சுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

பாவண்ணன்


கட்டுரைகளின் அமைப்பையொட்டி இத்தொகுதி ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகள் இலக்கியம், சமூகநடப்பு, திரைப்படம் சார்ந்தவை. இவற்றைப்பற்றி முன்னுரையில் குறிப்பிடும்போது சுகுமாரன் பல கட்டுரைகள் பத்திரிகைகளின் தேவையையொட்டி எழுதப்பட்டதாகச் சொன்னாலும் தேவைக்கு எழுதிக்கொடுப்பதைக்கூட தன் மனம் ஈடுபட்ட துறைசார்ந்து மட்டுமே எழுதியிருப்பதை முக்கியமான அம்சமாகக் குறிப்பிடவேண்டும். பத்திரிகைத் துறையில் கால்வைக்கிற இடங்களில் எல்லாம் விழத்தட்டுகிற இப்பள்ளங்களில் விழாமல் கடந்துவந்திருக்கும் சுகுமாரனின் மனஉறுதி பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

முதல் பகுதியில் எட்டு கவிதைத்தொகுதிகளுக்கும் கதைநூல்களுக்கும் சுகுமாரன் எழுதிய முன்னுரைகளும் அறிமுகக்கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைத்தொகுப்புகளை ஒட்டி அவர் எழுதியுள்ள குறிப்புகளைப் படித்ததும் கவிதைகளில் சுகுமாரனுடைய எதிர்பார்ப்பு என்ன, நல்ல கவிதைகளை அவர் எப்படி வரையறுத்துக்கொள்கிறார் என்பதைக் கண்டறிய முடிகிறது. ‘சொற்களில் பொருள்படும் சொல்லைக் கடந்த இயக்கமே ‘ சுகுமாரனுக்குக் கவிதையாகப்படுகிறது. காசியபனின் ‘ராதை ‘, ‘கலங்கரை விளக்கு ‘ ஆகிய கவிதைகளையும் கலாப்ரியாவின் ‘எம்பாவாய் ‘ கவிதையையும் முன்வைத்து அவர் பகிர்ந்துகொள்ளும் வரிகள் அவருடைய பார்வையைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. நிகழ்காலக் கவிதைகளை எதிர்கொண்ட அனுபவத்தின் வழியாக சுகுமாரன் பெற்றிருக்கும் இப்பார்வை கவிதைத்துறையை நோக்கி ஆர்வமாக நெருங்கிவரும் ஓர் இளம்வாசகனுக்குத் துணையாக இருக்கும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. வாழ்வனுபவத்திலிருந்து நிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமாகாது என்று சுகுமாரன் முன்வைக்கும் கூற்றும் முக்கியமானது. தற்காலக் கவிதைகளை உள்வாங்கி மனஅனுபவமாக மாற்றிப்பார்க்க இப்பார்வை துணையாக இருக்கும். கவிதையின் அகஉலகம் பாதரசத்துளிபோல தொடும்போது உருவமழிந்து விரல் விலக்கியதும் மறுஉருவம் பெறுவதற்கு நிகரானதாக முன்வைக்கப்படும் சுகுமாரனின் குறிப்பு, படித்ததும் மனத்தில் இடம்பிடிக்கக்கூடிய ஒரு நல்ல கவிதைவரியைப்போலவே சட்டென நினைவுடன் ஒன்றிவிடுகிறது.

விடுப்பு நாளில் தாத்தா வீட்டுக்குச் சென்று திரும்பிய பேரனின் குறிப்பைப்போன்ற நெகிழ்ச்சியோடும் நெருக்கத்தோடும் எழுதப்பட்டுள்ள கட்டுரை ‘எது பஷீர் ? ‘. மூன்றரைப்பக்கம் மட்டுமே இடம்பெறக்கூடிய அக்கட்டுரை எழுப்பும் உணர்வலைகள் மறக்க இயலாதவை. அச்சந்திப்பு நிகழ்ந்த தருணம் கேரள இலக்கிய உலகில் அவரைப்பற்றிய மாற்றுக்கருத்துகள் பொய்ப்படலமாகப் படர்ந்திருந்த காலம் என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார். அவருடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களின் பதிவாக எழுதிய மகத்தான ‘மதிலுகள் ‘ நாவலை சற்றும் நாக்கூசாமல் ஆர்தர் கோஸ்லர் எழுதிய ‘நடுப்பகலின் இருட்டு ‘ நாவலின் திருட்டு என்றும் அவரை ஒரு முஸ்லிம் மதவாதி என்றும் அவதூறுகள் நிரம்பியிருந்த காலம். தம்மீது கொட்டப்பட்ட பொய்க்கருத்துகளை ஒட்டி எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் பஷீர் மெளனம் காத்தார். வேதனை நிரம்பிய மெளனம் அது. அம்மெளனத்தைச் சுட்டிக்காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு ‘சொல்லிவிட்டுப் போகட்டுமே, மனிதர்கள் என்றால் நாலு நல்லதும் சொல்வார்கள் கெட்டதும் சொல்வார்கள். நாம் நல்லதைமட்டுமே எடுத்துக்கொண்டால் போகிறது ‘ என்று பதிலுரைக்கிறார். ஆளுமை மிகுந்த மற்றொரு எழுத்தாளரான தகழியும் இன்னொரு தருணத்தில் தன்னை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஒரு விவசாயி தான் விதைக்கிற எல்லா நெல்லும் முளைக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவான் ‘ என்று சொன்னதையும் இந்தக் கருத்தோடு இணைத்துப் பார்க்கலாம். இத்தகு மெளனங்கள் படைப்பாளிகளின் மேன்மையை ஒருவிதத்தில் அதிகரிப்பதாகவே உள்ளது. தம் படைப்புகள்மீது படியும் அவதுாறுகளுக்கு விடைசொல்லிக்கொண்டும் மாற்றுத் தரப்புகளை உருவாக்கிக்கொண்டும் இருப்பதல்ல ஒரு படைப்பாளியின் வேலை. மன எழுச்சி மிகுந்த ஒரு தருணத்தில் மட்டுமே ஒரு படைப்பு உருவாகிறது. அத்தருணத்தில் தன்னை முழுக்க கரைத்து வெள்ளத்தோடு வெள்ளமாக தன் மனம் அடித்துச்செல்ல அனுமதிக்கும் படைப்பாளியை தன்னல எண்ணம் கொண்ட வாசகர்களின் திரிபுரைகள் புண்படுத்தக்கூடும். ஆனால் அவ்வுரைகளால் அதுகாறும் காலம் திரட்டி வழங்கியிருக்கும் அவர்களுடைய புகழை ஒருபோதும் களங்கப்படுத்த முடிவதில்லை. அது மட்டுமல்ல, ஒரு மூத்த படைப்பாளியைப்பற்றி புதிய தலைமுறைக்கு மாற்றுக் கருத்துகள் உருவாவது தவிர்க்கமுடியாததாகும். இன்று எதிர்முனையில் மாற்றுக்கருத்தை முன்வைக்கும் தலைமுறை பின்னகர்ந்து நாளை ஆதரவான கருத்தை முன்வைக்கும் தலைமுறை மேலெழுந்து வரக்கூடும். வாசிப்பு அனுபவங்களையொட்டி ஒரு கருத்து கடிகாரத்தின் பெண்டுலம் போல இப்பக்கமும் அப்பக்கமும் மாறிமாறிப் பயணம் செய்வது சகஜமே. தேர்ந்த படைப்பாளிக்கு இந்த உண்மை தெரிந்திருப்பதாலேயே அவர்கள் மெளனமாக இருக்கிறார்கள். ஆனால் தன்னலத்தால் உந்தப்பட்டு வேண்டுமென்றே ஓர் அவதூறை எழுப்பும்போதுதான் கொழுகொம்பற்ற கொடிபோல வேதனையில் உறைந்துபோகிறார்கள் அவர்கள்.

நோபெல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் எழுதிய படைப்புகளை அறிமுகம் செய்யும் கட்டுரை, அவருடைய புதினங்களைத் தேடிப் படித்துவிடவேண்டும் என்னும் அளவுகடந்த ஆர்வத்தை வாசகர்களிடம் உருவாக்கும் என்பது திண்ணம். ‘ஈக்களின் அரசன் ‘, ‘வாரிசுகள் ‘ ஆகிய புதினங்களைப்பற்றி சுகுமாரன் தந்திருக்கும் குறிப்பு அவர் தம் வாசிப்பின் வழியே கண்டடைந்த அனுபவமாகவே இருக்கவேண்டும். நாளடைவில் கலாச்சார குணங்கள் மங்கி கற்கால மனிதர்களின் குணங்களே மேலோங்குகின்றன. முடிவில் இவர்கள் மிருகத்தின் இயல்புகள் நிறைந்த மனிதர்களாக மாறுகிறார்கள். பிறகு தமக்குள் அடித்துக்கொண்டு மரணத்தைத் தழுவுகிறார்கள் என்னும் வரிகளை வாசித்ததும் நம் மனம் உடனடியாக ஒரு குழந்தைக்குரிய வேகத்துடன் அக்கருத்தை நாம் படித்த எல்லாப் புதினங்கள்மீதும் பிரயோகித்து விடைகளைத் தொகுத்துக்கொள்ளத் தொடங்குகிறது. வெறுப்பும் கோபமும் வெறியும் மிகுந்த ஒன்றாகவே தமிழ்வாழ்வும் அமைந்திருக்கிறது என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. மிருக குணத்தைக் கவனமாகக் கடந்து மீண்டும் திரும்ப விட்டு விடுதலையாகி நிற்கும் துறவும் பற்றின்மையும் தியாகமும் தேவைப்படுகின்றன. அப்படிப்பட்ட மனிதர்களும் தமிழ்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாத்திரங்களையும் தமிழ்இலக்கியப் பரப்பில் சந்தித்திருக்கிறோம். ஒரு மலர் மலர்வதைப்போல ஒரே கணப்பொழுதில் மனத்தில் நிகழும் ஆன்மிக மலர்ச்சி எத்தனை பேருக்குச் சாத்தியப்படும் என்பது தெரியவில்லை.

கோல்டிங் எழுதிய புதினங்களைப்பற்றிய கட்டுரையை அடுத்து இடம்பெற்றிருப்பது ஆனி பிராங்க் என்னும் யூதச்சிறுமி எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு. உலகையே குலுக்கிய புத்தகம். இரண்டாவது உலகப்போரின் சமயத்தில் நாஜிகள் நிகழ்த்திய அடக்குமுறைகளைப்பற்றியும் அக்கிரமங்களையும் நேருக்குநேர் பார்த்த ஒரு சிறுமி எழுதி வைத்துவிட்டுப் போன குறிப்புகள். வதைமுகாமில் அடைபட்டு தன் பதின்வயதிலேயே மரணத்தைத் தழுவிய அந்தச் சிறுமியின் ஒவ்வொரு வரியும் நம் மனத்தை உலுக்கக்கூடியது. மனித மனங்களில் நிறைந்திருக்கும் இருட்பகுதியை அம்பலப்படுத்தும் கோல்டிங் பற்றிய கட்டுரைக்கு அடுத்ததாகவே இக்கட்டுரையும் இடம்பெற்றிருப்பது விசித்திரமான ஒற்றுமை.

‘வாழ்வின் வேட்கை ‘ என்னும் நுாலின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் சுகுமாரன் வான்கோ என்னும் மகத்தான ஓவியக்கலைஞனின்வாழ்க்கையை மிகத் திறமையாக அறிமுகப்படுதத்தியுள்ளார். சுரங்கத் தொழிலாளிகள் குடியிருப்புக்கு அருகே ஒரு சுவிசேஷராக நியமிக்கப்பட்ட வான்கோ தனக்கு தரப்படும் எல்லா வசதிகளையும் வருமானத்தையும் அவதிப்படும் சுரங்கத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்துகொடுத்துவிட்டு அரைப்பட்டினியும் கால்பட்டினியுமாக தொழிலாளர்களிடையே வாழத்தொடங்குகிறார். அவர் இயேசுவின் போதனைகளைப் பரப்பினால் போதும், இயேசுவாக வாழ்ந்துகாட்டத் தேவையில்லை என்று திருச்சபையால் விமர்சனத்துக்கு ஆளாகிறார். இது ஒரு கட்டம். ஓவியங்களுக்கு மாடலாக நிற்பதற்குக் கண்டுபிடித்து தங்கவைக்கப்பட்ட ஏழையான கிறிஸ்டினா அந்த வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் அலுத்து விலகிவிடும்போது அவர் பெரும் துக்கத்தில் சரிந்துவிடுகிறார். இது இன்னொரு கட்டம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய அன்புமனம் யாரோ ஒருவரால் அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் உதாசீனமாகக் கிழித்தெறியப்படுகிறது. ஓவியக் கலைஞர் வான்கோவின் வாழ்க்கைச் சுருக்கத்தை ஒரு கவிதையைப் படிக்கும் மனநிலையோடு படிக்கவைக்கும் சுகுமாரனுடைய எழுத்தாற்றல் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு.

இறுதிப்பகுதியில் உள்ள நான்கு கட்டுரைகளும் மனசாட்சியுள்ள எவரையும் உலுக்கக்கூடியவை. பெத்தாபுரம் தர்கா தெருவில் தன்னுடன் தங்கிவிட்டுச் செல்லும் ஆட்களின் எண்ணிக்கைக்காக கையில் கட்டியிருக்கும் காசிக்கயிற்றில் முடிச்சிட்டு அடையாளம் வைத்துக்கொள்ளும் பெண்ணின் சித்திரம் பல கேள்விகளை மனத்துக்குள் எழுப்புகின்றன. விவசாய வளங்களால் சுகபோகமாக வாழ் ந்தவர்களால் உருவாகி காலம் காலமாக நிலவி வந்த பொருட்பெண்டிர் வாழ்க்கை ஒரு சோகமான பதிவு. ஜமீன்தார்களும் வியாபாரிகளும் சேர்ந்து உருவாக்கிய கலாச்சாரத்தில் இவர்கள் வேறு வடிவத்தில் இயங்கினார்கள். பண்ணையார்கள் காலம் இப்போது மறைந்து மண்ணாகிவிட்டது. இது ஜனநாயகக் குடிமக்கள் வாழும் காலம். அதையொட்டி பொருட்பெண்டிரின் இயக்கத்தின் வடிவமும் தகுந்த மாற்றத்தைத் தழுவிக்கொண்டுவிட்டது. இலைமறை காய்மறையாக இருந்த காமவணிகத்தை அப்பட்டமான சந்தைவணிகமாக உருமாற்றிவிட்டார்கள் ஜனநாயகக் குடிமக்கள்.

ஆதிவாசிகள் சமூக அனாதைகளாகிவிடக்கூடாது என்னும் பெருங்கனவுடன் போராடிச் சிறைசெல்லும் ஜானுவைப்பற்றிய குறிப் புகளும் ஐம்பது நாட்களை கடல் நடுவே அகப்பட்டுத் தவித்து மீண்டுவந்த மனிதர்களின் வாழும் வேட்கையை விவரிக்கும் துடிப்புமிகுந்த குறிப்புகளும் மனத்தில் இடம்பிடிக்கின்றன. கடலைப்பற்றிய குறிப்பு இடம்பெறும் நேரத்தில் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும் ‘ நாவலை நினைவுகூர்கிறார் சுகுமாரன். நாவலில் இடம்அபறும் சாந்தியாகோ என்னும் அக்கிழவனிடம் வெளிப்படும் வாழும் வேட்கையே எதார்த்த மனிதர்களிடமும் வெளிப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்கிறோம். மனிதர்கள் தோற்கடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் அழிக்கப்பட முடியாதவர்கள். அவதுாறுகள் சூழ்ந்த பஷீர்முதல் முத்தங்கா சம்பவத்தில் கைதாகிச் சிறைசெல்லும் ஜானுவரையில் எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும் மாபெரும் உண்மை இது.

(திசைகளும் தடங்களும்- சுகுமாரன். அன்னம், மனை எண்: 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613007. விலை. ரூ90 )

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்