கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார்

This entry is part 7 of 49 in the series 19991203_Issue

வாசன்


மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் சுடராக ஒளிவிட்டு மற்ற தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு முன்னோடியான அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீனிவாசாச்சார்யா அவர்கள், கோதாவாி சலசலக்கும் நாசிக் நகரத்தில் 28.7.99 அன்று தமது 87ம் வயதில் மறைந்தார்.

அறிஞர் அண்ணா ஒருமுறை (1961ம் ஆண்டு,செங்கல்பட்டு) இலக்கிய மாநாட்டில் கா.ஸ்ரீ.ஸ்ரீயை ‘தமிழக காண்டேகர் ‘ என பாராட்டினார். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்புகளால் தமக்கு தற்கால இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டதுண்டு. இலக்கிய உலகில் தனக்கென ஒரு பாணி, தனி நடை ஏற்படுத்திக்கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீயின் எழுத்துப் பணி மகத்தானது!

நேர்மை, எளிமை, வாய்மை, தூய்மை, பன்மொழிப்புலமை, சொல்வளமை, ஆன்மிகத் தன்மை, எண்ணத்தில் இளமை என அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் அரும்பெரும் குணங்களைப் பற்றி நிறைய எழுதலாம். எதையுமே ஆராய்ந்து பார்த்தபின் ஏற்பதோ மறுப்பதோ அவருடைய நிதானத்தைக் காட்டியது. உள்ளத்திருந்ததை ஒளிக்காமல், யாரையும் புண்படுத்தாமல் பேசும் திறமை அவருக்கு கைவந்த கலை. பழுத்த வயதிலும் பண்பு, அடக்கத்துடன் வாழ்ந்த அவாிடம் (ஜூன் 99ல் ஒரு நாள்), ‘தற்கால தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? ‘ என்று கேட்டபோது, அவர் தயங்காமல், ‘வயதான பின்பு புதிய தமிழ் நூல்களை நான் அதிகம் படிக்கவில்லை. எனவே தற்கால தமிழ் எழுத்தாளர்பற்றி ஏதும் கூற எனக்குத் தகுதியில்லை ‘ என்று நேர்மையான மறுமொழி தந்தார்.

சில குறிப்புகள் –

மகாத்மா காந்தி 1937ல் சென்னை வந்தபோது, உ.வே.சாமிநாத ஐயாின் தமிழ் வரவேற்புரையை கி.வா.ஜகந்நாதனின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்தியில் மொழிபெயர்த்தது கா.ஸ்ரீ.ஸ்ரீ.தான். மகாத்மா காந்தி அந்த உரையை வெகுவாகப் பாராட்டினார். அப்போது கி.வா.ஜ.வுடன் ஏற்பட்ட உறவு கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்கு சுமார் 40 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘கலைமகள் ‘ பத்திாிகைக்கு துணையாசிாியராகவும் பதிப்பாசிாியர்களுள் ஒருவராகவும் பல ஆண்டுகள் பணிபுாிந்தார். ‘மஞ்சாி ‘ பத்திாிகையில் ஏராளமாக எழுதினார்.

பன்மொழிப்புலவரான கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழுக்கு சிறப்பிடம் தந்தார். சென்னை இந்தி பிரசார சபாவில் அவர் வேலை செய்த போது நடந்த சம்பவம் அவருடைய தமிழுணர்வை இலக்கிய உலகுக்கு வெளிகாட்டியது. ‘இந்தியைத் தவிர வேறு இந்திய மொழியில் சிறந்த இலக்கியம் இல்லை, நாமே இலக்கியச் சக்கரவர்த்திகள் ‘ என்ற தொனியில் சில இந்தி எழுத்தாளர்கள் பேசினார்கள். இதைக்கேட்டு வெகுண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘இந்தியை விட தமிழில் சிறந்த கதை கட்டுரைகள் இருக்கின்றன ‘ என்று வாதாடினார். அப்போதிலிருந்து தமிழ் கதைகள், கட்டுரைகள், தமிழிலக்கிய வளம்பற்றின கட்டுரைகள் என பலவற்றை இந்தியில் மொழி பெயர்த்து இந்தி இலக்கியப் பத்தி ாிகைகளில் வெளியிட்டு வெற்றிகண்டார். ‘இந்தியச் சிறுகதைகள் ‘ என்ற நூல் இந்தியில் வெளிவந்தபோது அதில் கல்கி, புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, கு.ப.ரா, சிதம்பர சுப்ரமணியன் போன்றோர் படைப்புகளை இந்தியில் அமைத்து இடம் பெறச் செய்த அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.தான். இந்த முயற்சிக்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல பாரதியின் ‘தராசு ‘ (கட்டுரைகள்) படைப்பை உள்ளது உள்ளவாறே இந்தி வடிவாக்கி வெளியிட்டார்.

மொழிபெயர்ப்புத் துறையில் சுடராக விளங்கிய கா.ஸ்ரீ.ஸ்ரீ. ஒரு சிறந்த படைப்பாளரும்கூட என்பது குறிப்பிடத் தக்கது. ‘காந்தம் ‘ என்பதுதான் இவர் எழுதிய முதல் தமிழ் நாவல் – 1945ல் கலைமகள் வெளியீடாக வந்தது. இரண்டாம் நாவல் 1949ல் வெளியிடப்பட்ட ‘காற்றாடி ‘ என்ற தமிழ் நாவல். மேலும் ‘நீல மாளிகை ‘ ‘அன்னபூரணி ‘ போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழ் வாசகர்களுக்கு அளித்தார். குமுதம் பத்திாிகை நிறுவிய திரு. எஸ்.ஏ.பி.அண்ணாமலை கேட்டுக்கொண்டபடி, கா.ஸ்ரீ.ஸ்ரீ. சொந்தச் சிறுகதையை குமுதம் முதல் இதழுக்கு அனுப்பினார். மேலும், கா.ஸ்ரீ.ஸ்ரீ.தமிழில் மொழிபெயர்த்த காண்டேகாின் நாவலான ‘வெண்முகில் ‘ குமுதம் வெளிவர ஆரம்பித்த 1947 நவம்பர் மாதம் அதில் முதல் தொடர்கதையாக வெளிவந்தது. 1940-50களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் கதைகளை வெளியிடாத தமிழ் பத்திாிகைகளே இல்லையென்றால் மிகையாகாது.

இளம் வயதிலேயே வடமொழிப்புலமையும் மராட்டி மொழி பழக்கமும் பெற்ற கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சரளமாக எழுத பேசக் கற்றுக்கொண்டார். இவர் வி.ஸ.காண்டேகாின் மராட்டி இலக்கி யத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் குவித்தார். காண்டேகருடன் இவருக்கு இருந்தது கடிதத்தொடர்பு மட்டுமே. இருவரும் நோில் சந்தித்துக்கொள்ள வாய்ப்பே ஏற்படாமல் போனது. ‘காண்டேகாின் நூல்களை ஏன் மொழி பெயர்க்க விரும்பினீர் ? ‘ என்ற கேள்விக்கு, கா.ஸ்ரீ.ஸ்ரீ.அளித்த பதில் – ‘வங்க, இந்தி நாவல்கள் தமிழில் பெரும்பாலும் வந்து ஓய்ந்திருந்த காலத்தில், புதுமையான காண்டேகாின் இலக்கியத்தை தமிழாக்க விரும்பினேன். 1940-50களில் காண்டேகாின் 13 நாவல்களையும், சிறந்த 150 சிறுகதைகளையும் தமிழாக்கினேன். வாசகர் காண்டேகர் இலக்கியத்தை ஆர்வத்துடன் விரும்பிப் படித்தனர். ‘

‘சமூக அமைப்பு முறையில் மிகப்புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு – காண்டேகா ‘ின் கதைகள் ‘ என்று அறிஞர் அண்ணாவால் குறிப்பிடப்பட்ட அந்த கதைகளை தமிழ் வாசக உலகுக்கு அயராமல் அளித்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யைப் பற்றி, ‘மராத்தியில் நான் பெற்ற புகழைவிட, தமிழில் என் இலக்கியத்தை மொழி பெயர்த்து கா.ஸ்ரீ.ஸ்ரீ.பெற்ற புகழ் அதிகம். அதற்கு அவர் தகுதியானவருங்கூட ‘ என்று காண்டேகரே ஒருமுறை கூறியுள்ளார்.

காண்டேகாின் படைப்புகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யை மிகவும் கவர்ந்த நாவல் ‘யயாதி ‘தான். ‘புராண பாத்திரமான யயாதியை இக்காலத்திய மிதமிஞ்சிய வேட்கை வெறியிலாழ்ந்த மனிதனாக காண்டேகர் சித்தாித்திருக்கிறார். புராணக்கதையொன்றை அற்புதமான நவீனமாய் படைக்க முடியுமென்பதற்கு இது தக்க சான்று ‘ என புகழ்ந்தார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. காண்டேகாின் மராட்டிய ‘யயாதி ‘க்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சாகித்ய அகாதெமியின் பாிசும் பிறகு அதற்கு பாரதீய ஞானபீட பாிசும் கிடைத்தன. கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘யயாதி ‘க்கு 1991ல் சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பாிசு கிடைத்தது!

மொழி நம்மைப் பிாிக்கும் என்று எண்ணுவது குறுகிய கண்ணோட்டம். சமுதாயப் பிரச்னைகளை விளக்கிட்டுகூ காட்டும் நூல்கள் எந்த மொழியிலிருந்தாலும் தாய்மொழியில் தரப்படும்போது, பிரச்னைகளை நம்மால் நன்கு புாிந்துகொள்ளமுடிகிறது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு இவ்வகையில் மகத்தான தொண்டு புாியும் இலக்கியவாதி கள்தாம் மொழிபெயர்ப்பாளர்கள். ஆரவாரமில்லாமல் ஆயுட்காலம் முழுதும் இந்த இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்த வர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை. நல்ல சங்கீதம், ஓவியம் போல பிசிறில்லாமல் இருக்க வேண்டும். அதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும், எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் தகும் ‘ என்று சொன்னவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.

வடமொழிப்புலமை கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ. வான்மீகி ராமாயணத்தை நன்கு அறிந்தவர். இந்த இலக்கிய ஆராய்ச்சின் விளைவாக, ‘சுதர்ஸனம் ‘ என்ற வைணவ மாத இதழில் ராமாயணத்தையொட்டி பல மனோதத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். வேதங்கள் பற்றி விாிவான ஆராய்ச்சியை பல ஆண்டுகள் செய்தார். பல பாகங்கள் கொண்ட வேதநூல்களை தமிழில் எழுத வேண்டும் என்பது இவருடைய பொிய இலக்கிய இலக்காக இருந்தது. ஆனால் அதற்குள் முதுமை இவரை வென்றது. இவர் கடைசியாக ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறிய நூல் வேதத்தைப் பற்றியதுதான். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் நூல்களை சீராக வெளியிட்ட, 2000ல் நூற்றாண்டை கொண்டாடப்போகும் மயிலை அல்லயன்ஸ் பதிப்பகத்தார்தான் இந்த ஆங்கில நூலையும் வெளியிடுவதாக இருக்கிறார்கள். இது ஒரு ஆன்மகிக் கருத்துக்கோவை – கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் இலக்கியப் பணிக்கு ஒரு சிகரம்போன்றது எனலாம்.

‘இலக்கியப் பணி என்றால் அதில் சமூகப் பணியும் ஆன்மிகப் பணியும் அடக்கம் ‘ என்று சொன்ன அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. இன்று இந்தியாவை ஆக்கிரமித்துள்ள (சமூக)நோய் என்ன என்ற கேட்டபோது, ‘தன்னலம் ‘ என்று ஒரே சொல்லில் பதில் தந்த அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்கு நமது அஞ்சலி.

(இந்த அஞ்கலியின் சுருங்கிய வடிவம் ‘கல்கி ‘ 15.8.99 இதழில் இடம்பெற்றது. – வாசன்)

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள் >>

Scroll to Top