சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- காலனியாதிக்கமா, தொழில் மறுமலர்ச்சியா?

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

செல்வன்


சிறப்பு பொருளாதார மண்டலங்களால் நாடு மீண்டும் காலனிமயமாக்கப்படுவதாக ஒரு குரல் எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையையே இரண்டு கூறுகளாக பிரித்துள்ள இந்த பொருளாதார மண்டலங்கள் மக்களுக்கு நன்மை பயப்பவையா இல்லை காலனிமயமாக்குபவையா?

சில புள்ளிவிவரங்களை பார்ப்போம்

மொத்தம் அனுமதிக்கப்பட்ட சி.பொ.ம: 237 (19 மாநிலங்களில்)
இன்னும் அனுமதி வேண்டி காத்திருப்பவை : 500
கையகப்படுத்தப்பட்ட நிலம்: 34,861 ஹெக்டேர்

கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பலவும் செழிப்பான விவசாய நிலங்கள் என்பது இதில் குறிப்பிடவேண்டிய விஷயம். இதுவரை ரயில்வே போன்ற அரசு திட்டங்களுக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருப்பினும், தனியார் தொழிற்சாலைகளுக்கு மார்க்கட் விலையை விட மிக குறைந்த விலையில் அரசே விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி தருவது என்பது சட்டப்படி நடக்கும் பகல் கொள்ளை என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் நிலவும் பத்திரப்பதிவு சட்டங்களால் அனைவரும் நிலங்களை குறைத்தே மதிப்பிட்டு பதிவு செய்திருப்பர்.அப்படி இருக்கும்போது ரிலையன்ஸ் போன்ற கம்பனிகளின் சிறப்பு பொருளாதார மையங்களுக்கு அரசே ஏன் குறைந்த விலையில் ஏழைகளின் நிலத்தை கையகப்படுத்தி தரவேண்டும்? இதில் அரசியல்வாதிகளுக்கு போகும் கமிஷன் எவ்வளவு எனும் கேள்விகள் கண்டிப்பாக எழும்.

சி.பொ.மையங்கள் அமுல்படுத்தப்படும் முறை தவறு என்றபோதிலும் சரியான முறையில் அதை அமுல்படுத்தினால் மிகவும் நல்ல விளைவுகள் ஏற்படும்.இந்தியாவில் தற்போது 15 சி.பொ.மையங்கள் உள்ளன (1). இவற்றால் 18309 கோடி ரூபாய் வரை ஏற்றுமதி நடந்து 100,650 வேலைவாய்ப்புகள் உருவாயுள்ளன. இதில் 32,185 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(2)

இனி அமையவிருக்கும் சிறப்பு பொருளாதார மையங்களால் 250,000 லட்சம் கோடி முதலீடு நாட்டில் செய்யப்பட்டு, 30 லட்சம் வேலைகள் புதிதாக உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோகியா தமிழ்நாட்டில் அமைத்துள்ள சி.பொ.மையத்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த 3700 பேர் வேலை செய்கின்றனர்.இப்போது அனுமதி கேட்டுள்ள பிராண்டிக்ஸ் நிறுவனம் 400 பெண்களை வேலைவாய்ப்பில் பயிற்றுவித்து கொண்டிருக்கிறது.இவர்களில் 70% பேர் பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்தை சேர்ந்த பெண்கள்.(3)
சிறப்பு பொருளாதார மையங்களால் சீனா அருமையாக வளர்ச்சி அடைந்தது.தற்போது திட்டமிட்டபடி சி.பொ.மையங்கள் அமைந்தால் மத்திய அரசுக்கு 150,000 கோடி ரூபாய் வரி வருமானம் கிடைக்கும்.

சி.பொ.மையங்களுல் இந்திய அரசின் சட்டங்கள் செல்லாது என்று ஒரு பூச்சாண்டி கிளப்பப்படுகிறது. இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்று மத்திய அரசு மறுக்கிறது. இந்தியாவில் அமுலில் இருக்கும் அனைத்து தொழிலாளர் நல சட்டங்களும் சி.பொ.மையங்களிலும் அமுலில் இருக்கும், தற்போதும் இருக்கிறது என்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.(4)

சீனாவில் கிட்டத்தட்ட இலவசமாகவே நிலம் இம்மாதிரி சி.பொ.மையங்களுக்கு வழங்கப்படுகிறது. இம்மாதிரி மையங்களுக்கு வரிசலுகையும் அளிப்பது உலகெங்கும் இருக்கும் நடைமுறைதான்.

சி.பொ.மையங்களில் மதுவிற்க குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளது பெரிய சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டு பிசுபிசுத்து விட்டது. இம்மாதிரி சின்ன, சின்ன சலுகைகளை கூட தொழிலதிபர்களுக்கு வழங்குவதை எல்லாம் அரசியலாக்குவதை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தின் விளைவாக இப்போது சி.பொ.மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி நிறுத்தம் செய்துள்ளது.இதை விட நிலங்களை அரசே கையகப்படுத்துவதை நிறுத்தியிருந்தால் சிறப்பான முடிவாக இருக்கும்.குஜராத்தில் அதுதான் நடந்தது.33 சி.பொ.மையங்களுக்கு அனுமதி அளித்த மோடி நிலங்களை காசு கொடுத்து நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால் குஜராத்தின் கடலோரத்தில் வீணான தரிசு நிலங்களை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளன அங்கிருக்கும் சி.பொ.மையங்கள்.இதனால் அங்கிருக்கும் மக்களுக்கு நல்லதுதான் நடந்துள்ளது.

மத்திய அரசின் இந்த பின்வாங்கலால் இன்ஃபோஸிஸ், விப்ரோ, சத்யம், ஹெச்.சி.எல் போன்ற 41 கம்பனிகள் பாதிப்படைந்துள்ளன. இவை 5000 ஹெக்டேர் நிலத்தை விலை கொடுத்து வாங்கியுள்ளன. கிட்டத்தட்ட 40,000 கோடிகளை இத்திட்டத்தில் முதலீடும் செய்துள்ளன. (5) தமிழ்நாட்டில் திருப்பெரும்புதூரில் 1 லட்சம் ஏக்ராவில் 20,000 கோடி செலவில் மோட்டொரோலா போன்ற நிறுவனங்கள் பங்குபெறும் சி.பொ.மையமும் பாதிப்படைந்து நிற்கிறது, (6)
வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை எனும் மனோபாவத்தை கைவிட்டு நன்றாக திட்டமிட்டு பணிகளை செய்வதே மத்திய அரசுக்கு பெருமை சேர்க்கும்.குஜராத் மாடலில் சி.பொ.மையங்களை அமைப்பது தான் மத்திய அரசு தற்போது செய்யக்கூடியது.விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை கண்டிப்பாக அரசு நிறுத்த வேண்டும்.அதற்காக சி.பொ.மையங்களையே ஒட்டுமொத்தமாக அனுமதி நிறுத்தம் செய்வது நல்ல விளைவுகளை கண்டிப்பாக ஏற்படுத்தாது.

1) http://en.wikipedia.org/wiki/Special_economic_zones#List_of_SEZs_in_India

2) http://www.sezindia.nic.in/sez2.asp

3) http://www.outlookindia.com/full.asp?fodname=20070212&fname=Cover+Story+%28F%29&sid=4

4) http://www.indianexpress.com/story/22183.html

5) http://www.indianexpress.com/story/22066.html

6) http://www.indianexpress.com/story/22043.html


செல்வன்

www.holyox.blogspot.com

www.groups.google.com/group/muththamiz

Series Navigation

செல்வன்

செல்வன்