குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

இப்னு பஷீர்


ஜூலை 11 – மும்பையில் வெடித்த 6 அல்லது 7 குண்டுகள் ஒட்டு மொத்த இந்தியாவையும் கிடுகிடுக்க வைத்தன .

அநியாயக்காரர்கள்! அரக்கர்கள்! அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த கொடூரர்கள்! கோழைகள்!

– எத்தனை குடும்பங்கள் தனது குடும்பத் தலைவனை இழந்தனவோ!

– எத்தனை குழந்தைகள் தம் தாயை இழந்தனவோ!

– கனவுகளைச் சுமந்து சென்ற எத்தனை இளைஞர்களும் யுவதிகளும் மடிந்து போனார்களோ!

– அரும்பும் வயதிலேயே எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தம் உயிரைத் தொலைத்தனவோ!

சென்றவர்கள் சென்று விட்டார்களென, இருப்பவர்களுக்கு யார்தான் ஆறுதல் சொல்ல முடியும்?

இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பதை பதைக்கச் செய்யும் இந்தக் கொடூர சம்பவத்திலும் ‘வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதையாக’, சிலர் அரசியல் ஆதாயம் தேட முனைந்திருப்பது கேவலமான ஒரு போக்கு.

வெடிப்புகள் நிகழ்ந்த மறுநாள் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் சிவ்ராஜ் படீல் இக்கொடூரச் செயலை செய்தவர்கள் யார் என்பதற்கு காவல் துறையினருக்கு இதுவரை துப்பு எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார் . (சுட்டி http://www.rediff.com/news/2006/jul/12onkar.htm ). அதே நாளில் , காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்த எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, குண்டு வெடிப்புகளுடன் பாகிஸ்தானைத் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டினார். பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருப்பதாகக் கருதப்படும் தாவூத் இப்றாஹிம் இந்தக் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்டிருக்கலாம் என தான் சந்தேகப்படுவதையும் அவர் தெரிவித்தார். மேலும் , சிமி போன்ற அமைப்புகளின் தடயமே இல்லாத அளவிற்கு அவை இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். (சுட்டி http://www.rediff.com/news/2006/jul/12mumblast11.htm ). உள்துறை அமைச்சரும் காவல்துறையும் ‘இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை’ என்று சொல்லியிருந்த அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படி இந்தத் தகவல் கிடைத்தது என்பது அதிசயமே!

குண்டுவெடிப்பை சிமிதான் செய்திருக்க வேண்டும் என்ற ரீதியில் காவல்துறை விசாரணைகளை முடுக்கிவிட்ட வேளையில் , உத்தரபிரதேச முதல்வரான முலாயம் சிங் யாதவ் , “சிமி இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை” என்று அறிவித்தார். “நாங்கள் ஆட்சி அமைத்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில் அயோத்தியிலும், வாரணாசியிலுமாக இரு பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சிமி துளியேனும் சம்பந்தப் பட்டிருக்கவில்லை” என அவர் தெரிவித்தார் . (சுட்டி : http://in.rediff.com/news/2006/jul/13mumblast9.htm )..

தங்களுக்கும் இந்தக் கொடூர சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சிமி அமைப்பு மறுத்ததோடு, திட்டமிட்டு தம் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது என்று குற்றஞ் சாட்டியது. (சுட்டி: http://in.rediff.com/news/2006/jul/13mumblast11.htm )

இந்தச் சூழ்நிலையில் ஜூலை 16-ம் தேதி ‘ஆஜ்தக்’ தொலைக்காட்சிக்கு ஜேக் ஸ்மித் என்ற பெயரில் ஒரு இ-மெயில் வந்தது . அதில் , லஸ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான லஸ்கர்-இ-கஹர் என்ற இயக்கம்தான் மும்பை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகவும் இச்செயலை 16 பேர் கொண்ட படை நிறைவேற்றியதாகவும் அதில் ஒருவன் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும், தான் ம. பி. மாநில சிமி இயக்கத்தின் தலைவன் என்றும் மும்பையைப் போல பல்வேறு தாக்குதல்கள் மேலும் நடைபெறும் என்றும் அதில் மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இது அத்வானியின் கூற்றை உறுதிப் படுத்தியது. (சுட்டி : http://in.rediff.com/news/2006/jul/16blasts.htm )

இதைத் தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்து விட்டது! வலைப்பதிவு எழுத்தாளர்கள் முதல் சோ, குருமூர்த்தி போன்ற அறிவுசீவிகள் வரை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தனர். அல்-காயிதா முதல் பாகிஸ்தான் வரை நார் நாராக கிழிக்கப் பட்டனர். இஸ்ரேலைப் பின்பற்றி இந்தியாவும் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தே தீர வேண்டும் என சோவும் குருமூர்த்தியும் வாதிட்டனர் . நெஞ்சில் உரமுமில்லாத, நேர்மைத் திறனுமில்லாத கையாலாகாத அரசு இது என கூச்சல் இட்டனர். (சுட்டி : http://idlyvadai.blogspot.com/2006/07/blog-post_21.html ). லஸ்கரீ தொய்பா -தான் இப்போது லஸ்கரீ கஹார் என ப் பெயரை மாற்றிக் கொண்டு செயல்படுவதாக ‘ உளவுத்துறை நிபுணர்கள்’ தெரிவித்துள்ளதாக ஒருவர் திண்ணை டாட் காமில் எழுதினார்.

இவர்களின் ஆர்ப்பாட்டம் அதிக நாள் நீடிக்கவில்லை. ‘ஆஜ்தக் ‘ தொலைக்காட்சிக்கு ஜூலை 16-ம் தேதி இமெயில் அனுப்பிய ‘ தீவிரவாதி ‘யை ஜூலை 20-ம் தேதி காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டார்கள். (சுட்டி: http://www.dailythanthi.com/article.asp?NewsID=272342&disdate=7/20/2006 ) சிமி மற்றும் லஸ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளின் மீது பழி விழக் காரணமாக இருந்த இமெயிலை அனுப்பிய தீவிரவாதி சுமித் தம்ராகார் என்பவன். விளையாட்டாக இந்தக் காரியத்தை செய்தானாம் இவன்.

சுமித் மட்டுமல்ல.. மத்திய பிரதேச மாநிலம் கத்னி நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவனும் , தான் லஸ்கரீ ஹக் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்று இமெயில் அனுப்பி காவல் துறையினரிடம் மாட்டி இருக்கிறான். (சுட்டி : http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=140686 ).

சில கேள்விகள் நம் மனதில் எழாமலில்லை:

– “நாங்கள் சிமி அமைப்பினர்” என்றும் “லஸ்கர் அமைப்பினர்” என்றும் இமெயில் அனுப்பி விளையாட்டுக் காட்டுபவர்களில் ஒரு ‘விளையாட்டுப் பிள்ளை’ கூட “நாங்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸை சேர்ந்தவர்கள், பஜ்ரங்தள்ளை சேர்ந்தவர்கள், சிவசேனாவை சேர்ந்தவர்கள்” என்றெல்லாம் இமெயில் அனுப்பி ஏன் விளையாடுவதில்லை?

– இவர்களின் இமெயில்களை துப்பறிவதற்காக காவல்துறையினரின் எவ்வளவு பொன்னான நேரம் வீணாகி இருக்கும்?

– இவர்களின் இமெயிலின் மூலமாக ஒரு பாவமும் அறியாத எத்தனை அப்பாவிகள் அவதிக்குள்ளாக்கப் பட்டிருப்பார்கள்? உதாரணத்திற்கு ஒன்று: பீஹாரில் கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர் ஒருவர் இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டார். (சுட்டி: http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/subcontinent/2006/July/subcontinent_July913.xml&sectionfiltered=subcontinent&col = )

– இதெல்லாம் உண்மையிலேயே விளையாட்டுத்தானா? அல்லது, ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக தூண்டி விடப்பட்டு செய்ததா? அல்லது, உண்மைக் குற்றவாளிகள் பதுங்குவதற்கு அவகாசம் தேவைப்பட்டதால் காவல் துறையினரின் கவனம் திசை திருப்பப் பட்டதா?

குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துக் கடுமையாகத் தண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற விளையாட்டுகளில் யாரும் ஈடுபடாமல் இருக்க, ‘இமெயில் விளையாட்டுப் பிள்ளை’களையும் அவர்களைத் தூண்டி விட்டவர்களையும் தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், ‘இந்த அமைப்புதான் செய்திருக்கும்’ ‘அந்த இயக்கத்திற்கு தொடர்பு இருக்கிறது’ என்றெல்லாம் ஊகங்களை பரப்பி காவல்துறையினரை திசைதிருப்ப முயலும் அரசியல்வாதிகளும் ‘கருத்து கந்தசாமி’களும் கண்டிக்கப்பட வேண்டும். ஊடகங்கள் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

அப்போதுதான் நம் நாட்டின் இறையாண்மையும் நீதித்துறையின் மாண்பும் காக்கப் படும்.

***
இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட மதவெறி இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸில் பயிற்சி பெற்று வந்த அத்வானி, சிமி போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தடயமே இல்லாத அளவிற்கு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் என்று சொல்கிறார். இந்தத் துவேஷத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

விளக்கம் பகுதி – 2ல்

(தொடரும்)

ibnubasheer@gmail.com

Series Navigation