குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 5

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

ரெ.கார்த்திகேசுமாலையில் அம்மா வீட்டுக்கு வெளியே கிடந்த ஊஞ்சலில் உட்கார்ந்து அந்த வாரத்து இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த ஓய்வான வேளையில் அந்த விஷயத்தைத் தொடங்கினான். அம்மாவின் முன்தலையில் ஒரு பிடி நரை புஸ்ஸென்றிருந்தது. அதை மறைக்க அவர் ஒரு ஆயத்தமும் செய்யாமல் இயற்கையாக விட்டிருப்பது ஆனந்தனுக்கு எப்போதும் பிடிக்கும். அவரின் வெள்ளெழுத்துக் கண்ணாடியை கழுத்தில் தொங்கும் சங்கிலியோடு மாட்டி வைத்திருப்பார். அதை இப்போது கழற்றித் தொங்க விட்டுவிட்டு, “சொல்லுப்பா” என்றார். புன்னகையோடு அவன் சொல்வதைக் கேட்டார். உமா தன்னோடு வேலை செய்வதையும் அவளைத் தான் விரும்புவதையும் சொன்னான். அவர் முகம் பிரகாசமானது.

“அப்படியா ஆனந்த்? அப்பாடா! என் மனசில இருந்த இன்னொரு கவல முடிஞ்சது” என்றார் அம்மா.

உமாவின் பின்னணி பற்றி இன்னும் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒனக்குத் தான் தெரியுமேயப்பா! உன் அண்ணனும் சரி, நீயும் சரி புத்திசாலிப் பிள்ளைங்க. உங்க தேர்வு பிழையாப் போகாது. பொண்ண ஒரு முற கொண்டுவந்து எங் கண்ணுல காட்டிரு. அப்புறம் நீங்க ரெண்டு பேரும் விரும்பிற தேதியில கல்யாணத்த வச்சிக்குவோம்!”

“அம்மா! நீங்க இப்படித்தான் சொல்லுவிங்கண்ணு எனக்குத் தெரியும். உமாகிட்ட கூட அப்படித்தான் சொன்னேன். ஆனா… உமாவுடைய முக்கியமான பின்னணி பத்தி நீங்க கொஞ்சம் தெரிஞ்சிக்கணும். முதல்ல இதோ இந்த உறைக்குள்ள இருக்கிற பத்திரிகைச் செய்திகளைப் படிச்சிப் பாருங்க. வேற விவரங்களப் பிறகு சொல்றேன்!” உறையை அப்படியே அம்மா கையில் கொடுத்தான்.

“என்னப்பா புதிர் போட்ற?” என்று கேட்டவாறே அம்மா உறையை வாங்கிக் கொண்டு கழுத்தில் சங்கிலியில் தொங்கிக்கொண்டிருந்த கண்ணாடியைக் காதுகளில் மாட்டிக் கொண்டு உறையைப் பிரித்தார். அவரை அமைதியாகப் படிக்கவிட்டு ஆனந்தன் உள்ளே போனான்.

அவன் சமயலறைக்குச் சென்று மின்கேத்தலில் தண்ணீர் கொதிக்க வைத்து இரண்டு கோப்பைகளில் தேநீர் கலக்கி எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே ஊஞ்சலுக்கு வந்தான். இன்னும் படித்தவாறுதான் இருந்தார். அம்மாவின் முகம் இறுக்கமாக இருந்தது.

அம்மாவிடம் ஒரு கோப்பையை நீட்டினான். தாளிலிருந்து கண்ணை எடுக்காமல் கையை நீட்டி வாங்கிக் கொண்டார். அவன் அம்மாவின் முகத்தைப் பார்த்தவாறு தன் கோப்பையிலிருந்து உறிஞ்சினான்.

அம்மாவும் தேநீரை உறிஞ்சினார். ஆனால் தொடர்ந்து கண்கள் தாள்களின் மேலேயே இருந்தன. இவ்வளவு நேரத்தில் படித்து முடித்திருக்க வேண்டும். ஆனால்…

“என்னம்மா நினைக்கிறீங்க…?” என்றான்.

நிமிர்ந்து பார்த்தார். “நல்லா இல்லையே அப்பா!” என்றார். எது நல்லா இல்லை? செய்தியா? பெண்ணா?

“ஆமாம்மா! ஒரு பெண்ணுக்கு சில காலிப்பயல்கள் செய்த அனியாயம்!” என்றான்.

பேசாமல் இருந்தார். “என்ன சொல்றிங்க அம்மா?” என்று தூண்டினான்.

“என்ன அவசரம் ஆனந்தன்? என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணிக்கப் போற? இந்தச் செய்தியை ஜீரணிக்கக் கொஞ்ச கால அவகாசம் குடு!” என்றார்.

*** *** ***

அன்று காலை அலுவலகக் கூட்டம் இருந்தது. மற்றவற்றுடன் மாரியம்மாள் வழக்கு பற்றியும் பேசினார்கள். மாரியம்மாள் வழக்குக்குக் கிடைத்துள்ள பத்திரிகை விளம்பரங்களைத் தொடர்ந்து பல போதைப் பொருள் வழக்குகளில் தங்களைத் தற்காக்க பல பேர் கேட்பதாக வஹாப் சொன்னார். ஆனால் மாரியம்மாள் வழக்கு முடிந்த பின்பே அதுபற்றி யோசிக்க முடியும் என்றார். ஒரு அரை மணி நேரத்தில் கூட்டம் முடிந்தது.

அறையை விட்டு அனைவரும் வெளியேற வாசலில் உமாவை கைப்பிடித்து நிறுத்தினான் ஆனந்தன். நின்று ஏறிட்டுப் பார்த்தாள்.

“நேத்து அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லிட்டேன்” என்றான்.

“அப்புறம்?”

“யோசிச்சுச் சொல்றேன்னு சொன்னாங்க!”

“எப்ப சொல்வாங்களாம்?”

“தெரியில உமா. அவசரப் படுத்த வேண்டாமே. அவங்க வேணுங்கிற காலம் எடுத்துக்கிட்டுமே!” என்றான். அமைதியாக இருந்தாள்.

“என்ன யோசனை?.

“காலங்கடந்து வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதின்னு சொல்வாங்க! அதத்தான் யோசிச்சேன்!” என்றாள்.

“இல்ல உமா! அம்மா கண்டிப்பா நல்ல முடிவுதான் சொல்லுவாங்கன்னு நெனைக்கிறேன்!” என்றான்.

“சரி!” ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் போகத் தயாரானாள். மீண்டும் கைப்பிடித்து நிறுத்தினான்.

“இன்னக்கி மாலையில…”

“இன்னொரு டீயா? வேணாம் ஆனந்த். உங்கம்மா யோசிச்சு பதில் சொன்ன பிறகு சந்திப்போமே!” என்றாள். மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு நடந்தாள்.
ஏமாற்றத்துடன் அங்கேயே கொஞ்ச நேரம் நின்றுவிட்டுத் தன் அலுவலகத்துக்குத் திரும்பினான்.

*** *** ***

காதலில் உடலும் உள்ளமும் தகித்தன. ஒரு வாரமாய் உமா வழக்கு விஷயங்கள் தவிர வேறெதுவும் அவனிடம் பேசுவதில்லை. அவனுக்கும் அவளிடம் பேச புதிதாக ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் அவளிடம் தனிமையில் ஏதாவது பேச வேண்டும்; அணுக்கமாக உட்கார்ந்து அவள் வாசங்களைச் சுவாசிக்க வேண்டும்; கைபிடிக்க வேண்டும்; உடல் உரச வேண்டும் என்று மனம் தூண்டிக்கொண்டும் அலைக்கழித்துக் கொண்டும் இருந்தது.

அம்மா இந்த ஒரு வாரமாக அவனுக்குப் பதில் கூறவில்லை. ஒரு இறுக்கமான முகத்துடன் இருந்தார். அவனைச் சந்திப்பதைத் தவிர்ப்பவர் போலவும் இருந்தது. ஆகவே தன்னைச் சுற்றிச் சுற்றி நடக்கும் இந்தப் பனிப்போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான்.

அன்று இரவு அம்மாவைப் பிடித்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாதியில் போய் அவர் முன் உட்கார்ந்தான். நிமிர்ந்து பார்த்தார்.

“எப்ப அம்மா எனக்கு முடிவு சொல்லுவிங்க?”

வாய்க்குப் போன சோறு வழியில் நின்றது. “சாப்பிட்டு முடிச்சிட்டுப் பேசுவோமே!” என்றார்.

“சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்” என்றான்.

அந்தச் சோற்றைத் தட்டில் போட்டுவிட்டு தட்டையும் தூக்கிக்கொண்டு போய் வாஷ்பேசின் அருகில் வைத்துவிட்டு கைகழுவி வந்து உட்கார்ந்தார்.

“இந்த விஷயம் பத்தி நல்லா யோசிச்சியாப்பா?” என்று கேட்டார்.

“நான் நல்லா யோசிச்ச பிறகுதான் உங்ககிட்ட கொண்டு வந்தேன்!” என்றான். அவன் குரலில் இருந்த உறுதி அவரைக் கொஞ்சம் உலுக்கியிருக்க வேண்டும்.

“அப்படி யோசிச்ச பிறகும் இந்தப் பொண்ணுதான் வேணும்னு உறுதிபண்ணிட்டியா?’

“ஆமாம்”

யோசித்தார். “ம்.. நீ இவ்வளவு உறுதியாக இருக்கும்போது எங்கிட்ட வந்து கேக்க வேண்டிய அவசியமே இல்லியே! இது நவீன யுகம். இப்போதைய பிள்ளைங்க முதிர்ச்சியடைஞ்சவொண்ண தங்களுக்குப் பிடிச்ச பெண்ணக் கட்டிக்கிறதுக்கு அப்பா அம்மா சம்மதம் தேவையே இல்லியே!” என்றார்.

“அம்மா! உங்க சம்மதம் எனக்குத் தேவை. எல்லாம் சுமுகமாக நடக்கணுன்னுதான் நான் ஆசப்பட்றேன்” என்றான்.

அவன் கண்களை ஏறிட்டுப் பார்த்தார். “ஆனந்தா! இந்தப் பொண்ண விட்டிருப்பா! அவள மறந்திட்டு உன்னச் சுத்திப் பார். நூத்துக் கணக்கில அழகான படிச்ச பொண்ணுங்க இருக்கிறாங்க. அப்படி முடியிலன்னா பிரச்சினையை எங்கிட்ட விட்டுரு. நானே ஒரு பெண் தேடி உனக்குக் கட்டி வைக்கிறேன்”.

பேசாமல் இருந்தான். ஏமாற்றம் மனதைக் கவ்வியது. அம்மாவா இப்படிப் பேசுகிறார்? படித்தவர், முன்னேற்றகரமான சிந்தனையுள்ளவர் என என் மனதில் ஏற்றி வைத்திருந்த அம்மாவா?

“அம்மா. உமா ஏன் உங்களுக்குப் பிடிக்கில அப்படிங்கிறதுக்கு காரணம் சொல்லுங்க!” என்றான்.

“பிடிக்கிலன்னா சொன்னேன்? இல்ல. அவ பாவம், காலத்தின் கொடுமைக்குப் பலியான அப்பாவி. நம் எல்லாருடைய அனுதாபத்துக்கும் உரியவ. ஆனா உனக்கு, நம் குடும்பத்துக்குப் பொருத்தமில்லன்னுதான் சொன்னேன்!”

“அப்படின்னா?”

“உடலால அவ மாசு பட்டவ. அதோட ஒரு குரோதத்தில கத்தியத் தூக்கி ரத்த ருசி கண்டவ! அந்த மாசு உள்ளத்திலும் இல்லாம இருக்காது. அது நீண்ட நாளைய பழக்கத்தில மனிதர்களோட இதமாகப் பழக விடாது. உள்ளத்தில அமைதியில்லாம அலைக்கழிக்கப் பட்ற பெண்ணாத்தான் இருப்பா! ஒரு வெறியில கத்தியத் தூக்கத் தயங்க மாட்டா!”

அம்மாவின் பேச்சு மனத்தசைகளைக் குத்திக் கிழித்தது. உமாவைப் பார்க்காமலேயே, அவளிடம் பழகாமலேயே அவர் மனதுக்குள் இப்படி ஒரு கொடூரத் தீர்ப்பு எழுதினாரா?

“அம்மா! உமாவோட ஒவ்வொரு நாளும் பழகிறவன் நான். அவ அந்த கொடூரமான நெருப்பிலிருந்து விடுபட்டு முற்றாகச் சாதாரண நெலைக்கு வந்திட்டா! நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல!”

அம்மா அவனைக் கூர்மையாகப் பார்த்தார். “சரி! பின்னால அவ இந்த மாதிரி மாறிட மாட்டான்னு நீ உத்திரவாதம் கொடுக்க முடியுமா?”

உத்திரவாதமா? யார் கொடுக்க முடியும்? எந்த மனிதன், எந்த மனுஷி எப்படி மாறமாட்டார் என யார் உத்திரவாதம் கொடுக்க முடியும்? தயங்கி நின்றான்.

“தயங்கிற பாத்தியா? காரண காரியத்துக்கு உட்பட்ட சந்தேகமா இருக்கிறதினாலதான் தயங்கிற? நீ படிச்சிருக்கிற சட்டம் கூட அந்தச் சந்தேகத்தை ஏற்கும்; reasonable doubt! அந்த சந்தேகம் இருக்கிற வரையில அவ இந்தக் குடும்பத்துக்கு பொருத்தமானவ இல்ல! அவ்வளவுதான் சொல்லுவேன்”.

அம்மா எழுந்து அறைக்குள் போனார். ஏமாற்றத்தாலும் அதிர்ச்சியாலும் அலைக்கழிக்கப்பட்ட மனதுடன் உட்கார்ந்திருந்தான்.

————-
karthi@streamyx.com

Series Navigation

குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 4

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

ரெ.கார்த்திகேசு


இரவு புழுக்கமானதாக இருந்தது. வெளிப் புழுக்கத்தை ஏர் கண்டிஷன் குறைத்தாலும் மனப் புழுக்கத்தைக் குறைக்க முடியவில்லை.

நாளைக்குப உமாவைப் பார்க்கும்போது பழைய மாதிரியே பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அவளுக்காக உள்ளத்தில் இருந்த ஆசை இன்னும் குறையவில்லை. ஆனால் அவள் இப்போது வேறு மாதிரித் தோற்றம் கொண்டிருந்தாள். முளையில் கொடூரமாக வெட்டிய பின்னும் உயிர்த்துத் தழைத்த செடி. வெட்டப்பட்ட காயங்களைச் சாமர்த்தியமாக மறைத்திருக்கும் வெளித்தோற்றம். உடல் அழகில் குறைவில்லை. உள்ளம் கன்றிப்போய் இருக்குமோ? இன்னும் ரணம் இருக்குமோ? கீறினால் சீழ் வடியுமோ?

நான்காவது முறையோ, ஐந்தாவது முறையோ தெரியவில்லை. அந்த உறையைப் பிரித்து அந்தச் செய்தியைப் படித்தான்:

தன்னைக் கற்பழித்தவர்களைக் கொலை செய்தாள்;
இளம் பெண் கைது.

புக்கிட் மெர்டாஜம், செவ்வாய்: பள்ளிக்கூடம் முடிந்து பஸ் விட்டிறங்கி வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்த 12 வயது மாணவியை நான்கு இளைஞர்கள் மடக்கி ஒரு காலியான வீட்டுக்குள் கடத்திச் சென்றுக் கற்பழித்தனர் என்று போலீசார் இன்று கூறினர். பின்னர் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்ட அந்த மாணவி வீடு திரும்பி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அவர்களில் இருவரை அரிவாளால் வெட்டிக் கொன்றர். மற்ற இருவர் தப்பியோடிவிட்டனர்.. பின்னர் இரத்தக் கறை படிந்த அரிவாளுடன் அருகில் இருந்த சாலையில் சென்ற போலீஸ் காரை நிறுத்தி அவர்களிடம் பெண் சரணடைந்தார்.

அவர் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்து தப்பியோடிய மேலும் இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெண் இப்போது போலீஸ் தடுப்புக் காவலில் இருக்கிறார்.

அதன் பின் இருந்த பத்திரிக்கை நறுக்குச் செய்திகள் இந்த வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப் பட்டது பற்றியவை. வயது குறைந்தவளாக இருப்பதால் பெண்ணின் பெயரும் அவள் குடும்ப விவரங்களும் வெளியிடப்படவில்லை. பெண்ணுக்கு 3 ஆண்டுகள் குற்றத் திருத்தப் பள்ளியில் இருக்குமாறு தண்டனை விதிக்கப் பட்டிருந்தது. பிடிபட்ட இளைஞர்களுக்கு ஏழாண்டுகள் சிறை வாசம் அளிக்கப் பட்டிருந்தது.

ஆனந்தன் சீலிங்கைப் பார்த்தான். சுழலும் விசிறியைப் பார்த்தான். ஒன்றிலும் மனம் படியவில்லை. மனம் குழம்பியிருந்தது. மனதுக்குள் உமாவின் முகமும் வழக்குச் செய்திகளும் ஓடிக் கொண்டிருந்தன.

எத்தனை பெரிய ரகசியத்தைச் சுமந்து கொண்டிருக்கிறாள்? இத்தனை மன அழுத்தத்தின் கீழும் எப்படி அவளால் இயல்பாக, முனைப்பாக இயங்க முடிகிறது?

ஆனால் கேள்வி இப்போது அதுவல்ல. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? கறை படிந்தவள்; ஆகவே வேண்டாம் என்று தள்ளிவிடலாமா? தள்ளிவிட முடியுமா? இத்தனை காதல் கொண்ட பின், இத்தனை ஆசைப் பட்ட பின்? உன்னைக் காதலிக்கிறேன் என்று சிருங்காரமாகச் சொல்லிய பின்?

அவள்மேல் இருந்த காதல் இப்போது மாறிவிட்டதா என்று எண்ணிப் பார்த்தான். இல்லை. கொஞ்சமும் இல்லை.

அவளுக்கு என்ன குறை? அவள் வாழ்வின் கடந்து போன பின்னணி இது. அதிலிருந்து மீண்டு எழுந்துவிட்டாள். ஆகவே…!

உமா! நீ கறை படவில்லை. புடம் போடப்பட்டிருக்கிறாய்! இப்போது மாசு ஒன்றும் ஒட்டியில்லாத சொக்கத் தங்கம். நீதான் எனக்குரியவள்.

*** *** ***

மீண்டும் தேநீர்.

உமாவின் சிரிப்பு குறைந்து முகம் இறுக்கமாக இருந்தது. அவனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் இந்த உறவை அனுதாபத்தின் அடிப்படையில் அமைக்க முடியாது. காதலின் அடிப்படையிலும் புரிந்துணர்வின் அடிப்படையிலும்தான் அமைக்க வேண்டும். ஆகவே கவனமாக ஆரம்பித்தான்.

“உமா, நீ உன்னுடைய கடந்த கால ரகசியங்கள என்னோட பகிர்ந்து கொண்டதுக்கு ரொம்ப நன்றி” என்றான்.

தன் வலது கையைத் தூக்கிப் புறங்கையை அவனுக்குக் காட்டினாள். வியந்து பார்த்தான்.

“என் கையைப் பிடிச்சி முத்தம் கொடுங்க ஆனந்த்!” என்றாள்.

கொஞ்சம் தயங்கியவாறு அவள் கையை மிருதுவாகப் பற்றி உதட்டை இலேசாகப் பதித்து எடுத்தான். கையைத் திருப்பி எடுத்துக் கொண்டாள்.

“ஏன் இது? ஏதாவது சமிக்ஞையா?” என்று கேட்டான்.

“என்னோட பின்னணி தெரிந்த பிறகும் என் கையை அருவருப்பு இல்லாம உங்களால தொட முடியுதா, முத்தமிட முடியுதான்னு பார்த்தேன்!” என்றாள்.

“இல்ல உமா அருவருப்புங்கிற உணர்ச்சிக்கே இடமில்ல. என் உள்ளத்தில உன்னப் பத்தின எண்ணம் எனக்குக் கொஞ்சமும் மாறல. உனக்கு விளைந்தது ஒரு விபத்து. அதினால உனக்கு ஊனம் ஏற்பட்டதா நான் நினைக்கில..” என்றான்.

“தமிழ்ப் பத்திரிகையில எப்படிப் போட்டிருக்காங்க பார்த்தீங்களா ஆனந்த்? நான் நாலு பேரால் கற்பழிக்கப் பட்டேனாம். அப்படியானா தமிழ்ப் பெண்கள் கட்டிக் காக்க வேண்டிய கற்பை நான் இழந்திட்டேன்னுதானே பொருள்?”

“உமா! நாம் சுமந்து வர்ர புராதன நம்பிக்கைகள்ள இது ஒண்ணு. இந்த நவீன காலச் சிந்தனைகளுக்கு எற்றதா இல்லை. ஆனா இது என்ன, 13, 14 வருடங்களுக்கு முன்பு வந்த செய்தி இல்லியா? இப்பத்தான் அந்த மாதிரியான கருத்துக்களை நாம் மாத்திக்கிட்டு வர்ரோமே. இப்ப “பாலியல் வன்முறை”ன்னு அதச் சொல்றாங்க. “வல்லுறவு”ன்னும் சொல்றாங்க. நம் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமா தெளிவடைஞ்சுகிட்டுத்தான் வருது உமா?!”

பேசாமல் தேநீரை உறிஞ்சினாள். அமைதியை உடைக்கக் கேட்டான்: “ஒரு தீயவர் கூட்டத்துக்குப் பலியான உன்ன ஏன் குற்றப் பள்ளிக்கு அனுப்பினாங்க? உனக்காக வாதாட வழக்கறிஞர் யாரும் இல்லியா?”

“இருந்தாங்க! என் அண்ணன் ஏற்பாடு பண்ணினார். சம்பவம் நடந்த உடனேயே நான் இப்படிக் கொலை செஞ்சிருந்தா அதைத் தற்காப்புன்னு கருதி விட்டிருப்பாங்க. ஆனா நான் வீட்டுக்குத் திரும்பி அரிவாள் எடுத்துக்கிட்டு வந்து வெட்டினதினால இது முன்திட்டம் போட்டுச் செய்த கொலை; ஆகவே என் மனசில உள்ள ஆழமான பழிவாங்கல் உணர்ச்சிக்கு மனநல மருத்துவம் தேவைன்னு நீதிபதி முடிவு பண்ணினார். அதுதான் காரணம்!”

“குற்றப் பள்ளி வாழ்க்கை எப்படி இருந்தது?”

“பள்ளியின் நோக்கம் சரிதான். ஆனா அங்க உள்ள பிற இளம்பிள்ளைகள் திருத்த முடியாத அளவுக்குக் கெட்டவங்களாக இருந்தாங்க ஆனந்த்! மற்றவர்களையும் எப்படியும் தங்கள் அடங்காப்பிடாரித் தனத்தால அடக்கிக் குற்றவாளிகளாக ஆக்கணும்னு பிடிவாதமா இருந்தாங்க! அவங்களினாலதான் அங்கிருக்கிறவங்க பெரும்பாலும் திருந்தி வாழ முடியிறதில்ல! நாமெல்லாம் குற்றவாளிகள்; வெளியில் உள்ள சமுதாயம் நம் எதிரிகள்; அவங்களப் பழிவாங்கணும் அப்படிங்கிற எண்ணத்தையே ஒரு மந்திரமா வச்சிக்கிட்டு இருந்தாங்க!”

“ஆனா அந்தச் சூழ்நிலையிலிருந்து பழுது படாம நீ வந்திருக்கியே உமா! அது மட்டுமல்லாம ஒரு புழு பட்டாம் பூச்சியாகி… எனக்கு அது பெரிய வியப்பா இருக்கு!”

தன் தேநீர் கோப்பையில் தலை கவிழ்ந்திருந்தாள். “முதல்ல மனசு கொதிச்சது ஆனந்த். அதிலும் என்ன இந்த அவலத்துக்கு ஆளாக்கினவங்கள்ள ஒருத்தன் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிற என் அண்ணனுடைய நண்பன். என் இளமனசில காதல் விதைகளை விதைச்சவன். அவன்தான் போதை மருந்து மயக்கத்தில என்னைப் பிடிச்சு அவன் நண்பர்களுக்குப் பலி கொடுத்தவன். இது தெரிஞ்சவொண்ண இந்த உலகத்தில நல்லவர்கள்னு யாரும் இருக்க முடியாதின்னே தீர்மானம் பண்ணிட்டேன். இன்னும் பலரைக் குத்திக் கொல்லணும்னு ரொம்ப நாள் என் மனம் என்னை உள்ளுக்குள் பிராண்டிக்கிட்டே இருந்தது. இன்னமுங் கூட சில சமயங்கள்ள அந்த எண்ணம் தலை எடுக்காம இல்ல..! ஆனா எல்லாத்தையும் அடக்கக் கத்துக் கிட்டேன். உலகத்தப் பழி வாங்கிறத விட அத வெல்லணும்னு முடிவு எடுத்தேன். என்னுடைய ஆங்காரத்த ஆக்ககரமான வழிகள்ள செலவிட்டேன். குற்றப் பள்ளி அதிகாரிகளுக்கு ஆதரவா இருந்தேன். உதவி பண்ணினேன். எனக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கிட்ட கவனமா பாடம் படிச்சேன். நூலகத்தில இருந்து ஏராளமா புத்தகங்கள எடுத்துப் படிச்சேன். எல்லாப் பாடங்களிலும் நல்ல மார்க் வாங்கினேன்!”

நிறுத்தினாள். அவளுடைய மன மடைகள் திறக்க ஆரம்பித்துள்ளன எனத் தெரிந்தது. மாரியம்மாளின் வழக்கை இத்தனைப் பிடிவாதமாக எடுத்துக் கொண்டு இவள் வாதாட முன்வந்தது ஏன் எனவும் புரிந்தது. இடையூறு செய்யாமல் அவளைப் பேசவிட்டான்.

“குற்றப் பள்ளி வாழ்க்கையை விட அதை விட்டு வெளியே வந்து குடும்பத்தோட இருக்கும்போதுதான் வாழ்க்கை ரொம்ப அசிங்கமாப் போச்சி ஆனந்த். எல்லாரும் – என் அம்மா, அண்ணன் உட்பட – என்ன ஒரு குற்றவாளியாகத்தான் பார்த்தாங்க. ‘நீ அவனுக்கு இடம் கொடுத்ததினாலதான இவ்வளவும் நடந்திச்சி’ன்னு குத்திப் பேசினாங்க. ஆகவே குடும்பத்த விட்டு விலக முடிவு பண்ணினேன். எனக்கு ஆதரவாக இருந்த சமுக நலத் துறை அதிகாரியோட ஆலோசனையோட பள்ளிக்கூட விடுதியில இடம் பிடிச்சி தனியாத் துவங்கின வாழ்க்கை, இன்னக்கி வரைக்கும் அப்படித்தான் போயிக்கிட்டு இருக்கு! என்னுடைய குடும்பத்தோட எனக்குள்ள உறவு அநேகமாக அத்துப் போச்சி”

ஆனந்தன் தன் கையை நீட்டி அவள் கையைப் பிடித்துக் கொண்டான். “உமா! அந்தத் தனிமைத் துன்பத்த நீக்கிறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கொடு!” என்றான்.

கையைத் திரும்பப் பிடுங்கிக் கொள்ளாமல் அவன் முகத்தையே பார்த்திருந்தாள். ஒன்றும் சொல்லவில்லை.

“சொல்லு உமா! என்னக் கணவனா ஏத்துக்கன்னு நான் கேக்கிறதாகவே கூட நீ இத வச்சிக்கலாம்!” என்றான்.

கையை மெதுவாக உருவிக் கொண்டாள். மீண்டும் தேநீர்க் கோப்பையை அவள் கண்கள் நாடின. பிறகு மெதுவாகச் சொன்னாள். “ஆனந்த், எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் தெளிவான பெண். என் மேல எனக்கிருந்த அருவருப்ப நான் ரொம்பக் கஷ்டப்பட்டு துடைச்சிட்டேன். எனக்குத் தன்னம்பிக்கையும் சுயகௌரவமும் ரொம்ப இருக்கு. அதில்லாம நான் வாழ்க்கையில நிமிர்ந்திருக்க முடியாது. ஆனா என் பின்னணி தெரிஞ்ச பின் மத்தவங்க அப்படிக் கருதுவாங்கன்னு எனக்கு நம்பிக்கையில்ல…!”

“நான் அப்படிக் கருதிலியே…!” என்றான்.

“உங்களச் சொல்லல ஆனந்த். இதற்கு முன்ன சட்டக் கல்லூரியில எனக்கு ஒரு காதல் அனுபவம் இருந்திச்சி. ரொம்ப கவனமாத்தான் அந்தக் காதலன நான் என் வாழ்க்கைக்குள்ள அனுமதிச்சேன். ஆனா என் பின்னணி தெரிஞ்சவுடனே அவர் மாறிட்டாரு. என்னோட ஒரு நாள் படுக்கைக்கு வர்ரதில இருந்த ஆர்வம், என் பின்னணி தெரிஞ்சவொண்ண சுத்தமா மாறிப் போச்சி! விலகிட்டாரு!”

“என்னையும் அப்படி நினைக்கிறியா உமா? நான் அவனைவிடப் பரந்த திறந்த மனம் உள்ளவன்!”

யோசித்தாள். கேட்டாள்: “ஆனந்த்! எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கு! ஒரு ஆணுக்கு நான் இத்தனை வேண்டியவளா இருக்கிறது எனக்கு ரொம்ப கர்வத்தையும் குடுக்குது! ஆனா இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க! ஏன் நான் உங்களுக்கு அத்தனை அத்தியாவசியம்? உங்க குடும்பப் பின்னணிக்கு, உங்க தகுதிக்கு இன்னொரு பெண் உங்களுக்குக் கிடைக்காமலா போவா? எந்தப் பெண்ணும் ஏங்கி நிக்கிற ஆணழகர் நீங்க! அப்படி இருக்கும்போது ஏன் என்னப் பார்த்து ஆசைப் பட்றிங்க? என் சம்மதம் ஏன் அத்தனை அத்தியாவசியம்?”

ஏன் அத்தனை அத்தியாவசியம்? ஆனந்தனும் தனக்குள் அதைத்தான் கேட்டுக்கொண்டிருந்தான். இவளை விட்டால் என் வாழ்க்கையில் இன்னொருத்திக்கு இடமில்லை என்று எதை என்னை எண்ணவைக்கிறது? ஆமாம்! காதல் என்னும் ரசாயன மாற்றமாகத்தான் அது இருக்க வேண்டும்.

“நான் நேத்து சொன்னேனில்லையா உமா? காதல் ஒரு ரசாயன விளைவு. என்னென்ன கலவைகள் அதில இருக்குன்னு யார் சொல்ல முடியும்? என்னென்ன ரசாயனங்கள் கலந்தா என்ன விளைவு ஏற்படுங்கிறது கலந்து பார்த்த பின்னதான் தெரியும். அப்படி ஒரு ரசாயன விளைவு ஏற்பட்டிருக்க வேணும். பின்ன நான் என்ன சொல்ல?”

“இது கண்மூடித் தனமா இல்ல?”

“இருக்கலாம். ஆனால் உலகில எல்லாக் காதலும் கண்மூடித் தனமாகத்தான் இருந்திருக்கு! இது சரித்திர உண்மை. நாம் அதை இப்ப மாத்திட முடியுமா?”

அவள் கையைக் கொண்டு வந்து அவன் கன்னத்தில் வைத்தாள். “என்ன இன்னக்கி ரொம்ப மகிழ்ச்சிப் படுத்திட்டிங்க ஆனந்த். அகங்காரம் மிக்க ஒரு பெண்ணாக இருந்த என்ன உருக்கிட்டிங்க. நன்றி!”

அந்தக் கைகளைக் கெட்டியாகப் பிடித்து கன்னத்தில் அழுத்திக் கொண்டான். “அப்ப உன் முடிவு சம்மதம் என்பது தானே?”

கைகளை மெதுவாக உருவிக் கொண்டாள். அவன் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தாள். பேசினாள்: “சரி ஆனந்த். ஆனா இன்னும் இரண்டு சோதனைகளை நாம் இருவருமே தாண்ட வேண்டியிருக்கு”.

“என்ன அது?” வியந்து கேட்டான்.

“முதலில் உங்க குடும்பம். ரொம்ப கௌரவமான செல்வாக்கான குடும்பம்னு சொல்றிங்க! அந்தக் குடும்பத்தின் சம்மதமும் ஆசியும் நமக்கு முக்கியம். நீங்க அவங்கிட்ட கலந்து பேசிட்டு வாங்க. தயவு செய்து எதையும் அவங்ககிட்ட இருந்து மறைக்க வேணாம்!”

ஆனந்தன் சிரித்தான். “உமா, எங்கம்மாவோட பரந்த மனத்தப் பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்! ஆகவே இது ஒரு பிரச்சினையே இல்ல!”

சிரித்தாள். “சரி. அப்படியே இருக்கட்டும். நீங்க ஒரு முறை பேசிட்டு அப்புறம் சொல்லுங்களேன்!”

“இரண்டு சோதனைன்னு சொன்னியே!”

“முதல் சோதனை முடியட்டும். அப்புறம் சொல்றேன்!”

———————

Series Navigation