சேர்ந்து வாழலாம், வா! ( குறுநாவல் ) – 3

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

ரெ.கார்த்திகேசு


மாரியம்மாள் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் கோக்கேயினை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்திருந்த அரசாங்க ரசாயன வல்லுநர் அழைக்கப் பட்டிருந்தார். பெரிய முண்டாசு அணிந்த கம்பீரமான சீக்கியர் டாக்டர் பூபேந்தர் சிங். ஆனந்தன் கேட்டான்: “இதற்கு முன் இந்த மாரியம்மாளின் கணவன் பிடிபட்டபோது அவன் வைத்திருந்த கோக்கேய்னை ஆராய்ந்தவர் நீங்கள்தான். இப்போது மாரியம்மாளிடம் இருந்து கைப்பற்றதாகக் கூறப்படும் கோக்கெய்னை ஆராய்ந்தவரும் நீங்கள்தான். இவை இரண்டும் ஒரே மாதிரி இருக்க சாத்தியம் உண்டா? அதாவது மாரியம்மாள் வீட்டில் கைப்பற்றப் பட்டதாகக் கூறப் படும் கொக்கேய்ன் அவருடைய கணவன் வைத்துச் சென்றதாக இருக்க முடியுமா?”

ரசாயன வல்லுநர் தலையை ஆட்டினார். “இல்லை. இப்போது மாரியம்மாளிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறப்படும் கொக்கேய்ன் வேறு மாதிரிக் கலவைகளைக் கொண்டதாக இருக்கிறது. அதை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தது!” என்றார்.

“அதன் அர்த்தம் என்ன? விளக்கிச் சொல்வீர்களா?”

“அதன் கலவைப் பொருள்களின் பட்டியலைச் சமர்ப்பித்திருக்கிறேன். பொதுவாக இந்த கொக்கேய்ன் மிக அதிக விலைமதிப்புள்ளது.”

“அதாவது மாரியம்மாளின் கணவன் போல வீதிகளில் இளைஞர்களுக்கு விற்கும் சாதாரண சரக்காக இல்லாமல் இது விலையுயர்ந்த சரக்கு?”

“ஆமாம்!”

“இதை மாரியம்மாள் போன்ற ஒரு சாதரணப் பெண் எப்படி பெற்றிருக்க முடியும்?”

அரசாங்க வழக்கறிஞர் எழுந்து “ஆட்சேபிக்கிறேன் நீதிபதியவர்களே! இந்தக் கேள்விக்கு ரசாயன வல்லுநர் எப்படி பதில் கூறுவார்? அவருக்குச் சம்பந்தமில்லாத விஷயம்!” என்றார்.

“ஆட்சேபனை ஏற்கப்படுகிறது. அந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் கூற வேண்டியதில்லை” என்றார் நீதிபதி.

ஆனந்தன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். கேள்விக்குப் பதில் தேவையில்லை. ஆனால் நீதிபதியின் மனதில் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியாயிற்று. அது போதும்.

உமா அவன் கையில் இன்னொரு பத்திரத்தைக் கொடுத்தாள். ஒரு புன்னகையுடன் அவளிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டு ஆனந்தன் சாட்சியை நோக்கி நடந்தான். “டாக்டர் பூபேந்தர் சிங், இந்த அறிக்கை இரண்டு மாதங்களுக்கு முன் இன்னோரு போதைப் பொருள் வழக்கிற்காக நீங்கள் தயாரித்ததன் பிரதி. இதனை நான் முன்னரே கோர்ட்டுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். இதைப் பாருங்கள். உங்கள் அறிக்கைதானே?”

“ஆமாம். என் அறிக்கைதான். இது நன்றாக என் நினைவில் இருக்கிறது!”

“மிகப் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு கொக்கேய்ன் விநியோகிக்கும் குழுவை நம் போலீசார் சுற்றி வளைத்த போது இது பிடிபட்டது. இப்போது போலீசார் வசம் இருக்கிறது. இதன் கலவையும் இப்போது மாரியம்மாளிடமிருந்து பிடிபட்ட கொக்கேய்னின் கலவையும் ஒன்று போல் இருக்கின்றனவா?”

அரசாங்க வழக்கறிஞர் எழுந்தார். “ஆட்சேபிக்கிறேன் நீதிபதி அவர்களே? இதற்கும் இந்த வழக்கிற்கும் என்ன சம்பந்தம்? இது நம் நேரத்தை விரயமாக்குகிறது!”

நீதிபதி ஆனந்தனைக் கேட்டார். “ஆமாம்! என்ன சம்பந்தம்?”

“நீதிபதி அவர்களே! நீங்கள் சாட்சியை பதிலளிக்க அனுமதிக்க வேண்டுகிறேன். பின் என்ன சம்பந்தம் என்பதை விளக்குகிறேன்!”

“சரி. இதில் உங்களுக்குச் சலுகை அளிக்கிறேன். ஆனால் சம்பந்தத்தைக் காட்டாவிட்டால் இந்த நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பின்னர் ஆளாவீர்கள். சாட்சி பதில் சொல்லலாம்”

சிங் தயங்காமல் சொன்னார். “ஆம். ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. கலவைகள் அனைத்தும் சற்றும் சந்தேகமில்லாமல் ஒரே மாதிரியானவைதான்.”

“ஒரே இடத்திலிருந்து இவை தோன்றியிருக்க முடியுமா?”

“ஆம். அப்படித்தான் தெரிகிறது!”

ஆனந்தன் நீதிபதியைப் பார்த்தான். “நீதிபதி அவர்களே. இப்போது அந்த சம்பந்தத்தைக் கூறுகிறேன். ஏற்கனவே போலீசாரால் கைப்பற்றப்பட்ட அந்தக் கோக்கெய்னைக் கைப்பற்றியவரும் இதே இன்ஸ்பெக்டர் துரைசாமிதான்.”

*** *** ***

“வோண்டர்·புல் வொர்க்! அற்புதமான வேலை ஆனந்த்! இந்தக் கொக்கேய்ன் இன்ஸ்பெக்டர் துரைசாமியிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதை அனேகமாக நிருபித்துவிட்டீர்கள். எப்படி இதை உத்தேசிக்க முடிந்தது?” என்று மறுநாள் காலை மகிழ்ந்து வியந்து கேட்டார் வஹாப். ஆனந்தன் உமாவைக் காட்டினான். “நான் அந்தப் புகழ்ச்சிக்கு லாயக்கில்லை வஹாப். இதோ இந்தப் பெண்ணின் முயற்சிதான்!” என்றான்.

உமா சொன்னாள். “கொக்கேய்னை இந்த இன்ஸ்பெக்டர்தான் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது முன்னரே தெளிவாகிற்று. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு பெரிய கொக்கேய்ன் பறிமுதல் செய்யப்பட்ட போலீஸ் இயக்கத்தில் அவர் முக்கிய பங்கு பெற்றிருந்தார் என்பதைப் பத்திரிகைகளில் படித்திருந்தேன். அந்தக் கோக்கேய்னாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் ரசாயன ரிப்பொர்ட்டை வாங்கிப் பார்த்தேன். அதில்தான் தெரிய வந்தது!”

“வொண்டர்·புல். வாழ்த்துக்கள். இனி கேஸ் நமக்குச் சாதகமாக முடிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” என்று பாடிக் கொண்டே தன் அறைக்குப் போனார் வஹாப்.

ஆனந்தனுக்கு வேலை ஓடவில்லை. உமா கண்ணிலும் நெஞ்சிலும் நின்றாள். அந்த நம்பிக்கை நிறைந்த கண்கள்; நேர்த்தியான புருவம்; ஒரு கேள்வி கேட்டால் அந்தப் புருவங்களைக் கொஞ்சமே உயர்த்தி அந்தக் கேள்வியை எதிர் கொள்ளும் பாங்கு; நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை; “நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்” என்பதை ஆக்ககரமாகச் செயல் படுத்தும் அதிநவீனப் பெண்.

அம்மா! மருமகள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாயே! பெண் தயாராக இருக்கிறாள். ஆனால் மருமகள் ஆவாளா என்பதுதான் தெரியமாட்டேன் என்கிறது.

தொலைபேசி அழைப்புக்களிலும் கோப்புகள் பார்ப்பதிலும் நேரம் கழிந்தாலும் உமாவின் நினைவு தகித்தவாறே இருந்தது. பொறுக்கமுடியாமல் தொலைபேசியை எடுத்து அவள் இணைப்பு எண்களை அழுத்தினான். “ஹலோ” என்றாள்.

“கொஞ்ச நேரம் என் அறைக்கு வரமுடியுமா?” என்றான்.

வந்தாள். என்ன ·பெர்·ப்யூம் பயன் படுத்துகிறாள்? பெயர் தெரிந்து கொண்டு ஒரு பத்து பாட்டில்கள் வாங்கித் தந்து அவளை மயக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்த வாசனையுடன் அவளைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற காம வேட்கையும் எழுந்தது.

“மாரியம்மாள் கேசின் முக்கிய வாதங்களெல்லாம் முடிஞ்சு போச்சே! இனி சில நாட்களுக்குப் பிறகு தீர்ப்பு வந்திடும்!” என்றான்.

“ஆமாம்!” என்றாள்.

“ஆனால் எனக்கு வரவேண்டிய தீர்ப்பு இன்னும் தாமதமாகலாமா உமா?”

கொஞ்சமாகப் புன்னகைத்தாள். அதில் எந்தக் குறிப்பையும் காண முடியவில்லை.

“இன்னைக்குத் தேநீர் சாப்பிடப் போகலாமா?”

அவனைக் கூர்ந்து பார்த்தாள். “சரி ஆனந்த்!” என்றாள்.

*** *** ***

தூக்கிப் பிடித்திருந்த தேநீர் கோப்பையிலிருந்து பறந்து கொண்டிருந்த ஆவியினூடே அவன் குடும்பத்தைப் பற்றிச் சொன்னான். அம்மா நல்லவர்; படித்தவர்; அன்பானவர்; முற்போக்குச் சிந்தனை உள்ளவர். அண்ணன், அண்ணி எல்லாரும் படித்தவர்கள்; ரொம்பவும் இதமான குணம் கொண்டவர்கள். இந்தக் குடும்பத்தில் உமாவுக்கு ஒரு அன்பான சமமான இடம் உண்டு. எல்லாவற்றையும் ஒரு வழக்கறிஞருக்கு உரிய திறனோடு கோர்த்துச் சொன்னான்.

அவள் கேட்டாள்: “இப்படி நல்ல குடும்பத்தில இருந்து வர்ர உங்களுக்கு ஒரு நல்ல பெண் மனைவியா கிடைக்கிறதா கஷ்டம் ஆனந்த்? ஏன் என்னை…?”

“இத எப்படி விளக்கிறது உமா? இது காதல். காதல் ஒரு ரசாயன விளைவு. என்னென்ன கலவைகள் அதில இருக்குன்னு யார் சொல்ல முடியும்? உங்கிட்ட நான் பார்த்த, உணர்ந்த சில ரசாயனங்கள் என்னை ஈர்க்குது. அதிலே காதல் பிறந்திருக்கு. ஆகவே மற்ற எல்லாக் காரணங்களையும் விட இதுதான் நான் உன்னைத் தேர்ந்தெடுத்தற்கு முக்கிய காரணம்”.

பேசாமல் இருந்தாள்.

“சரி உமா! நீ என்னோட என் வீட்டுக்கு வா! என் குடும்பத்தைப் பார். அப்புறம் எனக்கு முடிவு சொல்லு!” என்றான்.

“பிடிச்சிருக்கு ஆனந்த்!” என்றாள்.

“என்னையா?”

“உங்களை, நீங்கள் வருணிக்கிற உங்கள் குடும்பத்தை எல்லாம் பிடிச்சிருக்கு!”

“அப்புறம்?”

தன் நாற்காலியில் தொங்க விட்டிருந்த தன் தோள்பையை எடுத்தாள். அதன் ஜிப்பைத் திறந்து ஒரு பெரிய உறையை எடுத்தாள். அவன் கையில் கொடுத்தாள்.

“ஆனந்த், இதில சில பத்திரிக்கை நறுக்குகள் இருக்கு. வீட்டுக்கு எடுத்துப் போய் படிங்க. நீங்கள் சொன்ன ரசாயனக் கலவைகள்ள இதையும் சேர்த்துக்குங்க. அப்புறமும் நீங்க சொன்ன இந்த விளைவு மாறாம இருந்தா இன்னொரு நாள் என்ன தேநீருக்குக் கூப்பிடுங்க. பிறகு மேல பேசுவோம்”. எழுந்தாள்.

“என்ன இது உமா?”

“படிங்க தெரியும். அதில பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருத்தி இருப்பா. அது நான்தான்னு மட்டும் புரிஞ்சிக்குங்க! நான் வர்ரேன்”

எழுந்தான். “என்ன அவசரம் உமா?”

“பரவாயில்ல நீங்க சிரமப் படவேணாம். நான் ஒரு டாக்சி எடுத்துப் போயிட்றேன்.”
நடந்தாள். திகைத்து அவள் போகும் திக்கைக் கொஞ்ச நேரம் பார்த்திருந்து அவள் கொடுத்த உறையைத் திறந்தான்.

———————–

Series Navigation

author

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு

Similar Posts