சுரதா

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

கரு.திருவரசு


விருத்தப்பா விடைபெற்றுச் சென்ற தென்னும்

வேல்பாய்ந்தாற் போற்செய்தி வந்த தென்ன?

பொருத்தமான உவமைகளைப் புதுமையாகப்

பொழிந்தமழை ஓய்ந்ததுதான் உண்மையாமோ!

வருத்தப்பட் டாவதென்ன? வந்த தென்றல்

வந்ததுபோல் திரும்புவது புதிதா என்ன?

வருத்தப்பா இதுவன்று! சுரதா என்னும்

வண்ணவண்ணச் சுவடுகளை மறக்கப் போமோ!

பாரதிக்குத் தாசனந்தச் சுப்புரத்தினப்

பாரதிதாச னென்பார் பரம்பரையில்

சீரதிகக் கவிஞர்பலர் சிறந்திருந்தார்!

சுரதாவோ சுப்புரத்தின தாசனானார்!

பாரதிதாசனாரை நேரில் காணப்

பாவலர்நம் சுரதாதன் இளமை நாளில்

ஓரணாவும் இல்லாமல் உழைத்துச் சேர்த்த

ஒன்றரை ரூபாயிலேயே சென்றார், கண்டார்!

சோகமில்லா மன்னனெவன்? அசோகன் என்பார்!

சுடுநெருப்பின் தலைவன்தான் ஞாயிறென்பார்!

மேகத்தின் எச்சில்தான் மழையாம்! மதுவை

அருந்தாமல் மயங்குவதே மாலை நேரம்!

ஊகத்தை மொழிபெயர்த்தால் உண்மை யாமோ

உன்னுடைய மொழிபெயர்ப்பே பிள்ளை என்பார்!

வேகத்தில் எப்போதும் எழுதிடாமல்

விரும்புங்கால் எழுதுகிற கவிஞன் என்பார்!

மனையாளை இணையாளை முதலில் “வாழ்க்கைத்

துணை”யென்றே சொன்னதிரு வள்ளுவர்போல்

இணையாக அணியாக உவமை அள்ளி

இறைத்தவரால் என்றென்றும் இறக்க மாட்டார்!

கனியாமல் ‘பேறு’கட்டும் காப்பிலக்கணம்

கண்டவரே யாப்பிலக்கணங் கண்டாற் போல

இனிமையான உரைநடையின் சிக்கனமேநான்

எழுதுகின்ற கவிதையெனச் சுரதா சொல்வார்!

உரைநடையின் சிக்கனம்தான் கவிதை என்றால்

உரைநடையே கவிதையென்னல் சின்னத்தனம்

வரைவின் மகளிரென்ற வள்ளுவர் கண்ணியம்

சுரதாவின் கவிதையிலே “வாசல்நிலவுகள்”!

நுரைதின்று பசியாறுமா என்று கேட்பார்

தரைநிலவை நீநிலவின் நிழலே என்பார்!

சிரிப்பிற்குக் கதவுகளாம் இதழ்கள் என்பார்

சிந்தனைக்கும் குறும்புக்கும் சுரதா செல்வர்!

பாவேந்தர் பரம்பரையில் எனைக்கவர்ந்த

வாணிதாசன் முதல்கவிஞர்! அடுத்துச் சொன்னால்

பூவேந்தித் தூவுதல்போல் பாவைத் தந்த

கண்ணதாசன் தமிழ்ஒளியார் பிறரும் உண்டே!

சாவேந்திப் போனதமிழ்ச் சுரதா வோடு

சந்தித்துப் பழகுதற்கும் வாய்த்த தாலே

பூவாலே வழியனுப்பி வைத்தாற் போல

பாவாலே தூவுகிறேன் போய்வா அய்யா!
——————————————–

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு