கோமாளிக் காக்கைகள்
பனசை நடராஜன்

மயிலின் தோகையழகை
பழமையென நகைத்து
துடைப்பத்தை வாலில்
சொருகிக் கொண்டு அலையும்..!
கா…கா…கா…கா… என
நீளமாய் கரைந்தால்
சாயம் வெளுத்திடுமென
‘கா’ எனக் கத்தும் – குயில்
கூவலை மிஞ்சிய – தற்
காலத்துக்கு ஏற்ற
தேனிசை இதுவென்று
நாகூசாமல் சொல்லும்..!
‘கா’ என்ற கத்தலின் பொருள்
யாதென்றால் அவரவர்க்கு
தோன்றுவதெல்லாம் என
ஏமாற்று விளக்கம் தரும்..!
‘ஆம் ஆம்’ என சில செம்மறி
ஆடுகளும் தலையாட்டும்..!
நா சுளுக்கும் பெயர்களை
தானாக சூட்டிக் கொண்டும்,
பூமியை புரட்டி
புதுப்பிப்பதாய் புளுகிக் கொண்டும்,
கும்பலாய் சொன்னால் நம்பிடுவாரென்று
ஊருக்கு ஆறேழு ஒன்றாகி
குழு குழுவாய் திரிகின்றன
கோமாளிக் காக்கைகள்..!!!
– பனசை நடராஜன் –
(feenix75@yahoo.co.in)