சாவுகிராக்கி

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

விசா



ஜி.எச் சுக்கு எதிரில் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் நான் பஸ்சுக்காக காத்திருந்தேன். காலை நேரம் ஆகையால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆண்களும் பெண்களும் உடலெங்கும் அவசரம் பூசி அலைந்து கொண்டிருந்தார்கள். பேருந்துகள் வரிசையாக வந்து பழைய பாவங்களை இறக்கிவிட்டு புதிய பாவங்களை ஏற்றிக்கொண்டு உறுமியபடி நகர்ந்துகொண்டிருந்தன. மருத்துவமனை அருகில் இருப்பதால் நிறைய நோயாளிகள் தென்பட்டார்கள். ஒரு ஆட்டோவில் இரண்டு பெண்கள் வந்து ஒரேவிதமாய் அழுதபடி ஆஸ்பத்திரிக்குள் ஓடினார்கள். பின்புறம் ஒருத்தி பூ விற்றுக்கொண்டிருந்தாள். சரம் சரமாய் மல்லியும், ரோஜாவும் வைத்திருந்தாள். அந்த பூக்களை மார்ச்சுரி பிணங்களிடமிருந்து காப்பாற்றி வைத்திருந்தாள். ஒரு கல்லூரி மாணவன் ரோஜா வாங்கினான். அவனுக்கு மட்டும் ஒரு ரூபாய் அதிகமாக விற்றாள். காதல் கூட காஸ்ட்லி தான்.

பஸ் ஸ்டாண்டில் ஓரத்தில் ஒரு பெரியவர் குத்த வைத்து அமர்ந்திருந்தார். அவர் நிக்கருக்கு மேல் வேட்டி கட்டியிருந்தார். வேட்டி தண்ணீர் பார்த்து பல மாதங்கள் ஆகியிருக்கும். பெரிய பூதக்கண்ணாடி அணிந்திருந்தார். அதன் பிரேமுக்கு சிலேட்டேப் வைத்தியம் பார்க்கப்பட்டிருந்தது.

அவர் அருகில் ஒரு சிறுமி பிளாட்பாரத்தில் தலை வைத்து படுத்திருந்தாள். அவள் கால்கள் கருப்பு தோல் போர்த்திய எலும்பு குச்சிகளாய் கிடந்தன. ஒரு பள்ளி சீருடை அணிந்திருந்தாள் முட்டி வரை பாவடை மறைத்திருந்தது. அவள் கண்களை இறுக மூடியிருந்தாள். இடது கையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. அதில் காயத்துக்கான அடயாளம் தெரியும் சிவந்த பகுதியை ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன . தலையில் என்றோ கட்டிய ரிப்பன் அவிழ்க்காமல் சுருண்டிருந்தது. அந்த பெரியவர் அழுக்கான ஒரு பைக்குள் கை விட்டு ஏதோ தேடிக்கொண்டிருந்தார்.

ஒரு கையால் பையின் காதை பிடித்தவாறு இன்னொரு கையால் உள்ளே துளாவிக்கொண்டிருந்தார். அபாய நெருக்கடியில் மருந்து கடைக்கு முன் நின்று கொண்டு மருந்துச்சீட்டை தேடுபவர் போல் சஞ்சலப்பட்டார். திடீரென முகம் மலர்ந்தார். கிடைத்துவிட்டது போலும். உள்ளேயிருந்து ஒரு இன்லேண்ட் லெட்டரை வெளியிலெடுத்தார். தன் கண்களுக்கு மிக அருகில் நெருக்கி வாசித்தார். பஸ் ஸ்டாண்டில் நிற்பவர்களை ஆவலோடு அண்ணாந்து பார்த்தார். அவர் கண்கள் யாரிடம் கேட்பது என்ற கேள்வியய் வெளிப்படுத்தின. சென்னையின் பிரமாண்டம் ஏற்படுத்தியிருந்த பயம் அவர் கண்களில் இன்னும் காயாமல் இருந்தது.

நான் அவரை பரிவோடு பார்த்தேன். பெரியவருக்கு ஒரே சந்தோஷம். பல் தெரிய சிரித்தார். பற்கள் கருப்பாய் இருந்தபோதும் புன்னகை மட்டும் வெள்ளையாய் இருந்தது. முட்டியில் பலம் கொடுத்து எழுந்தார். நான் அவர் அருகில் போனேன். என் கால் மாட்டில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள். அவர் அந்த லெட்டரை என்னிடம் நீட்டி பின் பகுதியில் உள்ள ஒரு முகவரியை காட்டினார். அது கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு பின்னால் இருக்குமென என் புலனாய்வு சொன்னது. நான் உடனே வானத்தை பார்த்து யோசித்து

“தாத்தா இங்கேயிருந்து அஞ்சாம் நம்பர் பஸ்ல ஏறினா கொயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு உள்ள கொண்டு போய் நிறுத்துவான். முடிஞ்சா பஸ் ஸ்டாண்டுக்கு வெளியயே இறங்கிக்க…….”

நான் ஏதோ வேற்று கிரகத்துக்கு வழி சொல்வது போல் அவர் விழித்தார்.. ஏதோ சொல்ல முற்பட்டு நிறுத்திக்கொண்டார். நான் மறுபடியும் தொடர்ந்தேன்.

“அங்கேயிருந்து வெளிய வந்தா பெரிய ரோடு ஒண்ணு போகும்….. அங்க இந்த அட்ரஸ காட்டி கேளு சொல்லுவாங்க.”

“தம்பி தெரியாதுப்பா. நான் ஊருக்கு புதுசு அவசரமா போகணும். ஆட்டோல போக முடியுமா?”
அதிக சிரமத்தோடு கூச்சப்பட்டார்.

நான் அவரை ஒரு முறை ஏற இறங்க பார்த்தேன்.
“காசு வச்சிருக்கியா? ”

.”ஆன் இருக்கு” என்று பையை தொட்டு காட்டினார்.
“ஒரு ஆட்டோ புடிச்சு எங்குள ஏத்தி விட்டிருப்பா. அவசரமா போகணும். ”

அவர் கண்கள் அதிகமாய் இரக்கத்தை எதிர் பார்த்தன. நான் அந்த கடிதத்தை அவர் கையில் திணித்துவிட்டு மெதுவாக ஊர்ந்து வந்த ஒரு ஆட்டோவை கை நீட்டி அழைத்தேன்.

ஆட்டோவுக்குள் தலையை நுழைத்து அவனிடம்
“கோயம்பேடு பக்கம் போகணும். பெரியவர்….. அட்ரஸ் வச்சிருக்காரு. கொஞ்சம் வீடு கண்டுபுடிச்சு இறக்கி விட்டிடு” என்றேன்.
அவன் அந்த பெரியவர் இருந்த திசையில் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

“அங்க பாரு இதுங்களையா” என்று முகம் சுழித்துவிட்டு “வாராதுப்பா” என்றபடி சாலைக்குள் சீறினான்.

நான் திரும்பி பார்த்த போது அந்த பெரியவர் பதட்டமாய் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தார். தரையில் அந்த சிறுமி வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள். உயிரை இழுத்து வெளியேற்றுவது போல் சிரமப்பட்டு ஏதோ வெள்ளையாய் தன் வாயில் இருந்து வெளியே துறுத்திக்கொண்டிருந்தாள். பெரியவர் அவள் அருகில் அமர்ந்து அதை கையில் இழுத்து சாலையில் எறிந்தார்.

.அந்த சிறுமி முனகினாள். நான் அருகில் இருந்த பெட்டி கடையில் ஒரு பாக்கெட் தண்ணீர் வான்க்கி கடித்து அவரிடம் நீட்டினேன்.

அந்த சிறுமி மறுபடியும் மயங்கிப்போனாள். இப்போது பெரியவர் கண்கள் கலவரமாய் இருந்தன. அழுதுவிடுவார் போல இருந்தார். அவர் கைகள் ஏகமாய் நடுங்கின. திசை தெரியாத ஊரில் என்னை பெரிய அளவில் நம்பினார்.. எனக்கு அவர் மீது அலாதி இரக்கம் வந்தது. நான் மறுபடியும் ஆட்டோ தேட சாலைக்கு வந்தேன்.

பெரியவரும் இப்போது என்னுடன் சாலைக்கு வந்தார். அவருடைய பை அந்த சிறுமியின் வயிற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. எத்தனை தைரியம் இவருக்கு. பையை விட்டு விட்டு என்னுடன் வந்து நிற்கிறார். அந்த பையை ஒரு நாய் குட்டி முகந்து பார்த்துவிட்டு நகர்ந்தது
என் கையை பற்றிக்கொண்டார்.
“தம்பி போயிடாதீங்க. எங்களுக்கு இங்க யாரையும் தெரியாது. அவசரமா போகணும். ”

” பாப்பாக்கு வைத்தியம் பாக்க போறியா?…. ஹாஸ்பத்திரியா? ”

இல்லை என்பதாய் தலை ஆட்டினார். வார்த்தை வர சிரமப்பட்டார்.

“இவ அம்மா செத்துட்டா.”
அம்மா மரணம் இந்த இரண்டு வார்த்தைகள் கோர்வையாய் வந்த போது என் மனம் பல அடி பள்ளத்துக்குள் பாய்வது போல் உணர்ந்தேன்..

” இவ அவளுக்கு தவறி பொறந்தவ. அறியாத வயசுல ஏமாந்துட்டா என் பொண்ணு. இதோ இங்க தான். மெட்ராசுல தான்.”
சென்னை மீதான ஒரு பயம் அவர் முகத்தில் தெரிந்தது.

” கல்யாணம் கட்டிக்கிறேன்னு கூட்டிட்டு வந்து ஏமாத்திட்டான். கர்பமாயிட்டா. ”
பெரியவர் கண் கலங்கினார்.

” அப்புறம் சொந்தத்துல ஒருத்தன் கல்யாணம் கட்டிகிட்டான். இந்த குழந்த பொறந்திச்சு . இந்த குழந்தைய எடுத்து எறிஞ்சுட்டான் அவன்.. நான் தான் ஊருல வளத்துட்டு வரேன். உடனே போகணும். நேத்தைக்கு தான் போன் பண்ணாங்க. அவ புருஷன் ரொம்ப கோவக்காரன். எங்களுக்கு சொல்லிவிட்டதே பெரிய விஷயம்…. செத்து போயிட்டா. ” என்றபடி அடக்கமுடியாமல் அழுதார்.

“இன்னும் ஒரு மணி நேரத்துல சாவு எடுத்துடுவாங்க.”
மீண்டும் “அவ புருஷன் ரொம்ப கோவக்காரன்” என்றார்

“இந்த பொண்ணுக்கு கடைசியா இவ தான் உன் அம்மான்னு முகத்த ஒரு வாட்டி காட்டணும். மகராசி போய் சேந்துட்டா. “பெரியவர் வாய் பொத்தி குலுங்கி அழுதார்.

நான் ஆறுதல் சொல்லவோ துக்கத்தில் பங்கு கொள்ளவோ முடியாத அந்நியனாய் நின்றிருந்தேன். எனக்கு அவர்களுக்கு உதவி செய்யும் ஆவல் அதிகமானது. நான் அவரை விட்டு சற்று விலகி மீண்டும் ஆர்வமாய் ஆட்டோ தேடினேன். அந்த சிறுமியை பார்த்தேன். அவள் ஆழ்ந்த மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்தாள். .அவள் உதடுகள் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தன. அவள் அம்மா இறந்துவிட்டாள். அவள் பிறப்பு பரிதாபத்துக்கு உரியதாய் இருந்தது.

பல சமாதானங்களுக்கு பிறகு ஒரு ஆட்டோக்காரன் சம்மதித்தான்.

“கோயம்பேடு பக்கத்துல. ஒரு மணி நேரத்துல போகணும்…….. அட்ரஸ் வச்சிருக்காரு……. பெரியவர். …..சென்னைக்கு புதுசு. கொஞ்சம் பாத்து இறக்கிவிட்டுடு”

இரண்டு மடங்கு பணம் கேட்டான். எனக்கு கோபம் வந்தது. பெரியவர் அவசரம் காட்டினார்.
“இந்த பிறவியின் ஒரே ஆதாரமான தன் தாயை அந்த சிறுமிக்கு காட்ட வேண்டும். ஒரு மணி நேரம் தான் அவளுக்கு அவகாசம். இந்த பாழ்பட்ட பூமிக்கு அவள் வந்த வாசலை காட்ட வேண்டும். இனி மேல் உனக்கு அம்மா இல்லை. என்றைக்கும் தேடாதே என சொல்ல வேண்டும். பணம் ஒரு பொருட்டல்ல.”

ஆட்டோக்காரனின் அனுமதி கிடைத்தவுடன் பெரியவர் ஒரு குழந்தையை போல் ஓடினார். பிளாட்பாரத்தில் படுத்திருந்த அந்த சிறுமியை அள்ளி அணைத்து தோளில் போட்டுக்கொண்டார்.

அவசரமாய் பையை ஒரு கையில் அள்ளிக்கொண்டு ஆட்டோவை நோக்கி ஓடி வந்தார். வேகமாய் தன்னை உள்ளே திணித்துக்கொண்டார். என்னை பார்த்து நன்றியோடு கை கூப்பினார். கண்களில் நீர் நிரம்பியிருந்தது. நான் அவரை ஆறுதலாய் பார்த்தேன். அந்த குழந்தை தலை தொங்க உறங்கிக்கொண்டிருந்தது. அவள் உதடுகள் புலம்புவது எனக்கு இப்போது தெளிவாய் கேட்டது.

” அம்மாவ காட்டு தாத்தா………… அம்மாவ காட்டு தாத்தா ………”

பத்திரம்பா என்று ஆட்டோகாரரின் முதுகை தட்டி வழி அனுப்பினேன். ஆட்டோ அசுர வேகத்தில் சீறி சாலை நதியில் கலந்தது.

நான் ப்ஸ் ஸ்டாண்டுக்கு வந்தேன் .

பஸ் வெகு நேரம் வரவே இல்லை. காத்திருந்தேன். எனக்கு அந்த சம்பவம் மனதை அழுத்தியது. அந்த சிறுமியின் கருத்த முகம் சோகத்தின் உச்சமாய் மனதுக்குள் வந்து வந்து போனது. சிறுமி அவள் தாயை பார்த்து அழுவாளா? தாயின் மரணத்தை உணர்ந்து கொள்ளும் மனோபலம் இவளுக்கு இருக்கிறதா. ஒரு மணி நேரத்தில் போய் விடுவார்களா? அந்த சோகம் என்னையும் ஆக்கிரமித்திருந்தது.

தாயின் மரணம் எத்தனை கொடுமையானது. என் அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவை செல்போனில் அழைத்து பேசவேண்டும் போல் இருந்தது.

சிக்னல் விளக்குகள் மாறி மாறி எரிந்துகொண்டிருந்தன. இந்த சிகனல் விளக்குகளுக்கு கட்டுப்படும் வாகனங்கள் போல மனிதனும் ஒரு நாள் மரணத்திற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் அல்லவா?
அந்த விளக்குகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது என் காலில் ஏதோ உரசியது. குனிந்து பார்த்த போது விதியின் கொடூர தோற்றம் அங்கே தெரிந்தது.. அந்த பெரியவர் கொண்டு வந்த இன்லேண்ட் லெட்டர் என் கால்களில் உரசியபடி காற்றில் பறந்து கொண்டிருந்தது. ஒரு கனம் துடித்துப்போனேன். அவசரமாய் குனிந்து அதை எடுத்தேன்.

அந்த பெரியவர் சிறுமி வாந்தி எடுத்த பதட்டத்தில் அதை இங்கே தவற விட்டிருக்கிறார். பின் பகுதியில் முகவரி இருந்தது.

அந்த முகவரியில் அந்த சிறுமியின் தேடல் தெரிந்தது. அவளது புலம்பல் கேட்டது
அவள் முகவரிகளை தொலைக்க பிறந்தவள் போலும். பிறப்பில் ஒரு முகவரியை தொலைத்தாள்.
அந்த தாயை…இல்லை இந்த சிறுமியை…இல்லை அந்த பெரியவரை யாரை விதி இத்தனை வக்கிரமாய் துரத்துகிறது.

என் மனம் அவர்களுக்காய் அழுதது . அபீஸ் போக மனம் வரவில்லை. கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தேன்.

பாதி வழியில். திரும்பி வருவார். முகவரியை இங்கே தவறவிட்டது அவருக்கு நினைவு வரும். திரும்பி வந்தால் கொடுக்கலாம். முடிந்தால் அவரோடே கூட போய் வரலாம். பாவம் இந்த அவசர நகரத்தில் என்ன செய்வார். இந்த நகரத்தில் தொலைந்தவர்களை விட தொலத்தவர்கள் தான் அதிகம். இந்த அவசர நகரத்தில் கைகுட்டை தொலைந்தாலும் கற்பு தொலைந்தாலும் ஒரே அளவு தான் பதட்டப்படுகிறார்கள்.
அத்தனை அவசரம்.

பாதி வழியில் திரும்பி வந்தால் கொடுத்துவிடலாம் என்று மதியம் வரை அங்கேயே காத்திருந்தேன். கடைசி வரை அவர் வரவே இல்லை.

என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. எனக்குள்ளே அயிரம் கேள்விகள் வரிசையாய்.
“அவர் போய் சேர்ந்திருப்பாரா? நிச்சயமாக வேறு இடத்தில் முகவரி எழுதி வைத்திருப்பார். வைத்திருப்பாரா? கோயம்பேட்டுக்கு போய் குத்து மதிப்பாக இளவு வீடு என்ற அடயாளத்தில் எளிதாக கண்டு பிடித்திருப்பார்களா? சுலபமான காரியமா?.அந்த பெரியவருக்கு முகவரியின் வால் ஞாபகம் இருந்தால் போதும் ஆட்டோ காரன் கொண்டு போய் சேர்த்து விடுவான். சேர்த்திருப்பானா? இவர்கள் ஒரு திசையில் போக இன்னொரு திசையில் ஊர்வலம் சென்று மறைந்திருக்குமா? …”

அந்த சிறுமி கடைசியாய் புலம்பியது எல்லா திசைகளிலும் எதிரொலித்தது.

அந்த முகவரியை தேடிப்போய் பெரியவர் வந்தாரா என விசாரிக்க வேண்டும் என முடிவு செய்தேன்..

கோயம்பேடு பஸ் ஒன்று வந்தது. கூட்டத்தோடு பஸ்சில் ஏற நெருங்கிக்கொண்டிருந்த போது ஒரு அதிர்ஷ்டம். மீண்டும் அந்த ஆட்டோக்காரன் அந்த சாலையில் தென்பட்டான். கண்கள் விரிய ஓடி அவனை நிறுத்தி பதட்டத்தோடு அணுகி விசாரித்தேன் .

“படு பேஜாரு சார். நீயே சொல்லு. பாதி தொல போனப்புறம் அட்ரஸ இங்க பஸ் ஸ்டாண்டுல விட்டிச்சாம் திருப்பி போய் தேடணுமுனிச்சு.. அது அட்ரஸ எங்க விட்டிச்சோ எவனுக்கு தெரியும். திரும்பி வந்து அத்த தேடி. எவன் சார்…. வந்த கோபத்துக்கு காசு கூட வேணாமுனுட்டு பாதி வழியில இறக்கி விட்டுட்டேன். ……. சாவுகிராக்கி.” என்றான். அந்த கடைசி வார்த்தை என்னை ஏதோ செய்தது.


mailinfranki@gmail.com

Series Navigation