கோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/>>>/

ரொம்ப அமைதியான மனுசன் குருமூர்த்தி. எப்பவும் துலக்கமான நெற்றியில் தேங்காய்ப் பூவாய்த் திருநீறு பூசியிருப்பான். சிரித்த முகம். அவன் பேன்ட் போட்டு பார்த்தவர் இலர். துாய வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டைதான் உடை. அதில் மாற்றமே கிடையாது. எந்த வயது முதல் எப்படி இப்படி வெள்ளைப் பிரியன் ஆனான் தெரியவில்லை. என்ன படித்திருக்கிறான் யாரும் அறியார். நல்ல பணிவு. தன்னடக்கம். பேசும் வார்த்தையில் கனிவு.

வேலைக்கு வந்தபோதே அப்படித்தான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். முதல் பார்வைக்கே முதலாளியை அவன் கவர்ந்திருப்பான் என்பதிலும் சந்தேகம் இல்லை. மதகேறி வழியும் அணைத் தண்ணி போல தொடைமேல் வழிய விட்ட வேட்டியுடன் சைக்கிளில் வருவான் கடைக்கு. ஊர் பக்கத்து கிராமம். மனோகரபுரம். வயதான தாயார். அக்காக்கள் ரெண்டுபேரைக் கரையேற்றி விட வேண்டியிருந்தது. அப்பா இல்லை.

ஐயா கணக்குப்பிள்ளையாய் இருந்தவர். காலமாகிப் போனார் திடாரென்று. ஐயாவுக்கும் கல்லுாரிப் படிப்புக்கும் மண்ணள்ளிப் போட்டுவிட்டு புன்னகையுடன் வேலை கேட்டு வந்து நிற்கிறான்.

பஜாரில் தேரடி அருகே /கெளசல்யா ஜவுளி கடல் என்று போட்டு அடித்து நதி/… வந்து கை கட்டியபடி நிற்கிறான் குருமூர்த்தி. பார்த்ததுமே மனசிரங்கிப் போயிற்று. உள்ளொடுக்க மனசுக்காரன். நேர்மையானவன். வம்பு தும்பு கிடையாதவன். முதலாளியின் கூரிய கண்கள் எடை போட அதிக நேரம் பிடிக்கவில்லை. மாணிக்கம் பிள்ளைன்னா கணக்குப்பிள்ளைன்றது ஊருக்கே தெரியுமே. ‘ ‘என்ன வேலை தெரியும் உனக்கு ? ‘ ‘ என்று நேரடியாகவே கேட்டார். ‘ ‘ஐயா கொஞ்சம் கத்துக் குடுத்திருக்காரு, கணக்கு வழக்கு பாத்துக்கறாப்ல… ‘ ‘

‘ ‘ஏல அப்ப படிப்பு ? ‘ ‘ என்கிறார். மீண்டும் அதே புன்னகையுடன் நின்னவனை அணைத்துக் கொள்ளத் தோணியது. இந்த மாதிரி இந்தக் காலத்தில் பிள்ளை கிடைக்குமா. தாயார் தந்தையார் கொடுப்பினை அது. தவம் அது, என்றிருந்தது. அதெல்லாம் ஒரு பிறவியம்சம்தான். சிலாட்களைப் பார்த்தால்தான் அந்த /குடும்ப ஒட்டுதல்/ மனசில் வருது. ஐயா யாரு, அம்மா எந்துாரு என்றெல்லாம் விசாரிக்கத் தோணுது… சில நாய்களை வீட்டில் வளக்கணும்னு இருக்கும். சிலதைக் கிடைச்ச கல்லால் சாத்திறணும்னு படல்லியா ?

வீட்டில் தொழுவத்து மாடாட்டம் சும்மா கிடந்தது சைக்கிள் ஒன்று. வெச்சிக்க, என்று தாராளமாய்த் தந்தார். கைக்காசு தேத்த முடியாது, என சக வேலையாட்கள் கிண்டலடித்த முதலாளி. ஐய அவர்கிட்டியாடே வேலை கேட்டுப் போறே… என்று எல்லாரும் அதைரியப் படுத்தி அனுப்பிய மனிதர்…

ஒரு ஜிலுஜிலு டைப்பான மஞ்சள் ஸ்லாக் பிரியர் அவர். சதா வாயில் பன்னீர்ப் புகையிலை. நெற்றியில் பெரிய சைசில் குங்குமப் பொட்டு. நம்மூரில் பொம்பளையாள்தான் இப்பிடி காணாததைக் கண்டாப்ல அப்பித் திரியும். நார்மல் நாலணா வட்டம் பரவாயில்லை. பெரிய சைஸ்னா ஆம்பளையாவட்டும் பொம்பளையாவட்டும் சித்த சந்தேகந் தட்டத்தான் செய்யுது. தாய்மாரே தகப்பன்மாரே இருட்டுமுன்ன வீடு போய்ச் சேர்ந்திருங்க. ஊர் கலவரப்படாம இருக்கும்.

பின்னால் பெத்தம் பெரிய மகாலெட்சுமி. கைலேர்ந்து தங்க நாணய அருவி. நம்மாள் அந்த மாதிரி பைத்தாரத்தனம் பண்ணுமா. ஒத்த நாணயத்துக்கே கைய கப்புனு மூடிக்கும். தவற விடாது… மகாலெட்சுமி படம் பின்னால் வைத்துக் கொண்டு – மஞ்சள் ஸ்லாக், தங்க நாணய காம்பினேஷன் பொருத்தமாய்த்தான் வெச்சிக்கிட்டாரா தெர்ல… நல்லாதான் இருக்கு. நாலைந்து கடை தள்ளி இன்னொரு ஜவுளிக்கடை. மொதலாளி கன்னங்கரேல்னு பார்க்க சகியாதவன்… கூட்டமே கிடையாது. ஈயோட்டம்தான்.

நம்மாள் கல்லாவில் உட்கார்ந்தாரானால் மனசெல்லாம் துட்டு துட்டு துட்டுதான். நல்ல வசூல் நாட்கள் தவிர, வெட்டியாய் வெளிச்சம் திகட்டத் திகட்ட நின்று கதை பேசிக் கொண்டிருக்கிற சிப்பந்திகளுக்கு மதியக் காசு படியளக்கவே மனம் சுணங்கினார். கூட்டம் இல்லைன்னு விளக்கு அணைக்கவும் ஏலாது. உள்ள வர நினைச்ச ஆளையும் அடுத்த கடைக்கு விரட்டிரும் அந்த யோசனை… மூதேவிங்க. அத்தனை வெளிச்சத்தில் நின்னு சொறிஞ்சிக்கறான் கைவிட்டு… என்ன ஷோவா காட்டுறம். வேலையாட்களில் பாதிக்குப் பாதி பொம்பளையாட்கள். ஜவுளிக்கடையாச்சே. உள்ளாடை வெளியாடை எல்லாம் விற்கணும். சற்று செயற்கையான எடுப்பும் மிடுக்கும் அதிதச் சிரிப்பும்… அதுகள் ஆம்பளை வேலையாட்களுடன் சிரித்தபடி நின்றாலே பற்றிக் கொண்டு வந்தது அவருக்கு.

ஏன் ? காரணம் கண்டுபிடித்துச் சொன்னான் சிம்மாசலம் பின்னாளில்.

கணக்கில் சூரன் குருமூர்த்தி. எல்லாம் மனக் கணக்குதான். குரு கணக்கில் புலி. இந்தக் காலப் பிள்ளைங்களுக்கு, கணக்கு – அதுதான் புலி. அந்தாக்ல மிரண்டு ஓடறான்… வாங்கிய ஜவுளிகளை, கடகடவென்று, நாய்க்குட்டி ஆணா பொட்டையா என்று துாக்கிப் பார்க்கிறதைப் போல விலை பார்த்து டோட்டல் சொன்னான். அவனறியாமல் கால்குலேட்டரில் தட்டிப் பார்த்து ஆச்சரியப் பட்டார். ஒருமுறை பத்து ரூபாய் கூடக் காட்டியது கால்குலேட்டர் – அவர் அவசரத்தில் தப்பாய்த் தட்டியிருந்தார்!

அந்தக் காலக் கணக்கு படிக்க வைத்திருந்தார் ஐயா அவனை. பதினாறாம் வாய்ப்பாடு வரை மனனப் பாடம். பெரிய பெருக்கல்களுக்கு மூளையில் சுருக்குவழி வைத்திருந்தான். கணக்குச் சொல்லுமுன் அவன் வாயில் இருந்து தவளையாய் எகிறிக் குதித்தது விடை. கால்குலேட்டர் அறியாதவர் ஐயா. அதுவா, வேணாங்க. எவனோ தன்னம்பிக்கை இல்லாதவன் கண்டு பிடிச்ச வஸ்து. நமக்கெதுக்கு… என்று ஈறு தெரியச் சிரிப்பார். கறை படிந்த பற்கள். ஒருமாதிரி நாறும்… குருமூர்த்தியின் புன்னகை வசீகரம் மிக்கது. அலட்டல் இல்லாத ஜீவனான புன்னகை அல்லவா அது. இன்னும் சிரிக்க மாட்டானா என்றிருக்கும்.

எளிய முறையில் முதல் அக்காவுக்குக் கல்யாணம் பண்ணினானே. குருமூர்த்தி குடும்பமே அசாத்திய முகத் தெளிச்சியுடன் இருந்தார்கள். பட்டுப்புடவை ஒண்ணு கொடுத்து ஆயிரத்திஒண்ணு தந்தார். கடையாட்கள் கல்யாணத்துக்கே அவ்வளவு மொய் வைக்காதவர். பத்திரிகை வைத்தால் ம், என்பார். எத்தனை நாள் லீவு என்பார். அத்தனை நாள் அவசியமா, என்பார் உடனே. தொடர்ந்து வேலைக்கு வராப்டியா எப்டி நிலவரம்… என்பார். ஒட்டுதல் இல்லாத கேள்விகள்.

அக்காவை பக்கத்துாரில்தான் தந்திருந்தது. என்றாலும் கொஞ்சநாள் அக்காவை விட்டுப் பிரிந்த சோகத்தின் நிழலாட்டத்தை அந்த சுந்தர முகத்தில் பார்த்ததும் திண்டாட்டமாகி விட்டது. விளக்கேற்றாத மாடம். கொஞ்சங் கொஞ்சமாய் அந்தக் குடும்பத்தில் அவர் அக்கறை அதிகரித்தாப் போலிருந்தது தனக்கே. மாப்பிள்ளை கூட்டுறவு விவசாய வங்கி குமாஸ்தா. உலகின் ஆகப் பெரிய வேலை அது என்று அவன் காட்டிய உதார். ஊழல் என்று என்னிக்கு உள்ள போவானோ. கல்யாண ரிசப்ஷன் என்று அவன்கூட ஃபோட்டோவுக்கு நிற்கிற ஆட்களே சரி கிடையாது… மாப்பிள்ளையை அவருக்குப் பிடிக்கவில்லை. அதைவிட முதலாளி என்று – அவர் பைத்துட்டுக்கு அவன் காட்டிய மரியாதை பிடிக்காமல் போனது. அவனுந்தான் விவசாய வங்கி கணக்கு வழக்கு பார்க்கிறானாம்… கிழிஞ்சது போ.

குருமூர்த்தி மனசைக் காட்டாதவன். பெரும் சாடின் துணிபோன்ற புன்னகையுடன் மனசைப் போட்டு மூடியிருந்தான் அவன். கோவில் பிரசாதப் பாத்திரம் போல.

அவனிடம் மாத்திரம் தனிச் சலுகை – கரிசனம் காட்டினார் அவர் என்பதை எல்லாரும் விளங்காமல் கவனித்தார்கள்… எல்லாம் பூடகமாக மூடு மந்திரமாக அல்லவா இருந்தது. அந்தக் கடையில் சிம்மாசலம் சி ஐ டி வேலைகளில் கெட்டிக்காரன். வம்பு அவனுக்கு முதலாளி வாய்ப் பன்னீர்ப் புகையிலை. அவருக்கு புகையிலை போட்டு வாசனையாய்ச் சிவப்பாய் இருக்க வேணும் வாய். நம்மாள் வம்பைப் போட்டுக் குதப்பி அதக்கித் துப்புகிறவனாய் இருந்தான்.

அவன் சொன்ன யூகத்துக்கும் முதலாளி வியூகத்துக்கும் ஒத்துப் போனது.

முதலாளிக்கு ஒரே பெண். கீழ்ப்படி தகவல்கள் உபயம் சிம்மாசலம்.

கெளசல்யா. ஒரு மாதிரி லுாஸ் அது. பெரிய பெண்ணும் இல்லை. குழந்தையும் இல்லை.. சனியன் வயசுக்கு வந்தாளோ இல்லையோ ? – அது குறித்த விஷயங்கள் சிமமாசலம் அறிய முடியாதுதான்… சத்தம் இல்லாமல் ரகசியமாய் அவளுக்குக் கல்யாணம் முடித்தார் முதலாளி. முதலிரவு அன்று வெளியே ஓடி வந்திட்டது.

என்னண்ணே சொல்லிட்டுச் சிரிங்கண்ணே…

‘ ‘என்னடி ஆச்சி ? ‘ ‘ன்னு அப்பா கேட்டார் அவளை. ‘ ‘ஐய மாப்ளை ஷேம் ஷேம். பப்பி ஷேம் ‘ ‘

விஷயமாய் எதையும் சொல்ல மாட்டான் சிம். இட்டுக்கட்டி விஸ்தாரக் கதை சொல்வதில் நிபுணன். அவன் பேச்சை ஆம்பளைகளை விட கடைப் பெண்கள் அலாதியாய் ரசித்தார்கள். எல்லாம் கல்யாணங் கட்ட அலைச்சல் கண்ட ஜனம்… காதே கேளாதவன் மாதிரி மக்கள் கலைத்துப் போட்ட புடவைக் கோபுரத்தை மடித்துக் கொண்டிருப்பான் குரு. அவனைப் பற்றி சுவாரஸ்யமாய் இன்றுவரை சிம்மிடம் பிடி கிடைக்கவில்லை. /ஜ ட ம்/ என அவன் குருவுக்கு வைத்த பட்டப்பெயர் எடுபடவில்லை.

பெண் சிப்பந்திகள் அவன் பார்க்க மாட்டானா என்று ஆசைப்பட்டார்கள். சிம்மிடம் அவர்கள் சிரித்தார்களே தவிர யார் அவனை மதித்தார்கள். அவனது காதல் கனவுகள் கானல் கனவுகளாகவே இருந்தன ஏனோ. பலிதம் ஆகவேயில்லை… ஆண்களில் சிம் போல, அந்தக் குமருகளில் பார்வதி. ஒரு ரகசிய நிமிஷத்தில் பக்கத்து அறையில் அவன் இருக்கிறதை அறியாமல் அவனைப் பத்தி விஸ்தாரமாய் அசிங்கக் கதை சொன்னாள்… ஒரு லேடி கஸ்டமர் இவளே. டிரஸ் சரிபாக்கன்னு ரூம் காட்டச் சொன்னாளா ?…

அப்டி எதாச்சிம் நடந்தா நல்லாத்தான் இருக்கும். சிம்முக்கே அடுத்து என்ன என அறிகிற ஆர்வக் குறுகுறுப்பு.

பளார்னு விட்டா பாரு…

எல்லாத்திலும் தன்னடையாள முத்திரை வைத்திருந்தானே குரு. நடுவகிடெடுத்துத் தலைவாருதல் அபூர்வம் அல்லவா ? இப்ப பொம்பளையாளுகளே கோண வகிடுன்னு மாறியாச்சி. சும்மா நிற்கிற நேரம் கையை மாரின் குறுக்கே கட்டிக் கொண்டு நிற்கிறான். தலைப்பா கட்டாத விவேகானந்தர். மாலை நேரம் கைத்துட்டு போட்டு நாளிதழ் வாசிக்கிறான். யாரிடமும் ஆனால் அரசியல் பிரஸ்தாபிக்கிறானில்லை. போய் டாக்கடையில் நிற்கிறவனும் இல்லை. அவர்கள் குடும்பத்திலேயே எல்லாருக்கும் நீள உடல்வாகு. மெலிந்த உயர மனிதர்கள். அதே அழகு. முதலாளி வெள்ளம் வராமல் அடுக்கிய மணல்மூட்டையை மடியில் கட்டினாப் போல உட்கார்ந்திருப்பார். வாச்மேனைக் கூப்பிட்டு தனியே ஃபிளாஸ்கில் காபி வாங்கிவரச் சொல்லி உள்ளறையில் குடிக்கிறபோது குருவையும் கூப்பிட்டுத் தருவார். வேணாங்க… என்று அசட்டுச் சிரிப்பு நெளிசல் இல்லாமல் அவன் வாங்கிக் கொண்டது பிடித்தது அவருக்கு. அவர் கைதுாக்கி விட்டு முன்னுக்கு வர வேண்டிய குடும்பம். அதை அவன் மறைமுகமாக உணர்த்தியபடியே இருக்க வேண்டியிருந்தது.

இன்னொரு அக்கா வேறு கல்யாணத்துக்கு. பெரியவள் சற்று சிவப்பு. பளிச்சென்றிருந்தாள். தோள்பூரியாய் பஃப் வைத்த ஜம்பர் விரும்பி அணிந்தாள். தலை மறைச்சாப்ல ஏராளமாய்ப் பூ எல்லாம் இல்லை. குருவைப் போலவே நெத்திக் கீற்றுத் திரூநீறு. தலையில் சிறு மல்லிகைக் கொத்து. சின்ன அக்கா நிறையப் பூ, கனகாம்பரம் டிசம்பர் என்று மணமில்லாத பூவானாலும் தலைநிறைய ஆசைப்பட்டது. சதா டி.வி. பார்க்க ஆசை. காலையில் கோலம்போட வாசல் வந்தால்கூட ஒரு முகங்கழுவல். சின்ன டச் அப். மை ஒதுங்கீர்க்கோ ?-ன்னு செக்அப்.

அதெல்லபாம் ஒனக்கு எப்டித் தெரியும் – என ஒருத்தி சிம்மிடம் கேட்டாள்.

நான் சி ஐ டி. இந்த உலகமே எனக்கு அலுவலகம்… என்றான் சிம்.

கதையைக் கேளுங்கோ. ஒருநாள் எதோ செக் புத்தகம் கொண்டு வர முதலாளி மறந்துட்டாப்ல. நம்ம குருவை அனுப்பினார்… என்றவன் தனக்கே சுவாரஸ்யம் பத்தாமல், அவராவது மறக்கறதாவது ? எல்லாம் ஒரு நாடகம்…

ஏன் ? – என்கிறாள் பார்வதி படபடப்புடன். அவள் கதையின் அடுத்த கட்டத்தை யூகித்து விட்டாற் போலத்தான் இருந்தது.

மதகணைத் தண்ணீர் வழிய வழிய குரு முதலாளி வீட்டுக்குப் போய் இறங்கினான். காத்துக்கு வேட்டி துாக்கியது. அமுக்கிக் கொண்டான்! கதவைத் தட்டினானா…

திறந்தது அந்தக் கெளசல்யா! – என்றாள் பார்வதி முந்திக் கொண்டு.

இளையராஜா மியூசிக்… என்கிறான் சிம் புன்னகைத்தபடி.

செக் புத்தகம் எடுக்கப் போனவனை செக் பண்ணுறாரா நம்ப குங்குமப்பிசாசு ?…

வேணுன்னே செக் புத்தகம் வைத்த இடத்தை மாத்திச் சொல்லி விட்டாரு கு.பி.

ரெண்டு பேருமாத் தேடி… கரண்ட் கட்… தலைக்குத் தலை இடிச்சிக் கிட்டாங்களாக்கும்.

வேட்டி சில விஷயங்கள்ல செளகர்யந்தான்! – என்று ரூட் மாத்தினான் சிம்.

குரு ஷேம் ஷேமாயிட்டானா ?

முதலாளியின் மனசில் என்ன யோசனை தெரியவில்லை. தனக்குப் பின் பிள்ளைவாரிசு காணாததில், பிறந்த ஒண்ணும் உதவாமல் போனதில், அமைந்த மாப்பிள்ளையும் சப்னு அறைந்துவிட்டு பெண்ணைக் கொண்டுவந்து விட்டு விட்டதில் அவர் சற்று உள்த் திகைப்பாய்த்தான் இருந்தார். ஒருவேளை அவரே அவனிடம் ‘என் பொண்ணைக் கட்டிக்கறியா ? ‘ என்று கேட்டிருக்கவும் கூடும்.

கடை சகாக்கள் எதாவது கேள்வி கேட்டால் அதிகம் பேசாமல் அழிச்சாட்டியம் பண்ணுகிறவனை வைத்துக் கொண்டு என்ன கதை எழுதுவது ?

தீபாவளி சமயம் பஜாரில் புது மாற்றங்கள் நிறைய நிகழ்ந்தன. புது வெள்ளம் போல ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் நடமாடினார்கள். எந்த நோக்கமும் இல்லாமல் இளைய சமுதாயம் கோவில்மாடாட்டம் ஊடுருவிக் கடந்தார்கள். நாலு கடை தள்ளிய ஜவுளிக்கடையில் புதிய விளம்பர பொம்மை அது இதுவென அமர்க்களங்கள்… வேலையாட்கள் அங்கே வேலைக்கு முயன்றபடி இருந்தார்கள். அது முதலாளிக்கும் தெரியும். யாருக்கும் அங்கே வேலை கிடைக்கவில்லை… என்பதுகூட அவருக்கு எரிச்சலாய் இருந்தது.

ஒருநாள் ரிக்ஷாவில் கடைக்கு வரும் வழியில் அந்தக் கடைப் பக்கமாய் வந்தவர் திகைத்துப் போனார்.

பின்னால் வெங்கடாஜலபதி. விளக்கேற்றி ஊதுபத்திப் புகை. புதிய மாலையின் ஈரவாசனை. கல்லாவில் குருமூர்த்தி. வருகிற ஆட்களைப் பார்த்துக் கைகூப்பிச் சிரித்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிஷம் ரிக்ஷாவை நிறுத்தச் சொன்னார்.

அவன் வேறு பக்கம் திரும்பிக் கும்பிட்டு வாங்க வாங்க, என்கிறான். என்ன வசீகரமான புன்னகை…

அவருக்கு எரிச்சலாய் இருந்தது.

இதுக்கே எரிச்சல்பட்டால் எப்படி ? அடுத்த வாரத்தில் அந்த முதலாளி பொண்ணுக்கும் நம்ம நாயகனுக்கும் கல்யாணமாமே ?

உனக்கெப்படித் தெரியும் ? பத்திரிகை தந்தானா ? – என்று பார்வதி கேட்டாள் சிம்மை.

முதலாளிக்கே வந்ததாத் தெர்ல… என்கிறான் சிம்.

storysankar@gmail.com

mobile india 94444 18699

Series Navigationஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு >>