கீதாஞ்சலி (82) – ஆதி அந்தமில்லா காலம்..!

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஆதியில்லாக் காலத்திற்கு முடிவென்னும்
அந்த மில்லை,
உந்தன் கைக்குள் நகர்வதால்!
எந்தன் அதிபதியே!
காலச் சக்கரத்தின்
சுழற்சி நிமிடங்களை எண்ணிக்
கணிப்பவர் எவரு மில்லை!
கடக்கிறது காலம்,
பகலு மிரவும் மாறி மாறி வந்து!
யுகங்கள் மலர்ந்து
முதிர்ந்த பூக்கள் போலக் கருகி
உதிர்ந்து போகின்றன!
பொறுத்திருப்பது எவ்விதமென
அறிந்தி ருப்பவன் நீ!
சின்னஞ் சிறிய காட்டுப் பூ
ஒன்றினைப்
பூரணப் படுத்திட
படிப்படியாய் பல நூற்றாண்டுகளாகச்
சீராக்குபவன் நீ!
நேரமில்லை நமக்கு!
தவழ்ந்து போயாகிலும் நாம்
அவசியம்
வாய்ப்புகளைப் பற்ற வேண்டும்!
தாமதப் படுத்த
நாமொன்று மில்லாதவரா?
காலம் தவறிப் புகார் செய்யும்,
கால மில்லா நபருக்குச்
சாலப் பணி புரிவதில்,
காலம் கழியும் எனக்கு!
அச்சமயம்
உன் சமர்ப்பணப் பீடம்,
என் அர்ப்பணப் பண்டம் யாவும்
இறுதியில் பறிபோய்,
வெறுமையாய்க் கிடக்கிறது!
அந்திப் பொழுது சாய்ந்ததும்,
உந்தன் கதவு மூடப்பட்டு விடுமென,
முந்திக் கொண்டு விரைகிறேன்
அஞ்சிய வண்ணம்!
ஆனாலும் காலநேர மின்னும்
அதற்கு உள்ளதென
முதற்கண் தெரிகிறது எனக்கு!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 16, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா