சுகிர்தங்கள் புலரும் கனவு

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

காருண்யன்


இதயம் லயத்துடன் துடிக்க மாத்திரை
சர்க்கரை குருதியில் எகிறாமல் ஊசி
கொழுப்பைக் கொன்றோல் பண்ண கப்சூல்
கை கால் மூட்டுவலிகளுக்குத் தைலம்
உண்பது ஜீரணமாகவொரு பாயம்
உபரியாம் மூலத்துக்கும் களிம்பு

விடிந்தால் ஹொஸ்டல் பிள்ளையின்
‘தாக்குப் பிடிக்கேலாதினி ‘ என்ற கடிதமுமோ
வாடகைப்பாக்கியின் மூன்றாவது நினைவுறுத்தலோ
ஜாகையைக் காலிபண்ணச் சொல்லும் கட்டளையோ வரும்
அந்திக்குள் வரும் கடன்காரனுக்கு புதுஆறுதல்
வார்த்தைகள் தேடிக்கொண்டு இனிமேலும்
சுகிர்தங்கள் புலர்வதாங் கனவில்
இன்னமும்
வாழ்ந்திருக்க ஆசை.

சுமை

வாழ்க்கை
அப்படியொன்றும்
சுமக்க முடியாததென்றில்லை
அடியும் கண்டலும்
ரணமும் வலியும்
இருக்குந்தான்,
ஆனாலும் சுமக்கலாம்.
அதுதான்
சுமக்கிறோமே ?
—-

karunaharamoorthy@yahoo.ie

Series Navigation

காருண்யன்

காருண்யன்