சமகால அரபு மார்க்சியர்கள் ஒரு எழுத்தியல் வரைபடம்

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1. மெஹ்தி பென் பெர்கா (Mehdi Ben Barka)

மொரோக்கோவின் அரசியல் சிந்தனையாளரான மெஹ்திபென் பெர்கா 1920களில் தோன்றி 1965களில் மறைந்துள்ளார்.
மன்னர் ஹசனின் மரணம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டார். 1963ல் மொரோக்காவின் ஊடுருவலுக்கு எதிராக அல்ஜீரியாவை ஆதரித்தவர், இதற்காகவே மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
1963-ல் பென் பெர்கா நாடு கடத்தப்பட்டார். அல்ஜீரியாவிற்கு சென்றபோது அங்கு சேகுவரா, அமில்கர் கப்ரல், மால்கம் எக்ஸ் ஆகியோர்களை சந்தித்துள்ளார். அங்கிருந்து கெய்ரோ, ரோம், ஜெனிவா, ஹவானா பகுதிகளுக்குச் சென்று புரட்சிகர இயக்கங்களை உருவாக்கும் முயற்சியில் தனது உழைப்பை செலவிட்டார்.
தனது இறப்புக்கு முன்பாககூட கியூபா – ஹவானாவில் ஒன்றுபட்ட உலக அமைப்பின் உருவாக்கத்திற்கான தீவிர நடவடிக்கைகளிலே ஈடுபட்டிருந்தார். இவ்வமைப்பின பெயரே ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க மக்களின் ஒற்றுமைக்கான இயக்கம் என்பதாகும்.
அலிபோர்குவட் தனது நூலொன்றில் ‘மொராக்கிய மன்னரின் ரகசிய தோட்டம்’ புத்தகத்தில் எழுதுகிறார்.
மன்னர் ஹசனின் ஆணைப்படியும், பிரெஞ்சு ரகசிய அமைப்பின் உதவியுடனும் பாரிஸில் பென்பர்கா கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது உடல் சிமெண்ட் பாளத்தால் மூடப்பட்டு பாரிசுக்கு வெளியே புதைக்கப்பட்டது. ஆனால் அவரது துண்டிக்கப்பட்ட தலையை சூட்கேஸில் வைத்து மொரோக்காவிற்கு கொண்டு வந்து மன்னரிடம் காண்பித்த பிறகுதான் பென்பர்காவின் மரணம் மன்னரால் நம்பப்பட்டது.

2. ஸகி அல் அர்சுஸி (Zaki al – Arsuzi)
ஸகி அல் அர்சுஸி ஜுன் 1899ல் பிறந்து 1968 ஜுலை முடிய வாழ்ந்துள்ளார். இவர் ஒரு சிரிய அரசியல் போராளியும், எழுத்தாளருமாவார். பாத் கட்சியை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர்.
1927-ல் பாரிஸ் நகருக்கு தத்துவக்கல்வி பயில சென்றபோது பிரெஞ்சு சிந்தனைவாதிகளின் அறிவார்ந்த தாக்கத்திற்கு ஆட்பட்டார். ஹென்றி பெர்க்சன் உள்ளிட்டஜெர்மானிய சிந்தனையாளர்களும், இப்னு அரபி, இப்னு கல்தூன் உள்ளிட்ட தத்துவ இயலாளர்களும் இதில் முக்கியமானவர்கள்.
சிரியா திரும்பிய அல்அர்சுசி அரசியல் தீவிரத்தன்மையின் காரணமாக ஆசிரியப் பணியிலிருந்து விலக்கப்பட்டார். துருக்கிக்கு விட்டுக் கொடுத்த பகுதிக்காக எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டார். தேசிய நடவடிக்கை லீக் எனும் முதல் அரசியல் இயக்கத்தை உருவாக்கி நடத்தினார்.
அல்அர்சுசி கலாச்சார விஷயங்களில் அதிகமான கவன ஈர்ப்பை செலவிட்டுள்ளார். அரபு மரபு வழியின் புத்துயிர்ப்பு இந்த வகையின் முக்கியமான நூலாக விளங்குகிறது. அரபு தேசியவாதத்தின் முக்கிய மொழியியல் படிமம், அரபியின் உயர்நிலை அதன் நாக்குகளிலிருந்து என்பதான புத்தகங்களும் முக்கியமானவைகளாகும்.
அல்அர்சுசியின் வித்தியாசமான அணுகுமுறை மொழியியலை வெளிப்படுத்துகிறது. சமகாலப பிரச்சினைகளின் நவீன அரசு, ஜனநாயகத்தின் மீதான கேள்விகள் மற்றும் அதிகாரத்தின் குவிமையம் ஆகியவற்றில் உரிய கவனத்தை கொள்ள வைக்கிறது.

3. தையப் அபௌ ஜஹ்ஜா (Dyab Abou Jahjah)
லெபனானிலிருந்து பெல்ஜியத்திற்கு புகலிட அகதியாக தஞ்சம் புகுந்த அரபு அரசியல் செயல்பாட்டாளரான ஜஹ்ஜா அரபு ஐரோப்பிய லீகின் தோற்றுவிப்பாளராகவும், அகண்ட அரபு இயக்கவாதியாகவும் செயல்பட்டார். ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்து வந்த முஸ்லிம்களுக்காக போராடினார். ஹிஸ்புல்லா இயக்கத்தின் உறுப்பினராகவும் செயலாற்றினார்.
அபௌ ஜஹ்ஜா வெளிப்படையாகவே அடையாள அழிப்பிற்கு எதிரான குரலை முன்னிறுத்தினார். புலம் பெயர்ந்தவர்களை முழு பிரஜைகளாக பாவிக்கவும் சுயகலாச்சாரம் பேணப்படவும், விருந்தாளிகளாக அனுசரிப்பதற்கு மாற்றமாகவும் சிந்தனை செய்தார். அமெரிக்க மனித உரிமைகள் போராளி மால்கம் எக்ஸ் இவரை பாதித்த ஒரு சிந்தனையாளராகும். மால்கம் எக்ஸ் ஒரு முஸ்லிமானபோதும் அவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராகவே இருந்தார்.
அபு ஜஹ்ஜா இரண்டாயிரத்தில் அரபு ஐரோப்பிய லீகை தோற்றுவித்தார். தனது வாழிடம் அதிகப்படியான முஸ்லிம் மக்கள் தொகையையும் குறிப்பிடத்தக்க அளவில் யூத மக்களையும் கொண்டிருந்தது. புலம் பெயர்தலுக்கு எதிரான கட்சி இந்நகர கவுன்சிலில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது. இதன் காரணமாக அபு ஜஹ்ஜா 2002-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கலவரங்களையும் வன்முறையையும் தூண்டியதாக இவர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2006 ஜுலையில் அபூஜஹ்ஜா லெபனானுக்கு திரும்புவதாக கூறி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் கலந்து கொள்வதாக அறிவித்தார்.

4. பஷர் அல் அசாத் (Bashar Al – Assad)
பஷர் பாத் கட்சியின் மண்டல செயலாளராகவும், சிரிய அரபு குடியரசின் தலைவராகவும் இருந்துள்ளார். முன்னாள் தலைவர் ஹபீஸ் அல் அசாத்தின் மகனும் ஆவார்.
பஷர் அல் அசாத் சிரிய அரசியல் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வாக்களித்திருந்தார். பாராளுமன்றம் பாத் கட்சியின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டது.
தலைவர் பதவியை பஷர் பெற்றதும் சீர்திருத்த இயக்கத்தை துவக்கினார். இதற்கு டமாஸ்கஸ் வசந்தம் என பெயரிடப்பட்டது. பஷரின் முதல் நடவடிக்கையாக மிகவும் குரூரமான மெஸ்ஸீ சிறை பூட்டப்பட்டு நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஒரு கட்டுப்பாடான மொத்தத்துவ ஆட்சி முறையாக இருந்த நிலையில் வடகிழக்கு சிரியாவில் குர்துக்களின் போராட்டங்கள், அரபு தேசிய பாத் அரசாங்கத்திற்கு எதிராகவே நிகழ்வுற்றன.
அமெரிக்க அரசும், இஸ்ரேலும் அசாதின் வெளிநாட்டு கொள்கையை எதிர்த்தே உள்ளன. அவர் ஆதரித்த ஹிஸ்புல்லா, ஹமாஸ், மற்றும் இஸ்லாம்ஜிகாத் அமைப்புகள் அமெரிக்காவில் தீவிரவாத குழுக்கள் என்றும் ஆயுதந்தாங்கி இஸ்ரேலுக்கு எதிரானவை என்றும் குற்றம் சாட்டுகின்றன. 1967 முதல் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கோலான்கிணறுகளை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தன.
பஷர் பலஸ்தீன விடுதலை இயக்கத்தோடு உறவை கொண்டிருந்தும் பல அரபு நாடுகளுடன் நல்லிணக்கத்தை உருவாக்கி விடுத்துக் கொண்டதும் சிரிய அரபு தேசிய திட்ட வரையறையாகவே இருந்தது.
சமீபத்தில் இஸ்ரேல் லெபனானை ஆக்ரமித்தபோது இஸ்ரேல் இந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு, ஹிஸ்புல்லா இயக்கம் வெற்றிக் கொடி கட்டும், என்றும் இஸ்ரேல் எதிரி அதனோடு எந்த சமாதானத்தையும் செய்ய முடியாது பஷர் அல் ஆசாத் உறுதியாக வெளிப்படுத்தினார்.

5. எட்வர்ட் சையத்
எட்வர்ட் சையத் அரபு கிறிஸ்தவராக தோற்றம் கொண்டு கெய்ரோவிலும், லெபனானிலும் தனது முந்தைய வாழ்வை செலவிட்டார். மேற்கு நாடுகள் கீழை தேயம் குறித்து கட்டமைத்திருக்கும் கருத்தியல்களை மீள்வாசிப்பு செய்யும் விதத்தில் ஆசிய பிராந்தியம், மத்திய கிழக்கு பிரதேசம் குறித்து மாற்றுக் கருத்தாடல்களை பேசினார். ஐரோப்பிய மனோபாவத்திற்கும், காலனீய ஆக்கிரமிப்பிற்கும் எதிராக தொடர்ந்து இயங்கி நாடிழந்து உலகத் தெருக்களில் விரட்டியடிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் உரிமைப் பேராட்டத்தில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டார். பலஸ்தீனிய தேசிய கவுன்சிலில் ஒரு உறுப்பினராகவே பல ஆண்டுகள் செயல்பட்டார். அராபியர்கள் மற்றும் கீழை தேச நாடுகள் குறித்தும் எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்த அமெரிக்க ஐரோப்பிய சிந்தனைகளை எதிர்கொள்வதே 1978களில் எட்வர்சையத் எழுதிய ஓரியண்டலிசம் ஆய்வு நுலின் நோக்கமாக இருந்தது.
1991 வளைகுடா யுத்த விளைவாக பலஸ்தீன இயக்கத் தலைவர். யாசர் அராபத்திற்கும் அமெரிக்க ஆரவு இஸ்ரேலிய ஜியோனிச தலைவர் ராபினுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தை சையத் விமர்சித்தார். இஸ்ரேலின் ஆக்ரமிப்பு பகுதியிலிருந்து பறிக்கப்பட்ட நிலம் பதினெட்டு சதவிகிதம் மட்டுமே திரும்பி வழங்கப்பட்டதை பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதினார். அதே வேளையில் பலஸ்தீன மக்களுக்கான முழுஉரிமையை பெற்றுத்தர தொடர்ந்து போராடுகிற ஹமாஸ் இயக்கம் குறித்தும் எதிர்மறையான கருத்தையே முன்வைத்தார். ஹமாஸின் ‘இஸ்லாமிய அரசு’ குறித்த கருத்தாக்கத்தில் சையத் வேறுபட்டிருந்தார். யூதர்களும் அராபியர்களும் இணைந்த ராணுவ ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பை கொண்ட தேசத்தை முன்னிறுத்திய சையதின் ஆளுமை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தீவிரமாக குரல் கொடுத்தது.
1981-ல் வெளிவந்த இஸ்லாத்தை கவனப்படுத்துதல் நூல் எட்வர்ட் சையதின் மத்திய கிழக்கு அரபுலகம் பற்றியும் இஸ்லாம் குறித்துமான ஆய்வாக வெளிப்பட்டது.
அறிவு ஜீவிகளின் பிரதிநிதித்துவ அரசியல் குறித்த எட்வர்ட் சையதின் சிந்தனைகள் மதசார்பற்ற தன்மை கொண்டும், புனிதங்களை கட்டமைக்கும் ஆதிக்க சக்திகளிடம் சரணாகதி அடைவதை எதிர்த்தும் பேசுகின்றன. ஆபிரிக்க கறுப்பின மக்களின் மீது கட்டியமைக்கப்படும் வெள்ளை நிறவெறி மேலாண்மைக்கும், காலனிய ஒடுக்குமுறைக்கும், கலாச்சார ஆதிக்கத்திற்கும் எதிர்க்குரல்களை முன்வைப்பதும் இதில் முக்கியமானதாக இருக்கிறது.
குவைத்தை ஆக்ரமித்த ஈராக்கின் நடவடிக்கையை ஆதரிக்கவில்லை எனினும் அமெரிக்காவின் ஈராக் மீதான குரூரமான யுத்தத்தாக்குதல் குறித்த எதிர்வினைப்பாடும், யுத்தம் ஏற்படாதவாறு உருவாக வேண்டிய சாத்தியங்கள் பற்றியும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இஸ்ரேலும் துருக்கியும் செய்த ஆக்கிரமிப்புகளையும், இந்தோனேஷியா நாடு ஆயிரக்கணக்கான திமோர் இனத்தவரையும், இந்தோசைனாவில் விவசாயக் குடிகளை அமெரிக்க தலையிட்டு அழித்தொழித்தது குறித்தும்
அவரது கவன ஈர்ப்பும் முக்கியமானது.

6. சமீர் அமீன்
எகிப்திய அரசியல் அறிஞர் பாரிஸில் கல்வி பயின்றபோது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். பிற்காலத்தில் சோவியத் மார்க்ஸியத்திலிருந்து மாவோயிஸ்ட் வட்டாரத்தோடு தொடர்புகளை பெருக்கிக் கொண்டார். 1957ல் வெளிவந்த இவரது ஆய்வு வளர்ச்சியின்மையின் தோற்றுவாயும் – உலக அளவிலான மூலதன உருவாக்கமும் என்பதான பொருள் குறித்தாக இருந்தது.
பொருளியல் நிறுவனத்திலும் அரசுத்துறை திட்டமிடல் அமைச்சகத்தின் ஆலோசகராகவும், பல்கலைக் கழக பேராசிரியராகவும் ஆபிரிக்க பொருளாதார வளர்ச்சி நிறுவன அமைப்பின் தலைவராகவும் மூன்றாம் உலக அமைப்பியம் இயக்குனராகவும் செயல்பட்டுள்ளார்.
சமீர்அமீன் முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதிஉள்ளார். ஆப்பிரிக்காவின் வர்க்க போராட்டம், மேற்கு ஆப்பிரிக்காவில் புது காலனியாதிக்கம் ஏகாதி பத்தியமும், சமனற்ற வளர்ச்சியும் முதலாளியத்தின் சமகால அறிவாளி நாகரீகம் குறித்த விமர்சனம், முதலாளித்துவத்தின் சமகால அரசியல் மற்றும் சமன்குலைவுகள் எனத்தொடரும் இந்த புத்தகங்கள் அனைத்துமே முதலாளியம், ஏகாதிபத்தியம், புதிய காலனியாக்கம் குறித்த கருதுகோள்களையே முன்னிறுத்தியுள்ளன.
2004-ல் வெளிவந்த – நிரந்தரமான யுத்தம் அமெரிக்கமயமாகும் உலகம் 2005-ல் அலி என்கென்ஸ் உடன் இணைந்து எழுதிய ஐரோப்பாவும் அரபு உலகமும் புது உறவுகளுக்கான முறையியல்களும் சாத்தியப்பாடுகளும் உள்ளிட்டவை அரபுலக சிந்தனை வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க புத்தகங்களாகும்.

அமெரிக்காவின் திட்ட இலக்கு ஐரோப்பிய அரசுகளின் ஆதரவோடும் இஸ்ரேலின் மூலமாகவும் உலகம் முழுவதையும் தனது இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கமாக அமையப்பெற்றுள்ளது. மத்திய கிழக்கினை இதற்கான மையக் கேந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு முக்கியமான காரணங்கள் உள்ளன.
உலகின் எண்ணெய் வளத்தில் பெரும்பான்மை மத்திய கிழக்கு நாடுகளிடத்தில் உள்ளது. இதை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வாஷிங்டன் வாயிலாக முயலப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் மாற்றுமுகாம் நாடாக கருதப்படுகிற சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்குமான எண்ணெய் ஏற்றுமதி அமெரிக்காவை மையப்படுத்தியே செயல்படவைக்கும் விஷேச முயற்சியுமாகும்.
புராதன உலகத்தின் நடுநாயகமான இதயமாக மத்தியக் கிழக்கு அமைந்துள்ளது. இந்த அமைவிடத்தில் நிரந்தர ராணுவ ஆதிக்க அமைப்பு உருவாவது என்பதும் சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை தனது கண்காணிப்பு வலையில் சிக்க வைப்பதும் அமெரிக்காவின் அரசியல் நோக்கமாகும்.
குறுகிய காலகட்டத்தில் ஆக்கிரமிப்பாளருக்கு வெற்றியை உறுதிப்படுத்தவும் எதிரிநாடுகளை குழப்பப்படுத்தவும், பலவீனப்படுத்தவுமாக இந்த நடவடிக்கைகள் பயன்படுகின்றன.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை நல்குவதின் வழியாக ஒரு பதட்ட நிலையை நீடிக்கச் செய்வதும் இதன் நோக்கங்களாக அமையப்பெற்றுள்ளன.
சமீர்அமினின் மதிப்பீடுகள் ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், பாலஸ்தீனம் சார்ந்தும் வெளிப்படுகிறது. சமூகபொருளாதார நலன்களுக்கான போராட்டங்களிலும், வெகுசன வர்க்கத்தின் ஜனநாயகம், தேசிய மேலாண்மை லட்சியங்களினோடும் அமீனின் உரையாடல் தொடர்கிறது.

7. துர்க்கி அல்ஹம்து

சவுதி அரேபிய கலாச்சார இறுக்கமான வட்டாரத்திற்குள் செயல்படும் தாராளவாத சிந்தனையாளராக திகழ்கிறார். அல் ஷாரி, அல் அவ்சத் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதுகிறார். இவரது பல நூல்கள் மரபு வாத அரபு கலாச்சரத்தின் மீதும், சவூதி அரேபியாவின் சமய மற்றும் சமூக விலக்குகள் ஏற்படுத்தும் சவால்கள் குறித்தும் விமர்சனம் செய்கின்றன. இந்த வகையில் பெகரினின் முகமது ஜாபர் அல்அன்சாரியும் வளைகுடா பகுதியின் சமரசம் செய்து கொள்ளாத ஜனநாயகம் மற்றும் தாராளமய சிந்தனையாளராகவும் உள்ளார்.

8. ஹிஸாம் காஸிப் (Hisham Ghassib)
அரபு சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலர் மட்டுமே விஞ்ஞான கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்களாகும். ஜோர்டானிய மார்க்சீயரான ஹிஸாம் காஸிப் இவர்களில் ஒருவர். கல்வியாளர் என்ற நிலையில் இவரது புத்தகங்கள் விஞ்ஞான அடிப்படைகளை சார்ந்திருக்கும் அதே வேளையில் அரபு கலாச்சாரத்தின் வரலாற்றில் முக்கியமான முற்போக்கான வாழும் பிரின்ஸ் சுமையா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டளராகவும் விளங்குகிறார்.

9. முகமது ஷக்ரூர் (Mohammed Shahrour)
எகிப்து சிந்தனையாளரான இவரின் புத்தகம் ‘அந்த நூலும் குர்ஆனும்’ (The Book and the Quran) 1990களில் வெளிவந்தது. இஸ்லாமிய சமய பிரதிகளை வாசிக்கும் முறையியல் ஒரு புதிய மாறுபட்ட சீர்திருத்த அணுகுமுறையை முன்வைத்தார். இஸ்லாமிய வரலாற்றில் முதல் நூற்றாண்டிற்கு பிறகான புதிய முறையிலான இஸ்லாமியமாதல் கோட்பாடுகளை உஸுல் அல் பிக்ஹு மற்றும் இல்ம் அல் கலாம் எனப்படும். சட்டவிதிகளும், இறையியல் கோட்பாடும் உருவாகின. இந்த புதிய விஞ்ஞானங்களை அரசியல் ஆட்சியாளர்கள் ஒடுக்குமுறை சார்ந்த நோக்கிலேயே உருவாக்கினர். எனவே சுன்னி, ஷியா என எந்த பிரிவினரும் முன்வைக்கும் இந்த சட்டவிதிகள் அதிகாரத்திற்கே துணைபுரியும். மக்களுக்கான உரிமைகளோ அல்லது அரசு எந்திரத்திற்கான உரிமைகளோ எதுவாகிலும் ஆட்சி அதிகாரத்தின் நீட்டிப்பிற்கான அத்தாட்சிகளாகவோ கருதமுடியும். இன்று மத்திய கிழக்கு நாடுகள் புதிய கருத்துருவாக்கங்களான அரசியல் சாசன சட்டம், பன்மை அடையாளம், குடிமைச் சமூகம், ஜனநாயகம், சுதந்திர கருத்துரிமை என்பவற்றையே மூர்க்கமாக எதிர்கொள்கின்றன. எனவே தற்போதைய பிரச்சினை என்பதே இக்கருத்தாக்கங்களை இஸ்லாமிய சமய மரபுக்குள் அறிமுகப்படுத்துவது எப்படி என்பதே ஆகும். இத்தகையதான சிந்தனை முறைக்கு மதப் பழமைவாதிகள் இவர் மீது வழக்கம்போல் தாக்குதலையே தொடுத்தனர்.

10. நவ்வல் சாதவி (Nawal Saadawi)
அரபுலக பெண்ணிய இயக்கத்தின் முக்கிய சிந்தனையாளரான நவ்வல் சாதவி எகிப்தைச் சார்ந்தவர். அரபு பெண்கள் எதிர்கொள்ளும் சமூகத்தடைகளை விலக்கவும், நசுக்கப்பட்ட வாழ்வியல் உரிமைகளை மீட்கவும் தொடர்ந்து எதிர்ப்புகளை மீறி எழுதுகிறார். இவரது புத்தகங்களும், கட்டுரைகளும் புரட்சிகரத்தன்மை கொண்டவை. உலக ஐக்கியத்தை நிலைநாட்ட விருப்பம் கொள்ளும் அதேவேளையில் உலகமய ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கங்களிலும் பங்கேற்கிறார்.

11. ஹஸன் ஹனபி (Hasan Hanafi)
எகிப்து சிந்தனையாளர் மிகுந்த உறுதியோடும், புதுமைத்துவம் சார்ந்தும் இஸ்லாத்தை சோசலிசத்தோடு இணைவாக்கம் செய்யும் கோட்பாட்டை உருவாக்க முயன்றார். இதனை இஸ்லாமிய இடது சாரித்துவம் என்று கூட குறிப்பிடலாம். இஸ்லாத்தை ஒரு இயக்கவியல் தன்மை கொண்ட சமூகப் புரட்சியாக மதிப்பீடு செய்தார். இவரது தேடலின் பயணத்தில் இஸ்லாமிய இறையியல் வாதிகள் மற்றும் மரபு சிந்தனையாளர்களால் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு இஸ்லாமிய நிந்தனைவாதி என குற்றம் சாட்டப்பட்டார்.

12. ஹுசைன் மொரோவா (Hussein Morowa)
நவீன அரபுலக வரலாற்றில் முக்கியமானதொரு இடம் பெறும் இவர் ஒரு லெபனீய மார்க்சீய சிந்தனையாளர். இஸ்லாமிய தத்துவ இயலில் பொருள் முதல்வாத அம்சங்கள் இவரது புகழ்பெற்ற புத்தகமாகும். இந்நூலில் இவர் இதுவரைக்கும் இஸ்லாமிய தத்துவவியலில் கண்டறியப்படாத பகுத்தறிவு சார் சிந்தனைகளை அடையாளப்படுத்தினார். இத்தகையதான அரிய சிந்தனையாளரான இவர் 1987ல் பெய்ரூட்டில் படுகொலை செய்யப்பட்டார்.

13. மஹ்தி அமில் (Mahdi Amil)
லெபனானிய மார்க்சீய இயக்கத்தின் மற்றுமொரு சிந்தயை஑ளர் மஹிதி அமில் இவரும் 1987-ல் உள்நாட்டு யுத்தத்தில் படுகொலைசெய்யப்பட்டார்.
1981-ல் வெளிவந்த எட்வர்ட் ஸெயதின் ஒரியண்டலிசம் அரபுலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தங்களது எதிர்வினைகளை இரு அரபு அறிஞர்கள் வெளிப்படுத்தினர். அதில் ஒருவர் சாதிக் ஜலால் அல் அஸ்ஓம். இவர் தலைகீழ் ஒரியண்டலிசம் என ஆங்கிலத்தில் விமர்சன கட்டுரையை வெளியிட்டார். மார்க்சின் மீது விமர்சனம் வைத்த எட்வர்ட் சையத்தை உண்மையை கிண்டல் செய்யும் ஒரு போலி என கடுமையாக விமர்சித்திருந்தார். மற்றுமொரு சிந்தனையாளர் மஹிதி அமில். இவர் 1985-ல் எட்வர்டு சையதின் ஒரியண்டலிசத்தில் மார்க்சியம் தலைப்பில் அரபியில் ஒரு விமர்சன நூலை வெளியிட்டார்.
மஹிதி அமில் கிராமப்புறங்களுக்கு சென்று பல பகுதி மக்களிடையே களப்பணி செய்பவராகவும், பிரிவினை பிளவு வாதத்திற்கு எதிராகவும், இப்ன் கல்தூனிலிருந்து அரபு அரசியல் பொருளாதாரம் வரைக்கும் இம்மக்களிடையே கொண்டு செல்பவராகவும் செயல்பட்டிருந்தார்.
எட்வர்ட் சையத் குறித்த மஹிதி அமிலின் புத்தகம் பரவலாக விவாதிக்கப்பட்டு கருத்தில் கொள்ளப்பட்டது. சையதின் ‘மேற்கு’ பற்றிய வரையறை பல வர்க்க வித்தியாசங்களற்று ஒற்றைப்படுத்தப்பட்டிருப்பதை விமர்சித்தித்தார். சையதின் ஆய்வு முறையியல் புரட்சியின் தேவை குறித்த கருத்தாக்கத்தில் மார்க்சியத்தை தவறாக அர்த்தப்படுத்தியுள்ளதாகவும் பேசினார். பூகோவின் சிந்தனையும், நீட்சேயின் நம்பிக்கையின்மைவாதமும் களமாக மாறியுள்ளதான மதிப்பீட்டினை முன்வைத்த தீவிர மார்க்சீய சிந்தனையாளராக மஹ்திஅமில் வெளிப்பட்டார்.

14. முகமது அப்து அல் ஜப்ரி (Mohammed Abed Al – Jaberi)
1986-ல் பிறந்தவர். தத்துவஇயல், இஸ்லாமிய சிந்தனை, அரபு இலக்கியவிமர்சனத்தில் கவன ஈர்ப்பினைக் கொண்ட அல் ஜப்ரி மொரோக்கோ சிந்தனையாளர் அரபு மனம் பற்றிய ஆய்வும், விமர்சனமும் (Analysis and critique of the Arab mind) முக்கிய அறிவுலக ஆய்வுலகு சிந்தனையை வெளிப்படுத்திய நூலாகும். புதிய அரபு சிந்தனையை மறுஉருவாக்கம் செய்ததும் அரபு உலகில் இடம் பெற்ற அறிவுலக வரலாற்று விவாதங்களை கடந்து வந்ததும் இவரின் முக்கிய சிறப்பாகும்.

முஸ்லிம் மற்றும் அரபுலகில் தென்பட்ட பழமை மரபுகளுக்கும், நவீனத்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்தும் விதத்திலும் அல்ஜப்ரியின் எழுத்துக்கள் அமைந்திருந்தன. அல் ஜப்ரி மத்தியகால முஸ்லிம் தத்துவவாதிகளின் அறிவுவாத அணுகுமுறையை முக்கியத்துவப்படுத்தினார். 980-1037களின் அவிசீனா 1126-1198 காலகட்டத்தின் அவெர்ரோஸ் (Averroes) 1332-1406 காலகட்ட இப்ன் கல்தூன் சிந்தனைகளின் வழியினூடே பயணப்பட்டார். இந்த வகையில் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் நிகழ்கால தத்துவ கட்டுமானத்தை உருவாக்கம் செய்தார்.
மக்ரப் எனப்படும் எகிப்து, சூடானதை தவிர்த்த வடஆப்பிரிக்கப் பகுதி அறிவு வாத மரபு கிரேக்க தத்துவ அடிப்படையைக் கொண்டது. மஷ்ரக் எனப்படும் அரபியாவை உள்ளடக்கிய ஆசியப்பகுதி முஸ்லிம் தத்துவவாதிகளின் அறிவொணாவாதம் துறவுவாதம் சூபிசம் சார்ந்தது. அல்ஜப்ரி அரபுலகின் சமகால இருப்பிற்கும் வாழ்விற்கும் காரணகாரியத்திற்கு உட்பட்ட தத்துவஇயலை புதிய அவரோயிசம் என அடையாளப்படுத்தினார். அரபு இஸ்லாமிய மரபின் அடையாளமாக உருவாக்கப்பட்ட இது துவக்கத்தில் அவிசீனாவின் சிந்தனைகளையும், சுன்னி சூபி கிழக்கத்திய அரபு தத்துவ இயலையும் விமர்சித்தது. கோட்பாட்டு சிந்தனைக்கும், தத்துவ இயலுக்குமான உறவையும் கேள்விக்குட்படுத்தியது.
விஞ்ஞானமும், தத்துவமும் சமயத்தை விளக்கிச் சொல்வதற்கான கருவிகளாக இருந்ததை அவரோயிசம் மறுத்தது. சமயத்தை அறிவியல் மற்றும் தத்துவத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டது. தத்துவத்தை அறிந்து கொள்ளுதல் என்பது அதன் அடிப்படை விதிகளிலிருந்து உருவாகி பெறப்படவேண்டுமே தவிர பிற துறைகளில் குறிப்பாக சமயத்தின் அடிப்படையோடு அதனை இணைத்து பார்க்ககூடாதென்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
அமெரிக்க பலஸ்தீன தத்துவவாதி இப்ராகீம் அபுராபி அரபு தேசியவாதத்஀யும் அரபுலக விஞ்ஞானப் புரட்சியையும் ஒன்றிணைக்கும் இந்த கோட்பாடு ரீதியான நவீனத்துவ அணுகுமுறை அரபு மற்றும் இஸ்லாமிய உலகத்தினிடையே கொண்டு செல்வதில் சிக்கலை ஏற்படுத்த வழிவகை செய்யுமென மதிப்பீடு செய்கிறார்.

15. முகமது அர்கோன் (Mohammed Arkoun)
நவீன கால இஸ்லாமிய ஆய்வுச் சிந்தனைப் பரப்பில் முக்கியமானவராக அறியப்படும் முகமது அர்கோன் அல்ஜீரிய நாட்டைச் சார்ந்தவர். 1928-ல் பிறந்த இவர் உயர் கல்வி முடிந்த பிறகு முப்பது ஆண்டுகளாக இஸ்லாமிய ஆய்வுகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இஸ்லாமிய நவீனத்துவம், மனித நேயம் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்தி சமகால உலகில் இஸ்லாத்தை மறுசிந்தனைக்கு உட்படுத்தியவர், இஸ்லாமிய உலகுக்கும், இஸ்லாமியர் அல்லாத மேற்கத்திய சிந்தனை உலகத்திற்கும் இவரது விவாதங்கள் கவன ஈர்ப்பை ஊட்டின. அரபு, ஆப்பிரிக்க சிந்தனை இணைப்பை அடையாளப்படுத்தும் விதத்திலான அரபிகா (Arabica) இதழின் ஆசிரியராக செயல்பட்டு மேற்குலகின் சிந்தனையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர். பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு மொழிகளில் பல நூல்களை எழுதிய அர்கோன் 1995-ல் மறுசிந்தனையில் இஸ்லாம் 2002-ல் வெளிவந்த சமகால இஸ்லாமிய சிந்தனையில் சிந்திக்கப்படாதவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளாகும்.
இந்த நூலில் ஆய்வு முறையியல் சார்ந்து வரலாறு, சமூகவியல், உளவியல், மானுடவியல் கலந்த பன்முக ஆய்வு முறையியலை அர்கோன் பயன்படுத்துகிறார். நம்பிக்கை அமைப்புகள், மரபுகள், நீதி அறவியல் சார்ந்த மரபு வழிகருத்துக்களை மறு நிர்மாணம் செய்கிறார். இஸ்லாத்தை சமயமாகவும், அதே சமயத்தில் காலத்தின் தேவையையொட்டி உருவாகிய மரபாகவும் மதிப்பீடு செய்கிறார். திருக்குர்ஆனிலிருந்து உருவான முஸ்லிம்களின் சிந்தனை வளர்ச்சிப்படி நிலைகளை தற்காலம் வரை உருவாகியுள்ள உரையாடல்களோடு இணைத்து 17-ம் நூற்றாண்டிற்கு பின்புதான் ஐரோப்பிய சிந்தனைச் சூழலிலிருந்தும் பொருத்திப் பார்க்கிறார். மூலச் சொல்லாய்வுகளோடு வரலாற்று வளர்ச்சியின் உண்மைகள், நிகழ்வுகள், சிந்தனைகள், நம்பிக்கைகள், செயல் நிகழ்வுகள், நிறுவனங்கள், கலை வெளிப்பாடுகள், தனிமனித வாழ்வுக் குறிப்புகள் என பன்முக ரீதியிலான அணுகுமுறை இங்கு மையப்படுத்தப்பட்டுள்ளது.

16. சாதிக் ஜலால் அல் அஸ்ம் (Sadiq Jalal Al Azm)
சிரிய சிந்தனையாளரான சாதிக் ஜலால் அல் அஸ்ம் மரபுவழி அடிப்படை சமய கோட்பாட்டை மாறுபட்ட கோணத்தில் மார்க்சிய அணுகுமுறை சார்ந்து விவாதத்திற்கு உட்படுத்தினார். அறுபதுகளில் வெளிவந்த இவரது நூலான சமய மனத்தின் மீதான விமர்சனம் அரபு கலாச்சாரத்திற்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. லெபனானில் இந்த புத்தகம் தடை செய்யப்பட்டது. சாதிக் ஜலால் அல் அஸ்ம் குற்றம் சாட்டப்பட்டு சட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதுபோன்ற அவரது மற்றுமொரு புத்தகம் சாத்தானின் துயரம் என்பதாகும்.
அரபுலகம் குறித்த பின்னடைவுகளுக்கு பொருளாதார காரணிகள் காரணமாக இல்லையென உறுதிபட நம்பிய சாதிக் அல் அஸ்ம் அரசியல் ரீதியான காரணங்களை முன்வைத்தார். இதில் முக்கியமானது ஜனநாயகம் குறித்த நடைமுறைச் செயலாக்கமாகும். அரபுலகத்தில் வரலாற்று ரீதியாக ஜனநாயக மதிப்பீடுகள் மதிப்பளிக்கப்படவில்லை. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மீட்டெடுப்பதற்கான உள்நாட்டு போராட்டம் எப்போதுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாத்திற்கும் ஐரோப்பிய மேற்கிற்கும் இடையிலான போராட்டமாக மட்டும் இதனை குறுக்கி பார்த்துவிட முடியாது.
தேசிய விடுதலை இயக்கம், அரபு சோசலிசம், சர்வதேச கம்யூனிசம் குறித்த உணர்ச்சி மிக்க புத்தெழுச்சிகள் அறுபதுகளுக்கு பிறகு சரியத் துவங்கின. இதற்கு அரபு இஸ்ரேல் யுத்தமே காரணம். கடந்த முப்பதாண்டுகளில் வெற்றிடமாக கிடந்த இந்த எழுச்சியை இஸ்லாமிய இயக்கங்கள் தன் வசப்படுத்திக் கொண்டன. அதே வேளையில் அரபுச் சமூகங்களில் சமயப் பழைமையை புத்துயிர்ப்பு கொள்ளவும். பெண்களின் நடவடிக்கைகளில் மீது கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் ஏற்படுத்திக் கொண்டன. தற்போது அவர்களால் அரபுலகத்தின் கலாச்சார, அறிவுலக, அரசியல் பிரச்சனைகளில் தீர்மானிக்கும் சக்தி கொண்டவர்களாக மாறியுள்ளனர். இது முற்காலத்தில் அரபு இடது சாரி மார்க்சியர்களாலும் அரபுலக மதசார்பற்ற சக்திகளாலும் தீர்மானிக்கப்பட்டவையாகும். வெகுமக்கள் உரையாடலிலும் இவ்வாறாக இஸ்லாமியவ’திகளின் ஆதிக்கம் மேலோங்கியே உள்ளது. ஆனால் அதிகாரம் சார்ந்து ஆட்சியை தனதாக்கி கொண்டபோதும் அவர்களால் ஈரான், தலிபான் வகையினமற்ற இஸ்லாமிய மாற்று அரசியலை கண்டடைய முடியவில்லை. மன்னராட்சி, இராணுவ ஆட்சி வடிவங்களிலிருந்து இஸ்லாமிய அரசுகள் ஜனநாயக ஆட்சி முறைக்கு மாறும் வரையில் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படாதவைகளாகவே தொடரும் என்பதையும் இவ்விவாதங்களிலிருந்து நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

Series Navigation