சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும்

This entry is part 2 of 2 in the series 19991106_Issue

சுரேஷ்குமார இந்திரஜித்


நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், என்ற நாவல் எழுதியிருந்த டோகுடோ ஷோனின் ஞாபகமே எனக்கு வந்தது. அதனால் அவரை விசாரித்து அவர்தான் இவர் என்று அறிந்து கொண்டேன். நான் விசாரித்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதை அவர் முகம் காட்டியது. ‘நீங்கள் இந்தியாவா, ஸ்ரீலங்காவா ? ‘ என்று அவர் கேட்டார்.

ராபர்ட் அகஸ்ஸி மொழிபெயர்த்திருந்த அவரின் ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும் ‘ நாவல் என்னை மிகவும் ஈர்த்திருந்தது. ஒரு சிறுமியின் இயற்கையான அறிவுக்கூர்மையும் சிருஷ்டிகரமும் அவரின் பெற்றோர், சுற்றத்தார், பள்ளி ஆசிரியைகள் ஆகியோரினால் நாசமாக்கப்படுகின்றது என்பதை வெவ்வேறு கோணங்களில் அந்நாவலில் அவர் சித்தரித்திருக்கிறார். நாவலில் வரும் சிறுமிக்குப் பெயர் கிடையாது. அவள் மனம் இயற்கையாக கட்டமைக்கப்படுவதைச் சுற்றியுள்ளவர்கள் காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கருத்துக்கள் ஆக்கிரமிப்பதையும், பள்ளிக்கூடங்கள் பயத்தை உருவாக்கி மதத்தைச் சாரும் மனத்தை உருவாக்குவதையும் ஆழமான பார்வையுடன் பார்த்திருந்தார். வீட்டின் பின்புறத்திலுள்ள நந்தவனத்தில் திரியும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அவர் சித்தரிக்கும் இடங்களில் இயற்கையான கவித்துவம் வெளிப்பட்டிருந்தது.

நான் டோகுடோ ஷோனிடம் இந்த நாவலை சிலாகித்துப் பேசினேன். தான் எழுதிய நாவல்களில் பிடித்தமான நாவலாக இதைக் கருதுவதாகவும், ஆனால் பெரும்பாலோர் ‘சுழலும் காலம் ‘ என்ற நாவலையெ முக்கியமானதாகச் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் எழுத்துத்துறைக்கு வந்த விதம் பற்றிக் கேட்டேன். அவர் கூறியதின் சுருக்கத்தைக் கூறுகிறேன்.

நான் எழுத்தாளர் யாசுனாரி கவாபாட்டாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதன் விளைவாக எழுத முற்பட்ட எனக்கு என் ஆசிரியர் கரஷமாவின் வழிகாட்டல் உதவியாக இருந்தது. அவர் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் என் விருப்பத்துக்குரியனவாக இருந்தது. அவருக்கும் தெரிந்த எந்த ஒரு விஷயம் பற்றியும் கூர்மையான பார்வையுடன் வித்தியாசமாகப் பேசுவார். நான் எழுதியிருந்த கதையை முதலில் அவரிடம் காட்டியதும், அவர் அதை படித்துவிட்டு ‘இந்த கதையைக் கிழித்து உன் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மலர்ச்செடியின் கீழே புதைத்துவிடு ‘ என்று கூறினார். சில நாட்கள் கழித்து என்னைக்கூட்டிக்கொண்டு மியூசியம் சென்றார். அங்கு இருந்த சிலைகள் அவர் சுட்டிக்காட்டிய பின்னே அவற்றினுடைய சிருஷ்டிகரம் என்னைத் தாக்கியது. அவர் கூடச் சென்று கொண்டிருக்கும்போது திடாரென்று ஒரு மரத்தையோ, செடியையோ கல்லையோ காட்சியையோ சுட்டிக் காண்பித்துப் பார்க்கச் சொல்லுவார். அவற்றின் அழகு என் மனத்தில் பதியத்தக்கதாக இருக்கும். அவர் கூட ஒரு நாள் சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு வாடகைக்கார் டிரைவர், அவரைப் பார்த்து ஓடிவந்தான். அந்த டிரைவர் தன்னுடைய குடும்ப விவகாரங்களை ஏற்கெனவே இவருக்குத் தெரிவித்திருப்பான் போலிருக்கிறது. மனைவியை இழந்த இரண்டு குழந்தைகளையுடைய அவனை மறுமணத்திற்கு உறவினர்கள் வற்புறுத்திக்கொண்டிருந்த போதிலும் மறுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. நோயுற்ற மனைவி உயிரோடு இருந்தவரை அவளது நலனுக்காகவும் தற்போது குழந்தைகளின் நலனுக்காகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளவனாகத் தோன்றினான். தியாகியாக பாவித்து இயங்கிக் கொண்டிருப்பது மனத்திற்கு சோர்வைத்தரும் என்றும், உட்புறமாக மறுமணத்தின் விருப்பத்தை மனம் வற்புறுத்திக்கொண்டேயிருப்பதால் வெளிப்புறத்தில் மனம் அதை மறுத்துக்கொண்டேயிருக்கிறது என்றும், மறுமணம் செய்வதின் மூலம் மனம் சோர்விலிருந்து விடுதலையடைந்து உற்சாகமுறும் என்றும் ஆனால் மறுமணத்திற்குப் பின்னாலும் ஏதாவது ஒரு தியாகத்தைத் தேடி மனம் அலைந்தால் அதை அவன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கரஷ்மா கூறினார்.

அவருக்கு பல வகையான மனிதர்கள் நண்பர்களாக இருந்தனர். எவ்வாறு இத்தனை வகையான மனிதர்களிடம் இவர் நட்புறவு கொண்டிருக்கிறார் என்று நான் ஆச்சரியமடைவதுண்டு. சமூகத்தின், அந்தஸ்து மிக்க மனிதர்கள், வட்டாரப் போக்கிரிகள், சிறு வியாபாரிகள், கெய்ஷா பெண்கள் என்று அவருடைய உலகம் பெரியதாக இருந்தது. ஒரு நாள் நான் அவரை காணச் சென்றிருந்தபோது வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். ஒரு கெய்ஷா பெண்ணைப் பார்க்கச் செல்வதாகக் கூறி, நான் மறுத்த போதும், விடாது என்னையும் கூட்டிச் சென்றார். கரஷீமா மீது மிகுந்த மரியாதையுடையவளாக அவள் தோன்றினாள். அவளுக்கு லெளகீகக் காரியங்களில் இவர் பல உதவிகள் செய்திருக்கிறார் என்று என்னால் யூகம் செய்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய பேச்சு, பிரதானமாக குழந்தைகளுக்கும், பெரியவர்கள், சூழல், சமூகம் ஆகியவற்றிற்கும் இடையேயான உறவைப் பற்றியதாக இருந்தது. ஒரு சுற்றுலா மையத்தில் மரங்கள் சூழ்ந்திருந்த குளக்கரையில் சிறுமியான தன் மகளுடன் அமர்ந்திருந்த போது, பளபளக்கும் நீரைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுமி கையில் இருந்த சிறு தட்டை அக்குளத்தில் மிதக்கும் படியாக வீசி எறிய வேண்டும் போல் இருப்பதாகத் தெரிவித்த சம்பவத்தை அப்பெண் கூறினாள். இதே போல் இன்னொரு நாள் டேபிள் வெயிட்டான கண்ணாடி கோளத்திற்குள்ளே செல்லவேண்டும் போல் இருப்பதாகக் கூறியதாகவும் மற்றொரு நாள் வண்ணத்துப் பூச்சிகளுடன் பறந்து திரியும் கனவு கண்டதாகவும் கூறியதாகவும், இவை எல்லாம் மனத்தின் சிருஷ்டிகர அடையாளங்கள் என்றும், இவற்றை நாசப்படுத்தும் சக்திகளே குழந்தைகளைச் சுற்றிலும் உள்ளதாகவும் அந்தப்பெண் தெரிவித்தாள். அனைத்து விஷயங்களிலும், பெரியவர்களின் கருத்து திணிக்கப்படும் நிலையில், குழந்தைகளின் இயற்கையான கூர்மை அறிவு நிலையில் சிதைக்கப்படுவதாக கரஷ்மா கூறினார். அந்தப்பெண்ணின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. இது நடந்த பலகாலம் ஆகிவிட்டது. கரஷ்மாவும் இறந்து விட்டார். இந்த உரையாடல் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த சிலபொருட்கள் அவற்றின் வடிவம், நிறம், அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணை ஆகியவை தற்போதும் அப்படியே நினைவில் உள்ளன. எழுத ஆரம்பித்தபின் இந்த உரையாடல் என்னை தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. கலை வடிவமாக எழுத இயலாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். தொந்திரவை தாள இயலாமல் எப்படியோ எழுத ஆரம்பித்து முடித்துவிட்டேன். அதுதான் நீங்கள் விரும்பும் ‘சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் ‘ என்ற நாவல்.

– டோகுடோ ஷோனின் கூறியதின் சுருக்கத்தை மேலே கொடுத்திருக்கிறேன். அவரின் தொழில் பற்றி விசாரித்ததற்கு ஒரு எலக்ட்ரானிக் கம்பெனியில் பணிபுரிவதாகக் கூறி அது சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கூறினார். அதில் எனக்குச் சிறிதளவிற்கு மேல் எதுவும் விளங்கவில்லை. தவிர அவை இந்தக் கதைக்கு அவசியமானதுமல்ல.

***

மறைந்து திரியும் கிழவன், சிறுகதைத் தொகுப்பு 1993

***

திண்ணை நவம்பர் 6, 1999

***

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< உன் கவிதையை நீ எழுது

Scroll to Top