குருஷேத்ரம்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

விசிதா


கீீதை விளக்க உரைகளால் குழம்பி
அர்ஜுனன் தவிக்கையில்
கண்ணனுக்கோ பதிப்புரிமை பிரச்சினை
அனுமதி பெறாத மலிவு விலைப் பதிப்புகள்,
ரகசியமாய் படமெடுக்கப்பட்ட
கீதோபதேசம்
தொலைக்காட்சிகளில், குறுந்தகடுகளில்
உலகெங்கும்
நாங்கள் பாண்டவர் நண்பரேன்றாலும் கெளரவர்
எம் விரோதியல்ல என்று பாண்டவர் நட்பு அணி
இருவரும் என் நண்பர்கள் என இருவருக்கும் படை
வீரர் அனுப்புவார் ஒருவர்
கெளரவர் நட்பணியோ பாண்டவர் எம் விரோதியல்ல,
கெளரவருக்கு உதவவே களத்தில் என்கிறது
கட்சி மாறல் போல்
பாண்டவரும் கெளரவரும்
அணி மாறல்கள் சகஜம்
இங்கே ஐவர்
அங்கே நூறு பேர்
தவிர
யார் வேண்டுமானாலும் மாறலாம்
இதில் ஐவரில் ஒருவர் கட்சி மாறலாம்
என வதந்தி
நேரடி ஒளிபரப்பு உரிமை சஞ்சயனுக்கில்லை
எனவே திருதாராஷ்டிரன் ஈஸ்பின்னை(*) நம்பி
தர்மருக்கோ எது தர்மம் அதர்மம் எனக் குழப்பம்
ஆலோசனை தரும் வழக்கறிஞர் குழு
சட்டமும் தர்மமும் ஒன்றல்ல என்றுரைக்க
தர்மர் இன்னும் குழம்ப
மர்மப் புன்னகையுடன் கண்னன்
முடியாத கூந்தலுடன் திரெளபதி
ஷாம்பு விளம்பரத்தில் நடிக்க அழைப்புகள்
கர்ணனுக்குத் தெரியாமல் கர்ணனை தானம்
தர முயற்சிகள்
தன்னைத் தானே தானம் கொடுத்துவிட்டேனோ
எனத் திகைக்கும் கர்ணன்
இல்லை உன்னை நீயே விற்றுவிட்டாய்
என்றொரு குரல்
கொழிக்கிறார் இரு தரப்பாருக்கும்
ஆயுதம் விற்பவர்
களத்திலிறங்காமல்
கன்சல்டண்டாகிவிடலாமா
என்ற யோசனையில் துரோணர்
பீஷ்மருடன் பேரத்தில்
சிகண்டி
குருஷேத்ரம்
(பின்)நவீனக் குருஷேத்ரம்
* ESPN
(பிரமீள் நினைவாக)
விசிதா

Series Navigation

விசிதா

விசிதா