சூபியின் குழப்பம்

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

ஹமீது ஜாஃபர்


சென்ற நவம்பர் 24 ம் தேதி திண்ணையில் வந்த திருக்குர் ஆனில் மனுதர்மமா…….வைப் படிக்கும்போது இரண்டு விசயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒன்று சூபி முகமது என்ற முகமூடியில் ஒளிந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத ஒருவர். மற்றொன்று அவரின் தெளிவில்லாமை.

திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க ஒரு ஹமீது ஜாஃபரோ அல்லது ஒரு இபுனு பஷீரோ தேவை இல்லை. ஏன் எந்த ஒரு மனிதனாலும் அது முடியாத காரியம். அதற்கு ஆதாரம் அதுவேதான்.

“நம்முடைய அடியாருக்கு அருளிய இவ்வேதத்தில் நீங்கள் சந்தேகங்கொண்டு (அவர் இதை தாமாகவே கற்பனை செய்து கூறுகிறார் என்று கூறுகிற) நீங்கள் உண்மையாளர் களாகவும் இருந்தால் – அல்லாஹ்வைத் தவிர – உங்களுடைய உதவியாளர்களையும் நீங்கள் துணைக்காக அழைத்துக்கொண்டு இதைப்போன்ற ஒரு அத்தியாயத்தை அமைத்துக்கொண்டு வாருங்கள்.” (அல் குர்ஆன் 2:23)

“மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து இதைப்போன்ற ஓர் குர்ஆனை உண்டாக்க அவர்கள் முயற்சித்த போதிலும் அவர்களால் அவ்வாறு உண்டாக்கவே முடியாது; அவர்களில் சிலர் பிறருக்கு உதவி செய்த போதிலும் சரியே.” (அல் குர்ஆன் 17:88)

இந்த இரண்டு வசனங்களுமே மனித குலத்திற்கு சவால் விடுகிறது. இது மனிதனின் செயலல்ல என்று பல அறிஞர்களும் கூறியபிறகும் சூபி முகமதுக்கு சந்தேகம் இருந்தால் சூபியும் அவரைச் சார்ந்தவர்களும் இதை போன்ற ஒரு வசனத்தை உண்டாக்குங்களேன். இறைவனின் சவாலை ஏற்றுக்கொள்ளுங்களேன்!

“கல்வி, கேள்வி அறிவுகளால் இறைவனை அறியமுடியாது” என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள், இதை ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார். குர்ஆன் எல்லோருக்குமுள்ள நூல் அல்ல; அது இறை மறுப்பாளர்களுக்கு அருளப்பட்டதல்ல; இது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும், விசுவாசம் உள்ளவர்களுக்கும் அருளப்பட்டது.

“இது வேதநூல்; இதில் சந்தேகமே இல்லை. பயபக்தியுடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்” (அல் குர்ஆன் 2:2) என்று கூறும் குர்ஆன் நம்பிக்கையும் பக்தியும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அதுவே விளக்குகிறது.

“அவர்கள் மறைவானவற்றை விசுவாசம் கொள்வார்கள்……” (அல் குர்ஆன் 2:3)

எனவே யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் இதை அனுகட்டும். நம்பிக்கை இல்லையா? எதில் நம்பிக்கை இருக்கிறதோ அதை ஆராயட்டும். தேவையற்றதில் மனதை நுழைத்து குழம்பிக்கொண்டிருக்கவேண்டாம்.

தடுமாற்றம் தீரவில்லை

விஞ்ஞானம் எத்தனையோ விசயங்களில் இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கிறது. BIG BANG THEORY யை ஒரு சாராரால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தவிர ஆராயப்பட வேண்டிய விசயங்கள் அனேகம் இருக்கின்றன. திருக்குர்ஆன் இயற்கை விஞ்ஞானமுமல்ல; அது எதனையும் பார்த்து அறிந்து பிரதிபலிக்கவுமில்லை. QURA’N IS NOT A SCIENCE; IT IS SIGN OF SCIENCE.


Email: maricar@emirates.net

Series Navigation