குப்பையா ? கற்பூரமா ?

This entry is part [part not set] of 7 in the series 20000213_Issue

திரிசடை


(காலஞ்சென்ற திரிசடையின் இயற்பெயர் சாந்தா சுவாமிநாதன். ‘பனியால் பட்ட பத்து மரங்கள் ‘ கவிதைத் தொகுதியின் ஆசிரியை. இவர் கவிதைகள் திரிசடை கவிதைகள் கவிஞர் வெண்ணிலாவால் தொகுக்கப் பட்டு 1999-ல் வெளியிடப்பட்டது. இந்தக் கவிதை அந்தத் தொகுதியிலிருந்து எடுக்கப் பட்டது.)

பழக்கம்.. பழக்கம் வேண்டும்
தானாகவே அது ஒழுக்கத்தைத் தரும்
என்று சான்றோர்கள் அடித்துச் சொன்னார்கள்
தவமும் ஒரு பழக்கமா ?
‘சும்மா இரு ‘ ஒரு தத்துவமா ?

கிரமமாக காலை மாலை பல ஆண்டுகளாக
அவன் துதி பாடி ஆடிச் சரணம் அடைவதை
வழக்கத்தில் ஆரம்பித்தது
இன்று பழக்கமாகி வட்டதை நான் உணர்கிறேன்
மூன்று வேளையும் தவறாது சாப்பிடுவதும்
ஒரு பழக்கம் தானே ?

ஒரே முனையாக ‘சும்மா இருக்க ‘ நிர்மல
ஆகாயம் போல் நிசப்தமாய் இருக்க
நிச்சயம் செய்து கொண்டு
காலையில் ஏற்றி வைத்த வெள்ளி விளக்கின் முன் இருந்தேன்.

முதல் நாள் அந்தியில் தெரு வாசலில் வீட்டுக்கு முன்
குப்பை லாரி எடுத்துச் செல்ல
இரண்டு பெட்டிகள் நிறையக் குப்பையும்
உடைந்த ‘கராஜ் டோர் மெஷினையும் ‘ வைத்தோம்.
கண் மூடியிருந்த மனம் ஏசுதாஸ் பாடிய பக்திப் பாடலில் அழுந்த
நன்றாகத் தெளிவாகக் குப்பை லாரி வரும்
சப்தம் கேட்டு எழுந்தேன்.
என் வீட்டுக் குப்பைகள்
லாரியில் கொட்டுவதை ஜன்னல் வழியாகப் பார்த்து முடிந்த பின் தான்
திரும்பினேன் என் மெடிடேஷனுக்கு.

நினைவுச் சரம் பக்திப் பாசுரங்களைத் தொடர
மனம் ஓடியது உன் தியானம் மிக மிக உயர்ந்தது
குப்பையெல்லாம் போனதா என்று அறிய
உடன் ஆசனத்தை விட்டு எழுந்தாய் அல்லவா ?
அதன் பொருளில் கலந்த கருத்துத் தான் என்ன ?

ஏற்றின கற்பூரம் , கற்பூரத்தின் நறுமணம்
விண்ணெல்லாம் சூழும்.
குப்பை போனாலும் இருந்தாலும் குப்பை தானே ?
நீ எது ஆனாய் ? குப்பையா ? கற்பூரமா ?

சும்மா இருக்கத் தெரியாத வெறும் ஒரு பெண் ஜென்மம் தான்.
ஆனால் முனிவர்கள் நடமாடும் காட்டுப் பாதையில்
தலை நிமிராமல் புல் பூண்டுகளைப் பறித்தெறியும்
சீலத்தைப் பெரிதாகக் கொண்ட மூதாட்டி சபரி
என் மனக் கண்ணில் தோன்றி மறைவானேன் ?
சுவரில் மாட்டியிருக்கும் அன்னை தெரிசாவின் படம்
எதற்குச் சாட்சி ?

***

Thinnai 2000 February 13

திண்ணை

Series Navigation

Scroll to Top