சித்ர(தே)வதை

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

தி. கோபாலகிருஷ்ணன்


சன்னல் கதவை அறைந்து மூடேன்
தெருவில் தோழியுடன் சத்தமாய் சிாியேன்

ஒப்பனையால் முகம் மூடி
உதட்டுச் சாயம் பூசி
உள்ளாடை தொிய உடுத்து
ஒரு நாளாவது வாயேன்

உள்ளம் போல் வெள்ளையிலும்
உடலே போல் மெல்லிய வண்ணங்களிலும்
உடுத்தாமல்
பளபளக்கும் உடைகளில் உலவேன்

பட்டாம் பூச்சிகளை ரசிக்காமல்
பட்டுப் பூச்சிகளை நேசிக்காமல்
பளபளக்கும் பட்டுடுத்தி
பகட்டி உலவேன்

நடைபாதை அழுக்குப் பெண்ணை
ஏளனமாய்ப் பாரேன்

பிச்சைக்காரனை
திட்டி அனுப்பேன்

வாிசை வாிசையாய் வளர்த்திருக்கும்
பூச்செடிகளுக்கு
ஒரு பொழுதாவது
நீரூற்றாமல் வாடவிடேன்

செடியிலேயே மலர்களை
மூக்கால் உரசி முகராமல்
கையில் பறித்து
கசக்கி முகரேன்

கைக்கெட்டும் மாந்தளிரை
கிள்ளி வீசேன்

ரோஜா இதழ்களைப்
பிய்த்து எறியேன்

தேன் கூட்டை
மற்றவாிடமிருந்து
மறைத்துக் காக்காமல்
காட்டிக் கொடுத்து
கலைத்துச் சுவையேன்

பழம் கொறிக்கும்
அணிலை விரட்டேன்
காகத்தை அழைக்காமல்
கல் எறிந்து விரட்டேன்
வலிக்குமளவுக்கு ஒருமுறையாவது
அந்தப் பசுங்கன்றை அடியேன்

கூந்தலைக் கலைத்து
யாரோ குழந்தை இழுக்க
வலியால் விழி பளபளக்க
சிாிக்காமல்,
கடிந்து கொள்ளேன்

காரணமின்றி அம்மா
கடிந்து கொண்டால்
வருத்தப் படாமல்
கோபப்ப்டேன்

பிறர் குழந்தையிடம்
அன்னையாய்
அன்னையிடம்
குழந்தையாய்
மழலை மொழியாமல்
குமாியாய்க் கபடம் பேசேன்

முத்து முத்தாய்
எழுத்தைக் கோர்க்காமல்
கிறுக்கேன்

பளபளக்கும் விழிகளால்
ஆர்வப் பார்வை பொழியாமல்
என்மேல் ஒரு அலட்சியப்
பார்வையை எறியேன்

உன்னை நான்
வெறுக்கும்படி
ஏதாவது
செய்யேன்

அப்படி ஏதும்
செய்யாமல்
தேவதையே
ஏன் என்னை
வதைக்கிறாய் ?

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>