This entry is in the series 20040722_Issue

தீபம்கோபி


நான்படிக்க வசதியில்ல
நாலெழுத்து தெரியவில்ல
எம்புள்ள எனைப்போல வேண்டாமுன்னு
கான்வெண்டு சேர்த்துவிட்டேன்
கனவுகளை சேர்த்துவெச்சேன்….!

புளியடைச்ச பானைபோல
‘வேனு ‘க்குள்ள உன்னைவெச்சு
பள்ளியனுப்ப மனசில்ல….

பொட்டிபோல அடுக்கடுக்கா
‘ஆட்டோ ‘வுல அடைச்சிவெச்சி
வழியனுப்ப ஆசையுமில்ல….

பொதிமூட்டை நீ சுமந்தா
பொன்மேனி நோகுமுன்னு
கால்கடுக்க நான்சுமந்து
கண்மணிய அனுப்பிவெச்சேன்!

உச்சிவெயில் நேரத்தில
ஊரழுத சத்தம்கேட்டு
பதறித்துடிச்சு நான்பார்க்க
பள்ளிக்கூடம் பஸ்பமாச்சு….!

ஓலத்தின் உச்சியில
என்னுசிரை நான்தேட…
பார்த்து பார்த்து நானெடுத்த
பாலியஸ்டர் சட்டையோட
எம்பட்டாம்பூச்சி பொசுங்கிப்போச்சு..
என் ஜீவனெல்லாம் அடங்கிப்போச்சு….!

பாடம்படிக்க போனபுள்ள
பாடமாய் ஆனதென்று
எல்லோரும் எனைத்தேற்ற
பிஞ்சி உசிரு பிரிஞ்ச இடம்பார்த்து
என்நெஞ்சு பதறுதடி….

நடந்து,ஓடி,சிரிச்சி,விளையாட்டா
நீ வீட்டுக்குள்ள வெச்சதெல்லாம்
வெறிச்சி என்னைப்பார்க்குதடி….
சின்னபுள்ள….!

– தீபம்கோபி – சிங்கப்பூர்.
—-
dewwinds@yahoo.com

Series Navigation