சங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

சு.பசுபதி, கனடா


என் காதையே என்னால் நம்ப முடியவில்லை. “ என்ன, ‘தோசை மேல் ஆசை’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரக் கலை நிகழ்ச்சியா?” என்று கேட்டேன். நண்பர், டொராண்டோ தமிழ்ச்சங்கச் செயலாளர், சிரித்தார். “ இல்லை, ஐயா. நான் ‘ஓசை மேல் ஆசை’ என்று தான் சொன்னேன். அது அப்படி உங்கள் காதில் விழுந்ததோ, என்னவோ? இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு நீங்கள் இரண்டு வகைகளில் உதவி செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சியின் முதல் பாடலை நீங்கள் தான் ஒரு சரியான சங்க இலக்கியத்தில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். பின்னர், நிகழ்ச்சியின் இடைவேளைக்குப் பிறகு, உங்கள் தலைமை உரையை வழங்க வேண்டும்.” என்றார்.

“ஓ, அப்படியா? ‘ஓசை மேல் ஆசை’ …உம்…. ஏன் திடீரென்று இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பு?”

“உங்களிடம் உண்மையைச் சொல்வதில் தப்பில்லை, ஐயா. சொல்கிறேன். என் மூத்த மகன் ஹாலிவுட்டில் ஒலிப்பொறியாளனாகப் ( sound engineer ) பணி புரிவது உங்களுக்குத் தெரிந்ததே. சில மாதங்களுக்கு முன் ஒரு விடுமுறையில் அவன் இங்கே வந்திருந்த போது, தான் பணி புரிந்த ஓர் ஆங்கிலப் படத்தில், வெவ்வேறு ஒலிகளை எழுப்ப அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பற்றியே எல்லா நேரமும் பேசிப் பீற்றிக் கொண்டிருந்தான். எனக்கோ ஒரே எரிச்சல். தாங்க முடியவில்லை. ‘ சரி, சரி, நான் சில மாதங்களில் ‘தமிழ் இலக்கியத்தில் ஓசை’ என்ற பொருளில் ஒரு கலை நிகழ்ச்சி … இயல், இசை, நடனம் கலந்த ஒரு நிகழ்ச்சி … தயாரிக்கிறேன். அதில் உன் திறமையைக் காட்டு, பார்க்கலாம்!” என்று சவால் விட்டேன். அவனும் ஒத்துக் கொண்டிருக்கிறான். அதன் விளைவு தான் இந்த ‘ஓசை மேல் ஆசை’ என்ற நிகழ்ச்சி. அதன் மற்ற எல்லாப் பாடல் பகுதிகளும் தயாராகி விட்டன. ஆனால், அதன் முதல் முத்தமிழ் மலராகச் சங்கப் பாடல் பகுதி ஒன்று வேண்டும். அதனால் தான் உங்களைத் தேடி வந்தேன்” என்றார் நண்பர்.

“ உங்கள் நிகழ்ச்சியில் உள்ள மற்ற பாடல்களை எல்லாம் சொல்லுங்கள். அப்போது தானே நிகழ்ச்சிக்குப் பொருத்தமான ஒரு முதல் பகுதியை நான் குறிப்பிட முடியும் ? ” என்றேன்.

நண்பர் தயங்கினார். “ ஐயா, மன்னிக்க வேண்டும். அவற்றை இப்போது நான் சொல்லிவிட்டால், உங்களுக்கு நிகழ்வைப் பார்க்கும் சுவை குறைந்து விடும். நேரிலேயே வந்து பார்த்துக் கொள்ளுங்கள், ஐயா. நீங்கள் கேட்டதற்காக ஒரு பகுதியை மட்டும் உங்களுக்குப் படித்துக் காட்டுகிறேன். இதுதான் நிகழ்ச்சியின் கடைசிப் பாடல். பாரதியின் ‘குயில் பாட்டி’ன் ஒரு பகுதி.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீர் ஓசை, அருவி ஒலியினிலும்,
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்,
சுண்ணம் இடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்,
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்,
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,
வேயின் குழலோடு வீணைமுத லாமனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.

“ சபாஷ்! நல்ல தேர்வு! இப்போது உங்கள் கலை நிகழ்ச்சியின் போக்கு . . சங்கம் முதல் பாரதி வரை . . சரி, சரி, ஒருவழியாய்ப் புரிகிறது. ஓசைக்கு நீங்கள் சூட்டும் முதல் ஆரம் என்னவாக இருக்க வேண்டும், தெரியுமா? ‘மலைபடு கடாம்’ என்ற சங்க நூலின் ஒரு பகுதிதான்! அதை விடப் பொருத்தமான பாடலோ, அஞ்சலியோ உங்களுக்குக் கிடைக்காது! கேளுங்கள்” என்று தொடங்கி அந்த நூலைப் பற்றிய சில விவரங்களைச் சொன்னேன்.

‘ மலைபடு கடாம்’ பத்துப் பாட்டில் கடைசி நூல். 583 அடிகள் கொண்டது. பாடியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார். நன்னன் என்ற குறுநில மன்னனிடம் பரிசு பெற்று வந்த ஒரு கூத்தன் வறுமையால் வாடும் இன்னொரு கூத்தனுக்கு, நன்னனின் பெருமை, அந்த ஊருக்குப் போகும் வழி போன்றவற்றைச் சொல்வதால் இதற்குக் ‘கூத்தராற்றுப் படை’ என்ற பெயரும் உண்டு. போகும் வழியில் மலையில் கேட்கும் பல்வேறு ஒலிகளை மிக அழகாக வர்ணிக்கிறார் புலவர். நூலில்.

மலைபடு கடாஅம் மாதிரத் தியம்ப

என்று ஓர் அடி (348) வருகிறது. இதற்கு, ‘ மலையாகிய யானையிடம் தோன்றும் மதம் போன்ற ஓசை திசைகள் எங்கும் ஒலிக்க’ என்று பொருள். அதனால், ‘கடாம்’ ஓர் ஆகுபெயராக நின்று ஓசையைக் குறிக்கிறது என்பர் அறிஞர்.

“ ‘மலைபடு கடாம்’ என்று நாலைந்து முறை சொன்னாலே ‘கடபடா’ என்று ஒரு சந்தத்தைக் கிளப்புகிறதே” என்றார் நண்பர்.

“உண்மைதான். மலையை யானையுடன் ஒப்பிடும் இத்தகைய ஒரு அழகான கற்பனையைத் தூண்டும் ஒரு வரி நூலில் வரவே, அதையே நூலின் சிறப்புப் பெயராக வைத்துவிட்டனர் முன்னோர்கள்.”

பாட்டின் தொடக்கமே , கூத்தரும், விறலியரும் தோள்களில் சுமந்துசெல்லும் பல்வகை வாத்தியங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது.

திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண்அதிர் இமிழ்இசை கடுப்ப, பண்அமைத்து
திண்வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்குஅடர்ப் பாண்டில்,
மின்இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு,
கண்இடை விடுத்த களிற்றுஉயிர்த் தூம்பின்,
இளிப்பயிர் இமிரும் குறும்பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம்குழல் துதைஇ,
நடுவுநின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,
கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி,
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

இந்தப் பகுதியில் சொல்லப் பட்ட வாத்தியங்கள் : மழையைத் தரும் இருண்ட வானில் முழங்கும் இடியைப் போல் ஒலிக்கும், பண்களை உண்டாக்கும், திண்ணிய வாரால் கட்டப் பட்டிருக்கும் முழவு. சிறுபறை ( ஆகுளி ). வெண்கலத்தை உருக்கித் தகடாகச் செய்யப்பட்ட தாளம்( பாண்டில் ). மயிலிறகு கட்டப்பட்ட ஊது கொம்பு ( கோடு ). ( நாகசுரம் போல் ) நடுநடுவே துளை இடப்பட்டு, யானையின் பெருமூச்சைப் போல் ஒலியெழுப்பும் ‘நெடுவங்கியம்’ ( தூம்பு ). இளி என்னும் பண்ணிசையை விளைவிக்கும் ‘சிறுவங்கியம்’ ( குறுந்தூம்பு ). இனிய ஓசை உடைய வேய்ங்குழல். மத்திமமாகிய ஓசையைச் செய்யும் ‘கரடிகை’ ( தட்டை ) . எல்லரி ( தாளக் கருவி ). மாத்திரையை அறிவிக்கும் ‘ஒருகண் மாக்கிணை’ ( பதலை ). இவை தவிர இன்னும் பல வாத்தியங்களும் இருந்தன என்கிறார் புலவர்!

“ ஆகா! ஐயா! நம் ஆட்டத்தின் முதல் பந்திலேயே, என் மகன் ‘அவுட்’ ஆகிவிடுவான் என்று நினைக்கிறேன்!” என்று ஆர்ப்பரித்தார் நண்பர்.

“ பாவம்! இந்த பழம் வாத்தியங்களைப் பற்றி ஆய்வுகள் செய்து, அவற்றின் ஓசைகளை உம் மகன் எழுப்புவதற்குப் பல மாதங்கள் ..ஏன், ஆண்டுகளே … ஆகலாம்! அவன் இதற்கு ஒலி அமைக்கப் பின்வாங்கினால் , அடுத்த பகுதியையாவது நிச்சயம் நிகழ்ச்சியில் சேருங்கள் “ என்றேன்.

“உண்மையில், இதுதான் இந்த நூலின் மிகச் சிறப்பான பகுதி.

அருவி நுகரும் வான்அர மகளிர்
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்
தெரிஇமிழ் கொண்டநும் இயம்போல் இன்னிசை;

என்று தொடங்கி

மழைகண் டன்ன ஆலைதொறும், ஞெரேர்எனக்
கழி, கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் ;
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும் ;
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்;
என்றஇவ் அனைத்தும் இயைந்துஒருங்கு, ஈண்டி,
அவலவும் மிசையவும் துவன்றிப் பலஉடன்,
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப.

என்று 50 அடிகளுக்கு மேற்பட்ட பகுதியில் மலைப்பகுதியில் உண்டாகும் ஓசைகள் பலவற்றை வர்ணிக்கிறார் புலவர்.

தெய்வ மகளிர் அருவியில் நீரைத் தேக்கி ஏந்தும்போது எழும்பும் ஒலி. யானைக் கூட்டத்தின் தலைமை யானையைப் பிடிக்கக் குறவர்கள் செய்யும் ஆரவாரம். முள்ளம்பன்றியால் புண்பட்ட வேடர் அழும் அழுகை. கணவர் மார்பில் புலி பாய்ந்ததால் ஏற்பட்ட புண்ணின் வலியைக் குறைக்கக் குறத்தியர் பாடுகின்ற ஒலி. வேங்கை மரத்தில் முதன்முறையாகப் பூக்கும் பூக்களைப் பறிக்கும் மங்கையர் ‘புலி, புலி’ என்று கூவுதல். புலி பாய்ந்ததனால் பிடியும், அதன் சுற்றமும் எழுப்பும் ஒலி. குரங்குக் குட்டி மலைப் பிளவில் விழுந்ததைக் கண்டு அதன் தாயும் பிற குரங்குகளும் வருந்தி எழுப்பும் ஒலி. குரங்குகளுக்கும் எட்டாத உயரத்தில் இருக்கும் தேனை எடுத்த மகிழ்ச்சியால் குறவர்கள் செய்யும் ஆரவாரம். பகைவர்களின் சிற்றரண்களை அழித்த கானவர்களின் ஆரவாரம். குறவர்கள் தம் மகளிரோடு ஆடும் குரவைக் கூத்தின் ஒலி. பாறைகள் மீது விழும் ஆறுகளின் ஓசை. யானையைப் பிடித்து, அதைக் கட்டுத் தறியில் பிணிக்கும் பாகர்கள் யானையிடம் பேசும் ஓசை. கிளிகளை ஓட்டும் மங்கைகளின் இனிய ஒலி.
காளைகள் போரிடுவதைப் பார்த்து மக்கள் செய்யும் ஆரவாரம். எருமைக் கடாக்கள் போரிடும் ஒலி. தாங்கள் தின்ற பலாச் சுளைகளின் கொட்டைகளை எடுக்க, நிலத்தில் பரப்பிய சுளைகள் மீது சிறுவர்கள் கடா ஓட்டுவதால் உண்டாகும் ஒலி. கரும்பாலையின் ஓசை. தினையைக் குத்தும் மகளிர் பாடும் பாட்டு. சேம்பையும் மஞ்சளையும் தோண்ட வரும் பன்றிகளை விரட்டும் பறையொலி. இந்த ஓசைகள் எல்லாம் மலையில் பட்டு எழுகின்ற எதிரொலி. ‘என்று நான் சொன்ன இந்த ஒலிகளெல்லாம் ஒன்றாகப் பொருந்தி, பள்ளத்திலும் மேட்டிலும் நெருங்கிப் பலவகைகளாய்க் கணக்குக்குள் அடங்காமல் எண்ணற்ற திறத்தில் ஒலிக்கும் மலையாகிய யானையின் ஒலி திசைகள் எங்கும் ஒலிக்கும்’ என்று தன் ‘ஓசைப் புகழ்’ப் பகுதியை முடிக்கிறார் பெருங்கௌசிகனார்.

“ மிக்க நன்றி, ஐயா. இந்தப் பாடற்பகுதியை ‘ஓசை மேல் ஆசை’யின் முதற் படையலாக நிச்சயம் வைக்கிறேன். இந்தச் சங்க நூல் அக்கால ஓசைகளைப் பற்றிய ஓர் ஆய்வேடாகவே திகழ்கிறது. அற்புதம், ஐயா. மிக்க நன்றி. நீங்கள் நிச்சயமாக வந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். சில வார்த்தைகளும் பேச வேண்டும். இப்போது இன்னொரு எண்ணமும் தோன்றுகிறது. உங்கள் ஆழ்மனத்தின் வெளிப்பாடான ‘தோசை மேல் ஆசை’யையும் நிகழ்ச்சியில் ஒரு சிறு பகுதியாய் இணைத்து விடுகிறேன்! நான் பள்ளியில் படிக்கும் போது, இந்தியில் ‘தோ’ என்றால் இரண்டு என்பதை மனத்தில் வைத்து, தோசையை இரண்டு பக்கமும் திருப்பும் போது எழும் ‘தோ ஓசை’ யால் தான் அதற்குத் தோசை’ என்ற பெயர் வந்தது என்று வேடிக்கையாய்ச் சொல்வோம்! அதைப் பின்பற்றி எங்கள் நிகழ்ச்சியின் இடைவேளைக்கு முன் ‘ஒசையுடன் தோசை’ சுடுவதை மேடைத் திரையில் ஓர் ஒளிக் கீற்றால் காட்டி விட்டு, இடைவேளையில் எல்லாருக்கும் சுடச்சுடத் தோசைகள் தருவதற்கும் ஏற்பாடு செய்கிறேன்! அதனால், ‘தோசை மேல் ஆசை’ உள்ளவர்களும் ‘ஓசை மேல் ஆசை’ நிகழ்ச்சிக்கு வரலாம்!” என்றார் நண்பர்.

“நண்பரே! ஆகா! நன்னன் போன்ற வள்ளல், ஐயா, நீர்! நீங்கள் சொல்வது ‘மலைபடு கடா’த்தில் கௌசிகனார் பயன்படுத்திய ஓர் அற்புதச் சொற்றொடரை நினைவு படுத்துகிறது. வீரர்களை ‘வில்லேர் உழவர்கள்’ என்றும், அறிஞர்களைச் ‘சொல்லேர் உழவர்கள்’ என்றும் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பெருங்கௌசிகனார் இந்நூலில் வள்ளல் ஒருவனிடம் பரிசு பெறப் போகிறவர்களை ‘நசை ஏர் உழவர்கள்’ என்று கூப்பிடுகிறார். ‘நசை’ என்றால் விருப்பம். வள்ளலிடம் ‘பரிசு பெறவேண்டும் என்னும் விருப்பத்தை ஏராகக் கொண்டு உழுபவர்கள் அவர்கள்’ என்ற பொருளில் சொல்கிறார். ‘ஒசை மேல் ஆசை’ யைத் ‘தோசை மேல் ஆசையாக’ மாற்றிக் கேட்ட என் விருப்பத்தை நிறைவேற்றி என்னையும் ஒரு ‘ நசைஏர் உழவ’ராகச் செய்துவிட்டீர்!”

“நிச்சயமாய்த் ‘ தோசை மேல் ஆசை’ … மன்னிக்கவும், ‘ஓசை மேல் ஆசை’ நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்று சொல்லி நண்பருக்கு விடை கொடுத்தேன்.

~*~o0O0o~*~

s dot pasupathy at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா