

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்