குறுநாவல் – து ை ண – 2

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

ம.ந. ராமசாமி


பாகவதர் வந்தார். பரபரப்பு. அங்கங்கே கூடி நின்றிருந்தவர்கள் இடங்கண்டு அமர்ந்தனர். விளக்குகள் எரியத் தொடங்கின. மேடைக்கு ஏறிய பாகவதர் நின்றபடி சபைக்கு வணக்கம் தெரிவித்தார். உட்கார்ந்து பெட்டியில் சுருதி சேர்த்தார்.

/கோபிகா ஜீவன ஸ்மரணம்….

/ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ணா… என்கிற பின்முழ்க்கத்துடன் சபையோர் கலந்து கொண்டனர்.

/திமிகிட திமிகிட… மிருதங்கம் உடன் ஒலித்தது. மேடை களைகட்டியது.

ராமகிருஷ்ணன் மேடையைப் பார்த்திருந்தான். நிகழ்ச்சியில் லயிப்பு என்றால் அவனுக்கு அப்படி ஒரு லயிப்பு. பந்தயம் போட்டு, வெகுமதி தந்து, பாராட்டு விழா நடத்துகிறோம் என்றால் கூட எனக்கு அப்படி ஒரு லயிப்பு, ஈர்ப்பு வராது.

— தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகளை கம்சன் கொலை செய்யும் பாதகத்தை மிக நாசூக்காகச் சொன்னார் பாகவதர். முகச் சுளிப்பு, அருவருப்பு, ஐயோ போதுமே என்று தோன்றாத வகையில் சொன்னார். நல்ல அனுபவசாலி.

எனக்குள் சந்தேகம் எழுந்தது. அந்த இடத்தை என் மனம் பற்றிக்கொண்டு சிலந்திப்பூச்சியாக வலை பின்னத் தொடங்கியது.

பாகவதர் சொன்ன விவரங்களில் இருந்து பார்த்தால், கம்சன் முட்டாளாகவோ பைத்தியக்காரனாகவோ தெரியவில்லை. தன் பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தபோது, எதிரியை அழித்துவிட வேண்டும் என்ற வெறி அவனிடமும் இருந்திருக்கிறது.

— அவன் தேவகியையும் வசுதேவரையும் கொலை பண்ணி, மூல வேரை நிர்மூலம் செய்திருக்கலாம். செய்யவில்லை. உடன் பிறந்தவள், அவள் கணவன்… என்று பாசம் இருந்திருக்கிறது. போகட்டும்.

ஆனால்…

ஆனால் அந்த கம்சன் சகோதரியையும், அவளுடைய கணவனையும், ஒரே அறையில் சிறை வைப்பானேன்!

இப்படி ஒரே அறையில் வைத்ததினால் அல்லவா குழப்பங்கள். அதனால்தானே ஆண்டு தப்பாமல் வரிசையாகக் குழந்தைகள் பிறக்க நேர்ந்திருக்கிறது!

இந்தச் சின்ன விஷயம் எப்படி கம்சனுக்குத் தெரியாமல் போய்விட்டது!

சரி. அதுதான் போகட்டும். தன் மைத்துனன் கொலைகாரப் பாவி. குழந்தைகளை உயிரோடு விட்டு வைக்க மாட்டான் என்று தெரிந்தும், வசுதேவர் ஜனன கைங்கரியத்தில் ஈடுபடுவானேன்!

இயல்பான குடும்பக் கட்டுப்பாட்டு வகை தொகை தெரிந்திருக்காதோ!

அடேய் நாத்திகா! – குரல் என் காதுகளில் விழுகிறது. நிறுத்திக் கொள்கிறேன்.

—-

கதை ஒரு செளகர்யமான இடத்தில் பாகவதரால் நிறுத்தப் பட்டது. /நாளைக்கு பகவான் கிருஷ்ணர் ஜனனம். சொல்லி வெச்சாப்ல நாளைக்கு ரோகிணி நட்சத்திரம்! ஆத்தில் அவா அவா பாயசம் பண்ணி சாப்ட்டுட்டு வாங்கோ… என்று சொன்ன பாகவதர் கணீரென்ற குரலில், /கோவிந்த நாம சங்கீர்த்தனம்… என்றார்.

/கோவிந்தா… கோவிந்தா… பக்தகோடிகள் எழுந்தனர்.

நான் நின்றேன். ராமகிருஷ்ணன் மட்டும் இன்னும் உட்கார்ந்திருந்தான். கதையை பாகவதர் நிறுத்தினாலும், கதையின் எதிரொலி இன்னும் அவனுடைய காதுகளில் இருந்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன்.

‘என்ன மிஸ்டர் ராமகிருஷ்ணன்! பாகவதர் போயாச்சு. இது பள்ளிக்கூடம். காவக்காரன் கேட்டை இழுத்துச் சாத்திப் பூட்டிடுவான். ஏறி சுவர் தாண்டிக் குதிச்சுப் போவீரா! எழுந்திருங்க! ‘

‘உம் ? ‘ சுற்று முற்றும் பார்த்தான் அவன். எழுந்தான்.

‘வீடு எங்க ? ‘

‘மன்னார்புரத்துல… ‘

‘அங்கருந்தா தினமும் இவ்வளவு துாரம் வரீர்… ‘

‘ஆமா ‘

‘பஸ்சுல போவீரா ? ‘

‘இல்லை. நடைதான். ‘

அநாவசியமாய்ச் செலவு செய்யாதவன். அது மட்டுமல்ல. இவன் மங்கு மங்கு என்று துாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நடக்கக் கூடியவன்…

கல்யாணம் ஆகியிருக்காது. துாக்கக் கலக்கத்தில் அம்மா எழுந்து, உட்கார்ந்து சாதம் போட, ஈரச்சாதத்தில் மோரூற்றி, அது விரைத்துக் கிடப்பதைப் பாராட்டாமல் தின்பவன்!

‘என்னுடன் வாங்க. கார்ல அழைச்சிண்டு போய் மன்னார்புரத்துலே இறக்கி விடறேன். ‘

‘நீங்களும் அங்கேதான் இருக்கேளா சார் ? ‘

‘ஜெயலட்சுமி நகர்ல இருக்கேன். ‘

ஜிப்சியைக் கிளப்பினேன். ரிவர்ஸ் அடித்து நிறுத்தினேன். ராமகிருஷ்ணன் அருகில் உட்கார்ந்து கதவைச் சாத்தினான்.

‘அழகான கார்! ‘

அவன் சொன்ன விதம் எனக்குப் பிடித்திருந்தது. என் காரைக் குறித்த அவன் நல்லெண்ணம் என்பதற்காக அல்ல. ரசித்ததை வாய்விட்டுச் சொன்னதற்காக.

—-

கேட்டைக் கடந்து புலிவார் ரோடை அடைந்து வலதுபக்கம் திரும்பி சிந்தாமணி வழியாகச் சென்று லெவல் கிராசிங்கை நெருங்கினோம். ராமகிருஷ்ணன் பதறி ‘சுடுகாட்டு வழின்னா இது ? ‘ என்றான்.

‘ஏன் ? பயமா இருக்கா. ட்டெளன் வழியாப் போனா டிராஃபிக் அதிகமா இருக்கும். சீக்கிரம் போய்ச்சேர முடியாது. அதான் இப்டி வந்தேன்… ‘

‘பயம் இல்ல… பேய் நடமாடற நேரமாச்சேன்னு சொன்னேன்… ‘ அவன் குரல் உள்வாங்கி யிருந்தது.

‘பேயாவது பிசாசாவது ? அதெல்லாம் ஒண்ணுங் கிடையாது ராமகிருஷ்ணன்! சுத்த பேத்தல்! பயப்டாதீங்க. ‘

காரை ஓயாமாரி சுடுகாட்டு வாசலில் நிறுத்தினேன். சுடுகாட்டினுள் இரண்டு சிதைகள் நெருப்புக் கங்குகளோடு ஜ்வாலைவிட்டு திகுதிகுவென்று எரிந்து கொண்டிருந்தன.

‘காரை நிறுத்…திட்…டேளே! ‘

‘அவசியமாத்தான் நிறுத்தினேன். பாருங்க. பேய் பிசாசு குட்டிச்சாத்தான் மோகினி… எதாவது கண்ணில் படறதா பாருங்க. கண்ணில் பட்டால் காரைவிட்டு இறங்கிப்போய் ஒண்ணைப் பிடிச்சிண்டு வநது ஜனங்களுக்கு வித்தைகாட்டி காசு சம்பாதிக்கலாம்! ‘

‘அதெல்லாங் கண்ணுக்குத் தெரியாது. நீங்க தயவுசெஞ்சு காரைக் கிளப்புங்க ‘

‘எதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது ? ‘

‘நீங்க சொன்னேளே, அதெல்லாந்தான் ‘

‘உம்ம வாயால சொல்லப்டாதாக்கும்! — இதோ பாருங்க ராமகிருஷ்ணன்! பேய், பிசாசு எல்லாங் கிடையாது. இப்ப பாக்கறீரா ? இறங்கிப்போய் உள்ளே எரியற சிதையில் இருந்து நெருப்பு எடுத்து சிகரெட் பத்த வெச்சிண்டு வரேன்! ‘

‘ஐயோ வேணாம்! ‘

‘ஏன் ? ‘

‘கார்ல என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதீங்க!… ‘

நான் சிரித்தேன்.

‘நான் உங்க கார்ல ஏறீர்க்கவே ப்டாது. தப்பு! ‘

அவனைக் கூர்ந்து டாஷ் போர்டு வெளிச்சத்தில் பார்த்தேன். ‘ராமகிருஷ்ணன், இப்ப நீங்க என்ன நினைக்கறீங்க சொல்லட்டுமா ? ‘

அவன் பயத்துடன் என்னையே பார்த்தான் —

‘இல்லே… நானே பேய் பிசாசா இருப்பேனோன்னு நினைக்கறீங்க! ‘

அவன் பதில் சொல்லவில்லை.

‘உண்டா இல்லையா ? ‘

‘நிஜமாவே நீங்க பேய்தானா ? ‘

‘இல்லை. உங்களைப் போல ரத்தமும் சதையும் நரம்பும் மூளையும் உள்ள ஒரு மனிதன். ‘

‘சரிதான் சார் ‘

‘நம்பலியா ? ‘

‘ஐயோ நம்பறேன். காரைக் கிளப்புங்க ‘

கார் கிளம்பியது.

‘பயப்படாதீங்க ராமகிருஷ்ணன்! உங்களுக்கு என்ன வயசாறது ? ‘

‘இருபத்தேழு ‘

‘நல்ல இள வயசு. ஓடற பாம்பைத் தாண்டுகிற வயசு. பேய் வந்தால்கூட காதைப் பிடிச்சு தரதரன்னு இழுத்துக் கொண்டு வர்ற வயசு. இப்படி பயப்படலாமா ? ‘

‘…. …. ‘

‘நான் ராணுவத்ல இருந்திருக்கேன். இங்க ரெண்டு பிணம், அங்க ரெண்டு பிணம்னு சண்டை சமயத்தில் அத்துவானக் காட்டுல கிடக்கும். அப்பப்ப துப்பாக்கி சத்தம் கேட்கும். ‘

‘ஐயோ! ‘

‘நேரம் கிடைக்கும்போது அந்தப் பிணங்களுக்கு நடுவே படுத்துக்கிட்டு சித்த கண்மூடித் துாங்குவேன். ‘

‘…. …. ‘

‘துாக்கம் அப்டி அசத்தும். எந்தப் பேயோ பிசாசோ ஆவியோ என்னை ஏதும் செய்தது இல்ல. ‘

அவன் என்னையே கண்கொட்டாமல் பார்த்தான்.

‘ஏன்னா, பேய் பிசாசு ஆவி, இதெல்லாங் கிடையாது. மனிதனோட பயத்தினாலே விளைந்த கற்பனை. ‘

காரை வலது பக்கம் பைபாஸ் சாலையில் திருப்பினேன். காற்று சுகமாய் வீசியது.

ராமகிருஷ்ணன் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வந்தானா துாங்குகிறானா தெரியவில்லை!

‘ராமகிருஷ்ணன் ? ‘

‘சார்! ‘ என்று பதறிக் கண்ணைத் திறந்து பார்த்தான்.

‘கை கால்கள் மூளை, இதெல்லாம் இருக்கற மனுஷர்கள் கிட்டதான் நாம பயப்படணும். செத்துப்போன மனுஷ உயிர்கள் ஆவி பேயாக மாறி பிசாசாக அலையும்னு சொல்றது சுத்தப் பேத்தல். அதையெல்லாம் நம்பாதீங்க! ‘

பொன்மலை ரயில்வே மேம்பாலத்தைக் கார் கடந்தது. டோல்கேட்டை நோக்கித் திரும்பியது.

‘இந்த அகால நேரத்ல இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கணும்னு விதி. பேய் பிசாசு இல்லேன்னா சொல்றீங்க ? ‘

‘இல்லேதான் ‘ — இந்தமட்டுமாவது பயம் தெளிந்து பெயர் சொல்கிறானே என்று இருந்தது.

விளக்கு வெளிச்சம் காரணம். சாலை விளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தன. காரின் விளக்குகள் வேறு ஒளியை நீள வீசின. மக்கள் நடமாட்டம் இருந்தது. வாகனங்கள் சென்றன.

‘ராமகிருஷ்ணன்! உலகத்துல எத்தனையோ சமாச்சாரம் இருக்கு. எல்லாத்தையும் பாகவதர்கள் கிட்டேயிருந்து கதா காலட்சேபம் கேட்டு தெரிஞ்சிண்டுடலாம்னு நினைக்காதீங்க. அவா சொல்ற இதிகாசம் புராணம் உபநிஷத்துக் கதைகள்லாம் ரெண்டாயிரம் மூவாயிரம் வருஷத்துப் பழசு. ‘

‘… ‘

‘அவைகளுக்கு அப்பறம் உலகமும் நாடும் ரொம்ப முன்னேறியாச்சு. வில்லும் வேலும் பழக்கத்ல இல்லே. வேதம் சொல்லிண்டு கடலைக் கடக்காமல் இருக்க வேண்டிய பிராமணாள் எல்லாம் அமெரிக்கா போக விசா கேட்டு எம்பசி வாசல்ல நின்னுண்டிருக்கா. ஹெளஸ்டன் வாஷிங்டன் அட்லாண்டா லாஸ்ஏஞ்ஜலஸ்னு நகரங்களில் கோவில் கட்டி பூஜை பண்ணி வெள்ளைக்காராளுக்கு கற்பூர தீபம் காட்டறா. ‘

அவன் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான்-

‘மனிதன் கையில் இப்ப ஏ கே 47 இருக்கு. அது எதிர்ல இருக்கிறவர்களைச் சுட்டுத் தள்ளிக்கிட்டே போகும். ஏ கே 47 சமுதாய முன்னேற்றத்துக்கு உதவுமா, அல்லது சமுதாயத்தையே அழித்துவிடுமா என்கிறது வேறு பிரச்னை. அது அதை எடுத்த மகாத்மாவின் கருத்தைப் பொறுத்தது… ‘

நான் உற்சாகமாய்ப் பேசிக்கொண்டே போனேன்-

‘எல்லாத்தையும் பகவான் பாத்துப்பார் சார்! நம்ப கைல என்ன இருக்கு ? — பரித்ராணாய சாதுானாம்-னு கீதையிலே சொல்லீர்க்கா… ‘ ராமகிருஷ்ணன் தன் அறிவின் விசாலத்தைக் காட்டிக் கொண்டான்.

‘அந்த ஸ்லோகம் முழுசா உங்களுக்குத் தெரியுமா ? ‘

மன்னார்புரம் நாற்சந்தியில் காரை நிறுத்தினேன்-

‘தெரியாது சார்!… உங்களுக்குத் தெரியுமா ? ‘

‘தெரியும்! சொல்லட்டுமா ? ‘

‘வேணாம். நீங்க சொல்றது சரியான்னு பார்க்க, /எனக்கு/ ஸ்லோகம் தெரியாது!… ‘ என்றான். பரவாயில்லை. தெம்புக்கு வந்துவிட்டிருக்கிறான்.

‘பகவத் கீதை படிச்சிருக்கேளா ? ‘ என்று கேட்டான் அவன்.

‘ம். அதுல இப்படி நாலைந்து முக்கியமான ஸ்லோகங்கள் மனப்பாடமாத் தெரியும் ‘

‘அர்த்தம் ? ‘

‘தெரியும் ‘

‘சம்ஸ்கிருதம் படிச்சிருக்கேளா ? ‘

‘ஸ்கூலில் மூணாம் பாஷையாப் படிச்சேன். அப்றம் கொஞ்சம் படிச்சு தெரிஞ்சண்டேன். பைபிள் கூட படிச்சிருக்கேன்… ‘

‘குரான் ? ‘

‘படிச்சது இல்லே. புஸ்தகம் கிடைக்கலே. வாங்கிப் படிக்கணும். ‘

‘நான் இறங்கிக்கறேன் சார்! என்ஜிவோ காலனிலதான் வீடு. ஒருநாள் வீட்டுக்கு வாங்களேன் ? ‘

‘வரேன். இப்ப நீங்க தனியா பயமில்லாம வீடுவரை போவேளா ? ‘

‘அதெல்லாம் போயிருவேன் ‘ என்று சிரிக்கிறான்.

‘நாளைக்குக் கதா காலட்சேபத்துக்கு வருவீங்க இல்லையா ? ‘

‘வருவேன் சார் ‘

‘ஆபீஸ் எங்க ? ‘

‘இங்கியேதான். அதோ அந்தக் கட்டடம். சேல்ஸ்-டாக்ஸ். ‘

‘வீடுவரை நடந்தே போயிர்றீங்க ‘

‘ஆமா ‘

‘நிறையச் சில்லரை பார்க்கிற டிபார்ட்மென்ட்தான். இந்தாங்க என் விசிட்டிங் கார்ட்… ‘ என்று ராமகிருஷ்ணனிடம் தந்தேன். ‘நீங்க எப்ப வேணா வீட்டுக்கு வாங்க. நாம நிறையப் பேசலாம். ‘

‘குட் நைட் சார்! ‘

‘குட் நைட். நிம்மதியாத் துாங்குங்க! ‘

/தொ ட ர் கி ற து …/

Series Navigation