கைத் தொலைபேசி
Published February 8, 2007 • By
ரஜித்
ரஜித்
வரலாற்றைத்
திருத்துவோம்
கிமு கிபி அன்று
கைமு கைபி இன்று
அண்டை வீடுகளாகின
அமெரிக்காவும்
அத்திப்பட்டும்
வையத்தை
மையத்தில் வைத்து
மின்காந்த அலையால்
வலை பின்னிவிட்டது
விஞ்ஞானச் சிலந்தி
உலகம்
ஒரு முறை சுற்ற
இருபத்து நான்கு மணிகள்
ஒரு சொல்
உலகம் சுற்ற
இருபத்து நான்கு நொடிகள்
அர்த்தங்களைத் தொலைத்தன
தூரம்
இடைவெளி
பிரிவு
தனிமை
போன்ற சொற்கள்
விரல்களுல் நிர்வாகம்
உள்ளங்கைக்குள்
அலுவலகம்
கத்தரிக்கப்பட்டன
மனிதனின்
சுதந்திரச் சிறகுகள்
கண்ணன் வாய்க்குள்
கலியுகம் – புராணம்
கைப்பேசிக்குள்
கலியுகம் – நிதர்சனம்