சிறகுகள் முளைத்து..

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

ஜோசப்


“அப்பா உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று தன் முன்னால் வந்து நின்ற மகனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார் ராகவன்.

“இப்பவா ? சாயந்திரம் பார்க்கலாம்.” ராகவன் அலுவலகத்திற்கு புறப்படும் அவசரத்திலிருந்தார். “சாவி, டிஃபன் எடுத்து வை. டைமாயிருச்சி.” தன் மனைவி சாவித்திரி எப்போதும் போல் அன்றும் தாமதம் செய்துவிடக்கூடாது என்ற சிந்தனை அவருக்கு. ‘இன்னும் ஒரு வாரத்தில் கம்பெனியின் வருடாந்திர ஜெனரல் பாடி மீட்டிங் இருப்பதால் நிறைய விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு. நாளைக்கு சீக்கிரமே வந்திடுங்க ராகவன் ‘ என்று நேற்று அவருடைய பொதுமேலாளர் அவரிடம் சொல்லியிருந்தார்.

இன்னமும் நின்றுக்கொண்டிருந்த மகனைப் பார்த்து, “எனிதிங் சீரியஸ் பிரசாந்த் ?” என்றவாறு உடை மாற்றத் துவங்கினார்.

“யெஸ் டாட். இட் ஈஸ் சீரியஸ்.”

“சரி. சுருக்கமா சொல்லு.”

“டாட். நான் தனியா போக முடிவு செஞ்சிருக்கேன். ஆஃபீஸ் பக்கத்திலேயே ரூம் பாத்திருக்கேன்.”

ஷூவும் சாக்ஸுமாக கட்டிலில் அமர்ந்தவர் திடுக்கிட்டு நிமிர்ந்து மகனைப் பார்த்தார். “வாட் ? என்ன சொல்றே ?” என்றவர் அவனை மேலே பேசவிடாமல் கையை உயர்த்தி தடுத்தார். “ஒகே, ஓகே, இட் ஈஸ் சீரியஸ். சோ, சாயந்திரம் பேசலாம். லீவ் மி அலோன் நவ். ப்ளீஸ். எனக்கு இன்னைக்கி ஒரு முக்கியமான வேலையிருக்கு. ஐ டோன்ட் வான்ட் டு பி டிஸ்ட்ராக்டட்.”

பரபரப்புடன் டைனிங் டேபிளுக்கு வந்தவர் மனைவியைக் காணாமல் “சாவித்திரி நான் சாப்பாட்டை ஆஃபீஸ்ல பாத்துக்கறேன். எனக்கு நேரமாச்சு.” என்றவாறு மனைவியின் பதிலுக்கு காத்திராமல் காரை ஸ்டார்ட் செய்து புறப்பட்டு போனார்.

தன் மகனின் இந்த முடிவுக்கு காரணம் என்னவாயிருக்கும் என்பதை யோசித்து பார்க்க முடியாதபடி சாலையில் வழக்கத்திற்கும் கூடுதலாக வாகன நெரிசல் இருந்ததால் வாகனத்தை செலுத்துவதில் அதிக கவணம் செலுத்த வேண்டியிருந்தது.

நாட்டின் பல பாகங்களிலும் கிளைகளுடன் பரந்து விரிந்திருந்த அந்த கம்பெனியின் சென்னை பிராந்திய அலுவலகத்தின் தலைவர் என்ற முறையில் அவருக்கு மிக அதிகளவிலான பொறுப்புகள் இருந்தன. அதுவுமல்லாமல் இன்னும் சிலநாட்களுள் நடக்கவிருந்த ஜெனரல் பாடி மீட்டிங்கின் பொறுப்பாளராக அவர் நியமிக்கப் பட்டிருந்ததால் அவருக்கிருந்த வேலைப் பளு இன்னும் கூடியிருந்தது கடந்த சில நாட்களாக.

அலுவலகத்தில் நுழைந்ததிலிருந்து தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்களில் பங்குகொள்ள வேண்டியிருந்ததால் வீட்டில் அன்று காலை தன் மகனுடன் நடந்த உரையாடலையும் மாலையில் அவனை சந்திப்பதாக சொன்னதையும் மறந்தே போனார்.

ஆகவே அன்று மாலை ஏழு மணியளவில் வீட்டிலிருந்து தொலைப் பேசி என்று அவருடைய உதவியாளர் அறிவித்த போதுகூட ‘அப்புறம் திருப்பி கூப்பிடறேன்னு சொல்லிடுங்கோ ‘ என்று மறுத்துவிட்டார். அவருடைய அந்த செயல் எத்தனை எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தபோகின்றன என்பதை அறியாதவராய்.

“ஓகே, ராகவன் இன்னைக்கி ராத்திரியெல்லாம் நாம உக்காந்தாலும் ஏ.ஜி.எம் வேலைகள் முடிய போறதில்லை. சோ, நாளைக்கு பார்க்கலாம். குட் நைட்.” என்று களைப்புடன் இரவு பத்து மணியளவில் பொதுமேலாளர் கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததும் அலுவலகத்திலிருந்த எல்லோரும் பரபரப்புடன் கிளம்ப ராகவனுக்கு அப்போதுதான் வீட்டில் அன்று காலையில் நடந்தவை நினைவுக்கு வந்தன. “மை காட் பிரசாந்தை மீட் பண்றேன்னு சொல்லியிருந்தேனே..” என்ற பரபரப்புடன் புறப்பட்டு அடுத்த அரை மணியில் தன் வீட்டையடைந்தார்.

காரை போர்டிகோவில் விட்டு விட்டு இறங்கியவர் வீட்டினுள் இன்னும் விளக்கு அணைக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். சாதாரணமாக அவருடைய மணைவி அவர் வரும் வரைக் காத்திருந்து அவர் கண்டதில்லை.

ஆனால் இன்றோ சாவித்திரி டைனிங் டேபிளிலேயே அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். கைப்பெட்டியை சோபாவில் வீசியெறிந்த ராகவன் டைனிங் டேபிளை நெருங்கி மனைவியின் தோளைத் தொட்டார். திடுக்கிட்டு எழுந்த சாவித்திரி கோபத்துடன் அவரைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.

“என்ன சாவித்திரி ஏன் இன்னும் தூங்காம இருக்கே ?”

“எப்பிடிங்க தூக்கம் வரும் ? அதான் ஊர்ல இல்லாத ஒரு பிள்ளைய பெத்து வச்சிருக்கீங்களே ?”

“இங்க பார் சாவி. எனக்கு பசி உயிர் போகுது. முதல்ல சாப்பாட்டை எடுத்து வை நான் கை கழுவிக்கிட்டு வரேன். முடிச்சிட்டு பேசலாம்.”

“ஆமாம். உங்களுக்கு உங்க சாப்பாடு, தூக்கம், இரண்டுமில்லேனா உங்க ஆஃபீஸ். வேற என்ன தெரியும் உங்களுக்கு ?” முனுமுனுப்புடன் உணவு பரிமாறிய மனைவியைப் பொருட்படுத்தாமல் அவர் உண்டு முடித்து வாஷ்பேசினில் கை கழுவிக்கொண்டு சோபாவில் சென்றமர்ந்து மனைவியை அழைத்தார்.

“வா, இங்க வந்து உக்காரு. விஷயத்தை சொல்லு.”

“என்னத்த சொல்ல ?” என்றவாறு சலிப்புடன் வந்தமர்ந்த சாவித்திரி கையிலிருந்த பேப்பரை அவர் கையில் கொடுத்தாள். “உங்க பிள்ளை லெட்டர் எழுதி வச்சிட்டு வீட்டை விட்டு வெளியேறிட்டான். ஏங்கிட்ட கூட சொல்லிக்கலை.”

“நீ எங்க போயிருந்தே ?”

“நான் எங்க போக ? வீட்டுக்குள்ளாறத்தானிருந்தேன். நான் சமையல்கட்டுல இருந்தப்போ இந்த காய்தத்தை டைனிங் டேபிள்ல வச்சிட்டு போயிருக்கான்.”

“நீ ஏன் இதை உடனே எனக்கு போன் பண்ணி சொல்லலே ?”

“சும்மாயிருங்க வயித்தெரிச்சலை கிளப்பாம. ஆறு மணிக்கு போன் பண்ணா உங்க பி.ஏ. எடுத்துட்டு ‘சார் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கார், இருங்க கூப்பிடறேன் ‘னு போனான். பிறகு வந்து நீங்க கூப்பிடுவீங்கன்னு சொல்லிட்டு வச்சிட்டான். என்ன மீட்டிங்கோ, என்ன எழவோ. வீடே பத்தியெரிஞ்சாலும் உங்க பாழாப்போன மீட்டிங் தானே உங்களுக்கு முக்கியம்.”

“சரி, சரி ஒப்பாரி வைக்காதே. என்ன எழுதியிருக்கான் இந்த லெட்டர்லே நீ படிச்சியா ?” என்றார் லெட்டரைப் பிரித்தவாறே. பிறகு தான் தன்னுடைய கேள்வி முட்டாள் தனமானது என்பதை உணர்ந்தார்.

“என்னத்தைப் படிக்கிறது ? அவன் நான் படிக்கக்கூடாதுன்னு தானே இங்கிலீஸ்லே எழுதியிருக்கான் ? எல்லாம் திமிரு. என்னைக்காவது என்னை அவன் கால் தூசுக்கு மதிச்சிருக்கானா ? எல்லாம் நீங்க குடுக்கற எடம்.”

“இங்க பார் சாவி. மணி இப்பவே 12.00. நீ போய் படு. காலைல பேசிக்கலாம். எங்க போயிருப்பான். காலைல நான் போகும் போதே சொன்னான் ‘நான் தனியோ போகப்போறேன் ‘னு. உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன். அவன் ‘கம்பெனிக்கு பக்கத்திலேயே ரூம் பார்த்திருக்கேன் ‘னு சொன்னான். நாளைக்கு போன் பண்ணி பேசிக்கலாம். நீ போய் படு.”

“அது சரி. அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் திட்டம் போட்டாங்களா. நான் ஒரு கூறு கெட்ட சிறுக்கி. இதைப் புரிஞ்சிக்காம இவ்வளவு நேரம் மனசைப் போட்டு வருத்திக்கிட்டு… மகராசனா போய் தூங்குங்க. நீங்களாச்சி உங்க பிள்ளையாச்சி.. நான் எதுக்கு நடுவுல..” தூக்கக் கலக்கத்தில் தனக்குள்ளே பேசிக்கொண்டு தன் படுக்கையறையை நோக்கிச் செல்லும் தன் மனைவியைப் பொருட்படுத்தாமல் மாடியேறி தன் படுக்கையறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு படுக்கையை ஒட்டியிருந்த டேபிளிலமர்ந்து மகனின் கடிதத்தைப் பிரித்தார்.

‘டியர் டாட்..

நான் இன்று காலையில் உங்களிடம் சொன்னதைப் பற்றி யோசிக்க உங்களுக்கு இன்று முழுவதும் நேரம் கிடைத்திருக்காதென்று எனக்கு தெரியும். இன்னைக்கி மட்டுமல்ல டாட், என்னைக்குமே என்னுடைய உணர்ச்சிகளை புரிஞ்சிக்க உங்களுக்கு நேரம் கிடைச்சதில்லையே.

நான் காலேஜ் முடிக்கற வரைக்கும் என்னை ஹாஸ்டல்ல போட்டாங்க.. போட்டுட்டாங்க டாட்.. அதான் சரியான வார்த்தை. என்ன ஹாஸ்டல்ல சேர்த்தீங்கன்னு கூட என்னால சொல்ல முடியலை. போட்டுட்டாங்க, ஒரு பொருளைப் போடற மாதிரி – லைக் ஸ்டோரிங் குட்ஸ் இன் எ குடெளன். என்னை நீங்க ஹாஸ்டல்ல இருந்த போது எப்பவாவது ஒரு நாள் சடங்குக்காக போன் பண்றது என்கிறதைத் தவிர வேற என்ன செஞ்சிருக்கீங்க ?

நீங்க ஒரு அப்பாவா நான் கேட்காமலேயே என்னுடைய தேவைக்கும் அதிகமா பணத்தை மாசாமாசம் அனுப்பி வச்சீங்க. ஆனா அதுவல்ல நான் எதிர்பார்த்தது. பாசம் டாட், பாசம். நான் உங்களைப் பார்க்கணும்னு வீட்டுக்கு போன் பண்ணப்பல்லாம் நீங்க பம்பாய் போயிருக்கீங்க, கல்கட்டா போயிருக்கீங்கன்னுதான் அம்மா சொல்வாங்களே தவிர ஒரு முறைக் கூட நீங்க வீட்ல இருந்ததா நான் கேட்டதில்லையே. பாவம் அம்மா, அதனால தானோ என்னவோ ஏறக்குறைய ஒரு சைக்கோ மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

போன அஞ்சாறு மாசமா நான் வீட்ல இருந்து அவங்கக்கிட்ட பட்ட பாடு இருக்கே ஹாஸ்டலே மேல் போலிருக்கேன்னு என்ன நினைக்க வச்சுருச்சு. சாரி, டாட். இனிமேலும் என்னால வீட்ல இருக்க முடியாதுன்னு தான் இந்த முடிவெடுத்தேன்.

நீங்க என்னைக்கு வேலைப் பளுவிலிருந்து விடுபடறீங்களோ அன்னைக்கு மறுபடியும் வீட்டுக்கு வர்றதைப் பற்றி யோசிக்கலாம். பை டாட்.

நீங்க காலைல எங்கிட்ட சொன்னதையே இப்ப நான் உங்கக்கிட்ட சொல்றேன் டாட், “ஜஸ்ட் லீவ் மி அலோன்.” என்னைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணாதீங்க.

ஒன் மோர் திங் டாட். நான் நீங்க நினைக்கிறா மாதிரி சென்னையில இல்லே. அந்த வேலையை இன்னைக்கிதான் ரிசைன் பண்ணேன். நார்த்துக்கு போறேன் டாட். எங்கேன்னு கேக்காதீங்க. நானா எப்போ உங்களுக்கு சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்றேன். ஐ ஃபீல் லைக் எ ஃப்ரீ பேர்ட், லேர்னிங் டு ஃப்ளை. பை டாட். ஆல் தி பெஸ்ட்.. ஐ ஃபீல் ஸாரி ஃபார் மம். டெல் ஹர் தட் ஐ வில் ஆல்வேஸ் லவ் ஹர். ‘

கடிதத்தைப் படித்து முடித்த ராகவன் பெருமூச்சுடன் அதை மடித்து டேபிளில் வைத்துவிட்டு லைட்டை அணைத்தார்.

படுக்கையில் படுத்து வெகு நேரம் உறக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தார்.

****

tbrjoseph@csb.co.in

Series Navigation

ஜோசப்

ஜோசப்