கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

ஹஷிம் ஆகாஜாரி


முன்குறிப்பு:

ஜூன் 2002-ல் ஹஷிம் ஆகாஜாரி ஹமதானில் ஆற்றிய உரை. இந்த உரையில் அவர் ‘மரபு வழி வந்த இஸ்லாம் ‘ மீது தொடுத்த விமர்சனங்களால் அவருக்கு ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. இந்த மரணதண்டனையை எதிர்த்து, டெஹெரான் பல்கலையில் மாணவர் போராட்டங்கள் நடைபெற்றவாறு உள்ளன.

ஆகாஜாரி ஹமதான் பல்கலையில் வரலாற்றுப் பேராசிரியராய் இருந்தவர். சீர்திருத்தங்கள் வேண்டிப் போராடும் அமைப்பான ‘இஸ்லாமியப் புரட்சி முஜாஹிதீன் அமைப்பு ‘ உறுப்பினர். டாக்டர் அலி ஷாரியாதி (Dr. ‘Ali Shari ‘ati )என்பவரின் மரணத்தின் 25-வது நினைவுநாள் அன்று இவர் கீழ்க்கண்ட உரையை ஆற்றினார். அலி ஷாரியாதி 1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியில் முக்கியப் பங்கேற்றவர்.

மே 15, 2004 ல் ஆகாஜாரிக்குத் தரப்பட்ட மரணதண்டனை மீண்டும் ஊர்ஜிதம் செய்யப் பட்டுள்ளது.

மத்திய கிழக்கு ஊடக ஆய்வு மையத்தினால் செய்யப் பட்ட மொழியாக்கத்திலிருந்து இது பெறப்பட்டுள்ளது.

****

புரொட்டஸ்டண்ட் கோட்பாடு

புரொட்டஸ்டண்ட் இயக்கம் கிருஸ்துவ மதத்தை மதுகுருமார்களிடமிருந்தும், மத அமைப்பின் படிநிலைகளிலிருந்தும் , போப்பிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியது. முஸ்லிம்களாகிய நமக்கு கடவுளுக்கும் நமக்கும் இடையில் தரகர்கள் தேவையில்லை. கடவுளின் புனிதப் புத்தகங்களைப் புரிந்து கொள்ள இவர்கள் இடையில் தேவையில்லை. இறைத்தூதர் மக்களிடம் நேரடியாய்ப் பேசினார். நாம் மதகுருக்களிடம் செல்ல வேண்டியதில்லை. நாம் ஒவ்வொருவருமே மதகுரு தான்.

பாரம்பரிய மற்றும் மத நிறுவனங்களால் பிரச்சாரம் செய்யப்படும் அனைத்து மதச் செய்திகளும் பழங்காலத்தியவை, இந்த காலத்துக்குப் பொருந்தாதவை என்றும், இந்த பிரச்சாரங்களுக்கு எதிராக மக்கள் எடுக்கும் எதிர்ப்பு நிலைப்பாட்டை இஸ்லாமிய முல்லாக்கள் இஸ்லாமிய மதத்துக்கு எதிரானவை என்று கருதுகிறார்கள் என்றும் ஷாரியாதி கூறுகிறார்.

உள்ளடக்க இஸ்லாமும், பாரம்பரிய இஸ்லாமும்

டாக்டர் ஷாரியாதி அவர்களின் உழைப்பில் பெரும் அளவு, ‘உள்ளடக்க இஸ்லாம் ‘(Core Islam) என்பதனையும் ‘பாரம்பரிய இஸ்லாம் ‘ (Traditional Islam) என்பதனையும் பிரித்துக் காட்டுவது. இஸ்லாமின் உள்ளடக்கத்தில் இல்லாத பல சேர்ப்புகள் பின்னால் அதனுள் சேர்க்கப்பட்டன. இவை வரலாற்று ரீதியான சேர்ப்புக்கள். 70 அல்லது 80 வருடங்களுக்கு முன்னால், தண்ணீர் தூவும் குளியலறைகள் இஸ்லாமுக்கு எதிரானவை என்றும், ஒருவர் தன்னை முழுக்க தண்ணீரில் முக்கி எழும் குளியலறைகளே இஸ்லாமியக் குளியலறைகள் என்றும் ஷியா பிரிவு முல்லாக்கள் போதித்து வந்தார்கள் என்பதையும், ஆனால் இன்று தங்களது வாழ்க்கை வசதிக்கு தேவை என்பதற்காக நவீன கார்களை அவர்கள் உபயோகப்படுத்த தயங்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மரபுவழிப்பட்ட மதகுருக்களின் பங்களிப்பு

1905-07-ல் நடந்த சட்ட அமைப்புப் புரட்சியின்போது இஸ்லாமிய மதகுருக்கள், ரசாயனம், பெளதீகம் போன்ற விஞ்ஞானப் பிரிவுகளை எதிர்த்தனர். ரசாயன அறிவியல் கடவுள் மறுப்பு என்பது அவர்களின் கருத்து. இன்று மதகுருக்கள் தமக்கு எது செளகரியமோ அதற்கு ஆதரவு அளிக்கும் சந்தர்ப்பவாதிகள். நான் ஓட்டை உடைசல் ஈரானியக் கார் ‘பேகான் ‘ (Peykan) ஓட்டுகிறேன். அவர்கள் மிக நவீனமான வசதியான கார்களில் பவனி வருகிறார்கள். இது சரியா ?

ஏன் இந்தச் சலுகைகளைக் கொண்டு கொள்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள் ? அவர்கள் நவீன வசதிகளை அனுபவிக்கும்போது, தேவலாம் என்று மகிழ்ச்சி கொள்கிறார்கள். ஆனால் இதே விஷயங்களையே இவர்கள் 70-80 வருடங்களுக்கு முன்பு, இஸ்லாத்தின் பேரால், ஹராம் என்று பெயரிட்டு எதிர்த்து வந்தார்கள். இஸ்லாமியப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் தான் இந்தத்தடை நீக்கப்பட்டது.

இஸ்லாமின் மையக் கருத்துகளிலிருந்து(Core Islam), வெறும்மரபை (Traditional Islam) பிரித்தறிய வேண்டும்

டாக்டர் ஷாரியாதி சொன்னார்: இந்த மதகுருக்கள் யாரும் வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. இவர்கள் நம்முடன் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் மனம் பழங்காலத்தியதாய் இருக்கிறது. அவர்களின் மனம் மாறாதவரையில், அந்த தலைவர்கள் மாறாதவரையில் , இவர்களைப் பின்பற்றி நடக்கும் மக்கள் ஷியா இஸ்லாம் நவீன மதமாக ஆக முடியாது என்றுதான் எண்ணுவார்கள். முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் இது வழி கோலாது, நாம் பிற்போக்குத்தனம் பெறவே இது பயன்படும்.

டாக்டர் ஷாரியாதி இந்தப் போக்கை எதிர்த்தவர். ‘இஸ்லாமின் மையம் ‘ வேறு, மரபுரீதியாய் வரும் இஸ்லாம் வேறு என்றார். மரபுரீதியாய் வரும் இஸ்லாம் பழந்தலைமுறைத் தலைவர்களால் பின்பற்றப்பட்ட ஒன்று என்பதாலேயே அது புனிதமானது என்று கருதலாகாது என்றார். மதகுருக்களின் சிந்தனை கெட்டிதட்டிப் போனது. முழுமைபெறாதது.

நம்முடைய மரபில் ஷியா முஸ்லீம்கள் இடது கையில் நடு விரலில் ஒரு மோதிரம் அணிவதுண்டு. இந்த மதுகுருமார்களைக் கேட்டால் அது நிச்சயம் பின்பற்றப் படவேண்டிய மதக் கோட்பாடு என்பார்கள். அலாமே மஜ்லிசி 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஹலே அல்-முதகீன் என்ற புத்தகத்தில் அவர் சொன்னபடி இன்று முஸ்லீம்கள் உடை அணிந்து கொள்ள முடியுமா, உணவு உட்கொள்ள முடியுமா, அவர்கள் நடவடிக்கைகளை பிரதி செய்ய முடியுமா ? இதுதான் இஸ்லாமா ?

முந்திய தலைமுறையினர் எந்த விதத்தில் இஸ்லாமைப் புரிந்துகொண்டு வழங்கினார்களோ, அது மட்டுமே இஸ்லாம் அல்ல. அது அவர்களின் புரிதல் . அவ்வளவே. அவர்கள் குரானைத் தம் வழியில் புரிந்துகொண்டு விளக்கியது போன்றே, நம்வழியில் குரானைப் புரிந்து கொண்டு விளக்க நமக்கு உரிமை உண்டு. அவர்களின் இஸ்லாம் பற்றிய புரிதலை மட்டுமே இஸ்லாம் என்று நாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

இஸ்லாமின் மையக் கருத்துகளை, மரபுவழியான இஸ்லாமிலிருந்து நாம் பிரித்தறிய வேண்டும். ஷாரியாதியின் போராட்டம் இஸ்லாமைப் புரிந்து கொள்வது பற்றியது. 20ம் -21ம் நூற்றாண்டுகளில் முஸ்லீமாய் இருப்பவர் 1400 வருடங்களுக்கு முன்பு மெக்கா மெதினாவில் இருந்த இஸ்லாமைப் பின்பற்றி நடக்க இயலாது. அப்போது மெக்கா மெதினாவின் ஜனத்தொகை இன்று ஈரானின் சிறிய கிராமங்களைக் காட்டிலும் கூடக் குறைவு.

இஸ்லாமிய மத குருக்கள் இன்று ஆளும் வர்க்கமாக ஆகிவிட்டார்கள்

இஸ்லாமில் என்றுமே மதகுருக்கள் இல்லை. மதகுரு பட்டங்களில் சில சற்றே 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவையே. ஸஃபாவித் வம்சம் (Safavid dynasty) ஈரானை ஆண்ட காலத்தில் மதகுரு வர்க்கம் நம்மிடம் எங்கே இருந்தது ? இன்று இஸ்லாமிய மதகுருக்களில் இருக்கும் பட்டங்கள் சர்ச் போல மேலிருந்து கீழாக படிநிலையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிஷப்புகள் கார்டினல்கள், பாதிரிமார்கள் என்பதாக. இன்று இஸ்லாமில் இருக்கும் இந்த படிநிலை மதகுருப் பதவிகள் சர்ச்சை காப்பி அடித்து உருவாக்கபட்டவை. இன்று ஈரானில் இருக்கும் மதகுரு படிநிலை அமைப்பின் உச்சத்தில் உட்கார்ந்திருப்பது அயதுல்லா ஓஸ்மா (Ayatollah Ozma). அதற்கு ஒரு படி கீழே, அயோத்துல்லா, ஹ்உஜ்ஜத் உல் இஸ்லாம், தாக்கத் உல் இஸ்லாம் இது போல…

கடந்த சில வருடங்களில், மத நிறுவனங்கள் ஏறத்தாழ அரசாங்க நிறுவனங்கள் போல ஆகிவிட்டன. மதம் பற்றி பேசுவது ஆபத்தானதாக ஆகிவருகிறது. நம்மிடையே நம் சமூகத்தில் வாழும் யாருக்காவது ஹ்உஜ்ஜத் உல் இஸ்லாம்-உக்கும் அயோத்துல்லா-வுக்கும் இருக்கும் வித்தியாசம் புரிபடுமா ? (6)இஸ்லாமின் உள்ளடக்கத்தில் மத தலைவர்கள் என்ற வர்க்கம் ஏதும் இல்லை என்று ஷாரியாதி கூறுகிறார். இது உள்ளடக்க இஸ்லாம் அல்ல என்று அவர் உறுதியாகக் கூறுகிறார். இந்த வளர்ச்சி வரலாற்றின் விளைவு. நம் அதிர்ஷ்டம், இதுவரை ஏதும் ஒரு மத்திய அமைப்பு இத்தனை மத குரு பட்டங்களையும் உட்கொண்டதாக நாம் பார்க்கவில்லை. பல வருடங்களாக ஏராளமான இணையான மர்ஜா ஈ தாக்லித் நிறுவனங்களும், அவற்றின் உள்ளே மர்ஜா ஈ தாக்லித் அயோத்துல்லா ஓஸ்மாவும் ஒவ்வொரு அமைப்பு ரீதியான படிநிலை அமைப்பையும்கொண்டிந்தார்கள்.(7)

இன்று ஈரானின் மதகுரு ஆளும் வர்க்கம் எல்லா அயோத்துல்லா ஓஸ்மா நிறுவனங்களையும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைக்க விரும்புகிறது. (பார்வையாளர்கள் கூக்குரலிட்டு கைதட்டுகிறார்கள்) ஈரானில் உண்மையான ஒரு மதகுரு வர்க்கள் இருந்ததே இல்லை என்று ஷாரியாதி கூறியிருக்கிறார். இதைத்தான் இவர்கள் ஈரானில் உருவாக்க விரும்புகிறார்கள். ஷியா இஸ்லாமுக்குள் இருக்கும் சில கூறுகளும் நமது சுதந்திரச் சிந்தனையும் அதனை வெற்றிபெற அனுமதிக்காது என்று சந்தேகிக்கிறேன். இவர்கள் உருவாக்க விரும்பும் படிநிலைகளும் பிரிவுகளும் கத்தோலிக்கத்தைச் சார்ந்தவை (இஸ்லாமைச் சார்ந்தவை அல்ல). சில மதகுருக்கள் இந்த பிரமையில் தாங்களே மூழ்கி தங்களையே மக்கள் ஆராதித்து வணங்க வேண்டும் என்ற அளவுக்கு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு மதகுரு தெய்வீகப் பிறவியல்ல

ஒரு மதகுருவுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவு என்பது ஒரு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையேயான உறவு போன்றது என்று ஷாரியாதி கூறுகிறார். அது தலைவருக்கும் பின்பற்றுபவனுக்கும் இடையேயான உறவு போன்றதல்ல. அல்லது ஆதர்ச மனிதனுக்கும், அந்த லட்சியத்தைப் பின்பற்றி தன் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் மனிதனுக்கும் இடையேயான உறவையும் போன்றதல்ல. ( between icon and imitator) மக்கள் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க வேண்டிய குரங்குகள் அல்லர். மாணவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் எதிர்வினை ஆற்றுகிறார்கள். தங்களது புரிதலை விரிவாக்கிக்கொள்ள முனைகிறார்கள். ஒரு நாள் அவர்களுக்கு ஆசிரியரும் தேவைப்பட மாட்டார். அடிப்படைவாத மதவாதிகள் தேடுவதோ தலைவனையும் தொண்டனையும் போன்றதொரு உறவை. தலைவன் எப்போதுமே தலைவனாக இருக்க வேண்டும். தொண்டன் எப்போதுமே தொண்டனாக இருக்க வேண்டும். இது கழுத்தில் சங்கிலி கட்டிய உறவு போன்றது (அதாவது நிரந்தர அடிமைத்தனம்)

தலைவன் புனிதமானவன் அல்ல என்பதனையும் அவன் தெய்வீகப்பிறவி அல்ல என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு அந்த அந்தஸ்தை நாம் கொடுக்க இயலாது. ஆனால் அவர்கள் (ஈரானின் இஸ்லாமிய ஆளும் வர்க்க மதகுருக்கள்) அப்படிப்பட்ட ஒரு முழு அதிகாரத்தைக் கைக்கொள்ள விரும்புகிறார்கள். ஷாரியாதி அதனை எதிர்த்து மதகுருக்களிடம் சொன்னார், ‘ நீங்கள் இமாம்கள் அல்லர். நீங்கள் தேவதூதர் அல்லர், மனிதனுக்குக் கீழ்ப்பட்ட விலங்கினமாக மக்களை நீங்கள் நடத்த முடியாது ‘. அவர்கள் நாம் பிறந்ததுபோலத்தான் பிறந்திருக்கிறார்கள். அவர்களது ரத்தமும் நம் ரத்தம் போலவே ஒரே நிறம். அவர்கள் உங்களைபோல பிறக்கவில்லையா ? அவர்களும் அவரவர் அம்மாவின் மடியிலிருந்து தானே தோன்றினார்கள் ? உங்களைப்போலவே அவர்களும் கடவுளின் பிள்ளைகள் இல்லையா ?

முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் நீக்கக் கூடாத உரிமைகள் உண்டு

நாம், தெய்வீகமான தூய இஸ்லாமின் முஸ்லீம்களாக, மனித குலத்தை மதிப்போமானால், எல்லா மக்களையும் அவர்களது மதம் எதுவாக இருந்தாலும், அவர்கள் முஸ்லீம்களாக இல்லையென்றாலும், அவர்கள் ஈரானியர்கள் இல்லையென்றாலும், துருக்கியர் அல்லது குர்துகள் அல்லது லுர்கள் (ஈரானின் சிறுபான்மை இனத்தவர்) ஆக இருந்தாலும் அவர்கள் என்னவாக இருந்தாலும், அவர்கள் மனிதர்கள் என்றும் அவர்களுக்கு பிறப்புரிமைகள் உண்டு என்பதை கூற வேண்டும். மேற்கத்திய உலகத்தில் மனிதாபிமானக் கோட்பாடு (humanism ) ஆழமாக இருப்பதன் காரணம் அது மதம் சாராததாக இருப்பதே என்றும் டாக்டர் ஷாரியாதி குறிப்பிட்டார்.

ஆனால் இஸ்லாமில், மனிதாபிமானக் கோட்பாடு கடவுளின் உருவாக்கம். கடவுளின் அருளினாலேயே நாம் இங்கு இருக்கிறோம். இவை நாம் மனிதர்களுக்கு உரிமைகள் இருக்கின்றன என்று சொல்லிக்கொள்வது போன்ற வெறும் அழகான வார்த்தைகள் மட்டுமல்ல. இந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. இவை நம் தலையில் சூட்டப்படும் மகுடங்கள். ஆகவே, சாதாரண மக்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல முனையும்போது, மதகுருக்கள் சாதாரண மக்களுக்கு எதனையும் முடிவு செய்யும் உரிமை இல்லை என்றும், மக்களுக்கு எது நல்லது என்பது தமக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறமுடியாது.

இன்றைய இஸ்லாம் ‘உள்ளடக்க இஸ்லாமாக ‘ இருக்க வேண்டும். பாரம்பரிய இஸ்லாமாக இருக்கக்கூடாது. இஸ்லாமிய புரோடஸ்டண்டிஸம் தர்க்க ரீதியானது, நடைமுறைக்கு இணங்கியது மனிதநேயம் பொருந்தியது. இது சிந்தனை வழிப்பட்டது முற்போக்கானது. மதச் சீர்திருத்தக்காரர்களாக இருக்கும் மதகுருக்கள் மற்றும் மதகுரு அல்லாதவர்கள், இன்னும் அயோத்துல்லா டாலேகானி, மஹ்தி பாஜர்கான், அயோத்துல்லா பெஹேஷ்டி அயோத்துல்லா மோடாஹரி இன்னும் இவர்களுக்கெல்லாம் தலைவரான இஸ்லாமிய புரட்சியின் தலைவரான அயோத்துல்லா கொமேய்னி (இந்த நேரத்தில், பார்வையாளர்கள் பாரம்பரியமாக அயோத்துல்லா கொமேய்னி அவர்களது பெயரை மூன்றுமுறை வாழ்த்துவதற்கு நேரம் கொடுக்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே வாழ்த்திக் கோஷமிட இடைவெளி விட்டுவிட்டு உரையைத் தொடர்ந்தார்) அவர்கள் அந்தக் காலத்தில் ஷாரியாதியையும் அவரை போற்றுபவர்களையும் பாராட்டி இஸ்லாம் வாழ்க்கையோடு தொடர்புடையது என்றும், அது சமூகத்தையும் மக்களையும் உதாசீனம் செய்யலாகாது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் இன்று நாம் பிரச்னைகளைச் சந்திக்கிறோம்.

முன்பு இஸ்லாமியப் புரட்சியின் பங்கு பெற்றிருக்காதவர்கள் கூட இன்று நடுவே வந்து பாரம்பரிய இஸ்லாமே உண்மையான இஸ்லாம் என்று கூறுகிறார்கள். ஷாரியாதி காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் இடையேயான வித்தியாசம் என்னவென்றால் அன்று மதகுருக்களிடம் அரசியல் அதிகாரம் இல்லாமல் இருந்தது. இன்று இஸ்லாம் ஆட்சியில் இருக்கிறது. மதகுருக்களே அரசாங்கமாக இருக்கிறார்கள். அதனாலேயே இஸ்லாமிய புரோடஸ்டண்டிஸத்தின் தேவை இன்று முன்னெப்போதையும் விட முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

எல்லா மக்களின் உரிமையையும் மதிக்கும் மதமே இன்றைய தேவை

எல்லா மக்களின் உரிமைகளையும் மதிக்கும் மதமே இன்றைய தேவை. முற்போக்கான மதமே தேவை. மக்களை கீழே போட்டு மிதிக்கும் பாரம்பரிய மதம் அல்ல. ‘என்னுடன் இல்லாதவன் எல்லாம் எனக்கு எதிராக இருக்கிறான் ‘ என்று நாம் சொல்லக்கூடாது. ஒருவன் எதுவாக இருக்க விரும்புகிறானோ அதுவாக இருக்க வேண்டும். ஒருவன் நல்லவனாக இருக்க வேண்டும். தூயவனாக இருக்கவேண்டும். நீ என்னோடு இல்லை என்பதால் நான் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நாம் கூறக்கூடாது. இவ்வாறு நாம் நடந்துகொள்வது, நாமே நமது மதகோட்பாடுகளை காலில் போட்டு மிதிக்கிற செயல் அல்லவா ?

மதகுருக்கள் அரசியல் சட்ட அமைப்பைப் பின்பற்றுவதில்லை – சவுக்கடி என்பது சித்திரவதையே

ஒருவர் நான் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுவதாய்ச் சொன்னால், அவரைத் திட்டுவதோ, இது ஹராம், அது ஹராம் (விலக்கப்பட்டது) என்று சொல்லி அவரை அவமதிக்கலாகாது. நம் கலாச்சாரத்தின் தேவை இஸ்லாமிய மனிதநேயமே. மதக் கலாச்சாரமும் தேவை. சமூகக் கலாச்சாரமும் தேவை. ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்கு உரியவரே. எந்த மனிதரையும் போட்டு நசுக்கக்கூடாது. நம் சட்ட அமைப்பில் இந்த அடிப்படை ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்தக் கருத்து மக்களில் மனதிலிருந்து அகன்று விட்டது. இது சித்திரவதைக்குக் காரணமாகிவிட்டது.

ஆளும் வர்க்கத்தினாரான மதகுருக்கள் கூறுகிறார்கள்: ‘நாங்கள் ஒருவரை கைது செய்திருக்கிறோம். அவர் சில விஷயங்களை மறைக்கிறார். அவர் ஒரு குழுவைச் சார்ந்தவர். அவர் ஒரு விஷயத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். சாதாரண விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறார். ஆகவே அவரை சித்திரவதை செய்தோம். அவர் இப்போது பேச ஆரம்பித்துவிட்டார் ‘ என்று சொல்கிறார்கள். இதைத்தான் ஈரானின் அரசியல் சட்ட அமைப்பு கண்டிக்கிறது. ஆனால் சட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை. சவுக்கடி கொடுப்பது சித்திரவதைதான். யாரேனும் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால், அவர் தீவிரமாகத் தண்டிக்கப்படவேண்டும் அப்போதுதான் அவர் அதனை மீண்டும் செய்யமாட்டார் என்று கூறுகிறார்கள்.

இஸ்லாமிய மனிதநேயமும், இஸ்லாமிய புரொடஸ்டண்ட் பாதையும் இன்று தேவை.

டாக்டர் ஷாரியதி முன்வைத்த இஸ்லாமிய புரோடஸ்டண்டிசமும், இஸ்லாமிய மனித நேயமும் முன்னெப்போதையும் விட இன்று மிக முக்கியமான தேவையாக நமக்கு இருக்கிறது. நம் இஸ்லாமியக் குடியரசின் தலைவர்கள் மனித உரிமைகளை அங்கீகரிக்காவிட்டாலும், நம் அரசியல் சட்ட அமைப்பு அங்கீகரித்து இருக்கிறது. பல முஸ்லீம் அல்லாத நாடுகளில் இந்த உரிமைகள் அந்தந்த நாடுகளின் குடிமக்களை காப்பாற்றவாவது பயன்படுத்தப்படுகின்றன. மற்ற நாடுகளின் குடிமக்களைப் பொறுத்த மட்டில் – மேற்கத்திய நாடுகள் மற்றும் புஷ் செய்வது போல -அவை உபயோகப்படுத்தப்படாமல் இருக்கலாம்

பல வெளிநாடுகளில் மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. பல மதகுருக்கள் தங்கள் உடலைப் பேணிக்கொள்ள மருத்துவத்துக்காக வெளிநாடுகள் செல்லும்போது அங்கு இருக்கும் அரசாங்கங்கள் அவரவர் மக்களை எப்படி நடத்துகின்றன என்று பார்த்து கவரப்பட்டுவிடுகிறார்கள். சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் ஒரு முஸ்லீம் மதகுரு ஐரோப்பாவுக்குச் சென்றார். அவர் திரும்பி வந்ததும் சொன்னார், ‘நான் ஐரோப்பாவில் எந்த முஸ்லீமையும் பார்க்கவில்லை ஆனால் அங்கு இஸ்லாமைப் பார்த்தேன் ‘ என்றார். இன்று நம் காலத்தில் நாம் முஸ்லீம்களைப் பார்க்கிறோம் ஆனால் இஸ்லாமைப் பார்க்க முடிவதில்லை (பார்வையாளர்கள் கைதட்டுகிறார்கள்)

மனித உரிமைகளை மதிக்கவில்லை எனில் அது இஸ்லாம் இல்லை

இந்த ஆட்சியாளர்கள் மக்களை தம்மவர், பிறர் என்று பிரிக்கிறார்கள். இந்த ஆளும் மதகுருக்கள் மற்றவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் வீடுகளுக்குச் சென்று இவர்கள் அவர்களைக் கொள்ளையடிக்கலாம் , அவதூறு செய்யலாம், அவர்களை அச்சுறுத்தலாம், கொல்லலாம். இஸ்லாம் சாராதவர்கள் என்ற காரணத்தாலேயே, இவர்கள் சையத் ஹெஜாரியான் (Said Hejjarian) என்ற அறிவுஜீவியைக் கொன்றார்கள். டரிஷ் ஃபருஹாரையும் அவர் மனைவியையும் ( Dariush Forouhar and Parvaneh Eskandari] கொன்றார்கள் இது தான் இஸ்லாமியக் கோட்பாடா ? மனித உயிருக்கு மதிப்பில்லையா ? ( 1998-ல் கொல்லப்பட்ட இவர்கள் உளவுத் துறையினரால் கொல்லப்பட்டனர் . இந்தக் கொலைக்குற்றத்திற்காக எவரும் இதுவரை தண்டனை பெறவில்லை.

Iran Daily (English), November 23, 2002. )

இமாம் அலி (முகம்மது நபி அவர்களின் மருமகன் – ஷியா பிரிவு இஸ்லாமின் கொள்கைப்படி இறைத்தூதுவருக்கு வாரிசு) எகிப்துக்கு தம்முடைய தூதரை அனுப்பியபோது சொன்னார் : ‘ நீ மிகுந்த அதிகாரம் பெற்றிருக்கிறாய். மக்களுக்கு நன்மை செய், நியாயமாய் நடந்துகொள். முஸ்லீம்கள் உன் சகோதரர்கள். முஸ்லிம் அல்லாதார் உன் மனித சகஜீவிகள். இஸ்லாம் வகுத்த வழிப்படி அவர்களிடம் நடந்து கொள். ‘ இஸ்லாம் முஸ்லீம்கள் முஸ்லீமல்லாதவர்கள் என்று கூறுவதில்லை.

இஸ்திஹாத் கோரி ஒரு அழைப்பு: ஆணும் பெண்ணும் சமம்

இறுதியாக, இஸ்லாமிய புரோடஸ்டண்டிஸம் என்பது நமக்குத் தேவையான ஒன்று. நமது மத புரிதலும் நமது எண்ணங்களும் நமக்கு துரோகம் இழைக்கும்போது நாம் தொடர்ந்து நமது மத வரையறைகளையும் கோட்பாடுகளையும் ஆராய வேண்டும். ஷியா இஸ்லாமில் இதனை இஸ்திஹாத் என்று அழைக்கிறோம்.

ஷாரியாதி அவர்கள் இஸ்திஹாத் பற்றிய சில தீவிரமானகருத்துக்களை கொண்டிருந்தார்.

முதலாவது இஸ்திஹாத் என்பது ஒரு குழுவுக்கு மட்டுமே உரித்தானதல்ல என்பது. இரண்டாவது ஒரே ஒரு மதகுரு மட்டுமே எல்லாம் அறிந்த நிபுணர் (மார்ஜா ஈ டாக்லித்) அல்ல என்பது. துரதிர்ஷ்டவசமாக நேர்மையின்மை, ஏமாற்று மற்றும் பயம் ஆகியவை மதநம்பிக்கையுள்ள நபர் மார்ஜா ஈ டாக்லித் அவர்களிடம் செல்லும்போது ஏற்பட்டுவிடுகிறது. இவர் ஒரு பட்வாவை சொல்கிறார். உடனே மற்ற மதகுருக்கள் அந்த நிபுணரை தாக்குகிறார்கள் அல்லது அந்த பட்வாவைத் தாக்குகிறார்கள். நீங்கள் அயோதுல்லா சனேய் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்திருக்கிறீர்கள். சில மதகுருக்கள் முஸ்தாஹித் (அயோத்துல்லாக்களிலேயே மிக உயர்ந்தவர்) மட்டுமே பட்வா கொடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். அப்புறம் அவர் அந்த பட்வாவைக் கொடுத்த பின்னால், ஆளும் வர்க்க மதகுருக்கள், ‘நீ அப்படிச் சொல்லக்கூடாது, இவ்வாறு மறு விளக்கம் செய்யக்கூடாது ‘ என்று கூறுகிறார்கள். அப்போது மார்ஜா ஈ டாக்லித் அவர்கள் சொல்லலாம் ‘நான் இஸ்திஹாத் செய்திருக்கிறேன். இது முன்னர் சொன்னதை மறுதலிக்கிறது. ஆண் பெண் இருவருமே சம உரிமை உள்ளவர்கள் ‘ என்று சொல்கிறார். உடனே ஆளும் வர்க்க மதகுருக்கள் ‘ உனது கருத்து இஸ்லாமியக் கருத்து என்று சொல்பவர் யார் ? இது இஸ்லாம் அல்ல ‘ என்று தாக்குகிறார்கள். ஆகவே நான் (ஆகாஜாரி) கேட்கிறேன். ‘ஒருவர் இன்னொருவரை விட அதிக இஸ்லாமியராக ஆனது எப்படி ? ‘

பார்வையாளர்கள் மத்தியிலிருந்து குரல்கள்

ஒருவர் கத்துகிறார் ‘ ஏனெனில் ஒரு பத்வா குரானிலிருந்து வந்தது மற்றது வரவில்லை ‘ வேறொருவர் எதிர்க்குரல் குரல் கொடுக்கிறார் ‘ஆகாஜரி நாமர்த் ‘ (நீ மனிதனில்லை நீ ஒரு பேடி) மீண்டும் மீண்டும் குரல் எழும்புகிறது ‘நீ ஒரு பொய்யன் ‘ ‘நீ கடவுளையும் தேவதூதரையும் பொய்யர்கள் என்று சொல்கிறாய் ‘ இந்த நேரத்தில் ஆகாஜாரி கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார்.

**

அருஞ்சொற்பொருள் விளக்கம்.

[1] ஷாரியாதி (பிறப்பு 1933) அன்றைய மன்னர் ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தத் தூண்டியவர். ஷாவின் அரசுக்கு எதிரான போராட்டம் இஸ்லாமை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும் என்றும் கூறியவர். இவர் மதகுரு அல்லர். இவர் தாராளவாத முதலாளித்துவத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் எதிராகவும் அதே நேரத்தில் மேற்கத்திய எதேச்சதிகாரத்துக்கும் எதிராகக் குரல் கொடுத்ததால், பல மாணவர்கள் இவர் பின்னால் வந்தார்கள். மத்தியக்கிழக்கு பிரதேசத்தில் நசுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தீர்வு ‘இஸ்லாமிய மனிதநேயம் ‘ (Islamic humanism) கோட்பாட்டிலிருந்தே வரும் என்று கூறினார். ஷாவின் அரசுக்கு ஆதரவாக இருந்த பாரம்பரிய மதகுருக்களையும் விதி வலியது என்று அவர்கள் கருதியதையும் தீவிரமாக எதிர்த்தார். மார்க்ஸிஸத்தை எதிர்த்தாலும் அவர் மார்ஸியத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார். மார்க்ஸிய கருதுகோள்களையும் பெயர்களையும் வெகுவாகப்பயன்படுத்தினார். 1977இல் மர்மமான முறையில் அவர் இறந்தார்.

[2] 2002 நவம்பரில் IRNA செய்திப்படி 74 சவுக்கடிகளும் 8 வருட பாலைவன நகர் ஒன்றில் கடுங்காவலும் 10 வருடங்களுக்கு ஆசிரியத்தொழில் செய்யமுடியாது என்று இவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

[3] மொழிபெயர்ப்பாளரின் கருத்துக்களும் பார்வையாளர்களின் எதிர்வினைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன

[4]

1501இல் ஷா இஸ்மாயில் என்பவரால் ஈரானின் அதிகாரப்பூர்வமான மதமாக ஷியா இஸ்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஷா இஸ்மாயில் அவர்களே சஃபாவித் வம்சத்தை தோற்றுவித்தவர் (1501-1722) மதம் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இடையே சமாதானமும் ஒன்றுசேர்வாழ்வும் முன்னிறுத்தப்பட்டது. தனது அரசாங்கத்துக்கான மத ரீதியான அங்கீகாரத்தைக் கோரிய இவர் சில மதகுருக்களுக்கு அரசாங்கத்தில் பதவியும்கொடுத்தார். குஜார் வம்சத்தின் அரசின் போது (1796-1925) அரசாங்கத்துக்கும் மதத்துக்கும் இடையேயான உறவுகளில் மாற்றம் தென்பட ஆரம்பித்தது. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மதகுருக்கள் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தீவிரப் பங்கெடுத்தனர். இவை மத நிறுவனங்களில் நிகழ்ந்த அமைப்பு ரீதியான மாற்றங்களாலேயே நிகழ்ந்தன. இது மதகுருக்களின் அரசியல் அதிகாரத்தை அதிகப்படுத்தியது. அதேநேரத்தில் மத அடிப்படைவாதத்தையும் மத அடிப்படை வாதம் அரசியலில் தீவிர பங்கெடுப்பதையும் முன்னிறுத்தியது.

இஸ்திஹாத் :

இஸ்திஹாத் என்பது அங்கீகரிக்கப் பட்ட மதகுரு தன் சுயசிந்தனையுடன், புரிதலுடன் ஃபட்வா அளிக்கத் தரப்பட்ட உரிமை எனலாம். ஷியா இஸ்லாமில் ‘தக்லீத் ‘ ( பின்பற்றத்தக்க தகுதி ) என்பதன் படி சமூகம் இரு மதத் தகுதிகள் கொண்ட பிரிவினை உடையது . முதல் பிரிவு தனித்த சிறப்புக் கொண்டது – மராஜே தக்லீத் – பின்பற்றத் தக்க ஆதாரங்கள் – எனலாம்.அயதொல்லா ஓஸ்மா என்ற பதவியை உடைய இவர்கள் ஃபட்வா வழங்கலாம். இஸ்திஹாத் உரிமை உள்ளவர்கள் தான் இவர்கள். ஆனால் இந்த ஃபட்வா இவர்களைப் பின்பற்றுவர்களுக்குத் தான் பொருந்தும். இரண்டாவது பிரிவு பின்பற்றுவோர் எனலாம். இவர்கள் தான் பொதுமக்கள். ஷியா பிரிவினர் ஒவ்வொருவரும் மர்ஜா-ஏ தக்லீத் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரைப் பின்பற்றலாம். ஆள்வோருக்கு எதிராக அயதோல்லாக்களின் கைகளைப் பலப்படுத்துவதற்காக இது நடைமுறையில் உதவியது. ஆனால் ஷியா வழியில் ஒரு அயதோல்லா இன்னொருவரை உயர்ந்த இடத்தில் இருப்பதாய்ச் சொல்லப் படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

***

http://www.iranvajahan.net/cgi-bin/news_en.pl ?l=en&y=2002&m=12&d=04&a=7

****

****

மேலும் குறிப்புகளுக்கு

www.iranexpert.com/ 2002/chronologyofcrisis17november.htm

http://www.iranian.ws/iran_news/publish/article_2290.shtml

****

Series Navigation

ஹஷிம் ஆகாஜாரி

ஹஷிம் ஆகாஜாரி