கீதாஞ்சலி (42) முடிவில்லா முக்தி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என்னில்லத்தில்
உன்னை வரவேற்க நான் தயாராக
இல்லாத தருணம்,
அன்றைய தினத்தில்
பொது வழிப் போக்கன் போல்
அழைப்பில்லாமல் என்னிதயத்தில்
நுழைந்தாய் நீ,
எனக்குத் தெரியாமல்!
எத்தனையோ கோடி இன்பத்தில் நான்
திளைத்த
என் வாழ்க்கையின்
முடிவில்லா
முக்தி நிலைக்கு ஒப்புதல்
தந்து அழுத்தி
முத்திரை
குத்தி யிருக்கிறாய்
எந்தன் வேந்தே!

இன்றைய நாளில்
எதிர்பாராது,
இன்புற்ற என் நிகழ்ச்சிகளில்
உன் முத்திரை மேவி
பேரொளி
ஊட்டும் போது அவை யாவும்
துண்டாய்ச் சிதறி
மண் புழுதியில் கலந்து
மக்கிய துணுக்காய்ப் படிந்து,
எனது இன்ப துன்ப
நினைவுகளில்
முனைந்து போன அந்த நாட்கள்,
மறந்து போயின!
அண்ட வெளியில் விண்மீன்கள்
ஒன்றுக்கு எதிராய் ஒன்று
ஒலி எழுப்பி
எதிர்ப்படுவது போல்,
உன் காலடிச் சப்தம் கேட்கும்
என் விளையாட்டு அறையில்,
சிறு பிள்ளைத் தனமாக
திருவிளை யாடல் நான் புரிந்து
புழுதி மண்ணில்
புரண்ட தெல்லாம் நீ
வெறுப்புடன்
புறக்கணிக்க வில்லை அல்லவா ?

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 25, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா