சேர்ந்து வாழலாம், வா! – 7

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

ரெ கார்த்திகேசு


குறுநாவல்:

சேர்ந்து வாழலாம், வா!
(ரெ.கார்த்திகேசு)

7

“கெட்ட செய்தியும் இருக்கு! நல்ல செய்தியும் இருக்கு!” என்றான்.

“கெட்ட செய்தியை முதல்ல சொல்லுங்க!”

மனதைத் தயார் படுத்திக் கொண்டு சொன்னான்: “அம்மா முடியாதுன்னு சொல்லிட்டாங்க! நீ எங்க குடும்பத்துக்குப் பொருத்தமில்லன்னு சொல்லிட்டாங்க!”

இதோ போட்டுடைத்து விட்டேன். இனி வரும் புயலுக்குத் தயாரானான். தலைகுனிந்திருந்தாள். மெதுவாக சூப்பைப் பருகிக் கொண்டிருந்தாள். இடைவெளி விட்டுக் கேட்டாள்.

“ஏனாம்? காரணங்கள் சொன்னாங்களா?”

“ஆமாம். நீ குலைக்கப்பட்ட அந்த சம்பவம், அதன் பின் நடந்த கொலை இதனால உன் உள்ளம் கெட்டுப்போயிருக்கும்னு அவங்க நம்பறாங்க. அதினால வாழ்க்கையில பின்னால உன் மனம் பாதிக்கப்படும்னு நெனைக்கிறாங்க! நீ மாறிட்டன்னு சொன்னேன். ஆனா ஒரு ‘ரீசனபல் டௌட்’ இருக்கிற வரைக்கும் தான் சம்மதிக்க முடியாதின்னு சொல்லிட்டாங்க!”

மீண்டும் சூப்பை உறிஞ்சினாள். அவள் முகம் மிகவும் இறுக்கமானதாகிப் போனது. அமுதமான சூழ்நிலையில் நஞ்சு கலந்தது போல இருந்தது.

கொஞ்ச நேர மௌனத்துக்குப் பின் மெதுவாகப் பேசினாள்: “நன்றி ஆனந்த்! நீங்களும் சரி, உங்க அம்மாவும் சரி மனந்திறந்து பேசிறிங்க. அதுக்கு நன்றி! அப்படித்தான் சொல்லுவாங்கன்னு நான் எதிர்பார்த்ததுதான். முன்னால நான் பட்டிருக்கேன். சட்டம் எனக்கு விதிச்ச தண்டனைக்குப் பிறகு சமூகம் எனக்கு விதிக்கிற இரண்டாம் தண்டனை இது!”

“கேள் உமா! மனம் உடைஞ்சி போகாத! அம்மா சொன்னது நம்ம உறவுக்கு கடைசித் தீர்ப்பு இல்லை! நல்ல செய்தி இருக்குன்னு சொன்னேனில்லையா?”

முகம் நிமிர்த்தி “என்ன?” என்பது போல் பார்த்தாள். மேசைக்குக் குறுக்காகக் கை நீட்டி அவள் கையைப் பிடித்தான்.

“அம்மா சொன்னதில எனக்குச் சம்மதம் இல்ல. அம்மா என்னதான் படிச்சவங்களா இருந்தாலும் பழமை வாதம் உள்ளவங்க! அம்மாவுக்கு உன்னைத் தெரியாது. உன்னோட பழகினவங்க இல்ல! இந்தத் தீர்ப்புக் கண் மூடித்தனமானது. ஆகவே அதை உதறித் தள்ளத் தீர்மானிச்சிட்டேன். நீதான் எனக்கு உரியவள். நான் உன்னைத் திருமணம் செய்துக்கிறேன் உமா. அம்மாவோட சம்மதம் எனக்குத் தேவையில்ல. நான் சின்னக் குழந்தையில்ல. தாயினுடைய முந்தானையை இன்னும் பிடிச்சுத் தொங்க வேண்டியதில்ல. ஆகவே அம்மா சொன்னத மறந்திடு! சரின்னு சொல்லு. வேணுமானா இந்த மாதமே, இந்த வாரமே கல்யாணம் பண்ணிக்குவோம். இன்னொரு வீடு பார்த்துப் புது வாழ்வு தொடங்குவோம்!” அவள் புறங்கையை ஆழ்ந்து முத்தமிட்டான்.

மெதுவாக மீட்டுக் கொண்டாள். மீண்டும் சூப் கிண்ணத்தை கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் காத்திருந்து கேட்டான்: “சொல்லு உமா!”

நிமிர்ந்து பார்த்தாள். “ஆனந்த், இது நடக்காது!” என்றாள்.

“ஏன்?”

“இப்ப உங்களுக்குள்ள மயக்கத்தில பேசிறிங்க! இதோ இந்தக் கடல் காற்று; நான் திட்டமிட்டு அள்ளித் தெளிச்சிட்டு வந்திருக்கிற செண்ட்; திட்டமிட்டு செய்த சிகை அலங்காரம், முக ஒப்பனை. இன்னைக்கு உங்கள மயக்க வந்த மோகினி நான். அது வெற்றி பெற்றதில இப்ப எனக்கு மகிழ்ச்சி ஒண்ணும் இல்ல. ஏன்னா இது நிலைக்காது!”

“ஏன் நிலைக்காது? என் மேல நம்பிக்கை இல்லையா?”

இருண்ட கடல் பக்கம் வெறித்துப் பார்த்தாள். “வாங்க ஆனந்த்! இனி சாப்பிட முடியாது! பில் கட்டிட்டு வாங்க! அப்படியே கடற்கரையில நடந்தபடி பேசுவோம்!”

எழுந்து கடற்சுவர் பக்கம் போய் நின்றாள். அவசரமாகப் பரிமாறுநரைக் கூப்பிட்டு கிரெடிட் கார்ட் கொடுத்து பில்லுக்குப் பணம் கட்டி அவள் பக்கம் போய் நின்றான்.

அவள் குஜராத்திப் பாவாடை காற்றில் புடைத்துப் பறந்தது. கூந்தலும்தான். துப்பட்டாவை எடுத்துப் போர்த்திக் கொண்டாள். தூரத்து விளக்குகளால் மட்டுமே மங்கலாக ஒளியூட்டப்பட்ட கடற்கரையில் நடந்தார்கள். அலைகள் மோதிக் கொண்டிருந்தன. ‘சோ’ என்ற சத்தம் பின்னணியில் இருந்தது.

அவன் கையுர்த்தி மெதுவாக அவள் தோளைத் தயக்கத்துடன் பற்றினான். அவள் தன் கையைத் தூக்கி தோளின் மேல் கிடந்த அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டு ஆதரவாகச் சிரித்தாள்.

“பதில் சொல்லலையே உமா!” என்றான்.

“கேள்வி என்ன?”

“ஏன் நம்ம திருமணம் நடக்காது? என் மேல் நம்பிக்கை இருக்கா இல்லையா?”

“இந்தத் தருணத்தில எல்லாம் நம்பிக்கையாத்தான் இருக்கு. எத்தனை அபூர்வமான மனிதர் நீங்க? எத்தனை முற்போக்கான எண்ணம்? என் மேல் எத்தனை அன்பு? நான் கனிந்திருக்கிறேன் ஆனந்த்! ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நன்றி!” அவன் முகத்தின் பக்கம் திரும்பி அவன் முதட்டில் லேசாக முத்தம் பதித்தாள்.

“உன்னை விட நான்தான் ரொம்ப உருகியிருக்கேன் உமா. உன்னைத் தவிர என் வாழ்க்கையில இன்னொரு பெண்ணுக்கு இனி இடமில்லை!”

“காரணம் என்ன தெரியுமா ஆனந்த்? கவிதை ஞாபகம் இருக்கா? ‘ஹோர்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்’. அதுதான் காரணம்!”

“சரி. அதனால் என்ன? ஹோர்மோன்களை வைத்துத்தானே வாழ்க்கை?”

“ஆமாம். ஆனால் எல்லா ஹோர்மோன்களும் காதல் ஹோர்மோன்கள் அல்ல. சந்தேகத்துக்கும் பொறாமைக்கும் வெறுப்புக்கும் கூட ஹோர்மோன்கள் உண்டு”

“அப்படின்னா?”

பெருமூச்சு விட்டாள். “சில வருடங்கள்ள காதல் ஹோர்மோன் குறைஞ்சிடும் ஆனந்த். குழந்தைப் பேறுக்கு வழி செய்து முடிச்சவொண்ண காம ஹோர்மோனும் விடை பெற்றுக்கும். அப்ப இவளுக்காகவா உறவுகளைப் பிரிஞ்சு வந்தோம்கிற ஏமாற்ற ஹோர்மோன் சுரக்கும். அது வெறுப்பு ஹோர்மோனுக்கு வழிவிட ரொம்ப நாளாகுது!”

“நீ ரொம்ப அழிவுகரமா சிந்திக்கிற உமா! வயதாலயும் காலத்தாலயும் நீடிச்சிருக்கிற காதலுக்கு ஏராளமான சாட்சியங்கள் இருக்கு. ஏன் அப்படி ஆக்ககரமா சிந்திக்கக் கூடாது?”

சிரித்தாள். “என் செல்லமே! நீங்க உங்க குடும்பத்தில அன்பைத் தவிர வேற எதையுமே கண்டவர் அல்ல. நான் அப்படி அல்ல. நாசப்படுத்தப்பட்டும் அசிங்கப்படுத்தப்பட்டும் வெறுக்கப்பட்டும் எனக்கு உள்ள அனுபவங்கள் உங்களுக்கு இல்ல!”

“அது முடிஞ்சது உமா. இனி நான் உன்ன என் கண் போல வச்சிக் காக்க மாட்டேனா?”

“நான் உங்களுக்கு அவ்வளவு அத்தியாவசியமா ஆனந்த்?”

“ஆமா, ஆமா! உன்ன விட்டால் என் வாழ்க்கைக்குத் துணை வேற யாரும் இல்ல! இந்த உறுதி போதுமா?”

“அப்படியானா ஆனந்த், அன்னைக்கி இரண்டாவது சோதனை ஒண்ணு இருக்குன்னு சொன்னேனில்லையா? இதக் கேளுங்க! கல்யாணம்கிறத மறந்திருங்க! நாம் ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம் வாங்க!”

அதிர்ந்தான். “என்ன சொல்ற உமா?”

“கல்யாணம்கிற பந்தம் வேண்டாங்கிறேன். நான் உங்களுக்கு வேணும், காதலுக்கும் கலவிக்கும். எனக்கும் நீங்கள் வேணும், அதே காரணங்களுக்காக. இதை மனப்பூர்வமா ஏற்றுக் கொண்ட பிறகு எதுக்குத் திருமணம்? சேர்ந்து வாழ்வோம். நீண்ட எதிர்காலத்தில உங்களைக் கட்டிப் போட்றதில எனக்கு நம்பிக்கை இல்ல. என்னயும் அப்படிக் கட்டிப் போட நான் விரும்பல! நாம் சேர்ந்து வாழுவோம். படுக்கையையும் வாழ்க்கையையும் பகிர்ந்துக்குவோம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு என் உறவு வேண்டாம்னு தோணும்போது நாம் நண்பர்களாகவே பிரிஞ்சிருவோம். அப்ப இந்தத் தாலிப் பிரச்சினை சட்டப் பிரச்சினைன்னு எதுவும் வந்து குறுக்க நிற்காது.”

அவனால் உடனடியாகப் பேச முடியவில்லை. பேசாமல் நடந்தான். “என்ன ஆனந்த்? அதிர்ச்சியாயிட்டிங்களா?” என்று கேட்டாள்.

“அதிர்ச்சியாத்தான் இருக்கு! திருமண ஒப்பந்தம் இல்லாம வாழ்க்கையா? நான்…”

“எதுக்குத் திருமணம் ஆனந்த்? இது ஒரு சமுகச் சடங்குதானே? அது இல்லாமப்போனா என் மேல் உள்ள அன்பும் இல்லாமப் போயிடுமா? அந்தச் சடங்கின் அடிப்படையிலா என் மேல உள்ள அன்பு உங்களுக்கு?”

“அதில்லை உமா? அப்படி இல்லன்னா ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்யிறது போல… சமுகத்தோட ஒட்டாது ஒதுக்கப் பட்டவர்கள் மாதிரி ஆகிட மாட்டோமா?”

பெருமூச்சு விட்டாள். “பார்த்தீங்களா, சமூகத்துக்கு நீங்க எவ்வளவு பயப்பட்றிங்கன்னு! சமுகத்துக்கு முதுகைத் திருப்பிக் காட்ட உங்களுக்கு மனசில்லேன்னா, ஒரு கட்டத்தில நாந்தான் ஒதுக்கப் பட்டவளா ஆயிடுவேன் ஆனந்த்!” என்றாள்.

மௌனமாக நடந்தார்கள். ஐந்து நிமிடங்கள் இருக்கலாம். இரூண்ட கடலில் ஒரு மீன்பிடிப் படகு ‘டுப் டுப்’ என்று ஒலியெழுப்பிப் போய்க் கொண்டிருந்தது.

“ஆனந்த்!” என்றாள். பதிலுக்கான எதிர்பார்ப்பு இருந்தது.

“என்ன ரொம்பக் குழப்பிட்ட உமா! எனக்கு இதை யோசிக்கக் கொஞ்ச கால அவகாசம் கொடேன்!” என்றான்.

“சரி” என்றாள். திரும்பிக் காரை நோக்கி நடந்தார்கள்.

*** *** ***

வெள்ளிக்கிழமை மாரியம்மாள் வழக்கு முதல் வழக்காகக் குறிக்கப்பட்டிருந்தது. நீதிபதி வந்தார். எல்லோரும் எழுந்து அமர்ந்தார்கள். இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வந்து விட்டார்களா என்று நீதிபதி பார்த்தார். மாரியம்மாள் கூண்டில் நின்றிருந்தாள். அவள் முகத்தில் ஒரு சலனமும் தெரியவில்லை. உமா கொஞ்சம் படபடப்புடன் இருப்பதாக ஆனந்தனுக்குத் தோன்றியது.

தான் தயாரித்துக் கொண்டு வந்திருந்த பத்திரத்திலிருந்து தீர்ப்பை நீதிபதி படித்தார். அதன் முதல் பகுதி வழக்கின் பின்னணி பற்றிய ஒரு நீண்ட முகவுரை. பின் தமது முடிவுகளுக்கு வந்தார்: “போலிஸ் அதிகாரி மாரியம்மாள் மீது காமமுற்றிருந்தார் எனத் தற்காப்புத் தரப்பு காட்ட முயன்றது. ஆனால் அதற்கு சாட்சிகளோ ஆதாரமோ இல்லை. அது ஒரு வேளை உண்மை என எடுத்துக் கொண்டாலும் மாரியம்மாள் வீட்டில் போதைப்பொருள் இருந்தது என்ற உண்மைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. மாறாகக் குற்றவாளி தான் நேசிக்கும் பெண்ணாக இருந்தும் கூட அவள் குற்றத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டு வர போலீஸ் அதிகாரி கடமை உணர்வுடன் செயற்பட்டிருக்கிறார் என அவரைப் பாராட்டவே வேண்டும். அந்தப் போதைப் பொருள் ரசாயனக் கலவை போலிஸ் பாதுகாப்பில் உள்ள ரசாயனக் கலவை போல் இருக்கிறது என்பது தற்செயல். அது ஓர் ஆதாரமாகாது. இந்தப் பொருள் அங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கும் தற்காப்புத் தரப்பினர் ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை”.

படிப்பதை நிறுத்திவிட்டு அவர் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தார். “போதைப் பொருள் மாரியம்மாளின் கட்டுப்பாடில்தான் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்ட பின்னர் தண்டனை விதிப்பதில் எனக்கு சுய விருப்பு என்பது ஒன்றுமில்லை. சட்டம் சொல்வதுபோல் நான் நடந்து கொள்ளுகிறேன். அவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்பதைக் கருத்தில் கொண்டு சட்டம் எனக்கு அளித்துள்ள சலுகையில் அவருக்குக் குறைந்த பட்ச தண்டனை மட்டுமே விதிக்கிறேன். மாரியம்மாளுக்கு ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கிறேன்!”

கூண்டில் நின்றிருந்த மாரியம்மாளின் கால்கள் நொடித்து விழுந்தன. இரண்டு மலாய்ப் பெண் போலீசார் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கினார்கள்.

உமா தலை கவிழ்ந்து விம்மிக்கொண்டிருந்தாள்.

(முடிந்தது)

Series Navigation