குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

பாவண்ணன்


1. வழிபாடு

குத்து விளக்கில்
நெய்யூற்றித் தாய்நிற்க
தத்தித் தத்தி நடந்த சிறுகுழந்தை
விழுந்து தாள்பணியும்
பெரியவர்களைப் பார்த்ததும்
ஏதோ ஆவல் உந்த
கருவறைக்குப் பொற்பாதம் காட்டி
சட்டென்று விழுந்து சிரிக்கிறது

2. இளவரசிப்பூ

நாய்கள் உலவும் சுற்றுச் சுவரின்
இரும்புக் கம்பிகளுக்கிடையே
தலைநீட்டிச் சிரிக்கிறது ஊதாப்பூ

தெருக்குழந்தைகள்
அப்பூவைத் தொட்டுப் பார்க்க அஞ்சுகிறார்கள்

ஓரமாய் ஒதுங்கி நின்று
அதன் அழகை ரசிக்கிறார்கள்

சூரிய வெளிச்சத்தில் மின்னும் இதழ்கண்டு
சொக்கி நிற்கிறார்கள் அவர்கள்

அப்பூவுக்கு இளவரசிப்பூ என்று
பெயர் சூட்டுகிறது ஒரு குழந்தை
இளவரசி இளவரசி என்று
ரகசியக் குரலில் அழைக்கிறது இன்னொரு குழந்தை
காற்றின் தீண்டலால் அது அசையும்போது
நடனம் பார் என்று துள்ளுகிறது மறுகுழந்தை

நெருங்க முயற்சி செய்யும்போது
முரட்டு நாய்கள் குரைத்து விரட்டுகின்றன
இடைவிடாத அவற்றின் சத்தம்
கத்திக்குத்தாக அழுத்துகிறது அவர்கள் மனசை
பீதியில் நின்று விடுகின்றன அவர்கள் கால்கள்

இளவரசி இளவரசி என்ற
ஆற்றாமையின் அழைப்புக் குரல்களை
காற்று சுமந்துபோய் பூவிடம் சேர்க்கிறது

துாது அனுப்பிய நிறைவில்
உறைந்து நிற்கிறார்கள் அவர்கள்
கணப்பொழுதில் காட்சி மாறி
கண்களில் விரிகின்றன கனவுகள்

யாராலும் தடுக்க முடியாத அக்கனவில்
இளவரிசியின் இதழ்தொட்டுச்
சிலிர்க்கிறார்கள் குழந்தைகள்
கூச்சமும் பரவசமும் படர
குனிந்து முத்தம் கொடுக்கிறார்கள்
உதடு உணர்ந்த மென்மையில்
உள்ளம் உருகுகிறார்கள்
அவர்கள் நெஞ்சில் நிரம்பும் ஆனந்த வெள்ளம்
அணைஉடைந்து பூமியைநிரப்புகிறது
வெள்ளத்தின் உச்சியில் மிதக்கிறது இளவரசிப்பூ

கனவைக் கலைக்க இயலாத நாய்கள்
காதுமடல் விறைக்கக் குரைக்கின்றன

3. பித்துக் குழந்தை

குளிப்பாட்டி உடைமாற்றி
குட்டை நாற்காலியில்
உட்கார வைக்கப்பட்டது
பித்துக் குழந்தை

தழைதின்னும் ஆடு
நெல்கொரிக்கும் அணில்
சருகு சுமந்தலையும் குருவி
திண்ணையிலிருந்து தாவித்தாவி
தெருவுக்கும் நீள்கிறது அதன்பார்வை

தோழியைக் கண்டதும் சிரிக்கிறது அது
மரவட்டையைக் கண்டாலும் சிரிக்கிறது அது
அதன் சிரிப்பின் ஓசையில்
அதிர்கிறது புதுமொழியின் அரிச்சுவடி

எங்கிருந்தோ வந்த குறும்புக்காரச் சிறுமி
அதன்தொடையில் கிள்ளிவிடுகிறாள்
சிரிப்பிலிருந்து அழுகைக்கு மாறுகிறது
வலிபொறுக்காத குழந்தை
அதன் கண்களில் சிவப்பேறுகின்றன
உதடுகளும் கன்னமும் துடிக்கின்றன
குரங்குபோல் குட்டிக்கரணம் போடுகிறாள் சிறுமி
உச்சத்துக்குப் போன குழந்தையின் அழுகை
உடனே சிரிப்பாக மாறிவிடுகிறது
புன்சிரிப்பு மாறாத முகத்துடன்
சில்லறை வசைகளை உதிர்க்கிறாள் சிறுமி
சிரித்துச் சிரித்துக் குலுங்குகிறது குழந்தை
வசைமொழிகளையே ராகமாக்கிப் பாடுகிறாள் அவள்
வீட்டிலிருந்த மற்ற சிறுவர்களும் சிறுமிகளும்
அவளுடன் சேர்ந்து ராகமிசைக்கிறார்கள்
வசையில் வக்கிரம் கூடுகிறது
வாய்ச்சிரிப்பு மட்டும் மறையவில்லை

அறிவாளிச் சிறுவர்கள்ின் ஆட்டத்தைப் பார்த்து
ஆனந்தத்தில் சிரிக்கிறது பித்துக் குழந்தை

4. கடலின் ஓசை

கோணலாய் வட்டம் தீட்டிய குழந்தை
இதுதான் உலகம் என்றது
குறுக்கிலொரு கோடிழுத்து
நமது வீடு பாரென்று சொன்னது
அருகிலிரு புள்ளிகள் வைத்து
அவைதாம் நாம் என்றது
எங்கெங்கோ சதுரங்கள் எழுதி
தோட்டம் காடென்று சிரித்தது
கவனம் பிசகிய கணமொன்றில்
காற்றில் நெளிந்தது உலகவட்டம்
மனமதிர்ந்த சிறுபொழுதில்
காதுப்பறையைக் கிழித்தடங்கியது
கடலின் ஓசை

5. காற்றில் நடக்கும் சிறுமி

அந்தரத்துக் கயிற்றில் நடக்கும் சிறுமியை
அண்ணாந்து பார்க்கிறாள் அந்தச் சிறுமி
அவள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது
அடிஅடியாய் நகரும் சிறுபாதங்களில்
பதிந்திருக்கிறது அவள் பார்வை
கையைப் பற்றி இறக்கிவிட வேண்டுமென்று
பரபரக்கின்றன அவள் கைகள்
இவ்வளவு பெருங்கூட்டம் நின்று பார்க்க
தனியே ஏன் அல்லாடுகிறாள் என்று
அந்தச் சிறுமிக்குப் புரியவில்லை
தொடர்ந்து அதிரும் மேளத்தையும்
கூடிநிற்பவர்களின் உற்சாகக் குரல்களையும்
எதுவும் புரியாமல்
மாறிமாறிப் பார்க்கிறாள் அந்தச் சிறுமி
இறங்கி வந்து கும்பிட்டவளின் சிரிப்புக்கு
என்ன பொருள் என்றும் விளங்கவில்லை
கைதட்டும் மக்களின் முன்
தட்டேந்தி நடப்பவளின்
பாதங்களில் மீண்டும் பதிகிறது அவள் பார்வை
அப்போதும் அவள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது

6. குழந்தையைப் பின்தொடரும் காலம்

நிரம்பி வழியும் ஏரியை
ஆனந்தம் பொங்கப் பார்க்கிறான் என்மகன்
அவன் கால்கள் பரபரக்கின்றன
கரையில் நின்று பாதங்கள் நனைக்க
ஆவலுடன் என்னையும் அழைக்கிறான்
தழுவி விலகும் சிற்றலைகளை
ஆர்வத்துடன் கவனிக்கின்றன அவன் கண்கள்
உடல் சிலிர்க்கக் கைகுவித்து
நீரை அள்ளி அள்ளி நழுவவிடுகிறான்
இவ்வளவு தண்ணீர் எப்போது நிரம்பியது
என்று கேட்கிறான்
எந்த வழியாக வந்ததென்றும்
வீடுவரை வராதது ஏனென்றும் வினவுகிறான்
நடுவிலிருந்த செடிகளும் புதர்களும்
நாசமாகி விட்டதா என்று சந்தேகப்படுகிறான்
எனக்குத் தெரியும் மந்திரத்தால்
தண்ணீரைப் பாயாகச் சுருட்டிவிடுவேன் என்கிறான்
புத்தம் புதிய ஓர்இடத்துக்கு
என் பின்னால் எல்லாரையும் அழைத்துச் செல்வேன் என்கிறான்

7. அப்பாவிச் சாட்சியின் கேள்விகள்

நெல்லும் கரும்பும் விளைந்த வயலில்
அடுக்கு மாளிகையின் அஸ்திவாரப் பள்ளத்தை
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
எந்திரமாய் இயங்கும்
பெண்களின் கைகளில்
மண்சட்டிகள் மாறிக் கரையேறுகின்றன
ஆண்கள் உயர்த்தும் கடப்பாறைகள்
பூமியின் மார்பைக் குத்திக் கிழிக்கின்றன

வேகத்தைக் கண்டு வியப்பில் கண்மலர
வேடிக்கை பார்க்கிறான் ஒரு சிறுவன்
பச்சை வயல்களை ஏன் அழிக்கிறீர்கள்
என்று அவன் கேட்கவில்லை

நெல்லும் கரும்பும் இனி எப்படி விளையும்
என்று அவன் கேட்கவில்லை
நெல் இல்லாமல் இருப்பது எப்படி
என்று அவன் கேட்கவில்லை
இந்த உலகம் இருக்குமோ
என்றும் அவன் கேட்கவில்லை
இனி தும்பிகளை எங்கே போய்த் தேடுவேன்
என்றும் அவன் கேட்கவில்லை

இன்று அவன் ஒரு அப்பாவிச் சிறுவன்
மோசடிக் கும்பலின் நாசகாரியம்
முடிவுற்ற பின்னாலாவது
இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்
அப்போது உலகம் தரும் பதில் என்ன ?

8. எளிய பதிலைத் தேடி

நண்பரின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள்
நேற்று நடந்தது
மாலை விருந்துக்கு
நாங்கள் சென்றிருந்தோம்
எல்லாரையும் போல
குழந்தையின் கன்னத்தை நாங்களும் கிள்ளினோம்
கனிவுடன் ஒரு முத்தம் தந்தாள் என்மனைவி
அதன் பிஞ்சுவிரல்களோடு
என் மகனின் விரல்களைச் சேர்த்து
குலுக்கச் செய்தோம்
கலைநிகழ்ச்சியில் ஆடத்தயங்கி
நாணத்தால் சிவந்த என் மகனைப் பற்றி
சில வார்த்தைகளைச் சொன்னோம்
கூடம் முழுக்க
முப்பதுநாற்பது குழந்தைகள்
புத்தாடைக்குள்ளே
அழகாக இருந்தன அவர்கள் முகங்கள்

விருந்துக்கப்புறம்
நடந்தபடியே திரும்பத் தொடங்கினோம்
எதுவும் பேசாமல்
என் தோளில் கிடந்தான் மகன்
என்னடா என்னடா என்றேன்
தன் பிறந்தநாளைக் கொண்டாடாதது ஏன் என
மெல்லிய குரலில் கேட்டான்
மடேரெனத் தாக்கியது அக்கேள்வி
ஒருபெரும்பாய்ச்சலுடன்
மனசிலெழும் பல விடைகளை
அவன் முன் வைக்க முடியவில்லை
எளிய கேள்விக்கு ஈடாகச் சொல்ல
கைவசமில்லை எளிய பதில்

paavannan@hotmail.com

Series Navigation