கால நதிக்கரையில்…….(நாவல்) அத்தியாயம் – 14

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

வே.சபாநாயகம்


அப்புவுக்குத் திருமணம் ஆகிவிட்டதோ? அப்படியானால் அதிர்ஷ்டசாலிதான். அவனுக்கு யார் பெண் கொடுப்பார்களோ, அவனையும் ஒருத்தி மணந்து கொள்ளுவாளோ என்று பரிதாபத்துக்குரியவனாக அவன் இருந்தான். சிதம்பரம் ஊரை விட்டுப் போகும் வரை அவனுக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. இப்போது அவனையும் ஒருத்தி மனிதனாக ஏற்றுக் கொண்டு வாழ வந்திருக்கிறாளே! பாக்யசாலிதான். ஆனால் அவள் பாக்யசாலியாக இருக்கமுடியாது. தியாகியாக வேண்டுமானால் கருதலாம்.

அப்பு அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. ஏழ்மையான குடும்பம். நிலம் ஏதுமில்லை; ஒரு வீடு மட்டும்தான். அதுவும் மூன்று சகோதரர்களுக்கும் பொதுவானது. தரகு வியாபாரம், கார்வாரி என அவருக்குப் பிழைப்பு நடந்து கொண்டி ருந்தது. வெகுநாட்கள் பிள்ளை இல்லாமல் ஏங்கிப் பிறந்தவன் அப்பு. அதனால் அருமையாய் வளர்த்தார்கள். ஆனால் அவன் பிறந்ததிலிருந்தே கொஞ்சம் மூளை வளர்ச்சிக் குறைவுடன் இருந்தான். மிகவும் அப்பாவியாகவும் உடனிருப்பவர்களின் கேலிக்கு ஆளாகிறமாதிரி அசடாகவும் இருந்தான். அவனைவிடச் சின்னப் பிள்ளைகள் கூட அவனை ஏமாற்றி விடுவார்கள். ‘டே அப்பு’ என்றுதான் அழைப்பார்கள். அவனுக்கு அதற்காக அவர்கள் மீது கோபம் வராது. பேச்சும் தீர்க்கமாயிராது. ‘கருவேப்பிலையை’ க் ‘கருப்பப்பிள்ளை’ என்பான். ‘ஆஸ்பத்திரி’ என்று சொல்ல வராது; ‘ஆத்துக்குரிச்சி’ என்பான். அதனால் எல்லோருக்கும் அவனைச் சீண்டுவதில் ஆர்வம் அதிகம். ஒவ்வொருவரும் அவனைக் ‘கருவேப்பிலை’ என்றும் ‘ஆஸ்பத்திரி’ என்றும் சொல்லச் சொல்லி மகிழ்வார்கள்.

பள்ளிக்கூடத்திலும் படிப்பு மிகவும் மந்தம். ஆசிரியருக்கு இவன் என்றால் இளக்காரம். அவரும் அவன் வாயைக் கிளறி அவன் உளறுவதை ரசிப்பார். எதையாவது சாக்கு வைத்து அடித்து நொறுக்குவார். அவனை வதைப்பதில் ஆசிரியர் உட்பட எல்லோருக்கும் மிக விருப்பம். அப்போது மைக்கூடும் பேனாவும் ஒவ்வொருவரும் கொண்டு வரவேண்டும். அப்புவின் மைக்கூடு மூடியில்லாத சின்ன மண் குப்பி. பேப்பரைச் சுருட்டி அதற்கு மூடியாகச் சொருகப் பட்டிருக்கும். அப்புவின் கவனத்தை ஒருவன் திருப்ப இன்னொருத்தன் அவனது மைக்கூட்டில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவான். அது தெரியாமல் அப்பு நிப்புப்பேனாவை நுழைக்க அது ‘சரக்’ கென்று மண்ணில் நுழையும். உடனே ‘ஹோ’ என்று பயல்களின் சிரிப்பு! அப்பு
பரிதாபமாய் விழிப்பான்.

விளையாட்டிலும் அவன்தான் பலிகடா. பம்பர விளையாட்டில் அவனது பம்பரத்தைப் பிளப்பதில் எல்லோருக்கும் போட்டி. கோலி விளையாட்டில் அவனது கோலியை மூர்க்கமாய் அடித்துச் சிதற விடுவதில் எல்லோருக்கும் ஆனந்தம். அவன் நடந்தாலே பின்னாலிருந்து காலை இடறி விழ வைப்பார்கள். ஓடும்போது தட்டி விடுவார்கள். ‘ஓ’ வென்றலறியபடி அலங்கோலமாய் விழுவான். பயல்களின் கும்மாளம் தாங்க முடியாது. கண்ணாமூச்சி ஆட்டத்தில் அவனது கண்களைக் கட்டி ஒவ்வொருவனாக வந்து அவன் தலையில் ஓங்கிக் குட்டி ‘இது யார் தெரியுதா?’ என்று கேட்பார்கள். அப்பு வலி தாளாமல் அலறுவான். பொறுக்க முடியாமல் சிதம்பரம் தான் அவனது உதவிக்கு அவ்வப்போது வருவார். அவர் அப்போது அவனை விட இரண்டு வகுப்புகள் மேலே படித்தார். அவனைத் தொந்தரவு செய்யும் பையன்களை மிரட்டி அவர்களிடமிருந்து விடுவிப்பார். அதனால் அவன் சிதம்பரத்திடம் ஒரு பாதுகாப்
பான நட்பை உணருவான். வேறு யாரும் அவனுக்காகப் பரிந்து பேசுவதில்லை. அவனைச் சிறுவர்கள் துன்புறுத்தும் போது அவன் அம்மா பார்த்துவிட்டால் துடித்துப் போவாள். அவனை வருத்துகிற பிள்ளைகளைக் கை நெறித்துச் சாபமிடுவாள்.

ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று ஆண்டுகள். ஆசிரியராகப் பார்த்துப் பரிதாபப்பட்டு அடுத்த வகுப்புக்கு மாற்றினால் தான் உண்டு. அவன் ஐந்தாம் வகுப்பை முடிப்பதற்குள் பதினைந்து வயதாகி விட்டது. அப்போது சிதம்பரம் கல்லூரிக்குப்
போயிருந்தார். அவரைப் பார்த்து அப்பு தானும் மேலே படிக்க ஆசைப் பட்டான். அதற்கு மேல் அவனுக்கு படிப்பு ஏறாது என்று தெரிந்தும் அவனுடைய ஆசையை மறுக்க மனமில்லாமல் அவனுடைய அப்பா மிகவும் சிரமப்பட்டு பக்கத்து நகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறாம்வகுப்பில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

அப்போதெல்லாம் பஸ் வசதி இல்லை. தினமும் காலையில் சீக்கிரமாகவே கிளம்பி ஐந்து மைல் நடந்து போய் மாலையில் வாடி வதங்கி, இருட்டும் நேரத்துக்குத் திரும்பி வருவான். பாவம், மூன்று வருஷம் நடந்தது தான் மிச்சம்! ‘எண்ணெய் செலவழிந்தது
தான் மிச்சம் பிள்ளை பிழைக்கவில்லை’ என்கிறபடி படிப்பு மண்டையில் ஏற மறுத்தது. ஆறாம் வகுப்பைத் தாண்ட அவனால் முடியவே இல்லை.

கல்லூரி கோடை விடுமுறையில் போது சிதம்பரம் வந்திருந்த போது, அப்புவின் அப்பா அவனை அழைத்துக் கொண்டு அவரிடம் வந்தார். ‘தம்பி! இனிம இவனப்படிக்கவைக்க என்னால முடியாது; படிப்பும் ஏறல. நீதான் பாத்து எதாவது ஒரு வேலைலே சேத்துடணும். எங்களுக்கும் வயசாயிடுச்சு. எஙகளுக்கப்பறம் என்னா ஆவானோ?” என்று கண்கலங்கச் சொன்னார். சிதம்பரத்துக்குப் பரிதாபமாக இருந்தது. ஆறாம் வகுப்பையே முடிக்காதவனுக்கு என்ன வேலை கிடைக்கும்? இருந்தாலும் அவரது திருப்திக்காகப் ‘பார்க்கிறேன்” என்று அனுப்பி வைத்தார்.

பிறகு ஒவ்வொரு விடுமுறையின் போதும் அப்பு தேடி வந்து விடுவான். “என்னங்க, எனக்கு ஒரு வேல வாங்கிக் குடுங்க” என்பான் கெஞ்சலுடன். பரிதாபமாய் முகம் பார்த்து நிற்கும் அசட்டு ஆடு போல அவன் விழிப்பதைப் பார்க்க சிம்பரத்துக்கு நெஞ்சைப் பிசையும். சூதும் வாதும், உருட்டும் புரட்டும் நிறைந்த இந்த உலகில், ஒரு வேலையே வாங்கித் தந்தாலும் அதை வைத்துக் காப்பாற்ற அவனால் முடியுமா என்று மனம் உருகும்.

அவனது விடாத நச்சரிப்பால் சிதம்பரம் தன்னுடன் படித்த நண்பனின் அப்பா – அப்போதுதான் பக்கத்து நகரத்தில் அமைந்திருந்த ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக ஆகி இருந்தவரிடம் அப்புவின் நிலைமையை எடுத்துச் சொல்லி அவனுக்கு ஏதாவது வேலை போட்டுத் தரக் கேட்டு, கடைசியில் அவர் அவனுக்கு அவரது அலுவலகத்தில் தற்காலிகமாக எடுபிடியாளாக வேலை போட்டுக் கொடுத்தார். அப்புவுக்கு நிறைய புத்திமதி சொல்லி அவனை வேலையில் சேர்த்துவிட்டு சிதம்பரம் போனார். படிப்பு முடிந்து வேலை ஏற்று அவர் ஊரிலிருந்து வெகு தூரத்தில் பணிக்கமர்ந்தார். ஆறு மாதம் போல ஊர்ப்பக்கம் திரும்ப முடியவில்லை. பிறகு ஒருதடவை ஊர் வந்தபோது அம்மாவிடம் அப்புவைப் பற்றி விசாரித்தார்.

“அதை ஏன் கேட்கிறே போ! அசடுன்னு தெரிஞ்சும் நீ வேல வாங்கிக் குடுத்தாப்பவே சொன்னேன். நீ கேக்ககல. அது வேலையத் தொலச்சுட்டு வந்து நிக்கிது!” என்றார் அம்மா.

“என்னம்மா ஆச்சு?” என்று பதற்றத்துடன் கேட்டார் சிதம்பரம். “அது விவரமெல்லாம் எனக்குப் புரியல. அப்பா வந்ததும் கேளு” என்றார் அம்மா. அப்பா வெளியே போயிருந்தார்கள். அப்பா வரும்வரை பொறுக்கவில்லை. ” மணியக்காரரை வேணுமானாக் கேளு. அவுருதான் அழச்சிக்கிட்டு வந்தவரு!” என்று அம்மா சொல்லவும் உடனே பக்கத்துத் தெருவிலிருந்த மணியக்காரரைத் தேடிப் போனார் சிதம்பரம். மணியக்காரர் சொன்னது கதையில் வருவது போல மர்மமாகவும் அக்கிரமமாகவும் பட்டது.

மணியம் அப்புவுக்கு வேலைபோன கதையை விபரமாகச் சொன்னார்.

” பஞ்சாயத்து யூனியன் ஆபீசுலே இவன மாத்¢ரி இருந்த பியூன் வாட்சுமேனுக் கெல்லாம் ஆரம்பத்திலேர்ந்தே இவம் மேலே பொறாமை. மானேஜர் இவன் அப்பாவிங்கறதாலே இவங்கிட்ட அனுதாபமும் அக்கறையும் காட்டி வந்திருக்கிறாரு. அதுவே அவனுகளுக்குத் தாளல. மானேஜர் வேறே அவனுவளப் பத்தியும் அவனுங்க நடவடிக்க பத்தியும் இவங்கிட்ட அப்பப்ப விசாரிப்பாரு போல இருக்கு.. இவந்தான் சூதுவாது தெரியாத பயலாச்சா – எதச் சொல்லலாம், எதச் சொல்லக் கூடாதுன்னு தெரியாம நடந்த உண்மையச் சொல்லியிருப்பான் போல்ருக்கு. மானேஜரு அவனுகளக் கண்டிச்சிருக்கிறாரு. பாதிக்கப் பட்டவனுவ இவனப் பழிவாங்க சமயம் பார்த்துக்கிட்டு இருந்திருக்கிறானுவ. அதுக்குத் தோதா ஒரு நேரமும் வந்திருக்கு.

ஒரு நாளு மானேஜர் கைக்கடியாரத்தக் கழட்டினவரு ஞாபக மறதியா மேசை மேலியெ வச்சுட்டுப் போயிட்டிருக்காரு. மறுநாளு ஞாபகம் வந்து தேடிப் பாத்தப்ப கடியாரத்தைக் காணல. பியூன், வாட்ச்மேனுவளக் கூப்பிட்டுக் கேட்டிருக்காரு. அந்தப் பசங்கதான் வாட்சை எடுத்து ஒளிச்சு வச்சுட்டு “எங்களுக்குத் தெரியாது அய்யா! அப்புதான் நீங்க போனப்பறம் கடேசியா இருந்தவன்”ன்னு சொல்லவும் அப்புவைக் கூப்பிட்டுக் கேட்டிருக்காரு. அப்பு மிரள மிரள முழிச்சபடி தான் அதப்பாக்கவே இல்லைன்னு அழுதிருக்கான். மத்த ரெண்டு பயலும் “பாத்திங்களா அய்யா! கேக்கறதுங்காட்டியும் அழுவுறான். அவம் முழிக்கறதப் பாத்தாலே தெரியிலீங்களா? அவந்தான் அய்யா எடுத்திருப்பான்” ன்னு தூபம் போட்டிருக்கானுவ. மானேஜர் இவன நல்லதனமாக் கேட்டுப் பாத்திருக்காரு. இவன் “எனக்குத் தெரியாதுங்க” ன்னு அதே பதிலியே திரும்பச் திரும்பச் சொல்லவே அவரு கோபம் வந்து “ஒரு நாள் டயம் தரேன். அதுக்குள்ளே நீங்க மூணுபேரும் முடிவு பண்ணி யாரு எடுத்ததுண்ணு சொல்லியாகணும். இல்லேண்ணா சேர்மன் கிட்ட விஷயம் போயிடும்” னு மிரட்டி அனுப்பிட்டாரு.

மறுநாளைக்குள்ள அந்த ரெண்டு பயலுவளும் இவங்கிட்ட பயமுறுத்தி இருக்கானுவ. ” டே அப்பு! நாந்தான் எடுத்தேன்னு ஒப்புத்துக்க. இல்லேண்ணா சேர்மன் அய்யாக்கிட்டச் சொல்லி உன்ன வேலைய விட்டுத் தொரத்திடுவாங்க. நாங்க ரெண்டு பேரும் பர்மனண்டு. எங்கள ஒண்ணும் செய்ய முடியாது. நீ புதுசு. உன்னத்தான் நீக்கிடுவாங்க” ன்னு மெரட்டி இருக்கானுவ. இவனுக்கு அவுனுவ சூது தெரியல. வேல போயிடும்னதும் பயந்துட்டான். ” நீ ஒத்துக்கிட்டா ஓண்ணும் செய்யமாட்டாங்க. மொதத் தடவங்கறதால சும்மா எச்சரிக்க பண்ணி உட்டுவாங்க”ன்னு அவனுவ இவன மூளச்சலவ பண்ணி ஒத்துக்க வச்சுட்டானுவ. இந்த மடப்பயலும் அதே மாதிரி மானேஜர்கிட்ட, தான் தான் எடுத்தேன்னு ஒப்புத்துக்கிட்டான். மானேஜரு சேர்மன் கிட்ட சொல்லி இருக்காரு. அவரு நீதானே வேலைக்கு சிபாரிசு பண்ணேங்கறதால ஒனக்குச் சொல்லி அனுப்பினாரு. நீ இல்லேண்ணதும் எனக்குச் சொல்லி
அனுப்பபுனாரு. நான் போனதும் விஷயத்த சொல்லி “இனிமெ இவன் இங்கே இருக்கிறது நல்லதில்லே. அழச்சிக்கிட்டுப்போயி அவன் அப்பாக்கிட்ட விட்டுடுங்க”ன்னாரு. நான் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். “அவன் அப்பாவிங்க. யாரோ செஞ்சத் திருட்ட, பயத்துல தான் ஏத்துக்கிட்டுருக்கான். ஒருதடவ மன்னிச்சு விட்டுடுங்கண்ணு” தயவாக் கேட்டுக்கிட்டேன். “வேணாங்க. இதெல்லாம் பொறுப்பா வேலை செய்யிற இடம். இவன் தாக்குப் பிடிக்க மாட்டான்” னுட்டாரு.

மணியக்காரர் இப்படிச் சொன்னதும் என்ன செய்வது என்று சிதம்பரத்துக்குத் தெரியவில்லை. ” நீ வருத்தப் பட்டு என்ன செய்யிறது? தனக்காகவும் தெரியாம சொன்னாலும் புரியாதவங்களுக்காகக் கவலப்பட்டுப் புண்ணியமில்ல” என்று சொல்லி விடை கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும் சிதம்பரம் அப்புவுக்கு சொல்லி அனுப்பினார். அவன் வந்ததும் ‘என்னடா நடந்தது’ என்று கேட்கும்போதே கேவிக்கேவி அழ ஆரம்பித்து விட்டான். சிதம்பரமும் கேட்டுப் பிரயோசமில்லை என்று “சரி, உந்தலையெழுத்து அவ்வளவுதான்! யாரு என்ன செய்ய முடியும்? போ!” என்று அலுத்துக் கொண்டார். அவன் அழுகையை நிறுத்திவிட்டு ” வேற எதாச்சும் வேல வாங்கிக் குடுங்க” என்றான் இறைஞ்சல் தொனியில். சொல்லிப் புரியவைக்க முடியாது என்பதால் ” சரி, பார்ப்போம்” என்று அனுப்பி வைத்தார்.

பிறகு பல இடங்களுக்கு மாற்றலானதால் ஊருக்கு வரவே முடியாது போயிற்று. அப்புவை மறந்தே போனார். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்தபோது அவனுக்கு என்ன ஆயிற்று என்றறிய விரும்பினார். தற்செயலாய் அவன் மனைவி இப்போது பார்த்து அவர் யாரென்று தெரியாமலே வீட்டுக்கு அழைத்திருக்கிறாள்.

இவ்வளவையும் அவனது வீட்டின் முன்னே நின்றபடியே சிதம்பரம் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தபடி இருக்கையில் “உள்ள வாங்க. ஏன் அங்கியே நிக்கிறீங்க?” என்று அந்தப் பெண்மணி அழைக்கவும் நினைவைத் திருப்பி, உள்ளே நுழைந்தார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts