This entry is in the series 20040108_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


—————————
விடுமுறைத் தூக்கம்
மதியப் பசியில் கலைய
எழுந்தேன்.
வீடு அமைதியில்.
இன்று இரட்டிப்புக் கூலியென
வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி.
வெளியே கொட்டுதே வெண்பனி.
உள்ளே மின்னுதே என் பிள்ளைகள்
கோலமிட்டு நிறுத்திய கிறிஸ்மஸ் மரம்.

முண்றிலில்
கணகணப்பு ஆடைச் சிறுவர்கள்
வெண்பனியில் வனைந்தனரே
ஒரு மனிதனை.
சிறுமி ஒருத்தி கறட் மூக்குவைத்துக்
கைகொட்டிச் சிரிக்கிறாள்.
தேர்ந்த பொற்கொல்லனாய்
கண் வாய் என்று
கற்கள் பதிக்கிறான் என் பையன்.

ஒருநாள் உருகிவிடும் எனினும்
ஆக்கி மழ்கிறாரே பனிமனிதனை.
நாளை குப்பையில் எனினும்
இன்றை ஒளிர வைக்குதே
என் பிள்ளைகளின் கிறிஸ்மஸ் மரம்.

நீண்ட தூக்கமும், பெருஞ் சமையலும்
மது விருந்தாடலும்
தந்திர பெண்/ஆண் வேட்டையும்
புணர்வதுமாய் கழிகிற விடுமுறைகளில்
பிணிவாய்ப் படுகிற மேலை வாழ்வு
கிறிஸ்மஸ் மரத்தில்
பனி மனிதனில்
கொண்டாடும் குளந்தைகளின் கூச்சலில்
உயிர்க்குதே.

எப்போதோ குப்பையில்
கிறிஸ்மஸ் மரத்தையும்
முற்றத்துப் புல்லில் கரட்டையும் பார்த்து
இரண்டுமே ”வீண்” என்றாள் மனைவி.
வீண் என்கிற வார்த்தைதான்
வீணாக்குது நம் வாழ்வை.
——————————————
visjayapalan@yahoo.com

Series Navigation