சிவசேனையின் வட்டார வாசனை நீங்க…

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

மலர் மன்னன்


சிவசேனை குறித்து எனக்குத் தெரிந்த விவரங்களைத் திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மும்பை வாழ் தமிழர் ஸ்ரீ கே. ஆர். மணி தெரிவித்திருந்த தமது எதிர்வினையில் இன்றைய சிவசேனையின் முகம் பற்றிக் கூடுதலான தகவல்களைத் தந்துள்ளமைக்கு நன்றி. இது சிவ சேனையைப் பற்றி மேலும் பேசும் தூண்டுதலைத் தருகிறது. இதையொட்டித் தெளிவாகவும் தேர்ந்த நடையிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக எழுதத் தெரிந்த என் அன்பு மகள் மும்பை வாழ் புதிய மாதவி என்னை மறந்துவிட்ட போதிலும் , சிவ சேனை தொடர்பாகத் தனது பார்வையை விவரித்தால் அதுவும் திண்ணை வாசகர்களுக்குப் பயன் தருவதாக இருக்கும்.

எனது கட்டுரையில் சிவசேனையின் அமைப்பு முறை, செயல்பாடு ஆகியவை குறித்து எனக்கு விமர்சனம் உண்டு என்பதைத் தொடக்கத்திலேயே மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிட்டு, நான் சிவ சேனையின் ஆதரவாளன் அல்ல என்பதையும் கவனமாகப் பதிவு செய்திருந்தேன். ஆகவே சிவ சேனை தமிழ்ப் புலிகளை ஆதரிப்பதால் மட்டும் நாம் அதனை ஆதரிக்கலாமா என்றும், இஸ்லாமிய எதிர்ப்பு மட்டும் இணையும் புள்ளியாக இருந்தால் போதுமா என்றும் அவர் என்னிடம் கேட்டதில் நியாயம் இல்லை. எனது கட்டுரையின் நோக்கம் சிவசேனையின் ஒரு கோணத்தை என் பார்வையில் தெரிந்த பிரகாரம் காண்பிப்பதேயன்றி, அதற்கு ஆதரவு திரட்டுவதல்ல. வாஸந்தியைப் போல போகிற போக்கில் காலை மிதித்துவிட்டுப் போகிற மாதிரியாக அல்லாது, சிறிது கூடுதலான கவனத்தோடு எனது அணுகுமுறையை அமைத்துக்கொண்டேன், அவ்வளவே.

சிவ சேனை வெளி மாநிலத்தவரை மும்பை மண்ணிலிருந்து வன்முறையாக விரட்டுகிறது என்கிற தகவலையொட்டி அது பற்றிய விவரங்களைத் திரட்டவே நான் அனுப்பி வைக்கப்பட்டேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தாராவியின் லட்சணத்தை அப்போது நேரில் கண்டேன். அன்று பங்களா தேஷ் என்று ஒரு நாடு இல்லை. தாராவியில் அன்று எல்லா மா னிலத்தவரும் இருந்த போதிலும், தமிழகத்தைச் சேர்ந்த முகமதியரே பெரும்பான்மையினராக இருந்தனர். தோல் பதனிடுதல், சிறிய கடை வைத்துச் சில்லறை வியாபாரம், துறைமுகத்தில் கூலி வேலை எனப் பலவாறு அவர்கள் காணப்பட்டனர். சிவ சேனையைத் தொடங்கிய பால் தாக்கரேயை இரண்டு நாட்கள் தொடர்ந்து சந்தித்தேன். தாராவியின் வெளி மா நிலத்தவரைச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பும் பின்னருமாக. மும்பை மராட்டிய மா னிலத் தலைநகராக இருந்த போதிலும் மாராட்டியரைக் காட்டிலும் வெளி மாநிலத்தவர் செல்வாக்கு அங்கு அபரிமிதமாக இருப்பதைப் பல சான்றுகளுடன் சினத்தோடு அடுக்கிய போதிலும், கள்ளக் கடத்தல் பற்றியும் அதில் தாராவித் தமிழர்களின் பங்கு கூடுதலாக இருப்பது குறித்துமே அப்போது அவர் அதிகம் வலியுறுத்தினார். வெளி மா னிலத்தவரைத் தாம் பகிஷ்கரிக்கவில்லை, அவர்களின் மேலாதிக்கத்தை மட்டுமே எதிர்ப்பதாகச் சொன்னவர், தமது கட்சியினர் ஒருவேளை இதில் சிறிது கூடுதலான உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கக்கூடும் என்றார். மக்கள் இயக்கம் என்று வரும்போது இதுபோன்ற அத்துமீறல்கள் சில சமயம் ஏற்பட்டுவிடுவது இயற்கை என்று சமாதானம் சொன்னார். நான் சரளமாக ஹிந்தியில் பேசிய போதிலும், இடையிடையிலான எனது ஆங்கிலப் பேச்சின் உச்சரிப்பைக் கவனித்து, நீங்கள் ஒரு வங்காளி என நினைத்தேன், ஆனால் ஒரு தென்னாட்டவர் எனத் தெரிகிறது; இதன் காரணமாக உங்கள் பார்வையில் பாரபட்சம் இருக்கக்கூடும் என்று வாதித்தார். நான் எவ்வளவோ மறுத்தும், ஒரு மராட்டியன் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலன்றி எங்கள் கோபத்தைப் புரிந்து கொள்ள இயலாது என்றார். கள்ளக் கடத்தலில் மராட்டியர் எவரும் ஈடுபடவில்லையா என நான் கேட்ட போது, மிக மிகச் சொற்ப அளவில் சிறிய மீன்களே உள்ளன, அவற்றைப் பெரிய மீன்கள் விழுங்கி விடாமல் வளர்த்தாலன்றி பெரிய மீன்களின் கொட்டத்தை அடக்க முடியாது என்றார். தாதாக்களிடையே மோதலை உருவாக்கி அதன் மூலமாகவே தாதாக்களின் வலிமையைக் குறைக்கும் உத்தியை மும்பை மாநகரக் காவல் துறைக்குக் கற்பிக்கும் யோசனை அன்றைக்கே அவருக்கு இருந்தது.

அரபு நாடுகளில் சவுகரியமாக உட்கார்ந்துகொண்டு, மும்பைத் திரை உலகையும் ரியல் எஸ்டேட்டையும் ஆட்டிப்படைக்கும் தாதாக்களின் கொட்டத்தை ஓரளவுக்காவது அடக்கி வைக்க இன்று சிவசேனையால் முடிந்திருக்கிறது. எனவே தான் திரையுலகினர் தமக்கு அந்த தாதாõக்களால் ஏதேனும் பெரிய சிக்கல் வரும்போது கட்சி வேறுபாடோ , மத வேறுபாடோ இன்றித் தாக்கரேயைச் சரணடைகின்றனர். தாதாக்களின் தொல்லை எல்லை மீறும் போது மும்பை மாநகரக் காவல் துறையே தாக்கரேயிடம் சென்று தனது தலைவலிக்குத் தைலம் தடவிக்கொள்கிறது.

இன்றைக்கு ஏதேனும் ஒர் அரசியல் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு முரடர் கூட்டம் அலுவலகங்களிலும் வியாபார ஸ்தலங்களிலும் ஆர்ப்பாட்டமாக நுழைந்து மிரட்டும் தொனியில் அதிகாரப் பிச்சை கேட்பது எல்லா மாநிலங்களிலும் உள்ளதுதான். மேற்கு வங்கம், கேரளம், தமிழ் நாடு முதலான மாநிலங்களில் கம்யூனிஸ்டுகளும், திமுக, அண்ணா தி முக போன்ற கட்சிகளும் இதில் மிகவும் உற்சாகத்துடன் ஈடுபடுபவைதாம். மேலும் சிவசேனையின் பல லட்சணங்களை பாட்டாளி மக்கள் கட்சி, பஹுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றிலும் காணலாம். நாடு முழுவதுமே அரசியல் மிகவும் மலினப்பட்டுப் போனமைக்கு இவை அத்தாட்சி. ஆகவே இதில் சிவ சேனை மீது மட்டும் குறை காண்பதற்கில்லை. மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மகுடத்திற்கு விசுவாசம் தெரிவித்துக் கோரிக்கை மனு அளிக்கும் மகாசபையாகத் தொடங்கிய காங்கிரஸ் காலப் போக்கில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதைப்போல, பொதுவாக வெளி மா நிலத்தவரின் கூடுதலான பிரசன்னத்தை ஆக்ரோஷத்துடன் கண்டிப்பதே நோக்கமாகக் கொண்டு பிறந்த சிவ சேனை, படிப்படியாக ஹிந்துத்துவத்தைத் தான் புரிந்துகொண்ட அளவில் வரித்துக் கொள்ளும் விதத்தில் பரிணாமம் அடைந்துள்ளது. எனினும், அடிமட்டத்தில் மட்டும் அதற்குப் பூர்வ ஜன்ம வாசனை தொடர்ந்து இருந்துகொண்டிருப்பது சாத்தியம். பால் தாக்கரே எந்தச் சமயத்தில் என்ன சொல்வார் என்பது அவருக்கேதெரியாது. ஆனால் பொதுவாக ஹிந்துத்துவம், ஹிந்துஸ்தானத்தின் ஒருமைப்பாடு ஆகியவற்றோடு தம்மை அடையாளம் காட்டிக்கொள்கிறார். அதே சமயம் ப்ரதிபா பாட்டீல் மராட்டியர் என்கிற ஒரே காரணத்திற்காக அவருக்குத் தமது சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு காட்ட வேண்டும் என்கிற அபத்தமான முடிவையும் அறிவித்துத் தமது வட்டாரப் பித்தை லஜ்ஜையின்றி வெளிப்படுத்தினார். என்னைக் கேட்டால் வெளி மாநிலத்தவர் சிவசேனையில் பெருமளவு சேர்ந்து அதன் வட்டார உணர்வு நீர்த்துப் போகச் செய்யவேண்டும் என்பேன். தலித்துகள் தமக்கெனத் தனிக் கட்சி வைத்துக் கொள்ளாமல் எல்லா அரசியல் கட்சிகளிலும் பெருமளவு சேர்ந்து அவற்றில் தமது செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற எனது கருத்தைத்தான் இந்த விஷயத்திலும் வலியுறுத்துகிறேன். தாக்கரே மிகவும் வயது முதிர்ந்து விட்ட நிலையில், வெகு விரைவிலேயே சிவசேனையின் முகம் மாறும் விதமாகப் பிற மாநிலத்தவர் அதில் அதிக அளவில் சேர்ந்து, அதன் வட்டார அடர்த்தியை நீர்த்துப் போகச் செய்வது சாத்தியமே.
ஸ்ரீ கே ஆர் மணியும் மிகவும் அறிவார்ந்த தொனியில் வெளி மாநிலத்தவர் தமது மாநிலக் கட்சிகளின் கிளையைத் தொடங்குவதை விட்டு, தாம் வாழும் மாநிலத்தில் உள்ள கட்சிகளில் சேருவது நல்லது என்னும் எண்ணம் வெளிப்படுமாறு கருத்துத் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

மேற்கு வங்கத்தில் நான் பல ஆண்டுகள் வசித்திருக்கிறேன். ஆனால் மும்பைக்கு ஏதேனும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்யும் பொருட்டு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேனேயன்றி, அங்கு தொடர்ந்து வசிக்கும் வாய்ப்பினைப் பெற்றதில்லை. ஆகவே கே ஆர் மணி விரும்புவதுபோல மும்பை அரசியல் அல்லது சமூகம் தொடர்பாகக் கூடுதலான செய்திகளைத் தர இயலாதவனாக இருக்கிறேன்.


Series Navigation

author

மலர் மன்னன்

மலர் மன்னன்

Similar Posts