சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (திரு.ராமதாஸ் மற்றும் திரு. திருமாவளவன் ஆகியோர் கவனத்திற்கு)

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

மாதவி ஸ்ரீப்ரியா


சில வாரங்களுக்கு முன் திண்ணைப் பத்திரிக்கையில் தமிழ் சினிமா, தொலைக்காட்சி உலகின் பொறுப்பற்றதன்மை பற்றியும், சினிமா நடிக, நடிகைகளின் கேலி(காலி)த்தனமான நடவடிக்கைகள்பற்றியும் நான் எழுதியது போலத்தான் அமைந்துள்ளது குஷ்பு அவர்களின் பேட்டி. ஆணோ, பெண்ணோ தான் திருமணம் செய்ய விரும்புபவள்(ன்) ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்களா என்ன ? ஒழுக்கத்திற்கும், கன்னிமைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா என்ன தமிழ் மக்கள், குஷ்பு மாதிரி கலைமாமணிகளிடம் இருந்து பாடம் கற்பதற்கு!. காதலையும், விதவை திருமணங்களையும், மணவாழ்க்கை பிடிக்காவிட்டால் அறுத்துக்கட்டும் மறுமண முறைகளையும் 600 வருடங்கள் முன்பு வரை கொண்டிருந்தவர்கள் தான் தமிழர்கள். சாதி மற்றும் வர்ணாசிரம திணிப்பிற்கு பிறகுதான் பெண்களுக்கு எதிரான பலவித கலாச்சார சீரழிவுகள் (பால்ய விவாகம், விதவை மொட்டை, சாதீய தேவதாசி முறைகள் என பலவித சீரழிவுகள்) தென்னகத்தில் என்பதை இங்கு நினைவு கூர்தல் அவசியம். இந்த கேலிக்குரிய பேட்டிக்கு, சரியாக பாடம் புகட்டுவது போல இதற்கு எதிராக தமிழ் பெண்கள் திரண்டு எழுந்து வந்திருப்பது ஒரு நல்ல அரசியல் நிகழ்வுதான் என்று தோன்றுகிறது.

சில சினிமா நடிகைகளும், இயக்குனர்களும், நாட்டிய திலகங்களும் வியாபாரத்திற்காக ஆடை குறைப்பு, அசிங்க பேச்சு, ஆபாச நடனம் ஆகியவற்றை ஆதரிப்பதோடு, இவைகளே வாழ்க்கை முறையாக அமைவதில் பெருமிதம் என நம்பும் வகையில் பேசியும் நடந்தும் வருகிறார்கள். சினிமாக்காரர்கள் பலர் தங்களின் கேலி(காலி)க்கூத்தை எல்லா மக்களும் ரசித்துக் கொண்டு இருப்பதாக நினைப்பு. இதே திண்ணைப் பத்திரிக்கையிலேயே, சின்னகருப்பன் இதெல்லாம் கலாச்சார அரசியல் (பிரதிநிதுத்துவ அல்லது புரட்சிகர அல்லது பின்னவீனத்துவ) என்பது போலவும், இது சரியா தவறா என்பது பார்க்கிறவர்களின் பார்வையை பொறுத்தது என்பது போலவும் எழுதியிருக்கிறார். இது அடிப்படையில் தவறான வாதம். இந்த சினிமாகாரர்கள் ஒன்றும் கலாச்சார புரட்சியாளர்கள் இல்லை; இவர்கள் வியாபாரிகள். செய்யும் வியாபாரத்தை சரியான முறையில் சட்ட வரம்புகளுக்குள் இவர்கள் செய்தால் யார் கேள்வி கேட்க முடியும். சினிமாக்காரர்கள், தாங்கள் வியாபாரத்தை சரி என நினைத்தால், அவர்களின் மக்கள் ரசனை பற்றிய கணிப்பு உண்மை என நம்பினால், இவர்களே முன் வந்து தணிக்கை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து ‘ஆபாச முத்திரை ‘ வாங்கி கொண்டு படங்களை வியாபாரம் செய்யலாம். இவர்களின் படைப்புகள் மேற்கத்திய நாட்டு நீலபடங்களுடன் உலக அளவில் போட்டி போட்டு, இந்தியா என்ற அகண்ட(!) பாரதத்திற்கு நல்ல அந்நிய செலாவணி (foreign exchange) இட்டுதர வழி வகுக்கும்!!!.

இவர்களுக்கு சில அரசியல்வாதிகளின் ஆதரவும், நட்பும் பக்க பலமாக இருக்கிறது. இந்த மாதிரி பேட்டி கொடுப்பது மட்டுமல்லாமல், சினிமாவில் காட்டப்படும் அத்தனை அசிங்கங்களுக்கும் எதிராக பெண்கள் நடத்தும் போராட்டத்திற்கு திரு.ராமதாஸ் மற்றும் திரு.திருமாவளவன் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

தணிக்கை அதிகாரிகளோ, மற்ற நிறுவனங்களோ இந்த சினிமாதுறைக்கு ஆதரவாக போனாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் இவர்களின் பணபலம் அப்படி.

பொதுமக்கள் இந்த மாதிரி போராட்டங்களில் ஈடுபட்டால்தான் எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பு. இந்த போராட்டத்தை தொடர்ந்து, அசிங்கமாக பாட்டெழுதும் பாடலாசிரியர்கள் (கவிமாமன்னர்கள்), பள்ளி மாணவ மாணவிகள் போல சீருடைகள் அணிந்து கொண்டு, (தருவியா, தரமாட்டியா ?) என வக்கிரமாக ஆடிப்பாடும் நடிக- நடிகைகள் (சாண(ணி)க்யா சண்டைக்கார ஹாசன்கள், காந்த்கள், குமாரர்கள்), அரசியலை சாடிக்கொண்டே அந்நியன்களையும் தொடைகளுக்கு மத்தியில் காணாமல் போகடிக்கும் ‘சங்கர ‘ இயக்குனர்கள், தொப்புளுக்கு கீழே மட்டுமே தங்கள் காமிராக்களை இயக்கும் இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், இந்த காட்சிகளையே மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்பி பணம் பார்க்கும் தொலைக்காட்சிகள், நிர்வாண நடனங்கள் நடத்தும் Bar/Hotel முதலாளிகள் எல்லாரையும் எதிர்த்து பெண்கள் போராட வேண்டும். அப்படி போராடும் பெண்களையும், குடும்பங்களையும் ஆதரிப்பது நல்ல அரசியல்வாதிகளின் கடைமை.

இவர்கள் யாராயிருந்தாலும் சரி, நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் அரசியல்கட்சிகளின் MLA, MP, மந்திரிகளாக இருந்தாலும் சரி, இவர்களுக்கு எதிராக போராட்டம் தொடர வேண்டும்.

—-

madhavisripriya@yahoo.com

Series Navigation